கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்

கொற்றவை வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு,

சித்திரை புத்தாண்டில் மதுரையில் நடைபெற்ற குக்கூ அமைப்பின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து உங்களது சொற்பொழிவை காண நேர்ந்தது என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. கொற்றவை நாவலில் தங்களது கையெழுத்தை பெற்றுக்கொண்டேன் கொற்றவையை வாசித்துவிட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

உண்மையில் தங்களை காணும்பொழுது அங்கு ஜெயமோகன் என்ற மனிதர் மறைந்து விஷ்ணுபுரமே எழுந்து என் கண்முன்னே பேசிக்கொண்டிருந்ததான பிரமிப்பு எழுந்தது…….கொற்றவையை வாசித்தபின் அந்த பிரமிப்பு இன்னும் பெரிதாகிவிட்டது….உண்மையில் கொற்றவைக்கும் விஷ்ணுபுரத்திற்கும் முன்பு நீங்கள் சாதரண மனிதராக இருப்பதை நான் விரும்பவில்லை….ஆனால் மேலும் மேலும் தங்களின் படைப்புகளை வாசிக்க வாசிக்க உங்கள் மீது எனக்குள் உருவாகும் பிம்பம் வளர்ந்துகொண்டே வருகிறது.

சரி விஷயத்திற்கு வருகிறேன்…..தங்களை நிறைய படித்திருக்கிறேன் உங்களது ப்ளாக்கை வாசிக்காமல் என் நாளை நான் துவக்குவதேயில்லை. விஷ்ணுபுரத்தை பற்றி கடிதம் எழுதலாம் என்றால் அஜிதனின் வாதம் நிகழும் இடம் எனக்கு இன்னும் புரிபடவேயில்லை அல்லது அதை புரிந்து கொள்ளும் தகுதி எனக்கு இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறேன். ஆதலால் அதைக்குறித்து எதையும் இக்கடிதத்தில் நான் எழுதப்போவதில்லை.

மேலும் கொற்றவை எனக்கு ஐந்து வருடங்களுக்கு மேலாக போக்குகாட்டிக் கொண்டிருந்தது நானும் அதை முட்டி மோதி எப்படியாவது அதன் சுவையை உணர்ந்துவிட வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தேன் அதற்கு சரியான சமயமாக வாய்த்தது இந்த கொரோனா காலம் இதில்தான் ஜெயமோகன், தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், இவான் துர்கனேவ், ஆண்டன்செகாவ், காந்தி, தேவதேவன், வண்ணதாசன், பஷீர், தொ.பரமசிவன், ஓஷோ மிகெய்ல் நெய்மி என பலரை வாசிக்க நேரம் வாய்த்தது. தனிமையும் அசுரத்தனமான வாசிப்பும் என்னுடைய வாசிப்புத்தன்மையின் தரத்தை உயர்த்தியிருக்கிறது என்று உணர்கிறேன், இதற்க்கு இந்த நோய்த்தொற்று காலத்திற்க்கு தான் நான் நன்றிகூறவேண்டும்.

கொற்றவை குறித்த என் பார்வையை எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை…ஆனால் தங்கள் கூற்றுக்கேற்ப நான் வாசிக்கும் எந்த நூலைப்பற்றியும் விவாதிக்காமலோ எழுத்தாக கருத்துநிலையாக உருவாக்கிக்கொள்ளாமலோ நான் கடந்துசெல்வதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு ப்ளாக் கணக்கை துவங்கி எழுத முற்பட்டிருக்கிறேன். (கதைகளையும் கட்டுரைகளையும் கூட எழுத முயல்கிறேன் என்பதையும் அச்சத்துடன் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்) இன்னும் சில எனது தனிப்பட்ட கேள்விகளை தங்களிடம் எழுப்ப வேண்டும் என ஆசை பிறிதொரு கடிதத்தில் அதைக்குறித்து எழுதுகிறேன்.

கொற்றவையை “The Burning Book” என உருவகித்து உங்கள் வாசகர் எழுதிய கடிதம் எனக்கு பிடித்திருந்தது, மெய்யாகவே அது வாசித்தால் பற்றிக்கொள்ளும் அனல் மிகுந்ததாக எரிந்தது. கொற்றவையை வாசிக்கும் முன்பு ஒரு முன்னேற்பாடாக இருக்கட்டும் என அதைக்குறித்து தங்கள் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தையும் வாசித்துவிட்டே நூலைப்படிக்கத்துவங்கினேன்.

வாசித்தபின்பு கொற்றவை எனக்கு என்ன கொடுத்தது என்று கேட்டால் பெண்கள் மீது ஒரு பெரிய மதிப்பும் மரியாதையையும் உண்டுபண்ணிவிட்டது எனலாம் அல்லது நான் ஆணாக இருப்பதாலேயே பெண்களை நான் எப்படிப்பார்க்கிறேன் என்பதை எனக்கு சுட்டிக்காட்டும் விரலாக கொற்றவை தோன்றிற்று. என்னவோ சூர்யப்ரகாஷ் கொற்றவைக்குபின் ஒரு புதிய சிந்தனைத்தளத்திற்குள் நுழைந்துவிட்டிருக்கிறான் என்பதே உண்மை.

நல்ல சினிமாக்களை பார்க்கும் வழக்கம் உண்டென்பதாலேயே கொற்றவையின் பல பகுதிகளை சிறந்த சினிமாவாக காட்சிப்படுத்தும் தளங்களை கொண்டிருப்பதாக தோன்றிற்று. முக்கியமாக “எரி” பகுதியை மட்டும் காட்சிப்படுத்தமுடிந்தால் அது க்ளாடியேட்டர், ட்ராய் போன்ற பல படங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த வரலாற்று சித்திரமாக எடுக்கப்பட இயலும். இவ்வாறேல்லாம் கற்பனை செய்தவாறே “இப்டி பண்ணா எப்டியிருக்கும்…….அப்டி பண்ணா எப்டியிருக்கும்” என்று கற்பனை செய்தவாறே பொழுதைக்கடத்தினேன்.

இக்கடிதத்தில் நான் எவ்வளவு எழுதினாலும் கொற்றவையை பற்றி என்னால் முழுதாக என் பார்வையை எழுதிவிட முடியாது அது என்னுள் உணர்வாகி உறைந்துவிட்டிருக்கிறது என்பதே உண்மை. எப்படி இமயத்தின் அழகை நாம் வார்த்தைகளில் உண்டாக்கிவிடமுடியாதோ அப்படி ஒரு அதிர்வை கொற்றவை எனக்கு அளித்தது.

உண்மையில் கொற்றவை என்றால்………

மூவகைதீயும் முறைகொண்டு ஆளும் மண்ணில் சூழ் கொண்டவளே கொல்தவை

சிலப்பதிகாரம் என்பது வெறும் மதிப்பெண்ணிற்காக சிறுவயதில் என்மீது திணிக்கப்பட்ட ஒன்றாக மட்டுமே எண்ணியிருந்திருக்கிறேன் மேலும் அது என் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதினாலேயே அதன்மீது ஒரு வெறுப்பு உருவாகிவிட்டிருந்தது. சிறு வயதில் ஏற்பட்ட அந்த வெறுப்பே பிற்காலத்தில் அதன்மீது காதலுண்டான பொழுது அதை கற்கவியலாமல் அதை சுவையை ருசிக்கமுடியாதபடி தடையாக மாறிவிட்டிருந்தது. பெருஞ்சிரமத்திலெயே இன்று தமிழை நான் மீண்டும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

சிலப்பதிகாரம் கண்ணகியின் கோவலனின் கதையாக நமக்கு முன்னரே வாய்மொழிக்கதையாக மட்டுமே அறிமுகமாகியிருக்கும் அதிலுள்ள கருத்துக்களையும் அது கூறமுற்படும் நீதியையும் நாம் அறிகிறோம். ஆனால் சிலப்பதிகாரம் வெறும் நீதிக்கதை மட்டுமேயல்ல அது தமிழ்க்குடியின் தொன்மையை பாடும் ஒரு பெரும்குரல், நம் தொல்குடியின் அதன் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு காலக்கண்ணாடி.

வரலாறாக நாம் அறிவதெல்லாம் நமக்கு நம் முன்னொர் கூறிச்சென்ற கதைகளேயாம், ஒவ்வொரு சமூகமும் தன்னை பற்றிய தகவல்களை வரலாறாக எழுதிவைத்துவிட்டோ கற்கோவில்களை உருவாக்கியோ சொல்லில் முடிந்துவைக்கும் கதைகளாகவோ பிற்கால மக்களுக்கு விட்டுச்செல்கின்றன அதன் தொன்மையை நாம் புரிந்துகொள்ள நமக்கு மொழி என்னும் கருவி தேவை ஏனெனில் காலம் தோறும் உருமாறினாலும் சிறிதும் அழியாமல் தன்னை புதுப்பித்துக்கொண்டு நம்முடன் இருப்பது அதுவே, அது நம் மூதாதையின் குரல்வளையிலிருந்து ஒலித்து பின்னர் எழுத்துருவை அடைந்து வளர்ந்து சொல்லாகி வார்த்தையாகிப் பெருகி சொல்வளர்காடாக மாறி நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அந்த மொழியில் இருப்பது வெறும் ஒலியல்ல அது நம் மூத்தகுடிகளின் ஆன்மா. அந்த எல்லையற்ற இருப்பில் இருந்து அவர்கள் பெற்று நமக்களித்தது.

வரலாற்றுணர்வு என்றால் என்ன என்பதே நமக்கு தெரியவில்லை, கற்பது ஆங்கில அல்லது தமிழ்வழிக்கல்வியானாலும் எங்கும் எவரும் மோகமுற்றிருப்பது ஐரொப்பிய நாகரீகத்துணுக்குகளின்மீதான வேட்கையே. நமது மரபை நம் சந்ததியினர் அறிந்துகொள்வதற்கான சாத்தியம் இம்மண்ணில் பிறக்கும் குழந்தையின் தாய்தந்தையிடமிருந்தே துவங்குகிறது, முற்காலத்தில் அனைவரும் தம் குடியின் தொல்கதைகளை கேட்டு வளர்ந்தார்கள். இன்று அப்படி கதைசொல்லும் ஆட்கள் அனேகமாக அழிந்துவிட்டனர் அவர்களின் இடத்தை காட்சியூடகமும் திரைப்படங்களும் எடுத்துக்கொண்டுவிட்டன. ஆனால் இன்றும் மக்கள் பலர் தங்கள் வரலாற்றை தெரிந்துகொள்ளவிழைகின்றனர் ஆனால் மொழி அவர்களை திகைக்க வைக்கும்படியான ஆழத்திற்குள் சென்றுவிட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தை நான் வாசிக்க முயன்றபோது ஏற்பட்ட கடினமான களைப்புறச்செய்யும் செய்யுள்கள் அதன் அர்த்தத்தை நான் புரிந்து கொண்டாலும் என்னால் அதை சுவைக்க முடியவில்லை அது அன்னியமான ஒரு மொழியில் இருப்பதான மயக்கம் எனக்கு எற்பட்டது. புதுக்கவிதையில் திளைத்திருந்த எனக்கு அந்த மரபுக்கவிதை கொடுக்கும் நெருக்கடி இதுவென உணர்ந்தேன் ஆனால் என் மாதிரியான ஆட்களுக்கே ஜெயமோகனை போன்ற வரலாற்று மனிதர் சிலப்பதிகாரத்தின் காவியத்தன்மை மாறுபடாமல் சிறிதும் கவித்துவம் குறையாமல் அதை மீட்டு சமைக்கிறார்……வாசிக்கும் அனைவருக்கும் சொல் எவ்வளவு சுவையானது என்று உணரும்படியும் இதை எழுதியிருப்பது நிச்சயம் இது ஒரு புதுக்காப்பியம் என்று சிலிர்க்க வைக்கிறது.

கொற்றவை எனும் புதுக்காப்பியம்

வழக்கமாக ஜெயமோகன் என்று எந்த புத்தகத்தில் பெயர் இருந்தாலும் அதை எடுத்து படித்துவிடுவது என்று ஒரு வழக்கம் வைத்திருந்தேன் இப்படி ஒரு நாள் கிளை நூலகத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது கையில் அகப்பட்டது இந்த கொற்றவை அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன், ஆர்வத்தில் அதை வீட்டிற்க்கு கொண்டு வாசித்துவிட முயன்று தோற்றேன்.

ஆனால் பல நாளாக எனக்கு கொற்றவை என்னும் பெயரில் ஒரு ஈர்ப்பு இருந்தது, அதன் பிறகு தங்களின் மற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் படித்து அடுத்த கட்டமாக பிற ருஷ்ய ஆங்கில எழுத்திற்குள் சென்றாயிற்று, தமிழில் பிற எழுத்தாளர்களை வாசித்திருந்தாலும் தங்கள் அளவிற்கு என்னை வேறு எவரும் வசீகரிக்கவில்லை…

முன்பு அசோகமித்திரன் எங்கோ சொன்னதாக தங்கள் தளத்தில் படித்த நினைவு  ”ஒவ்வொரு ஐம்பது வருட்த்திற்கும் ஒரு எழுத்தாளர் அதிக வாசகர்களின் வாசிப்பில் தாக்கம் செலுத்துவார் அன்றைய ஜெயகாந்தனைப்போல இன்றைய காலத்தில் ஜெயமோகன்”……. விஷ்ணுபுரத்திற்கு பின் நான் உணர்ந்தேன் கொற்றவைக்கு நான் தயாராகிவிட்டேன் என உடனே வாசிக்கத்துவங்கிவிட்டேன்.

கொற்றவை எனும் பழந்தமிழரின் போர்த்தெய்வம் கண்ணகி எனும் கற்பரசியின் மூலம் அறம் பிறழ்ந்த மண்ணை அவியாக்கும் பொருட்டு புகாரில் பிறந்து கோவலனை மணந்து பின் பல அலைக்கழிப்பிற்க்கு பின் கொண்டவனை இழந்து மதுரையை எரித்து பின் சேரம் சென்று தெய்வமாகிறாள். நாம் அறிந்த கதையாயினும் அறியாத நம் முன்னோர்களின் வாழ்க்கையை தமிழ் மொழியின் தோற்றம் முதல் கடல் கோளால் அழிந்து தற்போதைய தமிழ்நிலம் உருவாகும் வரை உள்ள வரலாற்றையும் புனைவூடாக வெளிக்கொணர்கிறது.

இப்புதுக்காப்பியம் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது நிலம், நீர், காற்று, எரி மற்றும் வான். அனைத்திற்கும் அடுத்து சிலப்பதிகார வரிகள் இடம் பெற்றுள்ளன “பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று தொடங்கி “மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றிகந்த கோமகளும் தாம் படைத்த கொற்றகத்தாள்” என பொருந்தியுள்ளன.

இதுவரை காப்பியத்தை படித்திராத வாசகர்களுக்கு இந்த நூல் பாணர்பாடியது, குலக்கதை சொன்னது, பழம்பாடல் சொன்னது என புதிய யதார்த்தத்தினுள் தள்ளுகிறது, அதில் குறிப்பிடப்பெறும் கடல்கொண்ட கன்னி நிலம், கபாடபுரம்,குமரிக்கண்டம் என தென் தமிழ் நிலத்தின் தொன்மகதையை விளக்க முயல்கிறது. வாசிக்கும் பொழுது நாம் ஒரு போதும் அறியமுடியாத லெமூரிய மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் மனவோட்டத்தையும் உணரமுடிகிறது, பல முறை கடல்கோளால் அலைகழிப்பிற்கு உள்ளாகும் அம்மக்களின் கனவில் கடல் ஒரு அச்சுறுத்தும் நீலமாக ஒளிர்ந்தபடியே இருப்பதை காணமுடிகிறது.

பின் இன்று நாம் வணங்கும் சிவன், திருமால், முருகன் மற்றும் விநாயகர் எனும் பெருந்தெய்வங்களின் தோற்றம் குறித்து உணர்த்தப்படும் செய்திகள் அதிர்ச்சியை உண்டுபண்ணுவதாக உள்ளது உதாரணமாக சேவல் இலச்சினை ஏந்திய முருகன் எனும் பழங்குடித்தலைவன், காளை மாட்டின் மேல் அமர்ந்து மலையிறங்கி வரும் சிவன் என என் வீட்டில் உள்ள தெய்வங்களை நான் நேரில் சந்திக்க முற்பட்ட்து போன்ற உருவெளியை உண்டாக்கியது.

”அன்னையின் பெயரன்றி எப்பெயருமே இவளுக்கு உகக்காது. கண்ணகையின் அருள் நகை பெற்ற இவள் பெயர் கண்ணகை.” என துவங்கும் கண்ணகியின் தோற்றம் பின் அவள் சாக்கிய நெறியில் தெய்வமாகும் வரை அவள் மீது ஒரு யக்‌ஷியின் பராசக்தியின் கவர்ந்திழுக்கும் தன்மையும் அதே சமயம் கதை நெடுக அவள் ஒரு மனித உருவில் உள்ள ஒரு தெய்வம் எனும் பயம் கலந்த உணர்வை அளித்தது.

நான் ஒரு ஆணாக இருப்பதாலேயோ என்னவோ நாவலில் பல இடங்களில் என்னை நான் கோவலனாக உணர்ந்தேன், அதுவும் கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரை செல்லும் வழியில் மாதவியின் மடல் கிடைக்கிறது அப்போது அதை முன்பே தெரிந்து கொண்ட கண்ணகியை “நீ புகார் விட்டுவந்த கண்ணகியே அல்ல” என்பான் அதற்கு மறுமொழியாக “ஆம் நீண்ட தூரம் வந்துவிட்டேன்” என அவள் கூறும்போதும், பின்னர் “மாதவியை பிழையாக எண்ணிவிட்டேன்” என கோவலன் கூறியபோது……..

கண்ணகி ”இல்லை. காதலியின் கற்பைப்பற்றி உள்ளூர அறியாத காதலர் உண்டா? அவளை நீங்கள் எப்போதும் அறிவீர்கள். அவளே குலமரபு கிளத்தும் பெருங்கற்புள்ளவள். தெய்வம் தொழாது கொழுநனை தொழுதெழுந்தவள். ஆதிமந்தியின் வழிவந்தவள்…..”

கோபத்துடன் கோவலன் கண்ணைச்சுருக்கியபடி “நீ?”

”நானறிந்த தெய்வங்களே வேறு” என கண்ணகி மறுமொழிகையில் அவள் முகத்தில் தழலாட்டம் தெரிந்து மறைகிறது. அப்போது கோவலன் அச்சத்துக்கு ஆளாகிறான்.

அதன்பிறகு கோவலன் கொலையுறும் வரையில் நான் ஒரு அச்சத்துடன் தான் கண்ணகியை பார்த்துக்கொண்டிருந்தேன். நாவல் முடிவுற்றபொழுது என்னைச்சுற்றியுள்ள அனைத்து பெண்களுக்குள்ளும் ஒரு கண்ணகி ஒளிந்திருப்பதை உள்ளூர உணர்ந்தேன்.

அதிலும் குறிப்பாக அணங்கெழு காதையில்…

கோவலன் கொலையுண்டபின் அவனது உடலை காணும் சுற்றியிருந்த மக்களிடம்…..

எரிதவழ் முகம்மீது படிந்த கருங்குழலை ஒதுக்கி, தலைதூக்கி அரிமா என முழங்கிய குரலெழுப்பி கண்ணகி கேட்கிறாள் “சான்றோர் என எவரும் உளரோ இங்கு?” அக்கணம் வரை தங்களை சான்றோர் என உணர்ந்த அனைவரும் உளம் சிறுத்து தலைகவிழ்ந்தனர். “ஆடவரில் சான்றோர் என ஒருவர் உண்டோ?” என கொற்றவையின் குரல் எழுந்தது…..இங்கே கண்ணகி மறைந்து கொற்றவை வெளிப்படுகிறாள்.

இரு கரங்களையும் விரித்து வெறிபொங்கும் பெருங்குரலில் அன்னை கேட்டாள் “பத்தினி என எவரேனும் உளரோ இங்கு?” அக்கணமே அங்கு நின்ற அத்தனை பெண்களும் எரிதழல் வடிவாயினர் “பெண்டிரில் பத்தினி என உண்டோ?” என்றாள் அவள்.

தன் கணவனின் குருதியில் பாதம் நனைத்து நின்று கன்னி கேட்டாள் “தெய்வம் என ஏதும் உண்டோ இங்கு?”…….

ஆழ்ந்த அமைதியில் இருந்து பதிலுக்கு வந்தது ஒரு வெறிக்குரல். முகிழா இளம்முலைக்கன்னி ஒருத்தி அணங்கெழுந்து ஆடிவந்து கூவினாள். அவள் குரலில் ஒலித்தது தென்புலத்தெய்வங்களின் மொழி விலங்குகளும் மனிதர்களும் ஒன்றாகபேசிய பெருமொழி. மொழிகளைச்சூலுற்ற முதல் மொழி.

பின் அப்பகுதியெங்கும் பெண்ணுடல்களில் சன்னதம் கொண்டு வெளிக்கிளம்பி வந்தனர் மண்ணிலும் மொழியிலும் காலத்திலும் கனவிலும் புதைந்து கிடந்த ஆயிரமாயிரம் தொல் மகளிர். நீர் மகளிரும் கான் மகளிரும், வான் மகளிரும் பெருங்குரல் கொண்டெழுந்தனர். திசையெட்டும் நிறைந்தென அணங்குகள், பாவைகள் பேய்கள், கண்சுடர் எரிந்த பிடாரிகள், கொடுஞ்சிரிப்பெழுந்த குலதெய்வங்கள். அங்கே திணிந்து நெரிந்த உடற்திரளுக்குள் அலையடித்த ஆழ்கடல் பிளந்து வந்தபடியே இருந்தன.

இங்கு கண்ணகி ஐவகை நிலத்தின் மூதன்னையரின் அருள்பெற்று வெறும் தழலாக உருப்பெற்று தொடும் அனைத்தையும் அவியாக்கும் தீயாகி தன் சிறைமீறி எரிமலரிதழில் இலங்கும் இறைவடிவமாகி மதுரையை எரிக்கிறாள்.

இவ்வாறு அணங்கெழு காதையிலும் எரிகொள் காதையிலும் ஆயிரம் பெண்தெய்வங்கள் எழுந்து வரும் ஒரு போர்க்காட்சி கண்ணுக்குள் விரிந்தது. ஆயிரம் அமேசான்பெண்கள் போருக்காக எழுந்து நிற்கும் காட்சியை எனக்குள்ளே எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்.

கொற்றவையின் மாந்தர்

இது தவிர என்னை மிகவும் கவர்ந்த பாத்திரமாக கவுந்தியடிகள் இருக்கிறார் அவரை நீலியாக உருவகப்படுத்தி கண்ணகிக்குள் இருக்கும் தெய்வத்தை நெருப்பை வெளிக்கொணரும் ஒரு நிமித்தமாக இருப்பதும், கண்ணகிக்கு நீலி கூறும் விஷயங்களாகட்டும் ஓவ்வொரு நிலத்தை கடக்கையிலும் அவளுக்கு அந்நிலத்தை முழுவதுமாக காண அந்நிலத்திற்குரிய உயிரினத்தின் கண்களைக்கொடுப்பதாகட்டும் அனைத்து இடங்களிலும் வியக்க வைக்கிறார்.

என்னை ஆச்சர்யப்படுத்திய விடயங்களாக இருப்பது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பாடிய தமிழ் நிலத்தில் ”உரிமாக்கள்” என மக்களை அடிமைகளாக வட நாட்டிற்க்கு விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் மறவர் குலம் பிற குடிகளின் சொத்துக்களை கொள்ளையடிப்பதும் விதைநெல்களைக்கூட விட்டு வைக்காமல் கவர்வதை நெறியாக கொண்டிருப்பதும் வியப்பளிக்கத் தவறவில்லை.

புறஞ்சேரியில் வேதத்தை துறந்த அந்தணர் வாழ்வதும், பாலை நிலத்தில் தெய்வமான குமரியன்னை என்ற குறியீடும், நீருக்குள் வாழும் நீரர மகளிர் என்ற தொன்மமும் ஐயப்பனான இளங்கோவடிகளும் புதிராக தோன்றியது, ஒருவேளை இவைகளை விளங்கிக்கொள்ள இன்னும் பல மீள்வாசிப்பை நான் நிகழ்த்தவேண்டும் என்பதுபோல்.

கொற்றவையின் தமிழ்.

என் தந்தையார் கொற்றவையின் சில பகுதிகளை மட்டும் படித்துவிட்டு ”என்னடா இது ஒன்னுக்கொன்னு சம்பந்தமே இல்லாம இருக்கு!!!!!” என்றார். நான் சிரித்தபடி ”அப்படின்னா உங்களுக்கு வாசிப்பு போதவில்லைன்னு அர்த்தம்” என்றேன். உண்மையில் கொற்றவையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் போதுமான வாசிப்பு பயிற்சியும் தமிழார்வமும் இருந்தால் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தான் இப்புதுக்காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது.

கொற்றவையின் மொழி தமிழ்தான் எனினும் சில வார்த்தைகளை புரிந்துகொள்ள நாம் கவிதையை அணுகும் வகையில் அணுக வேண்டியுள்ளது மேலும் பாணர் பாடியது என வரும் பகுதிகளிலும் “தீயுண்ணவே தீய்மை எனவும் உண்பதால் தூய்மை எனவும்” என்ற வரிகளில் உள்ள பொருள் நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது…..இது வெறும் கண்ணகி கோவலன் கதையல்ல இது என்னுடைய கதை இந்த மொழியின் மைந்தர்களாகிய அனைவரின் கதை என சில வரிகளில் நாம் புரிதலுக்குட்படுகிறோம்.

தமிழ் மொழியின் தொன்மை பற்றி கொற்றவையில் “உண்பதும் உண்ணப்படுவதும் என இருநிலைகொண்டு கண்முன்விரிந்த அம்மண்ணிலிருந்து ஒலிகளைப் பெற்றுக்கொண்டார்கள். “அ, இ, உ” என்ற மூன்று ஒலிகளால் உரையாடாத தருணங்களில் ‘ம்” என்ற அமைதியை கேட்டார்கள். ஒலியையும் ஒலியின்மையும் கலந்த வானையும் மண்ணையும்  கடலையும் சுட்டுவதற்காக அந்நான்கையும் கலந்து “ஓம்” என்ற ஒலியை அடைந்தார்கள். அச்சத்திலும் மகிழ்விலும் துக்கத்திலும் அப்பெரும் வல்லமைகளை அவ்வொலி சுட்டியது. அவ்வொலி அவர்களுடன் இருந்தது, கனிந்த முதுமூதாதையரின் அருள்போல………” இவ்வாறு தமிழ் தன்னை தமிழ் என அறிந்து கொண்ட நிகழ்வை ஆசிரியர் விவரிக்கும் பொழுது ‘ஆதியில் வார்த்தை இருந்தது….அந்த வார்த்தை தேவனாயிருந்தது…” எனும் ஆதியாகம வசனம் சட்டென மனதில் தோன்றி மறைவதைக் கண்டேன்.

காற்று என துவங்கும் பாகத்தில் ”சொற்களை பொருளுள்ளவையாக்கும் தெய்வங்கள் வான் துழாவும் ஒளிச்சிறகுகளுடன் பறந்தலையும் வெளியே காற்று” எனவும் “பாணர் பாடும் பாடல்களைக் காற்றே அறியும். ஏனெனில் நேற்றையும் இன்றையும் நாளையும் இணைத்துக்கொண்டு ஒயாது ஓடும் காலத்தின் மூச்சல்லவா அது?” என காற்றின் தன்மைகளை வாசிக்கையில் Space and Time continuumக்கு இதைவிட சிறப்பான கவித்துவமான விளக்கத்தை யாராலும் கொடுக்கவியலாது எனத்தோன்றியது.

சொல்லால் அழியும் துயர் என பாரதி கூறினான், சொல் தரும் சுவை அல்லது இன்பம் என்பது என்ன என்று கவிதையையும் இலக்கியத்தையும் தீவிரமாக பயில்பவர்கள் உணர்வார்கள், கொற்றவையை முதன்முறை வாசிப்பவர்கள் இதன் மொழியை ஒருதடையாக உணரலாம் ஆனால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படுகையில் நிச்சயம் அனைவரையும் கவரும் கவித்துவமும் தொன்மமும் நிறைந்த புதினமே இது.

கொற்றவையும் நானும்                    

கொற்றவை எனக்கு அளித்தது என்னவென்று வினவினால்? என்னுடைய புத்திக்கும் தமிழ் மெய்யியலில் எனக்குள்ள ஆர்வத்திற்க்கும் ஏற்ப அது தன் தோற்றத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்தியது என்றே உணர்கிறேன், தத்துவம், ஆன்மிகம் தொடர்பான தேடுதல்கள் தகுதிக்கேற்பவே அதன் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்…. ஆனால் கொற்றவை நாவலாக அனைத்து தமிழர்களையும் அவர்களின் வேர்களோடு மரபோடு இணைக்கும் ஒரு மாயச்சரடு ஆகும். கொற்றவையைப்பற்றி நான் எவ்வளவு எழுதினாலும் என்னால் எழுதமுடியாத ஒரு உச்சத்தில் இப்படைப்பு நிற்கிறது.

சொற்களை விஞ்சும் உணர்வாக என்னுள் இது என்றும் அதிர்வாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தை எல்லையாகக் கொண்டாலும் இது வழிநூலாக இல்லாமல் புனைவை பல இடங்களில் நிரப்பியபடி ஒடும் புதிய சிலம்பாகும். உதாரணத்திற்கு சிலப்பதிகாரம் அதன் புனைவில் கண்ணகியை இறுதியில் வானூர்தியில் கோவலனுடன் விண்ணேறிய தெய்வமாக காட்டப்பட்டது கொற்றவையில் அவள் சாக்கிய நெறியில் மொட்டையடித்துக்கொண்டு பல ஆண்டு தவத்திற்க்குபின் அவள் சமாதியடைவதாக புனையப்பட்டுள்ளது. இவ்வாறு தனக்கு முன் உள்ள சிலம்பை உடைத்து புதிய சிலம்பை ஜெயமோகன் வெளிக்கொணர்ந்ததாக.

உருவாக்கப்பட்ட சிலம்புகள் அனைத்தும் உடைபடுவதற்கே……..

ஆம்..அவ்வாறே ஆகுக.

இன்னும் பல உரையாடல்களை தங்களிடம் நிகழ்த்த வேண்டும் என்ற காதலுடன்,

-சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

மதுரை.

கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை

கொற்றவை, மானுட அழிவின் கதை

கொற்றவை- கடிதம்

கொற்றவை தொன்மமும் கவிதையும்

திருப்பூர், கொற்றவை- கடிதம்

கொற்றவை -கடிதம்

அக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

வெள்ளையானையும் கொற்றவையும்

கொற்றவையின் தொன்மங்கள்

கொற்றவையின் நீலம்

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.

கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை பித்து- 3

கொற்றவைப் பித்து- 2

கொற்றவை பித்து-1

கொற்றவை- கனவுகளின் வெளி

கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்

வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?

கொற்றவை ஒரு கடிதம்

கொற்றவை-கடிதம்

காடு, கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை – ஒரு கடிதம்

கொற்றவையும் சன்னதமும்

கொற்றவை கடிதம்

கொற்றவை-கடிதம்

கொற்றவை, ஒரு கட்டுரை

கொற்றவை-கடிதம்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

கொற்றவை கடிதம்

கொற்றவை

கொற்றவை – ஒருகடிதம்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்

கொற்றவை,கடிதங்கள்

முந்தைய கட்டுரைஏர்போர்ட்!
அடுத்த கட்டுரைராஜா- கடிதங்கள்