தனிமையும் உரையாடலும்

மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். எழுத்தின் தீவிரத்தன்மைக்கு சற்றும் குறையாத தீவிரத்தன்மையோடு உரையாடல்களை முன்னெடுக்கிறீர்கள்.  உங்கள் பயணங்கள் பெரும்பாலும் நண்பர் கூட்டத்தோடு அமைவதைக் காண்கிறேன். உங்கள் துறவு நாட்களுக்குப் பின்னர் முழுத்தனிமை என்றொன்று அமைந்திருக்கிறதா? அது சாத்தியமா?

தொடர்ச்சியான மனிதத் தொடர்பிலிருக்கத் தேவையான மனவெளியைத் தாங்கள் எப்படி வளர்த்துக் கொண்டீர்கள் என்பதை அறிய விழைகிறேன். (எனக்கு அவதானிப்பதில் உள்ள விருப்பு, தொடர் உரையாடலில் இல்லை.  மேலும் அது அகத்தடையா பெருங்குறையா என்று ஒரு கலக்கம்.)

உங்கள் எழுத்தின் கட்டற்ற தன்மைக்கும் ஆளுமைக்குமான தொடர்பாக அதைப் பார்க்கிறேன்.  தனிமை விருப்பென்பது அவரவர் இயல்பு, ஒரு வகையில் எழுத்தாளர்களுக்கு உகந்தது என்றாலும், புற உலகத்தைப் பற்றிய அறிவும், உரையாடல்களும் எழுத்தைச் செறிவாக்குவதை உணர்கிறேன். இந்நிலையில், எழுத்துக்கான கச்சாப்பொருளை  தனிமைவிருப்பு  கொண்டவர்கள் வாசிப்பைத் தவிர வேறு எங்கிருந்து பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.  நேரடியாக பெற்றுக்கொள்ளாததெல்லாம் முழுமையற்றதாகிறதா? தேவையற்ற இருண்மையும் பூடகத்தன்மையும் எழுத்தில் புகுந்து விடுகிறதா? நன்றி.

பார்கவி

***

அன்புள்ள பார்கவி,

தனிமை – உரையாடல் இரண்டுமே இலக்கியவாதிகள் மட்டுமல்ல ஆன்மிகவாதிகளிடமும் ஒன்றின் இரு பக்கங்களாக இருப்பதைக் காணலாம். ஓர் ஆன்மிகவாதி நீண்டநாட்கள் முழுத்தனிமையில் தவம் செய்யலாம். பின்னர் அவரே வெளிவந்து எழுதியும் பேசியும் விவாதித்தும் முழுமையாக வெளிப்படலாம். மீண்டும் தனிமையை நாடவும் செய்யலாம்.

அரவிந்தரின் வாழ்க்கையைப் பாருங்கள். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அவர் பல ஆண்டுகள் இருந்த ஓர் இருட்டறையைக் காட்டுவார்கள். அங்குதான் அவர் புற உலகுடன் தொடர்பே அற்று, புறஇருட்டில் வாழ்ந்தார். ஆனால் அவர்தான் பின்னர் வெளிவந்து சாவித்ரி போன்ற பெருங்காவியத்தை எழுதினார். அவருடைய விவாதங்களும், கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அவை பல ஆயிரம் பக்கங்கள் உள்ளன. மாபெரும் அமைப்பையும் உருவாக்கினார். ஒடுங்குதலும் விரிதலும் ஒரே செயலின் இரு நிலைகள்.

எழுத்தாளர்களும் அவ்வாறுதான். அவர்களிடம் ஓர் அகத்தனிமை உண்டு. தனிமையில் இருக்க அவர்கள் விழையும் நாட்களும் உண்டு. வெளிப்படுவதற்கும் உரையாடுவதற்கும் விரும்பும் நாட்களும் உண்டு. வெளிப்படுவதற்காகத்தானே அவர்கள் எழுத வருகிறார்கள்? தனிமையில் சேர்த்ததை வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.

நான் முழுமையான தனிமையில் அலைந்த நாட்கள் 1981 முதல் 1984 வரை நான்காண்டுகள். அன்று வாயில் சொற்கள் வருவதே கடினம். மாதக்கணக்கில் உரையாடாமலிருந்தது உண்டு. பின்னர் மேலும் ஆறாண்டுகள் அலுவலகத்தில் உரையாடி புழங்குபவனாகவும், அதற்கு அப்பால் தன்னந்தனியனாகவும் இருந்தேன். காசர்கோட்டில் ஒரு  கடலோரத்தோப்புக்குள் தனிவீட்டில் தனியாக வாழ்ந்தேன். பாலக்கோட்டிலும் தர்மபுரியிலும் தனியாக இருந்தேன். 1991ல் அருண்மொழியை மணம் செய்வது வரை அத்தனிமை இருந்தது.

உண்மையில் தனிமையை மீறிவந்து எழுத ஆரம்பித்தேன். 1986ல் நான் எழுதி வெளிவந்த முதல் கவிதை ‘கைதி’ தனிமையை மீறுவதைப் பற்றியதுதான்.கதவே இல்லாமல் சிறைப்பட்டிருக்கும் ஒருவன் தன் இருப்பை எழுதி ஓர் இடுக்கு வழியாக வெளியே வீசுவதைப் பற்றியது அக்கவிதை. சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். அவர் கட்டைக்காடு ராஜகோபாலனிடம் கொடுக்க கொல்லிப்பாவை இதழில் வெளியாகியது. அது ஒரு தொடக்கம்.

அன்று முதல் தீவிரமாக எழுதி வருகிறேன். என் எழுத்து என்பது ஒருவகையான இலக்கிய இயக்கம். அந்த தன்னுணர்வு எனக்கு தொடக்கத்திலேயே இருந்தது. வெறுமே சிலகதைகளை எழுதி வைத்துவிட்டுச் செல்வதற்காக நான் எழுதவரவில்லை. இலக்கியத்தில், வாழ்க்கைப்பார்வையில் அடிப்படையான சில மாற்றங்களை உருவாக்க விரும்பினேன். தமிழ் நவீனஇலக்கியத்தையும் மெய்யியலையும் இணைப்பது என் பணி. 1988ல் என் 26 ஆவது வயதில் எழுதிய குறிப்புகளிலேயே அதைச் சொல்லியிருக்கிறேன் என இப்போது பார்க்கையில் எனக்கும் வியப்புதான்.

அன்றைய இலக்கியச் சூழல் நவீனத்துவ அழகியல் கொண்டது. புறவய உண்மைகளை, கச்சிதமான குறுகிய வடிவம்கொண்ட புனைவாக, எண்ணி எழுதும் சொற்கள் வழியாக முன்வைப்பது அவ்விலக்கிய அழகியல். மரபை மறுப்பதும் பரவசங்களையும் பித்துகளையும் தரிசனங்களையும் நிராகரிக்கும் தர்க்கப்பார்வை கொண்டதுமாக அது தன்னை வரையறை செய்துகொண்டது.

நான் அதை மறுத்து காவியஅழகியலை முன்வைக்க விரும்பினேன். கட்டற்றுபெருகும் பெரும் புனைவுகளின் வடிவை, ஆசிரியனைப் பிளந்து அவனை மீறி எழும் மொழியை, வாழ்க்கையின் பரவசக்கணங்களை, வாழ்க்கையைக் கடந்துசெல்லும் பித்துகளை, மெய்த்தரிசனங்களை முன்வைக்க முனைந்தேன். அதற்காக மரபிலிருந்து அடிப்படையான தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எடுத்தாளவும், மரபை மறுஆக்கம் செய்யவும் முயன்றேன். இந்திய மதமரபுகளை மட்டுமல்ல, தொல்தமிழ் மரபுகளைக்கூட நவீனத் தமிழ் இலக்கியச்சூழலுக்கு மீண்டும் கொண்டுவந்தேன்.

நவீனப்புனைவு சென்றகாலக் காவிய ஆசிரியர்களிடமிருந்தும் சித்தர்களிடமிருந்தும் மெய்ஞானிகளிடமிருந்தும் விலகிச்செல்லலாகாது என்றும் அவர்களிடமிருந்து அது தொடங்கி சமகாலத்தில் புதிதென எழவேண்டும் என்றும் சொன்னேன். தமிழ் நவீனத்துவப் புனைவு தனக்கிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த ‘நவீனத்தன்மை’ என்பது ஐரோப்பிய நவீனத்துவம் கிரேக்க முன்னோடிகளிடமிருந்து உருவாக்கிக் கொண்டது. அது வேரற்றது அல்ல. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நாம் இங்கே வேரற்றவர்களாக ஆகவேண்டியதில்லை. அதை நம் வேர்களில் நின்றுகொண்டு நாம் பரிசீலிக்க முடியும் என்றேன்.

தமிழ்ச்சூழலில் அன்று இது ஒரு துடுக்குத்தனமான பேச்சாக கருதப்பட்டது. அந்தப்பார்வையை அன்றிருந்த இடதுசாரிகள் தங்கள் மேலோட்டமான பார்வையால் மதவாதம் என முத்திரைகுத்தினர். அது நவீனத்துவர்களுக்கு தர்க்கநோக்கை உதறிவிட்டு பழமைநோக்கிச் செல்லுதலாக தோன்றியது. எழுத்தை வெறும் சமூகச் செயல்பாடாகக் கருதுபவர்களுக்கு நான் அதை ‘மர்மமாகவும் புனிதமாகவும்’ ஆக்க நினைக்கிறேன் என்று தோன்றியது. தரிசனம் என்ற சொல்லைப்பற்றியே நாலைந்தாண்டுகள் விவாதிக்க நேர்ந்திருக்கிறது. ஆகவே அனைவருடனும் நான் விவாதிக்க வேண்டியிருந்தது. அக்குரல் இன்றும்கூட எழுகிறது. ஆகவே அந்த விவாதம் இன்றும் தொடர்கிறது.

நான் அன்று அனைவரிடமும் விவாதிக்க முயன்றேன். மறுத்த அனைவருக்கும் கடிதங்கள் எழுதினேன். பதில் கட்டுரைகள் எழுதினேன். வசைபாடியவர்களுக்குக் கூட அவர்களை பாராட்டி, அங்கீகரித்து விவாதங்களுக்கு கொண்டுவர முயன்றேன். நானே நடத்திய சிற்றிதழில் அவர்களை எழுதச் செய்தேன். ஆனால் பின்னர் கண்டுகொண்டேன், வசைபாடிகளுடனும் செயற்கைப்புரட்சியாளர்களுடனும் உரையாட முடியாது. அவர்களால் வெறுமே கூச்சலிடவே முடியும். ஏனென்றால் அவர்களிடம் ஆழமான நம்பிக்கையும் இல்லை, தெளிவான புரிதலும் இல்லை.  அஞ்சுகிறார்கள், எதிர்த்தரப்பை குறுக்கி முத்திரையிட்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே ஒருகட்டத்தில் அவர்களை முற்றாகப் புறக்கணித்தேன். இன்றுவரை அதுவே என் வழி. சென்ற இருபதாண்டுகளகா முதன்மைக்குரல்களிடம் மட்டும் விவாதிக்கலானேன். சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஞானி, எஸ்.என்.நாகராஜன், ராஜ் கௌதமன், வேதசகாயகுமார், குமரிமைந்தன்,அன்பு பொன்னோவியம் ஆகியோருடன் விவாதத்தில் இருந்தேன்.பேசிப்பேசி என்னை தெளிவுபடுத்திக் கொண்டேன்.

கூடவே அன்றிருந்த அத்தனை எழுத்தாளர்களுடனும் தொடர்பிலிருந்தேன். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், எஸ்.சங்கரநாராரயணன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், சுகுமாரன், திலீப்குமார், ந.ஜெயபாஸ்கரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் அனைவருக்கும் கடிதங்கள் எழுதினேன். கடிதங்கள் வழியாக விவாதித்தேன்.

அவ்வாறு முப்பதாண்டுகளாக விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.மெல்லமெல்ல என் தரப்பை இங்கே ஒரு வலுவான குரலாக நிலைநாட்ட என்னால் முடிந்தது. இங்கே இருந்த இலக்கிய அழகியலில், மரபைநோக்கிய அணுகுமுறையில், வாழ்க்கைநோக்கில் ஒரு மாற்றத்தை உருவாக்கவும் முடிந்தது. இன்றைய இலக்கியப் படைப்புகளே அதற்குச் சான்று

இன்று எனக்கு அடுத்த தலைமுறையினருடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்.இன்று கடிதங்கள் எழுதுகிறேன். வாசகர் சந்திப்புகள் நடத்துகிறேன். பயணங்கள் செய்கிறேன். விழாக்களை ஒருங்கிணைக்கிறேன். இவையனைத்தும் நான் எண்ணும் ஓர் இலக்கிய இயக்க்த்தை உருவாக்கி நிலைநிறுத்தி முன்னெடுக்கும்பொருட்டுதான். இலக்கியத்தின் அடிப்படை நோக்கம்

இதையெல்லாம் எல்லா எழுத்தாளர்களும் செய்யவேண்டுமென்பதில்லை. புனைவை மட்டும் எழுதிவிட்டுச் செல்லும் எழுத்தாளர்களுக்கு இவை தேவையுமில்லை. ஆனால் இலக்கிய- அறிவுத்தள மாற்றத்தை உருவாக்க எண்ணும் எழுத்தாளர்களுக்கு இதுவே வழி. க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் இதைச் செய்தனர். தி.ஜானகிராமனும், கு.அழகிரிசாமியும், அசோகமித்திரனும் இதைச் செய்யவில்லை.

இது என் பணி, ஆங்கிலத்தில் இதைச் சொல்ல சரியான சொல் உள்ளது- mission. ஆனால் இதைச் செய்யும்போதும் நான் என் தனிமைக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். எவரும் அணுகமுடியாத தனிமை அது. என் குரு மட்டுமே எட்டிப்பார்த்த ஓர் உலகம். அங்கிருந்துதான் என் புனைவுகள் வருகின்றன. ஒரு நாளில் இவ்வளவு பேசி எழுதியபின்னரும் தனியாக இருக்கும் பொழுதுகளே மிகுதி. அணுக்கமான நண்பர்களுடன் இருக்கையில், அடுத்த தலைமுறையினருடன் விவாதிக்கையில் உவகையுடன் இருக்கிறேன். ஆனால் புனைவுகளை உருவாக்கும்போது எட்டுதிசையும் திறந்து கிடக்கும் தனிமையே என்னைச் சூழ்ந்திருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைநிர்வாகம்
அடுத்த கட்டுரைகன்னித்தீவு