நான் கடவுள்

சார், நான் கடவுள் எப்போது ரிலீஸ்?

சரவணன்

சரிதான், இனிமேலும் இப்படி ஒரு கேள்வியா? முன்பெல்லாம் நான் கடவுள் பற்றி எல்லாருக்கும் ஒரே கேள்விதான் இருந்தது. ‘எப்போது வரும்?’ டிரெயிலர் பார்த்தபின் இன்னும் சில கேள்விகள். ஆனால் படம் வெளியாகும் தேதியை அறிவித்த பின்னரும் ‘நெஜம்மாவே ரிலீஸுங்களா?’ என்று ஜனம் கேட்கும் ஒரே படம் நான் கடவுள்தான். இந்தப்பெருமைக்கு பாலா முற்றிலும் தகுதியானவர்தான்

**

நான் கடவுள் படத்தில் பாலா எத்தனை ரீடேக் வரை அதிகபட்சம் எடுத்திருக்கிறார்?

சரவணன்

கேள்வி தெளிவில்லாமல் இருக்கிறது ஒரு டேக்கை ஒருநாளில் எத்தனை முறை என்று கேட்கிறீர்களா இல்லை எல்லாநாட்களிலுமாகச் சேர்த்துஅ அந்த டேக் எத்தனைமுறை எடுக்கப்பட்டது என்று கேகிறீர்களா?

*

அன்புள்ள ஜெமொ

ஒறு சின்ன சந்தேகம். நான் கடவுள் படத்துடன் சம்பந்தப்பட்ட 90 சதவீதம் பேருக்கு மூளைவளர்ச்சி கம்மி என்று சொன்னார்களே, உண்மையா?

க்விஸ்

அன்புள்ள க்விஸ்

நல்ல பெயர். நீங்கள் சொன்ன விஷயம் உண்மைதான். ஆனால் சராசரியாகப் பார்த்தபோது சராசரிக்கும் மேலாகவே மூளைத்திறன் இருந்தது. போதாதா?
*

ஜெ, வணக்கம் சாட்டிலே வந்ததற்கு மன்னிக்கவும். அவசரம். நான் கடவுள் படத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் குடிகாரராக நடிக்கிறாராமே?

முருகன் சுந்தரம்

அண்ணாச்சி பல காலமாக கவிஞராக நடித்துக்கொன்டிருந்தார். ஆகவே இது பெரிய விஷயமல்ல இல்லையா?

*

ஜெ, டிரெயிலரில் நீங்கள் எழுதிய வசனங்கள் நெஞ்சை உருக்குபவையாஅக இருந்தன . காட்ஸ் ஆஃப். நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்.

செமேனி பகவதி

அன்புள்ள செம்மேனி…நான் கடவுள் விஷயமாகத்தான் இதுவரை வராத முகங்களும் பெயர்களும் வந்து சேர்கின்றன என் முன். நல்லது. சினிமாவில் வசனம் என்றால் சும்மா இல்லை. ஆர்யா அந்தப்படத்தில் பேசாமல் மனதுக்குள் நினைத்துக்கொள்ளும் வசனங்களும் நான் எழுதியவை. அதனால்தானே அவர் முகத்திலே அப்படி ஒரு உக்கிரம் தெரிகிறது.

*

அன்புள்ள ஜெ,

நான் கடவுள் படத்தின் செய்தி ஸ்டன்ட் வழியாக ஆன்மீகம் என்று சொல்லலாமா?

எக்ஸ்

நண்பர் எxஸ், மெயில் முகவரி இருக்கும்போது எக்ஸ் என்று பெயர் சூட்டுவது அத்தனை புத்திசாலித்தனமா என்ன? நான்கடவுளின் செய்தி வசூல் வழியாக ஆன்மீக மீட்பு– தயாரிப்பாளருக்கு என்பதுதான்

**

அன்புள்ள ஜெ,

நான் கடவுள் படத்தின் பேட்டிகளில் நீங்கள் ரொம்ப சாதுவாக, மென்மையாக பேசுகிறீர்களே…ஏன்?

சாம்ராஜ் சென்னை

அன்புள்ள சாம்

சினிமாவில் திரையில் நடிக்காதவர்கள் விளம்பரத்தில் நடித்தாகவேண்டும். பலசமயம் முன்னதைவிட பின்னது நன்றாக அமைந்துவிடும்

முந்தைய கட்டுரைஅரதி : கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி ,நாகேஷ்