’காடு’ ஆழ்தலின் ரகசியம்- வேலாயுதம் பெரியசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் தளத்தில் வந்த ‘அதிமதுரம் தின்ற யானை’ கட்டுரையை வாசித்தவிட்டு, அந்த உந்துதலில் காடு நாவலை வாசித்து முடித்தேன்.

காடு எந்த அளவிற்கு அழகும், ஆபத்தும், சிக்கலும்  நிறைந்ததாக இருக்கிறதோ அதுபோலவே மனித மனங்களும், மனித வரலாறும், மனித வாழ்கையும் இருக்கிறது. கிரிதரன் இயல்பிலேயே கற்பனையாளனாகவும், நுண்ணுர்வாளனாகவும் இருக்கிறான். தன் காமத்தை உன்னதப்படுத்தி காட்டின் மீதும், நீலியின் மீதும் பித்தேறி கபிலனாக தன்னை உருவகித்து உச்சநிலைகளிலேயே வாழ்கிறான். அவனுக்கு நீலி மீது ஏற்பட்டது காதல் அல்ல பிரேமை, அவன் அவளது தூய பெண்மை மீதே பித்தேறி அழைகிறான். அதனால் தான் அவனால் சினேகம்மை, ரெஜினாள் மேரி, மாமியுடன் கூட முடியவில்லை. ஆனால் குட்டப்பன் தழைகீழாக இருக்கிறான். வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் அப்பட்டமாக காண்கிறான். இவன் செய்யும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. கிரி அகத்திலும், குட்டப்பன் புறத்திலும் வாழ்கிறார்கள்.

இது ஒரு வகையில் கிரியை நம் செவ்வியல் மரபுடனும், குட்டப்பனை நாட்டார் மரபுடனும் ஒப்பிட்டு எண்ண வைக்கிறது. கிரி கபிலனிலும், கம்பனிலும் திழைக்கிறான். குட்டப்பனிடம் உள்ள ஞானம்  அவன் தந்தையின் வாய்வழி கேட்டு அறிந்ததே. இந்நாவல் முழுக்க நாட்டார் மரபும், செவ்வியல் மரபும் ஒன்றை ஒன்று தொட்டு, இயைந்து செல்கிறது. குட்டப்பனும், ஐயரின் சமையல்கார நாயரும் நாட்டார் மரபில் வேறூன்றி நிற்கிறார்கள். கிரி மற்றும் ஐயரின் மனங்கள் நாட்டாரியல் மரபிலிருந்து பெற்றுக்கொண்டே, செவ்வியலில் உழாவி கொண்டிருக்கிறது. கிரி மற்றும் ஐயரின் இசை ரசனையும் செவ்வியலையே நாடுகிறது. நாவலில் ஐயரும், கிரியும் மலைச்சாராயம் முழுக்க குடித்துவிட்டு தித்தித்தாரா தித்தித்தாரா, கொடுங்கல்லூர் பூரப்பாட்டு என பாடிக்கொண்டிருக்கும் சமையல்கார நாயரை சந்திக்கும் இடம் நாட்டார், செவ்வியல் மரபுகள் எப்படி ஒன்றை ஒன்று நிரப்பி, வெளிப்பாடு கொள்கிறது என்பதை சித்தரித்து காட்டும் இடம். நாவல் முழுக்க எந்த அளவிற்கு கபிலர், கம்பர் வரிகள் வருகிறதோ, அதே அளவிற்கே நாட்டார் பாடல்களும் ஆங்காங்கே பாடப்படுகிறது. நாவல் முழுக்க இந்த கூறு துலங்கி கொண்டேயிருக்கிறது.

நாவலின் முடிவில் கிரிதரன், இஞ்சினியர் மேனன் மனைவியுடன் கூடும் இடத்தில் இருவேறு வாசிப்புகள் நிகழ சாத்தியங்கள் இருந்தன.

1)  கிரிதரனின் பிரேமை? அந்த பிரேமையின் எல்லை என்ன? அவனில் இருந்த பிரேமை, உன்னதமாக்கப்பட்ட காமம் உடைந்து , அவளுடன் கூடும் இடம் அவன் தன்னை ஒரு விலங்காக உணரும் தருனம். மேனன் மனைவியுடனான காமத்தை உள்ளூர வேண்டி, விரும்பித்தான் ஏற்றுக்கொள்கிறான்.
நீலி இருப்பதை உணர்ந்தும், அவன் காமத்தால் காந்தத்தால் இழுக்கப்படும் இரும்புத்துகள் போல ஈர்த்து கொள்ளப்படுகிறான். இங்கே மனிதன் எவ்வளவு எளிய உயிர் என்பதும், காதல், பிரேமையின் எல்லைகளும், கிரி போன்ற எளிய மனிதர்கள் காமத்தின் பேராற்றல் முன் உடைந்து நொருங்குவதையும் காட்டி செல்கிறது நாவல்.

மேனன் மனைவியின் பருத்த உடல் காமம் எனும் பேராற்றலின் குறியீடாக எழுந்து ஒரு புலி மானை கவ்வுவது போல அவனைக்கவ்வி இறையாக்கி கொள்கிறது. அவளுடன் கூடும்போது, அவன் மனதில் அம்மா, அம்பிகா அக்கா, சினேகம்மை, ரெஜினாள் மேரியின் பிம்பங்கள் எழுந்து மறைகின்றன. அவனது கனவுகளில் மாமி பலமுறை வந்திருக்கிறாள், அவனே மாமியை இரவுகளில் எண்ணி கொண்டுமிருக்கிறான் அவள் இவனை ஆட்கொள்ள நினைத்தவள்.  ஆனால் அவனுள் பிம்பங்களாக எழுந்த பெண்கள் அப்படியல்ல.    நாவலில் கிரி பதின்வயதில் தன் அம்மாவுடன் தூங்கும்போது அவள் அவன் காலை தள்ளிவிட்டு விலகி படுத்துகொள்ளும் இடத்தையும், அவள் பிம்பம் எழும் இடத்தையும் வைத்து (Oedipus Complex) உளச்சிக்கல் என்ற கோனத்தில் ஆராயலாம். மேலும் இத்தனை பெண்களின்  பிம்பங்கள் அவனுள் தோன்றியது, அவனுக்குள் உள்ளுரைந்திருக்கும் மீறலையும், அவனது காமம் சராசரி மனிதனின் காமத்தை விட பெரியது என்பதையும் காட்டிச்செல்கிறது. அந்த கலை மனத்தாலேயே அந்த மாபெரும் ஆற்றலால் அடித்து செல்லப்படுகிறான்.

2)  நீலி நாகரீகம் என்று நாம் சொல்லி அலையும் போலித்தனத்தின் சிறு சுவடு கூட படியாத, பெண்மையின்  ஆதார குணங்களுடன் ( தாய்மை, தன்மைய நோக்கின்மை)  இருக்கிறாள். உலகின் அனைத்து இடங்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக  இயற்கையுடன் இயைந்து, அதன் பேராற்றலை வணங்கி வாழ்ந்த நம் மூதாதையர்கள் ( இந்திய பழங்குடிள், செவ்விந்தியர்கள், அமேசான், ஆப்பிரிக்க பழங்குடிகள்) என அனைவரும் திரட்டி அளித்த தொல்ஞானத்தின் கடைசி துளியென, அதன் ஒட்டுமொத்தத்தின் பிரதிநியாக (கல்வெர்ட்டில் காட்டின் பிரதிநிதியாக வந்து தடம் பதித்துவிட்டு செல்லும் அந்த மிளாவை போல) நாகரீகத்தின் வாசல் முன்பு நின்று கதறி அழுது கொண்டிருக்கிறாள்.

மேனனின் மனைவி நாகரீகம் திரட்டி எடுத்த, நுனி நாக்கு ஆங்கிலமும், சுரண்டலும், அதிகார திமிரும், கருனையின்மையும், நுகர்வு வெறியும், பேராசையும் கொண்ட அறவுணர்ச்சியற்ற நாகரீகத்தின் பிரதிநிதி. அவளது பெருத்த உடல், வியர்வை நாற்றம், ரம் அருந்திவிட்டு தன்னை ஆணாக உணரும் தன்மை அனைத்தும் நாகரீகத்தின் சுரண்டல், அதன்மீது படிந்திருக்கும் ரத்த வாடை, அதன் ஆண் தன்மை (தாக்கும் தன்மை, சுயமைய நோக்கு) கின் குறியீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

நீலி ஒட்டு மொத்த தொல்ஞானத்தின் கடைசி துளியென நாகரீகத்தின் வாசல் முன்பு கதறி   நின்றிருக்க, நாகரீகம் கதவை தாழிட்டுவிட்டு போகத்தில் திழைத்து கொண்டிருக்கிறது. கிரி அங்கே நெருப்பில் விழும் பூச்சியை போல நாகரீகத்தின் சூட்டிற்கு இரையாகிறான். நாம் அனைவருமே அந்த சூட்டிற்கு இரையாகி கொண்டிருக்கும் நாகரீகத்தின் பிரதிநிதிகள் தானே.

நாவல் வரலாற்றின் அறுபடாத சரடுகளின் வழியே நகர்கிறது. தொல்குடி வாழ்க்கை, மன்னர் காலம்,  நிலபிரபுத்துவ விழுமியங்களை சுமந்து திரியும் மனிதர்கள், கிறிஸ்தவத்தின் வருகை   நாகரீக சமூகமான படித்த வரக்கத்தின் வருகை என ஒரு நீண்ட தொடரை, அதன் இயங்கியலை, மோதலை, உள்முரண்களை, நகர்வை என வரலாற்று தரிசனத்தை அளிக்கிறது. காட்டை பற்றிய வர்னனைகள், சூழல், பொழுதுகள், மரங்கள், மலர்கள், மிருகங்களின் சமூக வாழ்க்கை, தெய்வங்கள், அதனுடன் ஒன்றி வாழும் மனிதர்கள், அவர்களின் உறவுகள் , பல வகையான காம இயல்புகள் என ஒரு முழு வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறது நாவல்.

நீங்கள் காட்டின் விதையை எனக்குள் விதைத்து விட்டீர்கள், அதை வளர்த்து, வளர்த்து பெரிய காடாக்கி அதனுள் உலாவிக்கொண்டிருக்கிறேன்.

நாவலை நோய்தொற்று தனிமையிலிருக்கும் போது படித்தேன். The Shawshank Redemption படத்தில், கதாநாயகன் சிறையில் இருப்பான். சிறையில் Mozart-ன் இசையை போட்டதற்கு, இரண்டு வாரங்கள் வெளிச்சம் இல்லாத, மிகவும் சிறிய தனிமைச்சிறைக்குள் இருந்துவிட்டு வந்து  சாப்பிடும் இடத்தில் சக கைதி நண்பர்களை சந்திப்பான்.

ஒரு நண்பன், அந்த பொந்திற்குள் இரண்டு வாரங்கள் எப்படி கழிந்தது? என்று கேட்பான்.கதாநாயகன், என் வாழ்விலே இனிமையான நாட்கள் என்று பதில் சொல்வான்.மற்ற நன்பர்கள் அப்படி இருந்திருக்கவே முடியாது, அந்த பொந்திற்குள் நாட்கள் நீளமாகவும், கடுமையாகவும் இருந்திருக்கும் என்பார்கள்.அதற்கு அவன், எனக்கு துணையாக Mozart இருந்தார். இசையினுடைய இனிமையே அதுதான். அது நம் மூளையிலும், மனதிலும் எப்பொழுதும் இருக்கும். அதை யாராலும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் யாரும் இசையை அப்படி உணர்ந்ததில்லையா? என்று கேட்டு முடிப்பான்.

உங்கள் எழுத்துக்கள் எனக்கு Mozart-ன் இசையை போன்றதுதான், அது என் மனதிலும், மூளையிலும் கன நேரமும் பிரியாமல் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் துணைபுரிந்து கொண்டிருகிறது. இந்த தனிமை நாட்களில் மேலும் அர்த்தத்தை அளிக்கிறது, உங்கள் வாசகர்களுக்கு தனிமை என்பதே வாழ்நாளில் கிடையாது போலும். சரஸ்வதியிடம் சரண் புகுந்தவர்களுக்கு ஏது தனிமை.

பணிவன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

paintings https://www.davidmceown.com/

முந்தைய கட்டுரைகன்னித்தீவு
அடுத்த கட்டுரைஅமுதமும் காந்தியும் – கடிதம்