மதார் விருது, நிறைவு

மதார்- தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம். இந்த ஒரு வாரமும் மிகுந்த மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் கழிந்தது. உங்கள் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்து நிறைய புது நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்த விருதை தேர்வு செய்தது ‘நீங்கள்’ என்பதை பெருமையாக உணர்கிறேன். உங்கள் மேல் எப்போதும் எனக்கு ஒரு தீராத வியப்பும், பயமும், அன்பும், மரியாதையும் உண்டு. தொடர்ந்து நிறைய வாசிக்கவும், எழுதவும் முயல்கிறேன்.

மிக்க நன்றி சார்.

மதார்

***

அன்புள்ள மதார்,

ஒரு விருது என்பது ஒரு வாசகர்- விமர்சகர் குழு அளிக்கும் ஓர் அங்கீகாரம். விஷ்ணுபுரம் விருதைப் பொறுத்தவரை ஆக்டோபஸ் போல விரிந்துகிடக்கும் எட்டு, பதினெட்டு கைகள் கொண்ட அமைப்பு இது. பல பரிந்துரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றிலிருந்து தேர்வாகிறது இந்த விருது. அறுதியாக நான் முடிவெடுக்கிறேன். ஆனால் அம்முடிவை நண்பர்களிடம் நான் நிறுவியாகவேண்டும்.’

கவிதையில் என் அளவுகோல்கள் வெளிப்படையானவை. தமிழில் அனேகமாக தொடர்ந்து கவிதைகளைப் பற்றி பேசி எழுதி வருபவன் நானே. எல்லா கவிஞர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். என் அளவுகோல்களில் இரண்டு அடிப்படைகள் முக்கியமானவை. கவிதை மொழியனுபவமாக இருந்து மேலே செல்கிறதா என்பது ஒன்று. கவிதையில் வழக்கமான பாவனைகள் இல்லாமலிருக்கிறதா என்பது இன்னொன்று.

எங்கள் விருதுகளை விரிவான கட்டுரைகள் வழியாக நிறுவுவதும் விருதின் பணிகளில் முக்கியமானது. இவ்விருது வெறுமே அளிக்கப்பட்டது அல்ல. ஏன் என்பதை என் குறிப்புகளும், வாசகர் கடிதங்களும் நிலைநாட்டுகின்றன.

இவ்விருதை விமர்சகனாக, வாசகர்களாக எங்கள் வாழ்த்துக்கள் என எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் எதிர்பார்ப்புகளை கூர்தீட்டி வைத்திருக்கிறோம்.

ஜெ

அன்புள்ள ஜெ,

நவீன கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பெரும்பாலும் ஆழ் படிமங்களுடன் மிக சிடுக்குகள் கொண்ட கவிதைகள் நம்மை வசீகரித்தாலும், குழந்தை மனத்துடன் எளிய படிமங்களுடன் வரும் கவிதைகள் நம்மை வசமிழக்கச் செய்கின்றன. மதாரின் வெயில் பறந்தது குழந்தை மனத்துடன் எழுதப்பட்ட நவீன கவிதை என்றே சொல்வேன். எப்போதும் புத்தகத்தின் பக்கம் திரும்பாத என் மனைவிக்கு இந்த கவிதைகளை சொன்னவுடன் ரசிக்க ஆரம்பித்துவிட்டாள் அதுவே இந்த கவிதைகளுக்கான அழகு

         உயரம் குறைய குறைய
          உயரம் கூடுவதை
          காண்கிறது
          கிணறு
நான்கு வரியில் வாசகனின் கற்பனையை விரிவுபடுத்தும் வரிகள்.
மழை
குடையில்லை
மரம்
ஒதுங்கினேன்
குளிர்
குளிர்
இரு குயில் மரக்கிளையில்
இட்டுக் கொண்ட முத்தம்
இதமான சூடு
வெயில்
வெயில்
வெயில் பறந்தது
குக்கூ என்றபடி வானில்
சாதாரண மனிதன் கடந்து போகிற காட்சிகளை கவிஞன் கவிதையில் கடத்துகிறான் அழகியலோடு. மதாரின் இந்த கவிதைகள் வாசகனை குழந்தைகளாக்கி விடுகிறது . குமரகுருபரன் விருது பெற அனைத்து வகையிலும் மதாரின் கவிதைக்கு தகுதி உண்டு. மதாருக்கும் வெளியிட்ட உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
——————————————————————–

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

குமரகுருபரன் விஷ்ணுபுரம் – விருதளிப்பு நிகழ்வு

மதார்- பேட்டி

மதார் கவிதைகள்- வேணு தயாநிதி

பறக்கும் வெயில்- சக்திவேல்

அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி

அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்

மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்

மதார் கவிதைகள் குறித்து- கா.சிவா

மதார்- கடிதங்கள் 6

மதார்- கடிதம் -5

மதார் கடிதங்கள்-3

மதார்- கடிதங்கள்-2

மதார்- கடிதங்கள்-1

மதார் கவிதை வெளியீட்டு விழா – கடிதங்கள்

வெயில் பறந்தது தபாலில் பெற :

அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :
7019426274
கிண்டிலில் படிக்க :
முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 14
அடுத்த கட்டுரைஇலக்கியம்!!!