இனிய ஜெயம் ,
இந்த பாண்டமிக் சூழலில் நான் செவிமடுக்க நேர்த்த மற்றொரு அபூர்வ நேர்நிலை ஊக்கக் குரல் ஜோஹன் ராக்ஸ்டாம் அவர்களுடையது.
https://en.m.wikipedia.org/wiki/Johan_Rockstr%C3%B6m
சமீபத்தில் சீஸ்பைரசி தொடர்ந்து அவ்வரிசை வழியே கண்டடைந்த ஆளுமை. கொரானாவில் இருந்து விடுபட உலக நாடுகள் முழுக்க செயலில் இறங்கி இருக்கும் சூழலில் அந்த செயல்பாட்டு திட்டங்களில் ஒன்றாக, ஒவ்வொரு நாடும் நிதி ஒதுக்கி, ஒருங்கிணைந்து சூழலியல் சீர்கேட்டு வேகத்துக்கு ஒரு முட்டுக்கட்டை போட முடியும் என நம்பிகை உருவாக்க முயலுகிறார். இந்த நோய் சூழல் மீட்சியின் பாதையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மனிதனும் பயிலவேண்டிய ஒன்றாக சூழலியல் சார்ந்த போதத்தை, ஆரோக்கிய நெறிமுறைகளுடன் இணைந்து பின்பற்ற வேண்டிய கடமையாக சில சூழலியல் செயல்களை இந்த காலத்தில் உலக நாடுகள் இணைந்து முன்னெடுக்க முடியும் என்கிறார் ஜோஹன்.
இதை ‘சும்மா சொல்லிவெப்போமே’ வகையறா கருத்து கந்தசாமியாக அவர் சொல்லவில்லை. தனது வாழ்நாள் பணியாக சூழலியல் சீர்கேடு வேகத்துக்கான அறிவியல் பூர்வமான அட்டவணை ஒன்றை உருவாக்கியவர் இவர். துருவ பனித்தொப்பிகள் முதல் ஓசோன் படலம் வரை இந்த புவிக் கோளத்தை ஒன்பது நிலைகள் வழியே வகுத்து, ஒவ்வொரு நிலையிலும் பச்சை மஞ்சள் சிகப்பு என்ற நிலைகளில் சூழல்பாதிப்பு எந்த எல்லையில் இருக்கிறது, என்ற துல்லிய வரைபடம் உருவாக்கி அளித்திருக்கிறார். மெல்ல மெல்ல, ஒவ்வொரு தனி மனிதன் முதல் உலக நாடுகள் வரை கூடி நமது அன்றாட செயல்களில் ஒன்றாக சிலவற்றை கடைபிடிப்பதன் வழியே வெறும் 30 ஆண்டுகளில் இந்த 9 நிலைகளில் சிகப்பு எல்லை கோட்டை தொட்ட அலகுகளை மஞ்சளுக்கு கொண்டு வந்துவிட முடியும் என நம்பிக்கை அளிக்கிறார்.
ஜோஹன் மற்றும் அவரது வாழ்நாள் ஆய்வுப் பணி வழியே உருவாக்கிய கையேட்டையும் தீர்வுகள் நோக்கிய அவரது பாதையையும், இயக்குனர் ஜொனதன் க்ளே, சூழலியல் ஆசான் டேவிட் அட்டன்பரோ வை கொண்டு ஒரு நல்ல அறிமுக ஆவணம் கொண்டு வந்திருக்கிறார். =எல்லைகளை தகர்த்தல் : நமது புவிக்கோளத்தின் அறிவியல்=. எனும் தலைப்பில்.
நமது புவியின் சீதோஷ்ண சமன்பாடு, அது பிறந்த காலம் தொட்டு, அதன் கிராஃப் இதய துடிப்பு கோடுகள் போல மேலும் கீழும் ஓடி வந்து, கடந்த 10,000 ஆண்டுகளாகத்தான் ஒரே நேர்கோட்டில் சென்றுகொண்டு இருக்கிறது. இதே நேர்க்கோட்டில் நிற்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் கடந்த 50 வருட மானுட செயல்பாடுகள் இந்த சமன் கோட்டை மீண்டும் இதயத்துடிப்பு கோடுகள் போல மாற்றும் எல்லைக்கு கொண்டு வந்து விட்டது.
கடந்த 50 வருடங்களில் உலக சக உயிர் சூழலில் 65 சதமானத்தை அழித்து விட்டோம். அமேசான் காடுகளில் 25 சதம் அழித்து விட்டோம். உலக மொத்த பறவைகளில் 30 சதம் மட்டுமே வன உயிர். கடந்த 50 வருடத்தில் கடலின் அமில அளவு 25 சதம் உயர்ந்திருக்கிறது. 70 சதம் நிலத்தடி புதை படிம எண்ணெயை எரித்து தீர்த்து, கரியமில நிலையை உயர்த்தி, துருவத்தை உருக்கி, ஓசோனில் ஓட்டை போட்டு விட்டோம். எல்லா தகவல் பின்னாலும் இருக்கும் அறிவியல் துல்லியத்தை, அந்தந்த நிபுணர்களின் வாழ்நாள் பணிகள் வழியே சொல்லி செல்கிறார் அட்டன்பரோ.
இதில் இந்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, நம்பிக்கை தரும் நிலைகளை முன்வைக்கும் ஜோஹனின் செயல்திட்டங்கள் மற்றும் அவரது வரைபடத்தை விரிவாக அறிமுகம் செய்கிறார் அட்டன்பரோ. சில அபாரமான அறிவியல் கணக்குகள் வழியே சூழல் மண்டலத்தில் 1.1 எனும் எண்ணில் கரியமில நிலை இருப்பதை காட்டுகிரார் ஜோஹன். 1.3 தொட்டுவிட்டால் இனி மீட்சி இல்லை எனும் நிலை. இப்படி ஒன்பது நிலைகளில் புவிக் கோள சூழலியல் கையேடு ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு நிலையிலும் நாம் பச்சையா, மஞ்சளா, சிகப்பா எந்த கோட்டில் நிற்கிறோம், ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனும் அரசும் இணைந்து செயல்பட்டு, சூழலை மீட்டுருவாக்கம் செய்யும் வகைமையை, ஜோஹனின் சிந்தனைகளை அட்டன்பரோ விரித்துரைக்கிறார்.
கச்சா எண்ணெய்களின் எரித்தல் அளவை சாத்தியம் உள்ள எல்லை வரை குறைப்பது, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாள் கடமையாக சில மரங்களை நடுவது, உணவு, உடை, இருப்பிடம் என சாத்தியம் உள்ள எல்லை வரை அனாவசிய நுகர்வு தவிர்த்து, அவசியம் எதுவோ அதை மட்டுமே கைக்கொள்ளுவது, காடழிவு, சக உயிர்களை கொல்வது இவற்றில் சற்றேனும் போதம் கொள்வது என மெல்ல மெல்ல அடுத்த கால்நூற்றாண்டு செயல்திட்டமாக முன்வைக்கப்படும் இவ்வாவணத்தின் தீர்வுகள் எல்லாம் நம்மால் மிக முன்னரே கைக்கொள்ள முடிந்த, ஆனால் கைக்கொள்ளாத விஷயங்கள்.
ஜக்கி அவர்கள் சொன்னதாக ஒரு சொல் உண்டு. நம்மால் செய்ய முடியாததை செய்யாமல் போவதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் நம்மால் செய்ய முடியும் என்று நமக்கு தெரிந்த ஒன்றை செய்யாமல் போவது மாபெரும் பிழை ஆம் உலக மானுடன் ஒவ்வொருவருக்கும் தெரியும். இதை நம்மால் செய்ய முடியும். ஆனால் செய்யாமல் இருக்கிறோம். இனியும் காலம் இல்லை. 1.1 க்கும் 1.3 கும் இடையே வெகு தூரம் இல்லை. மீண்டு வர ஒரு வாய்ப்பு. இறுதி வாய்ப்பு. செயல்பாடு நோக்கி மீண்டும் ஒரு மட்டுருத்தலை அட்டன்பரோ, ஜோஹன் கூட்டணி வழியே நிகழ்த்தி இருக்கிறார் இயக்குனர் ஜொனதன் க்ளே.
கடலூர் சீனு