பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு விசாரணை
பன்னலால் பட்டேல்
இந்நாவல் மான்வி நீ பவாயி என்ற பெயரில் குஜராத்தியில் திரு பன்னாலால் பட்டேல் அவர்களால் 1947ல் எழுதப்பட்டது. 1973ல் துளசி ஜெயராமன் அவர்களால்
மேற்கண்ட பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் மூலமாக வெளியிடப்பட்டது. அசதாரணமான சகிப்புத்தன்மையின் உச்சம் என்றும் இதனைக் கூறலாம்.
கிராமிய விவசாயப் பின்புலத்தைக் களனாகக் கொண்ட யதார்த்தவாத நவீனத்துவ வரலாற்று நாவல் எனலாம். நாவல் இன்றைய குஜராத்தின் சாபர்கந்தா மாவட்டத்தின் நாட்டார் வழக்கில் மூல மொழியில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நாவலின் மிக முக்கிய நிகழ்வு 56ம் வருடப் பஞ்சம் என குஜராத்தி மக்களால் பெரும்பாலாக அறியப்பட்ட பொ.யு 1899-1900 வருடப் பஞ்சம்.
நாவல் நிகழும் காலம் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. நாவல் நிகழும் களன் அன்றைய குஜராத்தின் மாளவ எல்லையோரம் அமைந்த கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதி. இன்றைய ராஜஸ்தானின் தென்கிழக்கு, குஜராத்தின் வடகிழக்கு மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மேற்கு எல்லையில் அமைந்த சிறு குன்றுகளும், சமவெளி நிலமும், சிற்றாறுகளும் உள்ளடக்கிய விவசாயநிலங்களும்,,கிராமங்களும் மற்றும் டேகடியா என்று அன்று அழைக்கப்பட்ட பேரூருமே இக்கதை நிகழும் களம்.
இந்நூலானது 1947ல் பன்னாலால் படேல் மக்காச் சோள வயல்கள் சூழ்ந்த தன் பூர்விக கிராமமான மாண்ட்லியில் வசித்தபோது எழுதியாகத் தெரிகிறது. நாவல் துவங்குவது கூட கோதுமை, சோளக் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி அசையும் பனிக்காற்றுடன் கூடிய மார்கழி மாதத்து இரவில் தான். இவ்வயலின் வரப்பு அருகே நெருப்புக் கணப்பு உண்டாக்கி பின்னிரவில் குளிர் காய்ந்த படி வயலைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காலு படேல் முடமான கையுடன் உக்கா பிடித்தபடி தன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறார்.
இக்கதையானது ஆசிரியரின் முன்னோர்களது அல்லது அவர்களால் அறியப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையாக இருக்கலாம். 1912 ல் பிறந்த கதாசிரியர் தன்னுடைய 35 வது வயதில் சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை உணர்வுபூர்வமாக தன் எழுத்தில் கொணர்ந்துள்ளார். 1900 ங்களில் புன்செய் விவசாயம் செய்யும் இந்திய கிராமம் குறித்த ஆவணமாகவே இக்கதையைப் பார்க்கலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் எந்த ஒரு ஊரும் இக்கதை பேசும் கிராமங்களளைப் போன்றுதான் அன்று இருந்திருக்கும். இக்கிராமங்களின் விவசாயம் பெரும்பாலும் பருவ மழையை நம்பியே இருந்தது. குறிப்பாக தென்மேற்குப் பருவமழை. ஆடி மாதப் பருவ மழையை நம்பியே விதை விதைக்கும் நிகழ்வு நடக்கின்றது. அது ஒரு திருவிழா போன்று கிராமத்திலுள்ள அனைவராலும் கொண்டாடப் படுகிறது.
கிராம மக்கள் அனைவரின் முகங்களும் அன்று மலர்ந்து காணப்படுகிறது. கிராமத்தின் அருகில் ஓடும் சிறுநதி குடிநீர்க்கும், வாழ்வியல் தேவைகளுக்கும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படுகிறது. பெண்களுக்கு தண்ணீர் சுமப்பதே அன்றாட முக்கியப் பணி. நதிநீர்ப் பாசனமோ, கிணற்றுப் பாசனமோ அன்றைய காலகட்டத்தில் அப்பகுதிகளில் இல்லை. வசதியானவர்கள் பயணங்களுக்கு குதிரை வைத்துள்ளனர். விவசாய வேலைகள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களே செய்கிறார்கள். வீடுகளுக்கு ஓடு மாற்றுதல், தட்டிகளாலான சுவர்களை அமைத்தல் போன்ற வேலைகளை அவர்களே செய்து தனனிறைவான வாழ்க்கை வாழ்கின்றனர்.
அருகிலுள்ள மலைக் குன்றுகளில் வாழும் குறவர்கள் எதுவும் பயிரிடுவதில்லை. தானாக காடுகளில் விளையும் தானியங்களையும், காய், கனி, கிழங்குகளையும் உண்டும், சிறு விலங்குகளை வேட்டையாடி உண்டும் தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். மலைக்கிராமத் தலைவரின் அனுமதியுடன் குறவச் சிறுவர்கள் ஓரிருவர் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்கிறார்கள்.
இம்மாதிரியான சூழ்நிலை நிலவும் காலத்தில், பலசாலியும், பண்பாளரும், வறுமையில் வாடுபவருமான வாலா படேலின் அந்திம வயதில் ஒற்றை மகனாகப் பிறக்கிறார் காலு. தன்னுடைய விவசாயப் பணிகளுக்கு தோள் கொடுக்க வந்த வரமாக நினைத்து சிறுபிள்ளையின் பிறப்பை கொண்டாடுகிறது குடும்பம். வாலா பட்டேலின் தம்பி பரமா கிராமத் தலைவர். அவருடைய மனைவி மாலி காழ்ப்பும், பொறாமையும், சுயநலமும் ஒருங்கே கொண்ட பெண்மணி. இவர்களுக்கு வயது வந்த இரு மகன்கள் ரணசோட் மற்றும் நாநா .
காலுவை கரியன் என்று கூறி காழ்ப்பைக் கொட்டுகிறாள் அவன் சிற்றன்னை. பரமா ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்கிறார். காலுவின் பிள்ளைப் பிராயம் வயல்வெளிகளில் தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடுவதிலும் தந்தையும் மற்றவரும் செய்யும் பணிகளைப் பார்ப்பதுமாக கழிகிறது. அக்கால வழக்கப்படி பிள்ளைக்கான பெண்ணைத் தேடி வாலாவின் அண்ணி பூலி, வசதியான காலா பட்டேலின் அழகான மகளான ராஜியை காலுவிற்கு பேசி முடிக்கிறார். குழந்தைகளின் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடக்கிறது. சித்தி மாலி பொறாமைத் தீயில் எரிந்தாலும், கிராமத்தினரால் பிசாசுக் கிழவி என்றழைக்கப்படும் பூலியை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.
கிராம மக்களின் செல்வ நிலை அவர்களது குடும்பத்திலுள்ள கால்நடைகளின் எண்ணிக்கை, அவர்களது வீட்டில் பயன்படுத்தும் நெய் மற்றும் வெண்ணையின் அளவு மற்றும் உண்ணும் தானியம் இவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. கோதுமை உண்பவர்கள் வசதியானவர்களாாகவும், சோளம் உண்பவர்கள் அடுத்த நிலையிலும் திணை உண்பவர்கள் வறியவர்களாகவும் அறியப் படுகின்றனர். செப்புக்குடம் வைத்திருப்பது உயரிய அந்தஸ்தாக கருதப்படுகிறது. மலை கிராமத் தலைவரின் வீட்டில் ஒரு செப்புக் குடமும், பரமாவின் வீட்டில் இரு செப்புத் தோண்டிகளும் உள்ளன.
காலுவின் நான்காவது வயதில் அவரின் தந்தை காலுவின் கையைப் பிடித்து அவனைத் தன் தம்பி பரமாவிடம் ஒப்படைத்துவிட்டு மறைகிறார். அதைத் தொடர்ந்து ராஜியின் தந்தை காலாவும் மறைகிறார். பரமா மனைவியை மீறி காலுவிற்கு உதவ முடியாததால் அவன் அன்னை ரூபியின் அரவணைப்பில் வளர்கிறான். காலு எருதுகளைப் பார்த்துக்கொள்ளவும், ஏர் உழவும் கற்று கொள்ளும் ஏழு வயதில் விதை விதைக்க வேண்டிய ஆடித் திருவிழா வருகிறது. ஊரின் அனைத்து நிலங்களிலும் விதை விதைப்பு நடக்கிறது. காலுவின் நிலத்தில் விதை விதைக்க ஆட்கள் யாருமில்லை. மாலி இகழ்ச்சியாக வசை மழை பொழிகிறாள். இதனால் மனமுடைந்த காலுவின் தாய் ரூபி காலுவைக் கொண்டு ஏர் உழவும், விதைக்கவும் முடிவு செய்து, எருதுகளையும், காலுவையும் கூட்டிக்கொண்டு விதைக் கூடையுடன் நிலத்திற்கு செல்கிறாள்.
அக்காலத்தில் பெண்கள் ஏர் உழுதால் பஞ்சம் வரும் என்ற நம்பிக்கை காரணமாக ஊரார் ரூபியைத் தாக்க முனைந்தனர். ரூபி தான் உழவில்லை காலு தான் உழுதான் எனக் கூறி தப்புகிறாள். சுற்றியுள்ள கிராமத்தினரின் பகைக்கு அஞ்சி பிராயசித்தமாக ரூபியை நிலத்திலிட்டு ஏர் கொண்டு உழ முற்படும் போது பெருமழை பெய்து ரூபி காப்பாற்றப்படுகிறாள். இவ்வத்தியாயம் அற்புதமான தருணங்களால் நாடகீயமாக மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். ரூபியின் மதிப்பு இதனால் கிராமப் பெண்களிடம் உயரும்.
பின்னர் மாலி குடும்பத்தின் சூழ்ச்சியால் காலு ராஜியின் திருமணம் தடைப்பட்டு விதி வசத்தால் ராஜி பக்கத்து கிராமத்தில் காலுவின் வருங்கால மாமனாரின் தம்பியை மணக்க, காலு பலியை மணப்பான். இக்காலத்தில் காலு நல்ல பலசாலியாாகவும், கடின உழைப்பாளியாகவும் மாறுவான். இரு வீட்டு விவசாய வேலைகளையும் தனி ஒருவனாக முடிக்கும் திறன் பெற்றிருப்பான். மேலும் அவனுக்கான ஓர் நண்பர், உறவினர் கூட்டத்தையும் உருவாக்கி ஊரின் முக்கிய மனிதாக மாறுகிறான்.
காலு, ராஜிக்கு இடையேயான காதலும், உறவும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும். களங்கமில்லா, கண்ணியம் மீறா தீராக் காதல். அவர்களுக்கு இடையே உடல் ரீதியான தீண்டல் இல்லாததாலேயே தீராக் காதல் இருந்ததா? என்னும் கேள்வி ஒவ்வொரு வாசகனின் மனதில் எழும் வண்ணம் காலுவின் பார்வையில் நாவலை எழுதிச் செல்கிறார் கதாசிரியர். ஆணின் ஆணவத்தையும் (ego), நுண்மையான அகத் தருணங்களையும் படிப்பவர் தானே உணரும் வகையில் அற்புதமாக எழுதியுள்ளார். காதல், பொறுமை, தியாகம், சகிப்புத்தன்மை, பேரன்பு கொண்ட தாய்மையின் மொத்த உருவமாகவே ராஜி கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஜெயமோகன் மொழியில் சொல்வதானால் சீதா தேவியின் மறு வடிவம்.
வளமான காலத்தை தொடர்ந்து, பருவமழை பொய்க்கத் தொடங்குகிறது. ஏழைகள் தங்கள் சேமிப்பில் உள்ள பொருட்களையும், கால்நடைகளையும் விற்று ஜீவிக்க முனைகின்றனர். பின்னர் வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்களையும் விற்று உணவு தானியங்களை வாங்குகிறார்கள். பஞ்ச காலத்தை முதலில் உணர்பவர்கள் மலைக்குடிகளே. அவர்களிடம் சேமிப்பு ஏதுமில்லாத காரணத்தால் குன்றுகளை விட்டு இறங்கி வந்து கிராமங்களை கொள்ளையிடுகின்றனர். கிராம மக்கள் ஊர்க்காவல் அமைத்து தங்கள் உடைமைகளையும், கால்நடைகளையும் காத்துக் கொள்ள முயலுகிறார்கள். நாவலின் நடையானது ஆரம்ப அத்தியாயங்களில் கோடைகால வறண்ட நதியின் நீரொழுக்கைப் போல் நிதானமாக ஆரம்பித்து பின் மெல்ல வேகம் பெற்று இறுதியில் மலை விட்டிறங்கும் காட்டாற்று வெள்ளம் போல் அதிவிரைவான சம்பவங்களால் அடித்துச் செல்லப்படுகிறது.
காவல் காக்கும் பணியின் போது காலு மலைக் குறவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தனது எருமை மாடுகளை மீட்கச் செல்லும்போது மரத்தின் மீதமர்ந்து அவன் காணும் காட்சி ஒரு கொடூர அனுபவம். பசியின் கோர முகத்தை அவன் அங்கு காணுகிறான். ஏன் இந்த மனிதப்பிறப்பையும், பசியையும் படைத்தாய்? என கடவுளை நொந்து கொள்வான். அதன்பின் அவருடைய மனம் மாறுகிறது. குறவர்கள் கொள்ளையடிக்க வரும் போது தன் உடைமைகளையும், பொருட்களையும் காக்க அவர் பெரும்பாலும் முயற்சிப்பதில்லை.
அப்படிப்பட்ட ஒரு கொள்ளையின் போது சுயநலமே உருவான மாலி கிழவி தன் குடும்ப நகைகள் அனைத்தையும் அனைவரிடமிருந்தும் பிடுங்கி தானே மூட்டை கட்டி பாதுகாக்க முனைந்து கட்டிய துணி முதற்கொண்டு அனைத்தும் இழந்து உயிரையும் விடுவாள். அவளுடைய சிதையேற்றம் பரிதாபமான அதே சமயம் உணர்வு பூர்வமான நிகழ்வு. இடையில் இரு காவல்காரர்களுடன் கிராமம் வழியே செல்லும் தானிய வண்டிகளை கொள்ளையிட காலு முடிவெடுத்து முதிய காவல்காரரான காபூலிவாலாவுடன் மோதும் நிகழ்வு ஒரு சாகசச் செயல். குண்டடிபட்ட இடது கையுடன் முதிய வீரரை வீழ்த்தி தானியங்களை கிராம மக்களுக்கு பங்கிட்டு ஒரு மாதம் பசிப்பிணியை நீக்குவார். காபூலிவாலாவுக்கும், காலுவுக்கும் அப்போது முகிழ்க்கும் தந்தை மகன் உறவு அருமையானது. காபூலிவாலா தனது கடமையை நிறைவேற்ற தவறியதால் முதலாளியின் முகத்தில் முழிக்க மறுத்து கிராமத்தை விட்டு வெளியேறும் தருணம் நெஞ்சைத் தொடக்கூடியது.
காலு வாழ்வின் இறுதியாக ராஜியை சந்திக்க நீண்ட வாள்,அம்பறாத் துணி மற்றும் அம்புகளுடனும் பக்கத்து கிராமத்திற்குச் செல்வார். மெலிந்த உடலுடன் வீட்டின் முன் அமர்ந்திருக்கும் ராஜியை அவரும், புதிய தோற்றத்திலுள்ள காலுவை ராஜியும் அருகில் வரும் வரை அடையாளம் காணமாட்டார்கள். இசசந்திப்பு நெகிழ்ச்சியானதாகவும், உரையாடல்கள் பஞ்சத்தின் கொடுமையை சிறப்பாகக் கூறுவதாகவும் அமையும். தானியக் குதிர்களை அம்பு விட்டு அளந்து அதன் வெறுமையை உணர்வது, நெருப்பு எரியாத அடுப்பங்கரையைப் பார்ப்பது என வீட்டின் வறுமையை காட்சிகள் மூலம் உணர்த்தியிருப்பார். வீட்டின் முன்புறம் உள்ள மயானத்தில் தினந்தோறும் எரியும் சிதைகளைக் கண்டு நம்பிக்கை இழந்து விரக்தியில் சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் வாழ்வை காண்பிப்பது என கொடுங்காட்சிகளை விவரித்திருப்பார்.
கிராமங்கள் கைவிடப்பட்டு வசதியானவர்கள் உட்பட அனைவரும் பஞ்சம் பிழைக்க டேகடியா கிராமம் சென்றனர். டேகாடியாவில் பன்னாலால் பட்டேல் காட்டும் பஞ்சத்தின் காட்சிகள் மனதை உலுக்கக் கூடியவை. ராஜி, காலுவின் குடும்பங்களும் ஒன்றிணைந்து டேகாடியா சென்றன. பசி கிராம மக்களின் விழுமியங்களையும், நீதி உணர்ச்சியையும் வீழ்த்தியது. மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தவம், தானம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகிய குண விழுமியங்களை கிராம மக்கள் இழந்தனர். பதிபக்தி பேசிய பெண்கள் மானம் இழந்து வாழ்த் துணிந்தனர். குலபபெருமை பேசியவர்கள் அவர்கள் பார்வையில் தாழ்ந்தகுலத்தாருடன் வாழத் தலைப்பட்டனர்.
காலு ஒரு கவளச் சோற்றுக்காக முடமான கையுடன் நாள் முழுவதும் பாத்திரம் விளக்கினார். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறையே சிறிதளவு உணவு கிடைத்தது. பலர் வெள்ளையர் அமைக்கும் இரயில் தண்டவாளப் பணிக்கு செல்ல முயன்று பாதி வழியில் பசியால் உயிரிழந்தனர். முதியவர்கள் பெரும்பாலும் பசியாலும், நோயாலும் இறந்தனர். ரண சோட்,, பூலியின் மகன் சங்கர் முதலான காலுவின் உறவினர்களும், ராஜியின் கணவரும், மைத்துனரும் பசியால் உயிரிழந்தனர். காலுவின் மனைவி பலி, உறவினர் ருக்கி முதலான பெண்கள் மானமிழந்து வாழத் தீர்மானித்தனர். நாநாவின் மனைவி கோடி வேறு மதத்தவருடன் வாழச் சென்றாள்.
இச்சூழ்நிலையிலும் ராஜி காலுவிற்காகவும், மைத்துனரின் குழந்தைகளுக்காகவும் பசியை சகித்து வாழ முனைந்தாள். இறந்தவர்கள் பாக்கியவான்களாகவும், உயிருடன் வாழ்பவர்கள் பாவப்பட்டவர்களாகவும் கருதப்பட்டனர். டேகாடியா கிராமத்தில் தானியங்களை பஞ்சம் பிழைக்க வந்த மக்களிடமிருந்து பாதுகாக்க அரசாங்கம் சிப்பாய்களையும், துப்பாக்கிகளையும் அனுப்பும். அக்காலத்தில் அப்பகுதியில் பிரிட்டீஷ் அரசின் நேரடி ஆட்சி நடந்ததா? அல்லது அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஜுனாகட் நவாப் போன்றவர்களின் முடியாட்சி நடந்ததா எனும் விவரம் நாவலில் இல்லை. அதைக் கண்ட காலு படேலின் மனக்குமுறல் வழியாக அரசாங்கம் மீதான விமர்சனத்தை வைக்கிறார் நாவலாசிரியர்.
‘அடேய்! கொலைகாரப் பதர்களா, இங்கே தெருவெங்கும் மரணம் நடமாடுகிறது. நீங்கள் மேலும் மரணம் விளைவிக்கும் ஆயுதங்களை இறக்குகிறீர்களே. நீங்கள் இறக்க வேண்டியது மனிதர்களை வாழ வைக்கும் தானிய மூட்டைகளை அல்லவா? உங்கள் திறனை சாவடிப்பதற்கு பதில் வாழ்விப்பதில் காட்டினால் என்ன? முப்பத்தாறு கலைகளையும் பயன்படுத்தி மனிதனைக் கொல்ல முயலுகிறீர்களே? அவற்றைக் கொண்டு உயிர்களை வாழ்விப்பது தானே? உங்களை காக்க வந்த தேவர்கள் என நினைத்தேன். நீங்கள் தேவர் வடிவில் உயிர் குடிக்க வந்த அரக்கர் ‘
மேலும் நிலத்தில் மரணம்தான் மழையனப் பெய்து கொண்டிருந்தது. கானகத்தில், வயல் வெளிகளில், கடைத்தெருக்களில், பாதைகளில் எங்கும் பிணக்குவியல்கள். யார் உடலைப் புதைப்பது? யார் உடலை எரிப்பது? யாருக்கான ஈமக்கிரியைகளை யார் செய்வது? இறந்த உறவினர்களை நினைத்து உயிருடன் இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தனர். உறவினர்களைப் பார்க்காதிருப்பது வருத்தத்தை குறைத்தது என்பது போன்ற வர்ணனைகள் பஞ்சத்தின் கொடுமையை நம் கண் முன்னால் காட்டுகிறது.
உணவுக்கு வழியில்லாத சூழலில் காலு தன் அக வலிமையை இழந்து மனச்சோர்வுடன் சொல்வார், ‘தொல்லையிலும் மிகப் பெரிய தொல்லை பசி’. ராஜி பதிலளிப்பாள் இல்லை அதனினும் கொடியது கவலை. அது மனிதனின் நம்பிக்கையை அழித்து உருக வைத்து விடும் என்று. ஒரு பெரு வியாபாரி தானியங்களை தானம் அளிப்பதாக அறிந்து தானம் வாங்கச் செல்லும் ராஜிக்கும், காலுவிற்கும் இடையேயான உரையாடல் இன்னுமொரு உன்னதக் காட்சி.
தானம் வாங்க வரிசையில் நிற்பவர்கள் ஊரின் பெரும் செல்வந்தர்கள் என அறியப்பட்டவர்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை அந்தணர்களுக்கும், வறியவர்களுக்கும் இல்லை என சொல்லாது வாரி வாரி தானம் வழங்கியவர்கள். நாநா போன்ற ஊர்த்தலைவர் குடும்பத்தினர் மற்றும் வாழ்வின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த எண்ணற்ற நபர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது வரிசையில் நின்று கொண்டிருக்கும் காலு உடன் நிற்கும் ராஜியிடம் சொல்வார் ‘பசியை விடக் கொடியது பிச்சை ஏற்பது. பசி மனிதனின் தசையையும், எலும்பையுமே உருக்கும். ஆனால் பிச்சை ஏற்பதோ கெளரவத்தையும், ஆன்மாவையும் உருக்குகிறது’ எனக் கூறி வரிசையில் இருந்து விலகிச் செல்வார்.
அப்போது வரிசையை சீர்படுத்த நின்ற சிப்பாய் கேட்பான் ‘ ஏ முடமே எங்கே செல்கிறாய்? என அதற்கு காலு சொல்வார் ‘எனக்கு வேண்டாம்’ என அதைத் தொடர்ந்து சிப்பாய் கேட்பான் ‘ நீ என்ன பெரிய சேட்டா ? எல்லா சேட்களும் இங்கு வரிசையில் நிற்கவில்லையா? என. காலு பதில் சொல்வார் ‘சேட்டா இருந்தா வரிசையில் நின்றிருப்பேன். நான் விவசாயி. இந்த தானியங்களை விளைவித்தவன், ஏற்பது எனக்கு இகழ்ச்சி’ இச்சமயத்தில் தானமளிப்பவர் தலையிட்டு ‘ நீ இனாமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம். எனக்கான சிறு பணியைச் செய்து விட்டு கூலியாகப் பெற்று செல்’ என்பார். இந்நிகழ்ச்சி
‘ கரப்பார்க்கு யாங்கொளிக்குங் கொள்ளோ இரப்பார்
சொல்லாடப் போகும் உயிர்’
என்ற வள்ளுவரின் கடைசி நான்கு சொற்களுக்கு உயிரூட்டுவதாக அமைந்துள்ளது.
காலுவும், ராஜியும் குழந்தைகளுடன் சொந்த கிராமம் திரும்புவர். ராஜியும், காலுவும் அவருடைய சொந்த நிலத்தில் சிறுவர்களாக விளையாடிய ஆல மரத்தினடியில் காலு பசியால் தனது கடைசி உயிர்ச் சக்தியை இழந்து மயங்கி வீழ்வார். அருகிலிருந்த ராஜி தன் வறுமுலை திறந்து அவரின் உயிர் மீட்பார். ராஜியின் உயிர் நீர் உதட்டில் பட்டவுடன் கண்திறக்கும் காலு காற்றில் மழையின் வாசத்தை உணர்வார். தூரத்தில் மழையின் வரவை அறிந்து எழுந்தமர்வார். விசும்பின் துளி வீழ்ந்தவுடன் எழுந்து நடக்க ஆரம்பிப்பார். ராஜி நினைப்பாள் இனி இந்த மனிதன் கால தூதரையும் காத்திருக்கச் சொல்வார் என. வான் நின்று பொழியும் அமுதத்துடன் கதை நிறைவடைகிறது.
பொறையுடைமையும், பெருங்கருணையும் கொண்ட நில மகள்கள் இப்பாரத நிலமெங்கும் வாழ்ந்திருக்கிறாார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ்வார்கள் அவர்களால் மானுடம் தழைக்கும் வெல்லும்.
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்றி அமையாது ஒழுக்கு.
தேவதாஸ்