மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
கதாநாயகி கதை பல்வேறு கோணங்களில் மிக நுட்பமாக வாசிக்கப்பட்டு வருவதை தளத்தில் வரும் கடிதங்கள் மூலம் அறிகிறோம். இன்னும் விரிவாக வாசிக்கப்படவேண்டிய பல்வேறு தளங்கள் அதில் உள்ளதையும் அறிவோம்.
பெண்களின் உலகை காட்டும் கதை, பெண்களின் அதிகார வெறியையும், பெண்கள் மேல் அவர்கள் செலுத்தும் அடக்குமுறையையும் கூறும் கதை, எழுத்தின் வலிமையை, ஒரு படைப்பு வாசகனுக்கு அளிக்கும் அனுபவத்தை விளக்கும் கதை, பேய் கதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமான கதை, மன சிதைவை, அதன் எல்லையை, அறிவியலுக்கு அப்பால் அதில் உள்ள புரிந்து கொள்ளப்பட முடியாத தன்மையை ஒரு தரிசனமாக முன்வைக்கும் கதை என்று ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் கதையை அணுகுகிறார்கள்.
இவையனைத்தும் இக்கதையில் உள்ளவையே. அதைத் தாண்டியும் பல உள்ளன. இக்கதையில் என்னை மிகவும் ஈர்த்தது, இதில் நீங்கள் படைத்த இரு உலகம். இது வெறும் இரு வேறுபட்ட, சில முரண்பாடுகளையுடைய உலகம் அல்ல. இரண்டும் அதனதன் எல்லையின் உச்சங்கள். ஒன்று கிழக்கு மற்றொன்று மேற்கு. ஒன்று ஏதும் அறியா சிறு குழந்தை மற்றொன்று அனைத்தையும் அறிந்து, வாழ்ந்து நிற்கும் முதியவர். எழுத்தே என்னவென்று அறியாத இடத்தில் இருக்கும் ஒரு உலகம், நாவல் எழுதிக்கொண்டிருக்கும் மற்றொரு உலகம். மற்ற வனவிலங்குகளுக்கும் தங்களுக்கும் பெரிய வேறுபாடில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம், செல்வம், அதிகாரம், நாகரீகம், கலை என அனைத்திலும் உச்சத்திலிருக்கும் ஒரு இடம். உலகமே பார்த்து வியக்கும், பொறாமை கொள்ளும் பிரபுக்களும், சீமாட்டிகளும் உலாவும் உலகம்.
ஆனால் அனைத்தையும் அடைந்து பண்பட்ட சமூகத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிற இடத்தில்தான் பொய், பாவனை, பொறாமை, சுயநலம், சூழ்ச்சி, வஞ்சம், பேராசை, அடிமைப்படுத்துதல், பழிவாங்கல் போன்ற அனைத்து இழிசெயல்களும் நிறைந்துள்ளன. வெறும் சோற்றையே பிரமிப்பாய் பார்த்து, அதை உண்ண ஏங்கும் காணிக்காரர்கள் உலகம் ஆனால் அதைக்கூட அவர்கள் பங்கிட்டுதான் சாப்பிடுகிறார்கள். சகமனிதனுக்கு மட்டுமல்ல, குரங்குக்கு கூட தன் உணவை அளிக்கும் பெரிய மனம் கொண்டவர்கள். பொய்யை உருவாக்க தெரியாதவர்கள், உட்பொருள் வைத்து ஏதும் சொல்ல தெரியாதவர்கள்.
வெண்முரசில் ஒரு இடம். பீமனும் திரௌபதியும் கங்கையில் நீந்திக்கொண்டிருக்கையில் திரௌபதியின் இடும்பியை பற்றியான கேள்விக்கு பீமன் சொல்வான், ” பொறாமை, வஞ்சம், காழ்ப்பு ஏதும் அவளுக்கு இல்லை. அவர்களின் குலம் அவ்வுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது ஏனென்றால் அவர்களுக்கு விழைவுகளில்லை”. அதற்கு திரௌபதி, “நல்லவேளை நான் அப்படி இல்லை. எனக்குள் ஆசையும், அகந்தையும் நிறைந்திருக்கின்றன ஆகவே வஞ்சமும், காழ்ப்பும் பழியும் கொண்டவளாகவே இருந்து வருகிறேன்” இந்த இரு வேறு உலகின் வேறுபாட்டை இதை கொண்டு அறியமுடிகிறது.
V.S.செந்தில்குமார்
அன்புள்ள ஜெ
கதாநாயகி கதை வாசிக்கும்போது பரபரப்பாக இல்லை. ஒருவகையான அலைகொள்ளலைத் தான் உருவாக்கியது. என்ன சொல்ல வருகிறார், எங்கே போகிறது கதை என்றே புரியாத நிலை. குழப்பங்கள். சிலசமயம் பொறுமையிழந்துபோய்விட்டேன். ஒரு குறுநாவலாக நூலாக வந்திருந்தால் ஒரே மூச்சில் முடித்திருப்பேன். ஆனால் வாசித்து இத்தனை நாட்களுக்குப் பிறகும் மனதிலேயே நின்றிருக்கிறது. திரும்பத் திரும்ப அலைக்கழிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது. பதில் இல்லாமல் அலையச் செய்கிறது.
வாசிப்பின் வழியாக நாம் எதை ஏன் எழுப்பிக்கொள்கிறோம் என்பதே கேள்வி. அந்த அத்துவானக் காட்டில், அந்த தனிமையில் ஏன் அவன் இருநூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்தவர்களை எழுப்பிக்கொள்கிறான்? அந்தக் காட்டில் அவர்களின் கதையின் ஒரு துளி ஏன் மிச்சமிருக்கிறது?
பிரிட்டன் இந்தியாவை விட்டுச் செல்லவே முடியாது என்று நினைக்கிறேன்
ராஜ்குமார்