மரியாதைக்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்கள் நலம் அறிய விழைகிறேன். தங்களுக்கு 60 அகவைதொடங்கி உள்ளது அறிந்து மகிழ்கிறேன். தங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவிக்கிறேன். வாழ்வில் எல்லா தருணங்களும் முக்கியமானவை என்றாலும் 60 வயது வரும் பொழுது ஒரு கூடுதல் நிறைவான தருணம் என எண்ணுகின்றேன். என்னுடைய கருத்துப் படி நீங்கள் இப்போது எழுதுவதில் உச்சபச்ச form இல் உள்ளீர்கள். சச்சின் பேட்டிங்கில் peak form ல் இருந்த நிலை போல. 80 கள் மற்றும் 90 களின் இளையராஜா போல. -தமிழ் இலக்கியத்தை பொறுத்த வரையில் இந்த காலம் உங்களுக்குரியது என எதிர் கால வரலாறு சொல்லும். உலக வரலாற்றில் உங்கள் அளவிற்கு தரமாகவும் அதே நேரத்தில் மிக விரைவாகவும் ஏராளமாகவும் எழுதக் கூடியவர்கள் எவரும் இலர் என்றேகூறலாம்.
பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட வெண்முரசு எழுதி விட்டு பின் நீங்கள் எழுதும் வேகம் பிரமிக்க வைக்கிறது. அந்த முகில், குமரித் துறைவி போன்ற கதைகளை இவ்வளவு வேகமாக ஒருவர் எழுத முடியமா என்ற ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது. ஓஷோ, – ‘ஒரு நிகழ் கலையில் VERB மட்டுமே இருக்க அங்கே NOUN என்று எதுவும் இருக்காது.அந்த அளவிற்கு “செயல்” நிகழ்த்துபவரை அது ஆட்கொண்டுவிடும்’ என்று சொல்வார். அதை போல இறைத் தன்மை உங்கள் மூலமாக எழுதிக் கொண்டியிருக்கிறது என நான் திடமாக நம்புகிறேன். பாமரத் தனமாக சொன்னால் சாமி வந்ததை போல் எழுதிக் குவிக்கிறீர்கள். இதை நான் எழுதும் போதே மிகுந்த உள நெகிழ்ச்சி உடன் எழுதுகிறேன்.
தங்களின் ‘கல்லெழும் விதை’ உரை கேட்டேன். மிக முக்கியமான உரை. உரையை கேட்பவர்கள் வாழ்வு குறித்த செறிந்த விளக்கத்தை பெறுவார்கள் என்பது நிச்சயம். இந்த உரையின் ஒரு பகுதியின் சாராம்சத்தை குறித்து எனக்கு ஓர் ஐயம். வாழ்வை பற்றியும், லட்சிய வாதம் பற்றியும் இதை விட தெளிவாக விளக்கி விட முடியாது என்றாலும் வாழ்நாள் எல்லாம் நீடித்த நீண்ட ஒரு லட்சிய போராட்ட வாழ்க்கைக்குப் பிறகு மார்க்சிஸ்ட்/ இடது தலைவர்களுக்கு/ தொண்டர்களுக்கு கிடைப்பது கசப்பு மட்டுமே என்பதை ஏற்பது எனக்கு கஷ்டமாக உள்ளது.
அதே சமயத்தில் இடதுசாரிகளை பற்றி நீங்கள் கூறும் எதிர்மறை தன்மையை ஓரளவு நான் ஏற்கிறேன். (total negativity is there,true ) இடது சாரி தொழிற்சங்கத்தை பொறுத்த வரையில் கசப்போ வெறுப்போ இல்லாமல் நிறைவாக தொழிற்சங்க பணியை வாழ்நாள் முழுவதும் செய்து விட்டு சில பல நூறு அல்லது ஆயிரம் தொழிலாளிகள் நலன் காத்தோம் என்ற நிறைவோடு ஓய்வு பெறுகிற தலைவர்கள் பலரை எனக்கு தெரியும். அவர்கள் விரும்பிய சமூக மாற்றம் அவர்கள் வாழும் போது வந்து விட வில்லை என்றாலும் சரியான பாதையில் நடந்தோம் என்ற திருப்தியுடன் அவர்கள் நேர்மறையாக மகிழ்ச்சியுடன் வாழ்வை நிறைவு செய்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
மகிழ்ச்சியோடு அதை செய்தார்களா அல்லது வெறுப்பு கசப்போடு செய்தார்களா என்பது ஒரு subjective ஆன விஷயம். அதை பொதுமைப் படுத்தி சொல்லி விட முடியாது என நினைக்கிறேன். இருப்பினும் காந்திய இயக்கங்களின் நேர்மறை தன்மை (positivity) இடது சாரி இயக்கங்களில் இல்லை என்பதும் உண்மை. Their very basis is ultra negative and projecting enemies from the beginning to end stages. அந்த எதிர்மறை தன்மையை நீக்கி விட்டு அந்த இயக்கங்கள் செயல் பட முடியுமா என்ற ஒரு முக்கிய கேள்வியையும் உங்கள் உரை எழுப்பி உள்ளதாக நான் உணர்கிறேன்.
மேலும் தனிப் பட்ட ஒரு மனிதன் மகிழ்வுடன் ஒரு செயல் செய்வதற்கும் கசப்புடன், வெறுப்புடன், செயலை செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் சுட்டி உள்ளீர்கள். இது உலகம் முழுவதும் உள்ளமக்கள் நல/இடது சாரி செயல் பாட்டாளர்கள் முன் உள்ள ஒரு மிக முக்கிய சவாலாக நான் பார்க்கிறேன். இந்த கேள்விக்கான தீர்வை அவர்கள் கண்டு விட்டால் இடது சாரிகளின் இன்றைய சரிவைக் கூட சரி செய்து விடலாம் என எனக்கு தோன்றுகிறது.
மார்க்ஸ் அவர்கள் இள வயதில் எழுதிய ஒரு கட்டுரையில் “எவர் ஒருவர் வாழ்க்கையில் எந்த அளவிற்கு கூடுதலான மனிதர்களுக்கு சேவை செய்கிறாரோ அந்த அளவிற்கு நிறை வாழ்க்கை வாழ்ந்ததாகிறார்” எனக் கூறி உள்ளதை லட்சியமாக கொண்டு வாழ்பவர்கள் அப்படிப்பட்ட லட்சியத்தோடு வாழ்ந்து தங்களால் இயன்ற பங்களிப்பை செலுத்தி விட்டுஅந்த லட்சிய பயணத்தை தொடர எதிர் கால சந்ததியை பணித்து விட்டு செல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அந்த செயல் பாடு செய்பவர்கள் எல்லாம் கசப்பில் வெறுப்பில் வாழ்வை முடிக்கிறார்கள் என்று சொல்வது சரியான பார்வையா என்ற வினா எழுவதை தவிர்க்க முடியவில்லை.
1950 களில் இருந்து 1980 கள் வரையான லட்சிய இடது சாரி வாழ்க்கையை இக்கால இளைஞர்கள் வாழத் தயார் நிலையில் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக வாழ்வை தியாகம் செய்யும் கூட்டம் இன்றி அந்த சமூகம் மேல் எழாது என்பது தானே வரலாறு. தனிப்பட்ட முறையில் (at the individual level) அவர்களது தியாகம் வீண் ஆனது போல் தோன்றினாலும் அதன் சமூகப் பலன்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. நமது விடுதலை போராட்ட தியாகங்கள் நம் கண் முன்னே நிற்கின்றன. நமது இன்றைய சுதந்திர வாழ்வு முந்தைய தலைமுறை எண்ணற்ற மனிதர்களின் தியாகங்களின் பரிசு என்பதை நாம் மறுக்கவியலாது.
மற்றும் ஒன்று. லட்சிய வாதம் (idealism ) வேறு கோட்பாட்டு வாதம் வேறு (idealogical ) என சொல்வதில் உள்ள வித்தியாசம் எனக்கு புரியவில்லை. கோட்பாடு இல்லாத லட்சியம் இருக்க முடியுமா என்ற கேள்வி வருகிறது.
நான் சமீபத்தில் கடிதம் எதுவும் எழுத வில்லை எனினும் உங்கள் தளத்தோடு பயணிப்பதை தொடர்ந்து கொண்டு இருப்பவன். பல கட்டுரைகள் கதைகளை பொக்கிஷம் போல நீங்கள் தமிழுக்கு அளித்துக் கொண்டு இருக்கிறீர்கள். தமிழ் உள்ளவரையில் உங்கள் நூல்கள் நிலை பெற்று இருக்கும் இடத்தில அமர்ந்து உள்ளீர்கள். பொறாமை தீயில் சிலர் இணைய தளமும் வலைப்பூவும் உள்ளதே என்று உங்களை பற்றிஅவதூறு எழுதிக் கொண்டு அவர்களை உயிர்ப்போடு வைத்து இருக்க முயற்சி செய்கிறார்கள். நீங்கள் உரையில் கூறியது போல கசப்பும் வெறுப்பும் எதையும் சாதிக்க உதவாது. உங்களை குறை சொல்லி வலையில் எழுதும் வேலையை விட்டு விட்டு உங்கள் எழுத்தை படிக்கவாவது செய்யலாம். அது உருப்படியான வேலையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
அன்பு கலந்த நன்றியுடன்,
சுப்ரமணியம்,
கும்பகோணம்.
***
அன்புள்ள சுப்ரமணியம்,
நன்றி, என் படைப்பியக்கம் என்பது நான் சொல்வதுபோல எதற்கு எதிரானதும் அல்ல. அதில் சோர்வு இல்லை. தன்னை அளித்தல், தன் வழியாக கடந்துசெல்லல் மட்டுமே உள்ளது.
ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இடதுசாரிகள் அனைவருமே எதிர்மறை மனநிலைகொண்டு சோர்விலும் சலிப்பிலும் கசப்பிலும் இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. அதேபோல காந்தியர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நிறைவுற்றவர்களாகவும் இருப்பார்கள் என்றும் நான் கூறவறவில்லை. அவ்வாறு இருமைப்படுத்திக்கொள்வது சிந்தனைக்கு எப்போதுமே எதிரானது என்பது என் கருத்து. பெரும்பாலும் இதெல்லாம் அந்தந்த ஆளுமைகளைச் சார்ந்தது. மனிதர்கள் எந்தக் கருத்தியலையும், இலட்சியவாதத்தையும் தன் அடிப்படை இயல்புக்கு ஏற்ப வளைத்தே ஏற்றுக்கொள்கிறார்கல்.
கருத்தியல்- இலட்சியவாதம் இரண்டுக்குமான் வேறுபாட்டையே நன முன்வைக்கிறேன். அதனடிப்படையில் மார்க்ஸியம், காந்தியம் இரண்டுக்கும் இடையே உள்ள உள்ளடக்கத்தின் தனித்தன்மைகளை முன்வைக்கவே அந்த உரையில் முயன்றிருக்கிறேன்.
காந்தியம் அடிப்படையில் எதிர்ப்பரசியல் பார்வையை முன்வைக்கவில்லை. அது ஆக்கபூர்வமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. அது கொள்கையளவில் ஏகாதிபத்யம், காலனியாதிக்கம், புவியை உரிமைகொள்ளும் நவமுதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது. நடைமுறையில் வெள்ளையர்களுக்கு எதிராக போரிட்டது. ஆனால் அவற்றை வெறுக்கவோம், முழுமையாகவே அவை அழிவுச்சக்திகள் என்று காட்டவோ முயலவில்லை. அவற்றில் இருந்து சாதகமானவற்றை பெற்றுக்கொண்டு, அவர்றை உள்ளடக்கிக்கொண்டு கடந்துபோக முயன்றது. அவற்றை எதிர்த்துப் போராடும்போது கூட அவற்றைச் சார்ந்த மனிதர்களிடம்கூட அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தும்படி அறைகூவியது.
அரசியல் செயல்பாடு என்பது மக்களை வழிநடத்துவது. சேவை என்பது மக்களுக்குப் பணியாற்றுவது. காந்தி அரசியலையும் சேவையையும் ஒன்றெனக் கருதினார். திரும்பத்திரும்ப இதை அவர் வலியுறுத்தினார். சேவை என்பது அடிப்படையான பணிவில் இருந்து உருவாவது. செயல்வழியாக தொடர்ந்து தன்னை மாற்றிக்கொள்வது, அதனூடாக புறவுலகை மாற்ற முயல்வது அதனுடைய வழிமுறை. ஆகவே சேவை என்பது ஒவ்வொரு கணமும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும்படியாகவே இருக்கவேண்டும் என்று காந்தி சொல்கிறார். ஆகவே, தான் ஏற்கனவே ஒரு முழுமை பெற்ற நிலையில் இருப்பதாகவும், தான் விடுதலை பெற்றவன் என்றும் அறிஞன் என்றும் ஒரு சேவையாளன் கருதிக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆணவத்தை உருவாக்கும், பிழையைப் பெருக்கும்.
மாறாக மார்க்சியம் அடிப்படையிலேயே ஒரு எதிர்ப்பரசியல். அடிப்படையில் அது இன்றிருக்கும் அமைப்பை முற்றிலும் எதிர்மறையானதாக, முற்றாக அழிக்கப்படவேண்டிய ஒன்றாக வரையறை செய்கிறது. அதனைச் சார்ந்த ஒவ்வொருவரும் எதிரிகள் என்றே வகுக்கிறது. இன்றுள்ள ஒவ்வொன்றையும் தலைகீழாக மாற்றவும் தான் விரும்பிய இன்னொரு அமைப்பை உருவாக்கவும் முயல்கிறது. அவ்வாறு மாற்றவேண்டிய பொறுப்பை அது சிலரிடம் ஒப்படைக்கிறது. அவர்களை ‘ப்ரோலட்டேரியன்’ என்று வரையறை செய்கிறது. மார்க்சியம் அதை ஏற்றுக்கொண்ட அரசியல்செயல்பாட்டாளனை அறிவுஜீவி என்றும், இவ்வுலகை மாற்றும் கடமையும் பொறுப்பும் கொண்டவன் என்றும் நம்பவைக்கிறது. ஆகவே ஒரு மார்க்சிய தொண்டன், தன்னை இவ்வுலகை மாற்றியமைக்கும் தகுதி கொண்டவனாகவும் கற்பனை செய்துகொள்கிறான்.
சராசரி மார்க்சியரிடம் இருக்கும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, பிறருக்கு அறிவுரை சொல்லும் தகுதி தனக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளும் தருக்கு, அவர்களை வெறும் வாயாடிகளாக ஆக்கியிருப்பதை நீங்கள் எங்கும் பார்க்கலாம். அவர்களின் முதன்மைச் செயல்பாடென்பது விவாதமே. அதிலும் மட்டம்தட்டுதல், அவதூறும் ஏளனமும் செய்தல், திரித்தல், முத்திரைகுத்துதல், வெறுப்பையும் காழ்ப்பையும் வசைகளாக வெளிப்படுத்திக்கொள்வது அவர்களின் முறை. எந்த விவாதத்திலும் புகுந்து எதையாவது ஓங்கிச் சொல்ல அவர்கள் தயங்குவதேயில்லை. எதற்கும் ஒரு தீர்வு அவர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் தெளிவுடன் இருக்கிறார்கள். எது சார்ந்தும் அவர்களிடம் குழப்பம் இருப்பதில்லை.
சராசரி மார்க்சிய ஆர்வலன் அவனுடைய பதின்பருவத்திலேயே மார்க்சிய கொள்கையின்பால் ஈர்ப்புக் கொள்கிறான். உடனேயே அவனுக்கு இவ்வுலகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் பொறுப்பு இருப்பது கற்பிக்கப்படுகிறது. உண்மையிலேயே அவ்வாறு நேரடியாகச் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற மேற்கோள் ‘அறிவுஜீவிகள் இந்த உலகை புரிந்துகொள்ள முயல்கிறார்கள், நாம் மாற்றியமைக்க முயல்கிறோம்’. அதாவது, உலகைப்பற்றிய புரிதல் முழுமையாக ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது- அவர்களின் தீர்க்கதரிசிகள் அதைச் செய்துவிட்டார்கள். அந்த வரைபடங்களின் படி இவ்வுலகை இடித்து திரும்பக் கட்டவேண்டியதுதான் பாக்கி.
இளம் மார்க்ஸிய ஆர்வலன் இவ்வுலகம் இயங்குவது எப்படி என்பதற்கான சில எளிய சூத்திரங்களை கற்றுக்கொள்கிறான். அதற்கு ஒரு தத்துவ அடிப்படை இருக்கிறதென்று அவனுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த அணுகுமுறை ஓர் அறிவியல் என்றும், நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும், ஆகவே அதற்கு மாற்றுத் தரப்பே இருக்க முடியாதென்றும் அவனுக்கு கற்பிக்கப்படுகிறது. மார்க்சியம் என்பது எவ்வகையிலும் ஒரு அறிவியல் அல்ல என்பதும், சமூக அறிவியலென்றோ பொருளியல் என்றோ அதைச் சொல்லமுடியாது என்றும் அவனிடம் எவரும் சொல்லமுடியாது. அவனுக்கு உறுதியான நம்பிக்கை அளிக்கப்படுகிறது.
அறிவியலின் இயங்குமுறையே வேறு என்றும் அதில் இவ்வகையான முரட்டுத்தர்க்கங்களுக்கு இடமில்லை என்றும் அவன் உணர்வதில்லை. மதவெறியர்களின் அதே மூர்க்கமான நம்பிக்கையே அவனை இயக்குகிறது. மார்க்சியம் என்பது மிகையாக்கிச் சொல்லப்போனால்கூட ஒரு தத்துவக் கொள்கை மட்டுமே என்றும், சரியாகச் சொல்லப்போனால் ஒரு வகை அரசியல் – வரலாற்று உருவகம் மட்டுமே என்றும் அவன் தெரிந்துகொள்வதே இல்லை. நிரூபிக்கப்பட்ட அறுதி உண்மையை அறிந்துவிட்டவனாக அவன் தன்னைக் கற்பனை செய்து கொள்கிறான்.
அதன் பிறகு இவ்வுலகமே அவனுக்கு மாறிவிடுகிறது. மிக எளிய விடைகளால் ஆனதாக அரசியலும், பொருளாதாரமும், சமூகவியலும், பண்பாடும், இறையியலும், இலக்கியமும் எல்லாம் தோன்ற ஆரம்பிக்கின்றன. எங்கும் துணிவுடன் புகுந்து தன் கருத்தைச் சொல்வான். எவனையும் மூடன் என்று வரையறுப்பான். மிக அடிப்படை வயதிலேயே மோசமான அகந்தையுடன் இருக்கும் இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவருமே இடதுசாரிகள்தான்.
இடதுசாரியாக இருப்பதென்பது ஒரு லட்சியவாதம் என்று நாம் நினைக்கிறோம். ஓர் இலட்சியவாதம் அதில் உள்ளது. அதில் ஈர்க்கப்பட்டு அதில் நுழைந்து செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் அது அளிக்கும் மிகையான தன்னம்பிக்கையால்தான் ஈர்க்கப்படுகிறார்கள். அறிவியக்கத்தில் அது ஒரு மோசமான படுகுழி. மிக விரைவிலேயே தன் அறிவின் எல்லையை உணர்ந்து அதிலிருந்து வெளிவந்தவன் தப்பித்துக்கொள்வான். அதற்கான விவேகமில்லாதவன், தன் வாழ்நாள் முழுக்க அந்த எளிய அகந்தையிலேயே கிடப்பான்.
அத்தகையவன் ஆரம்பத்தில் உலகைத் திருத்த முற்பட்டு அறிவுரைகளை அள்ளிவீசிக்கொண்டிருந்தவன், மிக விரைவிலேயே உலகமே தனக்கு எதிரியாக இருப்பதாக எண்ணிக்கொண்டு வசைபாடியாக மாறி காழ்ப்பையும், கசப்பையும் கொட்ட ஆரம்பிப்பான். தன் காழ்ப்புக்கும் கசப்புக்கும் அணிதிரட்டுவான். அவ்வாறு அணிதிரட்டும் பொருட்டு சாதியையும் இனவாதத்தையும் அதுபோன்று உதவக்கூடிய எதையும் கையிலெடுப்பான். ஒரு கட்டத்தில் வெறும் காழ்ப்பு கொண்டவன் மட்டுமே ஆவான். இந்த குணாதிசயங்கள் தனிநபர் சார்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அடிப்படையில் மார்க்சியக் கொள்கையிலேயே இது இருக்கிறது.
காந்தியம் முற்றெதிர்ப்பை முன்வைப்பதில்லை. இந்தச் சமூகம் பல நூறு நம்பிக்கைகளால் கொள்கைகளால் வாழ்க்கைமுறைகளால் ஆன ஒரு மாபெரும் இயக்கம் என்று அது சொல்கிறது. காந்தி உண்மை என்பது பல்லாயிரம் பட்டைகள் கொண்டது என்பதைத் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார். ஆகவே நான் நம்புவது உண்மை, பிற அனைத்தும் பொய் என்று ஒரு காந்தியவாதி எண்ணுவதில்லை. பிறதரப்பிலும் உண்மையும் நன்மையும் இருக்கலாகும் என்றும், அதனுடன் உரையாடவேண்டும் என்றும், அதையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் எண்ணுவான்.
தன்னுடைய பங்களிப்பினால் இந்த சமூகம் நலம் பெற வேண்டும் என்று காந்தியவாதி நினைப்பான்.சமூக மாற்றத்தை நிகழ்த்த தன் முழுவிசையுடன் இயங்கும்போதே சமூகம் என்பது சாதகமும் பாதகமுமான பல்லாயிரம் விசைகளின் பெரும் முரணியக்கத்தால் நிகழ்வது என்றும் அறிந்திருப்பான். அதில் ஒரு விசையே தான் அளிப்பது என கருதுவான். அவன் சமூகத்தை தான் தலைகீழாக மாற்றிவிட முடியும் என்று எண்ணுவதில்லை.ஆனால் தன் செயல்பாட்டால் சமூகம் எவ்வகையிலோ மாறிக்கொண்டிருக்கிறது என்றும் நம்புவான்.
ஆகவே தன் பங்களிப்பை ஆற்றி முடிக்கும்போது அவனுக்கு நிறைவேற்படுகிறது. அவன் தன் பங்களிப்பை ஆற்றுவதனூடாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டவன் என்பதனால் தன்னுடைய ஆன்மீக வளர்ச்சியைக் குறித்த நிறைவு அவனுக்கு இருக்கிறது. கொள்கையளவில் இந்நிறைவை காந்தியம் அளிக்கிறது. ஆகவே அது ஒருவகையான லட்சியவாதம்.
ஆனால் மார்க்சியம் என்பது லட்சியவாத அம்சம் இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு கோட்பாடு. கண்மூடித்தனமான நம்பிக்கை அதற்குத் தேவைப்படுகிறது. அந்நம்பிக்கையை சொல்லிச் சொல்லி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது நமர்-பிறர் என்று இவ்வுலகை இரண்டாகப் பகுத்து விடுகிறது. நம் தரப்பு நட்பு சக்திகள், தோழர்கள் என்றும், எதிர் தரப்பு எதிர் சக்திகள் எல்லாவகையிலும் பகைவர்கள் என்றும் பேசாத ஒரு மார்க்சியரையாவது எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
மார்க்ஸியர்களின் முழுநேர அறிவுச்செயல்பாடே எதிரிகளை கண்டடைவதுதான். நட்புசக்திகளைக் கண்டடைவது அல்ல. அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்களைக்கூட எதிரிகளாக்கி அழித்தொழித்த வரலாற்றை நாம் ரஷ்யா முதல் காண்கிறோம். இந்திய வரலாற்றிலேயே மார்க்சிய கம்யூனிஸ்டுகளும் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் நக்சலைட்டுகளும் மாறிமாறி கொன்ற்றொழித்திருக்கிறார்கள். இடதுசாரிகளுக்கு முதன்மை எதிரிகள் இன்னொரு இடதுசாரிக்குழுவாகவே இருக்கிறார்கள்.
ஒரு மார்க்சியர் தன் வாழ்வின் ஒரு கட்டத்தில் மார்க்சியத்தின் எல்லையைப் புரிந்து அதிலிருந்து உளம் விலகலாம். தன்னுடைய எதிர்ப்பு மனநிலையை அவர் கைவிடலாம். இதுகாறும் நம்பியிருந்தது லட்சியவாதம் அல்ல, அரசியல்கோட்பாடு மீதான நம்பிக்கைதான் என்று அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு அவர் தான் ஆற்றிய பணிக்கு ஒரு மதிப்புள்ளது என்றும் தொழிற்சங்கத்திலோ, சமூகப்பணியிலோ தன் சேவை மக்களுக்கு ஒரு கொடையாக ஆகியிருக்கிறது என்று நிறைவுறவும் செய்யலாம். ஆனால் அவ்வாறு நிறைவுறும்போது அவர் உளரீதியாக சரியான மார்க்சியராக இல்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
ஏனென்றால் ஒரு மார்க்சியரைப் பொறுத்தவரை, ஒரு முதலாளித்துவ சமூகஅமைப்பு இருக்கும் வரை அவர் நிறைவடைய முடியாது. அது எஞ்சும் வரை அவர் தோல்வியுற்றவர்தான். அதை முழுக்க மாற்றும் பொருட்டுதான் அவர் அரசியலில் ஈடுபடுகிறாரே ஒழிய, தன் பங்களிப்பை அளிப்பதற்காக அல்ல. ஆகவே பங்களிப்பு அளித்ததைக் குறித்து ஒரு மார்க்சியராக நிறைவுறவே முடியாது. வெற்றி, தோல்வி மட்டும்தான் அதில் இருக்கிறது. ஒருவேளை என்றேனும் புரட்சி வரலாம் என்று நினைத்து, ஒரு மெல்லிய நிறைவுடன் அவர் உயிர் துறக்கலாம்.
ஆகவே மார்க்சியம் அளிக்கும் அந்த எதிர்மறைப் பண்பு, முழுமுற்றான நம்பிக்கை, அதனடிப்படையிலான காழ்ப்பும் கோபமும் லட்சியவாதத்துக்கு உரியதல்ல. லட்சியவாதம் எந்நிலையிலும் நேர்நிலைப் பண்பு கொண்டதாக, அதை நம்புபவனை மேம்படுத்துவதாக மட்டுமே அமையும். லட்சியவாதத்தை நம்பியவன் ஒருபோதும் தன்னைக் கைவிடப்பட்டவனாக உணர மாட்டான். இருளில் எஞ்சவும் மாட்டான்.
இன்று இங்கே அரசியல்களத்தில் உள்ள மார்க்சியம் என்பதேகூட சரியான அளவில் மார்க்சியம் அல்ல என்பதை நீங்கள் கருத்தில்கொள்ளவேண்டும். வன்முறையை கூடுமானவரை கைவிட்டு ஜனநாயகத்திற்கு திரும்பிய மார்க்சியம் இது. ஜனநாயகப் போராட்டங்களுக்காக காந்தியவழிமுறைகளை கையாளும் மிகப்பெரிய இயக்கம் இன்று இந்தியாவின் கம்யூனிஸ்டுக் கட்சிகளே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அடிப்படையில் காந்தியத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவரான இ.எம்.எஸ் என்னும் தத்துவமுன்னோடியால் மறுவரையறை செய்யப்பட்ட கம்யூனிசமே நாம் இன்று இங்கே பொதுத்தளத்தில் காண்பது. அந்த மார்க்ஸியத்திற்குள் ஒரு காந்திய இலட்சியவாதத்துடன் ஒருவர் வாழ்ந்து நிறைவுற வாய்ப்புள்ளது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் பொருளியல் உரிமைக்கான குரல்கள் எழுந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே மார்க்சியத்தை ஒருபோதும் முழுமையாக நிராகரிக்க மாட்டேன். அதன் அடிப்படையான மானுடவாதமும் வரலாற்று ஆய்வுமுறையும் இன்றைய சிந்தனைக்கு இன்றியமையாதவை. மார்க்சியம் அந்த மானுடவாதத்தையும் வரலாற்று ஆய்வுமுறையையும் காந்திய இலட்சியவாதத்துடன், செயல்முறையுடன் இணைத்துக்கொண்டு முழுமையாக ஓர் இந்தியவடிவை எய்தவேண்டும்.
ஜெ