தமிழக அரசின் இலக்கியவிருதுகள்
இலக்கிய விருதுகளை ஏற்பது
விருதுகள்,விடுபடல்கள் – கடிதம்
விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்
அன்புள்ள ஜெ,
இலக்கிய விருதுகள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதையொட்டி வந்த விவாதங்கள், காழ்ப்புகள், கசப்புகள் எல்லாவற்றையும் வாசித்தேன். உங்களைப் பற்றியோ தமிழிலக்கியம் பற்றியோ ஒன்றுமே தெரியாத ஒரு கும்பல் நீங்கள் விருதுக்காக துண்டுபோடுவதாகவும், விளம்பரம் தேடுவதாகவும், விவாதம் கிளப்பி குளிர்காய்வதாகவும் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்தது. அற்பர்கள். வாசிக்கையில் குமட்டல் எழுப்பும் அற்பத்தனம். ஆனால் இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிரான போராட்டமாகவே நவீனத் தமிழிலக்கியத்தின் சென்ற நூறாண்டுக்கால வரலாற்றைச் சொல்லமுடியும்.
நீங்கள் எழுதவந்த காலம் முதல் நான் தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடையே ஒருகாலத்தில் கடிதப்போக்குவரத்தும் இருந்துள்ளது. 92ல் கோவி மணிசேகரன் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது அவ்விருதை கண்டிக்கவேண்டும் என்று கோரி எழுதிய கடிதம் எனக்கும் வந்தது. அன்று இதழ்கள் இல்லாததனால் கடிதமாகவே அந்த இயக்கத்தை முன்னெடுத்தீர்கள்.
சுந்தர ராமசாமி அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது எழுதிய கடுமையான கட்டுரையும் [போலிமுகங்கள்] இப்படித்தான் அன்றைய சில்லறைகளால் வசைபாடப்பட்டது. பொறாமை என்றும் காழ்ப்பு என்றும் சொன்னார்கள். ஆனால் அந்த ஒரு கட்டுரைதான் இன்றுவரை தமிழின் புகழ்பெற்ற வணிகநட்சத்திரங்கள் ஞானபீடம் பெற்று நம் முகத்தை இந்திய அளவில் சீரழிக்காமலிருக்க தடையாக நின்றுகொண்டிருக்கிறது
நீங்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக அத்தனை விருதுகளுக்கும் எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்கள். அதற்கு ஓர் இலக்கிய அளவுகோல் வைத்திருக்கிறீர்கள். தகுதியான போது பாராட்டுவதும் அல்லாதபோது கடுமையாக விமர்சிப்பதும் உங்கள் வழக்கமாக இருக்கிறது. கடைசியாக வைரமுத்து சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது கண்டித்திருந்தீர்கள். அதற்குமுன் தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டபோது இயல்விருதை மிகக்கடுமையாக கண்டித்திருந்தீர்கள்.
சென்ற இருபதாண்டுகளில் சாகித்ய அக்காதமி மட்டுமல்ல, தமிழில் அளிக்கப்பட்டுவரும் பொதுவான எல்லா விருதுகளிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு சாதாரண எழுத்தாளருக்கு, அவர் எந்த அளவுக்குப் பெரிய வணிக நட்சத்திரமாக இருந்தாலும், இன்று விருதுகொடுக்க தயங்குகிறார்கள். பெரும்பாலும் தகுதியானவர்களுக்கே விருதுகள் செல்கின்றன. ஏனென்றால் இன்று கடுமையான வாசகக் கண்காணிப்பு உள்ளது என அனைவருக்கும் தெரியும்.
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு எவருக்கெல்லாம் விருதுகள் சென்றன என்று எனக்கெல்லாம் தெரியும். அந்நிலை இப்படி மாறுமென நான் எதிர்பார்த்திருக்கவுமில்லை. அந்த மாற்றத்தில் உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது. வசைகள் அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு, கடமையைச் செய்யும் அர்ப்பணிப்போடு கால்நூற்றாண்டாக சில அடிப்படை விழுமியங்களை முன்வைத்தபடியே இருந்ததன் விளைவு இது.
நீங்கள் உருவாக்கிக்கொண்டிருப்பது ஓர் இலக்கிய இயக்கம். இன்றைக்கு நான் இலக்கியவாசிப்பில் இருந்து நீண்டநாட்கள் ஒதுங்கியிருந்து மீண்டு வந்தபோது இந்த மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆர்.ராகவன் [சிற்பன்]
வணக்கம் ஜெ சார்,
தமிழக அரசின் விருதுகள் கட்டுரை, முகத்திலடித்தாற் போல, எழுத்துலகிற்கான சரியான மரியாதை பற்றி தெளிவாக எடுத்துரைத்தது.
எங்களைப் போன்ற வாசகர்களின் வாழ்க்கை முறை, சரியான வாசிப்பின் மூலமே பண்படுகிறது, வளரும் தலைமுறைக்கும் கடத்த முடிகிறது.
எழுத்துக் கூட்டி வாசிக்க கற்றுக் கொண்ட திலிருந்து, கதைகளின் மேல் ஆர்வம் கொண்டு, இன்றுவரை வாசிப்பு, வாழ்க்கையின் பல பரிமாணங்களை காட்டிச் சென்றுள்ளது.
நீங்கள் பரிந்துரைத்த சிறந்த எழுத்தாளர்களின் பட்டியலில் மிகச் சிலருடைய படைப்புகளில் ஒரு சில வற்றை மட்டுமே வாசித்தது, குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது,.பல குப்பைகளை வாசிக்காமல், வைரம் தென்படுவதில்லை. சரியான வாசிப்பு, சரியான எழுத்தாளர் களுக்கான மரியாதை.
சரி, என்னை எங்கே வைத்துக்கொள்வேன்? ஏற்கனவே சொன்னதுதான். எந்த அரசுக்கும் என் பணிவை, முழுதேற்பை அளிக்க முடியாது. குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. எந்த மேடையிலும் எவர் முன்பும் கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவனாக நிற்க முடியாது. கொஞ்சம் மோசமான ஆணவம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை.
உங்களின் அறச் சீற்றம் நம் வருங்கால சந்ததியினருக்கு, ஆகச் சிறந்த பண்பாட்டு வரமாகும். இன்றைய பள்ளி பாடத் திட்டத்தில்(தமிழ்) உள்ள பாடங்களைக் காணும்பொழுது மிகவும் சோர்வளிக்கிறது. சமீப(சம) கால எழுத்துலக படைப்புகள், எழுத்தாளர்கள் பற்றி எந்தவொரு குறிப்புகளுமில்லாமல், வளரும் தலைமுறை சரியான வாசிப்பனுவத்தைப் பெற முடியுமால் போக நேரிடுகிறது.
உங்களின் அறச் சீற்றம் தாண்டி, நம் பண்பாட்டு வரலாறு, வாசிப்பு, விழிப்புணர்வான வாழ்க்கை முறை ஆகியவற்றை நம் தமிழ்ச் சந்ததியினருக்கு கடத்த வேண்டிய மிகப் பெரிய இடத்தில் இருக்கிறீர்கள் சார். அது நிச்சயமாக நடக்கும் காலம் வெகு அருகே இருக்கிறது.
நன்றி
ராஜி மோகன்ராம்.
அன்புள்ள ஜெ
பொட்டில் அடித்தாற்போல் சொல்லியுள்ளீர்கள். எழுத்து என்பது வரம் அல்ல…. தவம்… இது 20 ஆண்டுகளுக்கு முன் குமுதம் தீபாவளி சிறப்பு அதல் உங்கள் பேட்டிக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு. அந்த புத்தகத்தை கூட நான் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக நினைவு….
அந்த தவத்தை இன்னும் நீங்கள் தொடர்கிறார்கள்…. விருதுகள் என்னும் மேனகை ரம்பை அசைந்து கொடுக்காமல், முனிவன் போல் தன்னை நம்பி தன்னம்பிக்கை துணைகொண்டு செயல்படும் உங்களின் தளம்…. நிச்சயம் உங்களுக்கு பெயரைத்தான் கொடுக்கும்….
உங்களின் தார்மீக முடிவு கோபம் இலக்கியம் சார்ந்தது…. வரலாறு சார்ந்ததல்ல…. வரலாறு என்பது யாரோ எழுதியது அல்ல தனி ஒருவனால் படைப்பது. அதை காலம் நிகழ்த்தும் உங்களின் கருத்துக்கு ராயல் சல்யூட்…. நன்றி ஜெ.மோ.. சார்….
இரா வேல்முருகன்
சேலம்.
விருது – கடிதங்கள்
வைரமுத்துவுக்கு ஞானபீடமா?
வைரமுத்து – எத்தனை பாவனைகள்!
சாகித்ய அகாடமி மீண்டும்
சாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்
சாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்