அமுதமும் காந்தியும் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் Sir,

நலம்தானே? என்று கேட்டுத்தான் இந்த கடிதத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் தளத்தில் தினமும் வெளிவரும் கார்டூன் கட்டுரைகளையும், குறிப்பாக நேற்று வெளியான “இலக்கியம்!!!” கட்டுரையையும் வாசித்த பிறகு தற்போதைய சூழலில் இந்தியாவிலேயே உங்கள் அளவுக்கு நலமாக (at least மனதளவில்)  இருப்பவர்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது. எனவே இந்த கடிதத்தை வாசிக்கையிலும் அப்படியே இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில், மேற்கூறப்பட்ட அந்த கேள்வியை கேட்காமல் விட்டுவிடுகிறேன். (நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு கடிதம் எழுதுவதால் கொஞ்சம் அதிகமாகவே முறுக்குப் பிழிந்துவிட்டேன், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.) “இலக்கியம்!!!” கட்டுரையை வாசித்த பிறகு இந்த கடிதத்தை எழுதுவது ஒரு விதத்தில் முரணாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த கடிதம் ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாக எழுதப்படுவதால் அந்த முரணை ஒதுக்கிவிட்டு எழுதுகிறேன்.

புனைவுக்களியாட்டின் சிறுகதைகளில் அப்போது வாசிக்காமல் விட்ட சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அப்படித்தான் “அமுதம்” கதையை நேற்று வாசித்தேன். சில வருடங்களுக்கு முன் Domnique Lapierre எழுதிய Freedom at Midnight நூலை வாசித்தபோது அதில் காந்தி நோவாகாளியில் தனியாக நடக்கும் The Lonely Pilgrim of Peace என்று தலைப்பிடப்பட்ட ஒரு புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படம்தான் என் மனதில் பதிந்த காந்தியைப் பற்றிய முதல் ருபாய் நோட்டு அல்லாத சித்திரம். இந்த கதையை வாசித்த உடனே மனதில் தோன்றிய முதல் உருவம் அந்த நோவாகாளி காந்தியின் உருவம்தான். மனிதகுலம் முழுவதற்குமான ஒரு போராட்ட முறையையும், இந்தியாவின் அரசியல்/சமூக மறுமலர்ச்சியையும் வடிவமைத்தவர், நம் சுதந்திரத்திற்குப் பின் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கப்பட்டது நாம் அறிந்த வரலாறே. காந்தியின் கொலை பற்றிய ஆஷிஷ் நந்தியின் கட்டுரையில், “காந்தியின் மீதான வெறுப்பு என்பது அவரது பெண்மை மீதான வெறுப்பே. அந்த வெறுப்பு அன்றைய பெரும்பாலான இந்தியர்களின் மனதில் இருந்த வெறுப்புதான். அதன் வெளிப்பாடு மட்டுமே நாதுராம் கோட்ஸே.” என்ற வரிகளை முதன்முதலாக வாசித்தபொழுது நான் அடைந்த அதிர்ச்சி இன்றும் நினைவிருக்கிறது. அந்த அதிர்ச்சியை “அமுதம்” கதையில் மீண்டும் அடைந்தேன்.

அமுதம் கதையின் அம்மச்சி பசுதான் அந்த ஊரின் ஊற்றுமுகம். மலை தெய்வமான அவள் வரும் முன் அந்த ஊர் இந்த உலகில் தனித்து விடப்பட்ட, யாரும் தேடி வராத ஒரு சராசரி கிராமம். அவளில் இருந்து பிறந்ததே அந்த ஊர். சொந்த கன்றை தின்று செரித்து அவள் ஊட்டிய அமுதே அவர்களில் உயிராகவும், உழைப்பாகவும், அழகாகவும் விளைந்தது. ஆனால் உலகின் அத்தனை அமுதும் நஞ்சாகும் ஒரு தருணத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவள் காருண்யத்தை உண்டு வளர்ந்தவர்களுள் அது கசப்பாகவும் நஞ்சாகவும் திரியும் தருணம் கதையில் அபாரமானது. அவளை முதலில் அதிசயமாகவும், பிறகு வெறும் கதையாகவும், பிறகு ஊருக்கே தாயாகவும், பிறகு ஊரை பிடித்த பேயாகவும், கடைசியில் அவளையே கொன்று ஒரு தெய்வமாகவும் அவர்கள் நிலைக்கேற்ப மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவளை உண்மையில் அறிபவர்கள் அந்த ஊரின் பெண்கள் மட்டுமே. அப்பெண்களில் அம்மச்சியின் அமுது பொலிவாகிறது, ஆற்றலாகிறது. அதுவே அந்த ஊரின் ஆண்களில் கசப்பாகிறது. அவர்கள் அம்மச்சியை வெறுப்பதன் வழியே அவர்கள் வீட்டுப் பெண்களின் ஆற்றலை வெறுக்கிறார்கள், அஞ்சுகிறார்கள். அதற்கும் மேலாக அவர்களுக்குள்ளே இருக்கும் பெண்மையை அஞ்சுகிறார்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்து வரிகளிலும் அம்மச்சி என்ற வார்த்தைக்கு பதிலாக காந்தி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் நாம் ஆஷிஷ் நந்தியின் விளக்கத்தை வந்தடைந்துவிடுகிறோம். தன்னை உயிரோடு கொளுத்தும்போதும் அந்த ஊரை சபிக்காமல் எரியும் அம்மச்சி, நோவாக்காலியில் தனியே நடக்கும் காந்திதான். காந்தி கொலை வழக்கில் கோட்ஸேவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களில் ஒன்று காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவனை தூக்கிலிட அனுமதிக்க மாட்டார் என்பதுதான். அந்த எரியும் தைலப்புல் காட்டில்  அமைதியாக நிற்கும் அம்மச்சி என் மனதில் முழுவதும் காந்தியாகவே நிறைந்திருக்கிறாள்.

காமதேனுவான அம்மச்சியை எதிர்க்க அந்த ஊர்க்காரர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அவள் காமம். அதைக்கொண்டே அவள் மீது மலினங்களை எறிகிறார்கள். அவளை அதைக்கொண்டே எதிர்க்கிறார்கள், அழிக்கிறார்கள். அவள் பெண்மையும் அதன் காமமும் அவர்களை அஞ்சவைக்கிறது. அந்த அச்சத்தையே அவர்கள் வெறுப்பாகவும் கசப்பாகவும் காட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் அஞ்சுவது அவளையும் அவள் அமுதுண்டு வளர்ந்த அவள் மகள்களையும்தான். அவளை அவர்கள் அதற்காகவே எரிக்கிறார்கள். நாம் காந்திக்குச் செய்தது அதைத்தானே. காந்தியின் வருகைக்கு முன் அத்தனை பெண்கள் பங்கேற்ற ஒரு அரசியல்/சமூக இயக்கத்தை இந்த உலகில் எவரும் கண்டதில்லை. வளர்ந்த நாடுகளின் suffragette இயக்கங்களைவிடவும் பல மடங்கு பெண்களின் பங்களிப்பை காந்தியால் உருவாக்க முடிந்தது. அவர் போராட்ட முறைகள் ஆண்களைவிட பெண்களுக்கே அணுக்கமாக அமைந்தது. அந்த பெண்மையே காந்தியை பெரும்பாலான இந்தியர்கள் வெறுக்க காரணமாக இருந்தது. பெண்மையை அடக்கி ஆளும் ஆண்மையே சிறந்தது எனும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தில் வளர்ந்த கோட்ஸேவுக்கு காந்தியின் மீது உண்டான வெறுப்பை, அம்மச்சியை ஆபாசமான வார்த்தைகளை கூவிக்கொண்டே எரிக்கும் ஊர்க்காரர்களிடம் நாம் கண்டுவிடுகிறோம். இன்றளவும், காந்தியைப் பற்றி வசைபாடும் பெரும்பாலானவர்கள் அவரை அவர்களின் பாலியல் வக்ரங்களால்தானே எதிர்க்கிறார்கள். அவள் அமுதுண்டு வளர்ந்து, பிறகு அவளையே எரித்த ஊர்க்காரர்கள்தானே நாம் அனைவரும்.

அமரர் கி.ரா. ஐயா எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலில், அந்த ஊர் மக்கள் ஒரு காட்டு காளையில் இருந்து ஊர் பசுவை சினையாக்கி, ஒரு காரிக் காளையை பெற்று, அதன் காமத்திற்காகவே கோவில் மாடாக வளர்ப்பார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அதே காளையை, அவர்களின் தேவை தீர்ந்ததும், அதன் கொட்டத்தை அடக்க காயடித்து விடுவார்கள். அந்த கதையை வாசித்தபொழுது அதன் முரணையும், காமத்தையும் நினைத்து வியந்தேன். ஆனால், நேற்று அமுதம் கதையை வாசிக்கையில், இந்த கதையின் வரலாற்று, தத்துவ, மரபு சார்ந்த பல அடுக்குகள் என்னை பல தளங்களில் பிரம்மிக்க வைத்தன. காமதேனுவான அம்மச்சியும், அவள் மடியுண்டு வளர்ந்த மகள்களும், அவர்களில் எழும் காமமும் என்னை நெகிழவைக்கின்றன. ஆனால், காமம், வர்கீஸ் குரியன், கௌரி பார்வதி பாய், காமதேனு, என்று எத்தனை திசைகளில் சென்றாலும் ஒவ்வொரு முறையும் மனம் சென்றடைவது அந்த நோவாக்காளி புகைப்படத்தைதான். அந்த புகைப்படமும் தைலக்காட்டில் நின்றெரியும் அம்மச்சியும் என் மனதில் எப்போதும் ஒன்றெனக் கலந்தே இருப்பார்கள்.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்    

***

அன்புள்ள விக்னேஷ்

நலம்தான். சிரிக்க ஆரம்பித்தால் எல்லாமே சிரிப்பாக ஆகிவிடும் விந்தையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் சரித்திரம் முழுக்க அத்தனை தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் நாம் அப்படித்தான் நடத்தியிருக்கிறோம்.

ஜெ

***

முந்தைய கட்டுரை’காடு’ ஆழ்தலின் ரகசியம்- வேலாயுதம் பெரியசாமி
அடுத்த கட்டுரைநேரா நிர்வாகம்