ராஜா- கடிதங்கள்

இளையராஜா- கலை தனிமனிதன் உரை

இனிய ஜெயம்

இசை ஞானி குறித்த உங்களது உரை கேட்டேன். சில விஷயங்களை பொதுவில் சொல்லக் கூடாது. ஆனாலும் எந்த எல்லை வரை சென்று ஒரு கலைஞனின் ஆத்மீக  இருப்பை சுட்டிக்காட்ட முடியுமோ அதை செய்திருக்கிறீர்கள். சிறப்பு. நீங்கள் அறியாததல்ல ஆயினும் ஒரு நினைவூட்டல். இந்தப் பதிவு சார்ந்து ‘அது எப்புடி சொல்லப் போச்சி’ வகையறா வம்புகள் எதற்கும் பதில் சொல்லாதீர்கள்.

நீங்கள் சுட்டிய பல விஷயங்களை முன்னர் ராஜாவே எழுதி இருக்கிறார். பின்னர் விவேகம் கொண்டு அத்தகு விஷயங்களை பொதுவில் சொல்வதை விட்டு விட்டார். இருப்பினும் என் நினைவில் நீங்காத அவரது கட்டுரைகள் சில உண்டு. குறிப்பாக இசை வழியே அவர் ஆத்மீகமாக நிகழ்த்திய பயணம் குறித்த கட்டுரை. இந்த பிரபஞ்சம் முழுக்க நாத வெளியாகி அதில்  தானொரு நாத பிந்துவாக மிதக்கும் அனுபவம் வாய்த்த தருணம் ஒன்றை எழுதி இருப்பார். தமிழில் மிக்க தனித்துவம் கொண்ட மெய்யியல் ஓடை ஒன்றை சுட்டி நின்ற கட்டுரை. வாசிக்கக் கிடைத்தோர் பாக்கியவான்கள்.

அவரது பிற வாழ்வனுபவங்கள் குறித்து அவரே எழுதிய முக்கியமான நூல் பால் நிலாப் பாதை. தேனி ஏலக்காய் பேக்டரி அனுபவங்கள் துவங்கி, சிவாஜி இறுதி ஊர்வலம், திருவாசகம் சிம்பனி என ராஜா அவர்கள் கண்ட தனித்துவமான அனுபவங்கள் குறித்த நூல். மழை பொழியும் ஒரு ஐப்பசி மாதத்தில் ரமணரின் விருபாக்ஷா குகை வாசலில் அமர்ந்து அருகே பொழியும் சிற்றருவியின் சாரல் முகம்  தெளிக்க அந்த நூலை வாசித்திருக்கிறேன். என் அகம் அறிந்த உண்மை ஒன்று உண்டு. ரமணரில் எது மௌனமாக திகழ்கிறதோ, அதுவே ராஜாவில் இசையாக வெளிப்படுகிறது. பாரதம் அடைந்த நற்பேருகளில் ஒன்று நமது இசை ஞானி.

உங்கள் உரை காணொளி தொடர்ந்து முதல்வன் மீடியா தளத்தின் பிற பதிவுகள் கண்டேன். மிக முக்கியமான தளம். ராஜ் கெளதமன் எழுதிய ஆகோள் பூசலும் பெருங்கற்காலமும், தேவி பிரசாத் எழுதிய இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பணவும் அழிந்தனவும் போன்ற பல முக்கிய நூல்கள் மீதான விரிவான அறிமுகங்கள் இருக்கிறது.

தமிழகத்தில் கேரளத்தில் பௌத்தம், சமணம் தொடர்பான ஆய்வுகள், ஸ்ட்டாலின் ராஜங்கம், கவுதம சன்னா போன்றவர்களின் செரிவான உரைகள், கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் குறித்த ஆவணப்படம், நண்பர் பாரி செழியன் இயக்கிய அயோத்திதாசர் ஆவணப்படம் போன்ற பல அதில் உள்ளது. என்னை ஒரு கணம் துனுக்குற செய்து அழைக்கழித்தது தளத்தில் இருந்த அண்ணன் எழுத்து அலெக்ஸ் அவர்களின் காணொளி. அவரது குரல். அவரது உடல் மொழி, அவரோடு சேந்து உண்டு உறங்கி பேசிக் கடந்த நாட்கள் என நினைவில் ஒரு சுனாமி எழுந்து அறைந்தது. முக்கியமான உரையாடல்கள் அடங்கிய தளம்.

கடலூர் சீனு

அன்புள்ள ஜெ

நான் உரையில் முதலிலேயே இணைந்து கொண்டேன். ஆனால் ஒரு சிறு பகுதியே கேட்க முடிந்தது. எங்கள் வீட்டில் ஏதோ ஒரு இணைய தொடர்பு சிக்கல்.. ஜூம் மிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. பிறகு மீண்டும் சேரவே முடியவில்லை – அதிக பட்ச தொடர்புகள் ஏற்கனவே இருக்கிறது என ஜூம் அறிவிப்புகள். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

நீங்கள் இன்று உரையின் லிங்க் இணையத்தில் தெரிவித்ததற்கு நன்றி. உரை முழுவதும் கேட்டேன். நன்றாக இருந்தது.

இப்படி சொல்வது சரியா தெரியவில்லை. இளையராஜா பற்றி மரியாதை கலந்த பெருமிதம் கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்ததும், அது உங்கள் உரையாக இருந்ததும் நிறைவாக இருந்தது.

உரை பற்றி ஒரு எளிய மகிழ்ச்சி கலந்த நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.

அன்புடன்

முரளி

அன்புள்ள ஜெ,

மிக சிறந்த உரை, மிக்க நன்றி. உரை முழுவதிலும் நீங்கள் பயன்படுத்திய படிமம், நீர். இசைக்கு – நீர் என்பது   மிகப்பொருத்தமான படிமம் தான்.குளுமை- ஓட்டம் – அதன் குணம்/வடிவம் அது சேரும் இடத்தை சார்ந்தது (ஆதி சங்கர் ரின் வரியை கூறினீர்கள்).

என் நினைவில் இருந்து ஒருமுறை பொதிகையில் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் , ஒரு நதியில் நீங்கள் பார்க்கும் ஒரு நீர் பார்த்த நீர் அதே  இடத்தில இருப்பதில்லை ஒரு உவமையை இசையோடு பொருத்தி கூறியிருப்பார்.

பகவான் – இளையராஜா – ஜெ  என்வரையில், என் வாழ்க்கையில் மூன்று  ஜீவ நதிகள் தான்.

நன்றி

ராமகிருஷ்ணன்

வணக்கம் ஜெ

இளையராஜா உரை கிட்டதட்ட நம் ஸும் உரையாடலின் தொடர்ச்சி போல இருந்தது. எவ்வளவு விளக்க முயன்றாலும் அதற்கும் அப்பால் இருப்பது என்றும் அவ்வாறே இருக்கும். அதை விளக்க முற்படுவது அதை ஒருவகையில் மலினப்படுத்துவது என்றே எண்ணுகிறேன். உரையின் பல இடங்களில் நீங்கள் உங்களிடமே பேசிக்கொள்வதைப்போல உணர்ந்தேன். இசைஞானி உண்மையிலேயே ஞானி(mystic) தான் என்று சட்டென ஒப்புக்கொண்டீர்கள், பின்னர் அதற்கு மேல் பேசவோ விளக்கவோ கூடாதென உரையை முடித்துக்கொண்டீர்கள்.

10ம் தேதி அன்று முன்னரே கைப்பேசியில் வரைந்த மீனாக்ஷி கனவு ஒவியத்தை கேன்வாஸில் வரைந்தேன். நான் வரைகையில் என்னை அறியாத ஏதோ ஒரு உந்துதலில் தான் எப்போதும் வரைகிறேன். இதுவரை அனைத்து ஓவியங்களையும் ஓரே மூச்சில் 15 முதல் 30 நிமிடங்களில் வரைந்தவை (இத்தனை வேகத்தில் வரையவைப்பதும் அதுவே)வரைந்தபின் திரும்ப அதில் எந்த மாற்றங்களும் செய்ததில்லை.

மீனாக்ஷி கனவு வரைந்து முடித்ததிலிருந்து ஒரு கேள்வி ஓடிக்கொண்டேயிருந்துத- இதை எப்படி புரிந்துக்கொள்வார்கள், இவ்வோவியங்களை எவ்வாறு விளக்குவது? முன்னர் இக்கேள்விகளுக்கு இப்படி பதில் சொல்லிவந்தேன்- சொற்களைக் கொண்டு விளக்க முடியுமென்றால் பின்னர் நான் ஏன் வண்ணங்களால் அதை வடிக்கப்போகிறேன், அது ஒவியம் என்ற வகையிலேயே பொருள்கொள்ளதக்கது, அதை சொற்களால் அளவிட முடியாது.

இப்போது யூடியூபில் இந்த உரையை கேட்டவுடன் சில விஷயங்களை விளக்காமல் விட்டுவிடுவதே நன்றென புரிகிறது, அவற்றை விளக்கவும் முடியாது, கூடாது.

இவ்வருடத்தில் நான் வரைந்த சில ஓவியங்களை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.

ஸ்ரீராம்

முந்தைய கட்டுரைகொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்
அடுத்த கட்டுரைஎல்லைகளை தகர்த்தல்- கடலூர் சீனு.