நிர்வாகம்

“ஊழியர்களை பார்த்து குரைப்பது, உறுமுவது, முனகுவது எல்லாம் சரிதான். ஆனால் பூனையைப்பார்த்ததும் நீங்கள் துரத்த ஆரம்பிப்பதுதான் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது”

லோகிததாஸிடம் இதைப் பார்த்திருக்கிறேன், நிர்வாகவியலில் முக்கியமான நிலைபதறாமை. அதை ஸ்திதபிரதிக்ஞை என்று பேராயர் சொல்கிறார். நாங்கள் ஒரு நண்பரின் பண்ணைவீட்டுக்கு சென்றோம். லோகி மது அருந்தினார். நள்ளிரவில் வீடு திரும்பினோம். ஆனால் ஓட்டுநர் வழி தவறிவிட்டார். அப்பகுதி முழுக்க தென்னந்தோப்பு. எந்தப்பக்கம் சென்றாலும் ஏற்கனவே வந்ததுபோல இருந்தது. வழிகேட்க எவருமில்லை.

ஒருமணிநேரம் ஓட்டியபின் ஓட்டுநர் மனம் தளர்ந்துவிட்டார். காரின் அலைவிலேயே அந்தப் பதற்றம் தெரிந்தது. ஒரு தென்னைமரநிழலிடம் வழிகேட்க வண்டி தயங்கியது.

பின்பக்கம் சாய்ந்து கிடந்த லோகி சொன்னார். “பயப்படாதே சுதாகரா, நாம் எப்படியானாலும் வீட்டுக்குப் போகத்தான் போகிறோம்”.

“பரமமுட்டாள்களைத்தான் நான் வேலைக்கு வைத்துக்கொள்வது. இந்த ஆபீஸில் நான்தான் புத்திசாலியாக இருக்கவேண்டும்” 

எவ்வளவு பெரிய உண்மை! அந்தத் தோப்பிலேயே சாகப்போவதில்லை. மிஞ்சிப்போனால் ஓர் இரவு. காலையில் கிளம்பிப்போகப்போகிறோம். அதற்கு ஏன் பதறவேண்டும்? அந்த நிதானம் வந்தால் பின் எதை அஞ்சவேண்டும்? சுதாகரன் உண்மையாகவே நிதானமடைந்தான். அரைமணிநேரத்தில் வழி கிடைத்தது.

லோகியின் பொன்மொழிகளில் ஒன்றும் “பயப்படுவதனால் பயம் கொஞ்சம்கூட குறைவதில்லை” இதை அறிந்ததும் அவருடைய வாழ்க்கை இனிதாகியது. மிகமிக அடித்தள வாழ்க்கையிலிருந்து, கடும் பட்டினியிலிருந்து எழுந்து வந்தவர் லோகி. ஆகவே அவர் எவரையும் எதையும் அஞ்சவில்லை. “ஆனைவந்தா கொல்லும், மயிரையா பிடுங்கும்?”என்ற திரிச்சூர் வட்டாரப் பழமொழியில் நம்பிக்கையுடன் வாழ்ந்தார்.

“நான் செய்றதுக்கெல்லாம் என் பாஸ் பலனை அடைஞ்சுக்கிடறார். நான் நேத்து செய்ததுக்கு அவர் கர்ப்பமாயிடுவாரோன்னு பயமா இருக்கு” 

ஒன்றைச் செலவிட்டால் அது குறையவேண்டும். ஒன்றைச் செய்தால் அது பழகிப்போகவாவது வேண்டும். எத்தனை பயந்தாலும் பயம் குறைவதில்லை. எத்தனை முறை பயந்தாலும் பயம் பழகிவிடுவதுமில்லை. பிறகு பயப்படுவதைப்போல அபத்தமான செயல் வேறென்ன? பயப்படாமலிருந்தால் நமக்கு நாம் பயப்படவில்லை என்று தெரிந்திருப்பதன் தைரியமாவது எஞ்சுகிறது!

லோகி என்னிடம் சொன்னார். “நல்ல சினிமா இயக்குநரை மீறி நிகழவேண்டும் என்று பரதன் சொல்வார். அது உண்மையா என்று தெரியாது. ஆனால் நல்ல சினிமா புரடக்‌ஷன் மானேஜரை மீறி நிகழ்கிறது” .அது உண்மை, தயாரிப்பு நிர்வாகி என்னும் அதிமானுடனை நம்பி சினிமா நிகழ்கிறது. அது எப்படி நிகழ்கிறது என்று எந்த புரிதலும் இல்லாத ஒருவர்தான் நல்ல தயாரிப்பு நிர்வாகியாக இருக்கமுடியும். தெரிந்தால் பதற்றமாகிவிடுவார்.

“உன் கருத்து எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அதனாலே அதை ஒரு அபூர்வமான சந்தர்ப்பத்துக்காக பத்திரமா வைச்சிரு என்ன?”

நிர்வாகவியலை நன்கறிவதற்கு அரசுத்துறைகளில் வேலைபார்க்க வேண்டும். என்னென்ன செய்யக்கூடாதென்று தெரியவரும். என்ன செய்தாலும் நிர்வாகம் நடக்கும் என்ற உண்மையும் தெளிவாகும். அதன்பின் உருவாகும் நிதானம் என்பது நிர்வாகத்திற்கு மிக முக்கியமானது. ”ஆனை அப்பியிட்டப்பவே ஒண்ணும் நடக்கல்ல, இனி அணில் புளுக்கையிட்டுல்லா நடக்கப்போகுது” என்பது எங்களூர் பொன்மொழி.

நான் அரசூழியனாகச் சேர்ந்தபோது முதல்நாள் என்னிடம் தோழர் நந்தகுமார் சொன்னார். “நீ இப்போது ஒரு மாபெரும் இயந்திரத்தின் ஸ்க்ரூ அல்லது நட்டு. சி.எம்.ஸ்டீஃபன் [தகவல்தொடர்புத்துறை அமைச்சர்] இன்னொரு ஸ்க்ரூ அல்லது நட்டு. நாம் இல்லையென்றாலும் இது ஓடும். ஆகவே இதன் ஆற்றலுக்கு நாம் பொறுப்பல்ல. ஆனால் நாம் உடைந்தால் இது நின்றுவிடும். ஆகவே பிழைகளுக்கு நாம் பொறுப்பு”

“போரடிக்குது, நான் திட்டுற மாதிரி எதையாவது செய்”

அதன் பின் நான் எப்போது தொலைபேசிநிலையத்தின் பிரம்மாண்டமான அமைப்பை பார்த்தாலும் அதன் அத்தனைச் சிக்கல்களுக்கும் நானே பொறுப்பு என்ற பிரமைக்கு ஆளாக ஆரம்பித்தேன். அதை அவரிடம் சொன்னேன். “அது ஒரு பிழை செய்யும் வரைத்தான். அதன்பின் தெளிந்துவிடுவாய்” .தெளிந்துவிட்டேன்.

அரசுநிர்வாகத்தை அதன் அடித்தளத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  தோழர் நந்தகுமார் சொன்னார். “பெருமலையன் மலைவாதை தெய்வங்களுக்குப் பூசை செய்வதை கண்டிருக்கிறாயா? ரத்தத்துடன்குழைத்த பலிச்சோற்றை இருட்டில் எட்டுத்திசைக்கும் வானுக்கும் மண்ணுக்கும் வீசி எறிவார். தேவைப்படும் தெய்வங்கள் எடுத்துக் கொள்ளலாம். நாம் கொடுக்கவில்லை என்று அவை நினைக்கவேண்டாம். அது போலத்தான் ஃபைல்களை ஃபார்வேட் செய்வது”

”நீ மட்டும் 25 சதவீதம் சம்பளக்குறைவுக்கு ஒப்புக்கொண்டா நான் அதிலே 10 சதவீதம் உனக்கு ஊக்கப்பரிசா தரேன்”

கோப்புகளில் நாம் எழுதும் குறிப்புகளால் அமைப்பின் அடித்தளமே  ஆடிக்கொண்டிருக்கிறது என்று கற்பனைசெய்வது சிலரை வேலைசெய்யவைக்கும் தூண்டுதலாக உள்ளது. நந்தகுமார் சொன்னதுபோல “No hair will walk” [ஒரு மயிரும் நடக்காது] என்ற எண்ணம் மேலும் நம்பகமாக வேலைசெய்யத் தூண்டுகிறது என்பது என் அனுபவம்.

குளம் எத்தனை குண்டிகண்டிருக்கும், குண்டி எத்தனை குளம் கண்டிருக்கும் என்பது மலையாளப் பழமொழி. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரே பிரச்சினை நூறுமுறை வந்திருக்கும். நூறுவகையாக அது தவறாகக் கையாளப்பட்டும் இருக்கும். நாம் தவறாகக் கையாண்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. சரியாகக் கையாண்டால் பெரிய வேறுபாடும் நிகழ்வதில்லை.

“தலைமைத்திறமையா? இருக்கு. உங்க கம்பெனிக்கு எதிராக்கூட போனவாரம் ஒரு தெருமுனை ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைச்சேன்”

ஒருவர் நம்மிடம் ஒரு மனு கொண்டுவந்து தருகிறார். அவருடைய அப்பா செத்துவிட்டார், அவருக்கு அப்பாவின் ஃபோனை மாற்றித்தரவேண்டும். ஃபோன் அன்றெல்லாம் ஒரு சொத்து. வாரிசுச் சான்றிதழ், சாவுச் சான்றிதழ், கேட்பவர் உயிரோடிருப்பதற்கான சான்றிதழ் உட்பட எல்லாவற்றையும் கேட்டுவாங்கி “இதன்படி இந்த மனுவை நான் தங்கள் மேலான பார்வைக்காக அனுப்புகிறேன்” என்று சொல்லி திசைவெளி நோக்கி வீசிவிட்டால் நம் வேலை முடிந்தது.

மிகச்சாதாரணமான விஷயம். ஆனால் அரசுத்துறையில் எம்முடிவும் கூட்டாகவே எடுக்கப்பட முடியும். ஆகவே மேலே இருப்பவர் சம்பந்தமே இல்லாமல் ஃபோன் மெயிண்டென்ஸில் இருக்கும் அதிகாரியிடம் “இந்த ஃபோனுக்கு பழுதுபார்ப்புச் சிக்கல்கள் உண்டா?”என்று ஃபைலை அனுப்பி வைக்கிறார். உற்சாகத்தில் ஒருவர் உள்ளூர் நகரசபைக்குக் கூட அனுப்பியிருக்கிறார்.அது அவ்வாறு பல வாசல்களில் தட்டி பல கையெழுத்துக்களை பெற்று சுழன்றுகொண்டிருக்கும்.

“பத்துக்கு ஒன்பதுபேர் என் கருத்தை ஏத்துக்கலை. இதிலேருந்து என்ன தெரியுதுன்னா பத்துக்கு ஒன்பதுபேருக்கு விஷயம்புரியலை”

அப்போது சம்பந்தப்பட்டவர் பலமுறை வந்து நம்மை பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் நாம் மிகுந்த அக்கறையுடன் அவருடைய பிரச்சினையை முற்றிலும் புதியதாக மீண்டும் கேட்கிறோம். அவர் பெயரையும் கேட்டுக்கொள்கிறோம். “மேலே இருக்கிறது” என்கிறோம். அது ஆத்மா செத்து வானுலகு சென்று மறுபிறப்பு கொள்வதுபோலத்தான். ஆனால் வந்துவிடும், எப்படியும்.

ஆனால் சில ஃபைல்கள் கதிகிடைக்காத ஆன்மாக்களாகச் சுழன்றுகொண்டிருக்கும். 1988ல் நான் ஓர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி போட்டேன். இருபதாண்டுகளுக்குப் பின் எனக்கு எல்.ஐ.சியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. ”உங்கள் சம்பளத்தில் இருந்து பிரிமியம் என மாதமாதம் தொகை பிடிக்கப்பட்டு இருபதாண்டுகளாக எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. எதற்கு என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?”

”எனக்கு தலைமைப்பண்பு இல்லைன்னு யார் சொன்னது? மத்தவங்களுக்கு பின்தொடருற பண்பு இல்லை, அவ்ளவுதான்” 

1988ல் நான் காசகோட்டிலிருந்து தர்மபுரிக்கு மாற்றலானேன். அங்கிருந்து நாகர்கோயில் வந்து பணியாற்றி ஓய்வும் பெற்றேன். ஆனால் காசர்கோட்டிலிருந்து என் மாற்றல் ஃபைல் தர்மபுரிக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. அனேகமாக அது பங்களாதேஷ் பூட்டான் சிக்கிம் திபெத் பாகிஸ்தான் மாலதீவு வழியாக சுழன்று வந்து கொண்டிருக்கலாம்.

நான் நேரில்போய் விளக்கினேன். ஓர் ஊழியர் “நீங்க காசர்கோடு போய் அந்த ஃபைல் நம்பரை பாருங்க சார். அதை ஃபாலோ பண்ணி தர்மபுரி போய் அங்கேருந்து….” அதாவது ஜேம்ஸ் பாண்ட் வேலை. licence to kill the time. எவ்வளவு ரூபாய் மொத்தமாக வரும் என கணக்கிட்டேன். ஏறத்தாழ அறுபதாயிரம் ரூபாய். அதை துரத்திப்பிடிக்க அவ்வளவு செலவாகும். பயணம், விடுதி எடுப்பது, சாப்பாடு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உற்சாகப்பரிசுகள்.

”இங்க உள்ள பிரச்சினையே யாரும் எதுக்கும் பொறுப்பேற்றுக்கிடறதில்லைங்கிறதுதான். இதை நான் சொன்னதா யார்ட்டயும் சொல்லவேண்டாம்”

“நான் அந்த பணத்தை எல்.ஐ.சிக்கே தந்துவிடுகிறேன். தேச நிர்மாணத்துக்கு என்னுடைய கொடையாக” என்று சொன்னேன். பிறகு தெரிந்துகொண்டேன், எல்.ஐ.சியின் மொத்த மதிப்பில் பாதி இதேபோல கொடுக்கப்படாத நிலுவைப்பணம்தான், அதைக்கொண்டுதான் தேசமே நடந்துகொண்டிருக்கிறது. சொல்லப்போனால் எல்.ஐ.சி நடத்தப்படுவதே இவ்வாறு பணம் தண்டல் செய்வதற்காகத்தான்.

பொதுவாக மேலதிகாரிகள் இதைப் பற்றி கவலையே படுவதில்லை. விசாரணைக் கைதிகள் இருபதாண்டுக்காலம் சிறையிலேயே இருக்கும் ஒரு தேசம் இது என்பதை நாம் மறக்கக் கூடாது. ஒரு ஃபைல் இருபதாண்டுக்காலம் அந்தரத்தில் பறப்பதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

”நம்ம ஆபீஸிலே ஆமாஞ்சாமிகளே வேண்டாம், என்ன சொல்றீங்க?

“ஆமா! ஆமா!”

இந்த ஃபைல் குறிப்புகளைப் பற்றி நான் பி.ஏ.கிருஷ்ணனிடம் கேட்டேன். பெரும்பாலான உயரதிகாரிகள் குறிப்புகளை அரைக்கால் நிமிடத்தில் படித்துவிடுவார்கள். பி.ஏ.கே. ஒரு ஜோக் சொன்னார். லிண்டன் ஜான்ஸன் சொன்னது.

ஒரு செகரட்டரி அதியற்புதமான சொற்சேர்க்கைகளுடன் ஃபைல்களில் குறிப்பெழுதிக்கொண்டிருந்தார். லிண்டன் ஜான்சன் அரைநொடியில் கடந்து சென்றுவிடுவார். மனமுடைந்து செகரடரி கேட்டார். “மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் நான் எழுதிய குறிப்புகளை பாராட்டுவதில்லை”

லிண்டன் ஜான்சன் சொன்னார் “ டாம், ஃபைல்குறிப்புகள் என்பவை நம் கால்சட்டைக்குள் நாம் சிறுநீர் கழிப்பதுபோல. வெப்பத்தை நாம் மட்டுமே உணரமுடியும்”

நாம கவலைப்படுறதிலே 90 சதவீதம் விஷயங்கள் நடக்கிறதே இல்லை. அதனாலே நாம இன்னும் கொஞ்சம் கவலைப்படணும்”

நிர்வாகவியலில் பல விதிகள் உண்டு. அதிலொன்று சொற்களுக்கு நேர்ப்பொருள் கொள்ளலாகாது என்பது. “இதை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” “வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்பதிலெல்லாம் மகிழ்ச்சியும் வருத்தமும் மெய்யாகவே கிடையாது என நாமனைவரும் அறிவோம். அவை கீழிருந்து மேலே அனுப்பப்படும் அறிக்கைகளிலுள்ள புள்ளிவிபரங்கள் போலத்தான். அல்லது மேலிருந்து கீழே வரும் ஆணைகளைப் போல. அனுபவிக்கவேண்டும், ஆராயக்கூடாது.

நிறைய தருணங்களில் பழைய கடிதங்களை நகலெடுத்து தேதி, பேசுபொருள் மட்டுமே மாற்றி அனுப்புவது குமாஸ்தா வழக்கம். ஆகவே “உங்களை இந்த தேதியிலிருந்து வேலைநீக்கம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றெல்லாம் கடிதங்கள் வந்துள்ளன.

”உங்க முன் அனுபவம்னா, போனபிறவியிலே எகிப்திய பாரோ மன்னரா இருந்து பிரமிடு கட்டியிருக்கீங்க. தலைமைப்பண்புக்கு அதுக்குப் பிறகு ஏதாவது சான்று இருக்கா?”

புதிதாக சேர்ந்த நிர்வாகிகள் சூடாக இருப்பார்கள். “புதுப்பெண் வீட்டுக்கூரையையும் கூட்டிப்பெருக்குவாள்” என்பது நிர்வாகவியலின் பாடங்களில் ஒன்று. எங்கள் இலாகாவில் ஜிபிஎஃப் லோன் வாங்குவது மாதக்கடைசியின் சடங்குகளில் ஒன்று. அதற்கான விண்ணப்பத்தில் எதன்பொருட்டு அந்த கடன் வாங்கப்படுகிறது என்று தெரிவிக்கவேண்டும். அதில் அத்தனை பேரும் சுமங்கலி பிரார்த்தனை என்றுதான் போடுவார்கள்.

ஏனென்றால் வேறேது காரணம் போட்டாலும் அந்த தேதி கடந்துவிட்டால் நிராகரிக்கப்பட்டுவிடும். எப்போதும் நிகழச்சாத்தியமான ஒரே மதக்கொண்டாட்டம் சுமங்கலி பிரார்த்தனைதான். வருங்காலத்தில் ஓர் ஆய்வாளர் தொலைதொடர்புத்துறை ஆவணங்களைக்கொண்டு நாகர்கோயிலின் மதநம்பிக்கையை பற்றி ஆராய்ந்தால் இங்கே சுமங்கலிவழிபாடு என்ற மதம் தீவிரமாக இருந்ததை நிறுவ முடியும்.

ஆனால் எங்கள் புதிய நிர்வாகி ஒரு விண்ணப்பத்தை வாசித்துவிட்டு ‘இஸ்லாமியர் எப்படி சுமங்கலி பிரார்த்தனை செய்ய முடியும்?’ என உசாவினார். அவருக்கு நிர்வாகவியல் கற்பிக்கப்பட்டது. அவருடைய புகழுடல் அலுவலகத்திலும் பூத உடல் சொந்த ஊரிலும் இருப்பது போலத்தான்.

“சொல்றதைப் புரிஞ்சுகிடறதிலே எனக்கு பிரச்சினை இருக்குன்னு சொன்னீங்களே, அப்ப எதை உத்தேசிச்சீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

நான் கல்வெட்டுக்களை கொண்டு வரலாற்றாய்வு நிகழ்த்துவதில் அவநம்பிக்கை கொண்டிருப்பதும் இதனால்தான். பிஎஸ்என்எல் ஆவணங்களைக்கொண்டு நூறாண்டுகளுக்குப் பின் ஆய்வுசெய்பவர்கள் நாகர்கோயிலில் இரண்டே இரண்டு டாக்டர்கள் இருந்தார்கள் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். அவர்கள்தான் அத்தனை பேருக்கும் மருத்துவம் பார்த்தனர். அத்தனை மருத்துவச் சான்றிதழ்களிலும் இரண்டே கையெழுத்துக்கள்தான்.

அத்துடன் அத்தனை பேருக்கும் பிரச்சினை முதுகுவலிதான். ”நாகர்கோயில் வட்டாரத்தில் பரவலாக இருந்த முதுகுவலியும் அதன் மருத்துவ சமூகவியல் காரணங்களும்” என்ற தலைப்பு நல்ல ஆய்வேடுக்குரியது. ஆனால் அதன் உண்மையான காரணம் நிர்வாகவியல்தான்

”உங்க ஆயுளிலே மொத்தம் 6.35 ஆண்டுகளை நீங்க ஸ்பாம் மெயில்களை டிலிட் பண்றதிலே செலவழிச்சிருக்கீங்க”

முதுகுவலி ஏனென்றால் அதை மட்டும்தான் சோதனைகளில் பொய்யென நிரூபிக்க முடியாது. முதுகுவலிக்கிறது என்றால் வலிக்கிறதுதான். ஆனாலும் என் கீழே வேலைபார்த்த ஒருவர் மாட்டிக்கொண்டார். மாவட்ட மருத்துவ அதிகாரி அவருடைய மருத்துவச் சான்றிதழ் பொய்யா என சோதனை செய்யும்போது ”வலி சரியா எந்த முதுகுலே?” என்று கேட்டிருக்கிறார். “இங்க டாக்டர் எழுதினதுக்கும் நீங்க சொல்றதுக்கும் சரியா இல்லேன்னா நடவடிக்கை எடுப்போம்”

இவர் குழம்பிவிட்டார். உளறி மாட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு பின் மன்னிக்கப்பட்டார். “ஏய்யா, முதுகு ஒண்ணுதானே இருக்கு?”என்றேன். “ஆமால்ல?”என்று வியந்தார். நெல்லைப் பக்கம் வேளாளர்களுக்கு பலமுதுகுகள் உண்டு என பின்னர் அறிந்தேன். அதிலொன்று புறமுதுகு.

”வித்தியாசமாக சிந்தனை செய்- நான் சிந்திப்பது போல”

மேலதிகாரிகள் எதுவும் ’த்ரூ பிராப்பர் சானல்’ என்பதில் தெளிவாக இருப்பார்கள். நான் காசர்கோட்டில் இருந்தபோது தொழிற்சங்கத்தலைவரும் கிளார்க்குமான ராஜு ஃபோனை போட்டு நேரடியாகவே டிவிஷனல் எஞ்சீனியரிடம் சொன்னார். “என்ன நம்பூதிரி, இங்க ஒண்ணும் சரியில்லியே. மெயிண்டெனெனன்ஸே இல்லியே?”

நாங்கள் நாற்பதுபேர் டி.இ என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க செவிகூர்ந்து லைனுக்குள் காத்திருந்தோம். நம்பூதிரி பணிவாகச் சொன்னார் ““Mr Raju, you have to insult me through proper channel”

29இலக்கியம்!!!

28 ஏர்போர்ட்!

27விற்பனை!

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்
முந்தைய கட்டுரைஎழுத்தாளர் படங்கள்
அடுத்த கட்டுரைதனிமையும் உரையாடலும்