கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1
அன்புள்ள ஜெ,
ஒரு வாரம் முன்பு தான் “தங்கப்புத்தகம்” கதையைப் படித்தேன். மனதில் நிறைய கேள்விகள்.. மனம் தான் சுற்றிச்சுற்றி அறிகிறது. அதுவும் மனதையே அறிகிறது. எனில் மனிதனின் உச்சகட்ட சாத்தியங்கள் எல்லாம் மனதுக்குள்ளேயே முடிந்துவிடுகிறதா? மனதைத் தவிர அறிய ஒன்றும் இல்லை என்றால் இந்த வாழ்க்கைக்கு என்ன தான் அர்த்தம்? என்னால் அறிய முடியுமா என்பது இல்லை கேள்வி. அறியும் தருணத்தில் இந்த ‘என்’, ‘நான்’ எல்லாம் அர்த்தமிழந்தே போகட்டும். ஆனால் அறிவதற்கே ஒன்றும் இல்லை என்பது எத்தனை கொடுமை.. எல்லாமே சுழல் வட்ட பாதைகள் தானா? இப்படி ஏதேதோ யோசித்துக் குழப்பிக் கொண்டிருந்தேன். விஷ்ணுபுரம் படித்த போதும் இதே போன்ற குழப்பங்கள் ஏற்பட்டது.
“கடவுளை நேரில் காணுதல்” எனும் கட்டுரை அதற்கு விடை தந்தது. இது நீங்களே பல முறை சொல்லி இருப்பது தான். ஆனாலும் அவ்வப்போது நம்பிக்கை இழக்கும் போது இப்படி ஒன்று தேவைப்படுகிறது. இப்போது அந்தக் கதையே வேறொரு ஒளியில் தெரிகிறது. அறிவதற்கு ஒரு தங்கப்புத்தகம் எப்போதும் இருக்கிறது. பிரதி எடுக்கும் மனதில் தானே குறை. அறியும் மனம் எப்போதும் குறையுடன் தான் இருக்கும். அது தங்கப்புத்தகத்தின் பிரச்சினை அல்லவே..
நன்றியுடன்
பன்னீர் செல்வம்.
அன்புள்ள பன்னீர்செல்வம்,
வெவ்வேறு மதங்களின் கடவுள் தரிசனங்கள் முரண்படுவதைப் பற்றி நாராயணகுருவிடம் கேட்கப்பட்டபோது “அனைவருக்கும் ஒரே மாதிரி தெரியுமளவுக்கு அது சிறியது அல்ல” என்று அவர் வேடிக்கையாகவும் ஆழ்பொருளுடனும் பதிலளித்தார் என்று சொல்லப்படுகிறது.
கடவுளை விடுங்கள், வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளுக்கே தத்துவ ஞானிகளும், இலக்கியமேதைகளும் மாறுபட்ட பதில்களையே அளித்துள்ளனர். ஒருவர் இன்னொருவருக்குச் சளைத்தவர் அல்ல. எனில் எது உண்மை?
அதற்கான பதில் இதுதான், ஒன்று உண்மை இன்னொன்று பொய் என்று திகழுமளவுக்கு அது ஒற்றைமுகம் கொண்டதாக இருக்கவேண்டுமா என்ன? வாழ்க்கையின் அடிப்படை உருவகங்கள் பல. சுயம், உறவுகள், இன்பம், அறம், நீதி, மீட்பு என பல கருத்துருவங்களாக அவை நம் முன் உள்ளன. அவற்றுக்கு இதுவரை மானுடம் கண்டடைந்துள்ள பதில்கள் முடிவற்றவை.
முதிரா அறிவுடையோர்தான் ஏதேனும் ஒன்றை அறுதி உண்மையென ஏற்பார்கள். அதை முன்வைத்து மற்றவை பொய் என மறுத்து வாதிடுவார்கள். அந்த மனநிலை மதவெறியர்களிடம் உண்டு. மதத்தை எதிர்ப்பவர்களிடமும் அதே மனநிலைதான் நீடிக்கிறது.
வாழ்க்கை ஒரு தங்கப்புத்தகம். மெய்மை ஒரு மாபெரும் தங்கப்புத்தகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிக்குமளவுக்கு அது பிரம்மாண்டமானது. முடிவே அற்றது.ஒவ்வொருவரும் உண்மையையே அடைகிறார்கள். ஒவ்வொரு உண்மையும் ஒவ்வொன்று. ஒன்று இன்னொன்றை மறுப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே அந்தத் தங்கப்புத்தகத்தில் உள்ளவைதான்.
ஏதோ ஒரு கணத்தில் இந்த பன்முகத்தன்மையை கண்டடைந்தவர்கள் மட்டுமே மெய்யறிந்தவர்கள். ஏகம் சத்விப்ரா , பஹுதா வதந்தி என ரிக்வேதம் மானுட ஞானம் தொடங்கும் காலத்திலேயே அதை கண்டடைந்துவிட்டது. அதை உள்ளுணர்ந்தவர்களே பிறரிடம் எதையேனும் சொல்லத் தகுதி கொண்டவர்கள். எஞ்சியோர் பிரிவையும் பகைமையையுமே உருவாக்குவார்கள்.
ஏன் அவ்வாறு நிகழ்கிறது? ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையனுபவங்கள், வாழ்க்கைச்சூழல்கள், பிறவி இயல்புகள் வெவ்வேறானவை. ஆகவே எழும் வினாக்களும் வேறுவேறானவை. அவ்வினாக்கள் சென்று தொட்டு அடையும் விடைகளும் வேறுவேறாகவே அமையலாகும்.
நமக்குரிய விடையை நாம் அடைந்துவிட்டால் நாம் நிறைவுற்றவர்கள். நம் விடை நம் ஒவ்வொரு நாளையும் செயலூக்கமும் இனிமையும் கொண்டதாக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக நம் வாழ்க்கையை நிறைவுடையதாக்கவேண்டும். நம்மை அடிப்படையான ’ஞானப்பதற்றங்களில்’ இருந்து விடுவித்து அமையச்செய்யவேண்டும்.
நமக்குரிய விடை வெளியே ஏற்கப்பட்டாகவேண்டும் என்பதில்லை. நாமறிந்த கடவுள், நாமறிந்த பிரபஞ்ச உண்மைக்கு வேறு எங்கிருந்தும் சான்று தேவையில்லை. கிடைக்க வாய்ப்புமில்லை. நாம் நிறைவுறுவது ஒன்றே அதற்கான சான்றாக இருக்கமுடியும்.
நாமறிந்த விடை, நம் கடவுள், நம் மெய்மை இன்னொருவருக்கு உரியது அல்ல என நாம் அறிந்திருக்கவேண்டும். அவர் தன் விடையை தானே கண்டடையவேண்டும். அவ்விடைநோக்கிச் செல்ல நாம் சென்றபாதை அவருக்கு உதவக்கூடும். அவர் கோரினால் அதைச் சொல்லலாம். அவருக்கு உதவினால் நன்று, உதவாவிடில் ஒன்றுமில்லை. வலியுறுத்த, வாதாட நமக்கு உரிமையில்லை. அறிவையே அறியாமையின் கருவியாக்கிக்கொள்வது அது.
ஜெ