ஏர்போர்ட்!

“மலிவான விமானம்னு சொன்னோமே. விமானத்தை இப்பல்லாம் நிப்பாட்டுறதில்லை. தாழ்வா பறந்துட்டு அப்டியே மேலே போயிடுவோம். இறங்கிருங்க”

நாற்பதாண்டுகளுக்கு முன் என்னுடைய இருபது வயதில் ஒரு சோதிடர் நான் டவுன் பஸ்ஸில் செல்வதுபோல விமானங்களில் அலைந்து கொண்டிருக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தால் குமட்டில் குத்தியிருப்பேன். அன்று விமானம் என்றால் வானில் மிக உயரத்தில் பறக்கும் ஒரு வெள்ளிப்பொம்மை. ஆங்கில சினிமாக்களில் சுட்டுச் சுட்டு வீழ்த்தப்படுவது.

அன்றெல்லாம் நாங்கள் விமானங்கள் இல்லாத ஆங்கிலப்படங்களைப் பார்ப்பது இல்லை. ஆங்கிலப்படங்களின் செல்வாக்கு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. என் நண்பன் ராதாகிருஷ்ணன் “லைப்ஃலே ஒரு விமானத்தையாவது சுட்டு வீழ்த்தணும்டா” என ஏங்கினான்.

”நம்ம அபாய அறிவிப்புகளை அவங்களுக்கு வாட்ஸப் பண்ணியிருக்கணுமோ?”

நான் திகைத்து “நீ விமானத்திலே ஏறியிருக்கியா?”என்றேன்

“இல்ல”

“சரி, விமானத்தை பக்கத்திலே போய் பாத்திருக்கியா?”

“இல்லை”

“ஆனா சுட்டு வீழ்த்தணும், இல்ல?”

அதன்பிறகே அவனுக்கு அவனுடைய ஆசையின் அபத்தம் உறைத்தது. கிரிகரி பெக் படங்களைப் பார்த்துப் பார்த்து அவன் விமானங்கள் சுட்டுவீழ்த்துவதற்குரியவை என்று கற்பனை செய்திருந்தான்.

”ஸாரி, டிக்கட் போட்டவர் நூறு டாலர் கூடுதலா கட்டி உங்க சேர் பின்னாடி சாயவே கூடாதுன்னு தனியா சொல்லியிருக்கார்”

எழுபதுகளில் விமானப்பயணம் எல்லாருக்குமே கொஞ்சம் அரிதானதாகவே இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் ஏர்ப்போர்ட் என்ற பேரில் ஆர்தர் ஹெய்லி ஒரு நாவல் எழுதி அக்காலத்தில் வெறிகொண்டு வாசிக்கப்பட்டிருக்கிறது. விமானங்களைப் பற்றிய சினிமாக்கள் நிறைய வந்திருக்கின்றன. பறக்கும் விமானத்திலிருந்து இன்னொரு பறக்கும் விமானத்துக்கு கயிறுகட்டிச் சென்றார்கள். இல்லை, விஜயகாந்த் அல்ல.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் திருவனந்தபுரம் பார்க்க அழைத்துச் செல்வார்கள். அருங்காட்சியகம், உயிர்க்காட்சிசாலை, பூங்கா, அனந்தபத்மநாபசாமி கோயில், சங்குமுகம் கடற்கரை காண்பிப்பதற்கு நடுவே திருவனந்தபுரம் ஏர்ப்போர்ட்டும் உண்டு. விமானம் பெரும்பாலும் தரையில் நின்றிருக்கும். நாலைந்துபேர் சோர்வாக அங்குமிங்கும் நடமாடுவார்கள்.

”கவனியுங்க, ஏர்ப்போர்ட் ஸ்கானர் த்டீர்னு ஃபெயில் ஆனதனாலே முகத்த ஜெராக்ஸ் எடுத்துட்டு உள்ள அனுப்பிட்டிருக்கோம்”

நாங்கள் சலிப்பும் எதிர்பார்ப்புமாக அரைகிமீ தொலைவில் ஓர் இடத்தில் நின்றிருப்போம். சட்டென்று முழக்கம். விமானம் மேலேறி மறைந்துவிடும். அதை சரியாகப்பார்க்கவேண்டும். கமர்கட்டை சட்டைநுனியில் வைத்து கடித்து உடைத்து பங்குபோடுவதில் ஈடுபட்டிருந்த சலீலன் நிமிர்ந்தபோது விமானம் மேலே போய்விட்டது. அவன் கண்ணீர்விட்டுக் கதறி அழுதான்.

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஒருமுறை ஒரு பிளைவுட் விமானத்தை கொண்டுவந்து வைத்திருந்தனர். டிக்கெட் எடுத்தால் ஏறி அமரலாம். சீட்பெல்ட் உண்டு. விளக்கு உண்டு. அறிவிப்புகளின் குழறல், எச்சரிக்கை மணிகள், தொப்புளில் ஜிகினா ஒட்டிய ஏர்கோஸ்டஸ் பெண்பிள்ளை, அவள் தட்டில் கொண்டுவந்து தரும் சர்பத், டேக் ஆப் ஆகும் குலுக்கம் உலுக்கம், தட் என இறங்கி அமரும் ஓசை எல்லாம் உண்டு. பறத்தல் மட்டும் இல்லை. பின்னாளில் பல இலக்கியப்படைப்புகளை வாசித்தபோது அந்த பொருட்காட்சி விமானத்தை குறியீடாக எடுத்துக் கொண்டேன்.

”பயணிகள் கவனிக்கவும், விமானம் இறங்கப்போகுது. தயவுசெஞ்சு 58 டன் உலோகம் ஒரு கான்கிரீட் பரப்பிலே மணிக்கு 170 மைல் வேகத்திலே மோதி இறங்குறத கற்பனை செஞ்சுகிடவேண்டாம்னு கேட்டுக்கிடறோம்”

நான் முதல்முறையாக விமானத்தில் ஏறியது திருவனந்தபுரத்தில் நடந்த ஓர் இலக்கியவிழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டபோது. மலையாள இதழ் அது. அன்றுமின்றும் என் தந்தையின் இடம் அந்த இதழுக்கு உண்டு. வீடுகட்டி கடனில் இருந்தபோது தானாக அழைத்து கைகொடுத்த பிரசுரம். நான் ஆசைப்பட்டது தெரிந்திருக்கும், எனக்கு விமான அனுமதி உண்டு.

ஆனால் நான் இருந்தது காசர்கோட்டில். அங்கிருந்து எப்படி திருவனந்தபுரம் வருவது? விடமாட்டேன் என உறுதிகொண்டேன். காசர்கோடு அஸீஸ் டிராவல்ஸின் அப்துல் இக்காவை துணைகொண்டேன். டிக்கெட் போட்டுவிட்டேன்.

”நான் இங்க இருந்துகிட்டு இந்த ஐபாட் வழியா இந்த விமானத்தை ஓட்டமுடியும்னு சொன்னா நம்ப மாட்டீங்க”

அதன்படி அதிகாலையில் கிளம்பி மங்களூர் போனேன். அங்கே முழுநாளும் காத்திருந்து மாலையில் விமானம் ஒன்றில் ஏறி பெங்களூர் சென்றேன். அங்கே நள்ளிரவில் இறங்கி மீண்டும் இரவெல்லாம் காத்திருந்து அதிகாலையில் விமானம் ஏறி திருவனந்தபுரம் வந்திறங்கினேன். கண்கள் பல்ப் போலிருந்தன. சிந்தனைகள் ஒருமுகப்பட்டு கழிப்பறை என்னும் ஒருசொல்லாக மாறியிருந்தன.  வாந்திக்கு முந்தைய முகபாவனை உருவாகி இரண்டுநாட்கள் நீடித்தது.

நான் மங்களூரில் இருந்து பெங்களூர் சென்ற விமானம் பழைய டகோட்டா பாணி. அது ஒரு ரங்கராட்டினம்.அத்தனை காற்றுத்துளைகளிலும் விழுந்து எழும். மலர்தேடும் கோத்தும்பி போல மேகங்களில் இருந்து மேகங்களுக்குச் செல்லும். பின்னாளில் அபியின் அந்தர நடை என்ற கவிதைத் தொகுப்பின் அட்டையைப் பார்த்து அது டகோடா விமானத்தைப் பற்றியது என்று நெடுநாள் நினைத்திருந்தேன்.

”வணக்கம், உங்க பைலட் பேசுறேன். இன்னிக்கு நான் வீட்டிலே இருந்தே வேலைசெய்றேன்”

அதன்பின் பலவிமானப் பயணங்கள். 1991ல் நான் அருண்மொழியை மணந்தபோது அவளுடைய முதல் விமானப்பயணம். டெல்லிக்கு சம்ஸ்கிருதி சம்மான் விருது வாங்க. அவள் மருண்ட விழிகளுடன் “இவங்கள்லாம் கெட்டவங்களா ஜெயன்?”என்று என்னிடம் கேட்டாள். கேட்கப்பட்டவர் மேஜர் சுந்தரராஜன் சாயலில் சினிமா வில்லன் போலத்தான் இருந்தார், தொழிலதிபராக இருக்கவேண்டும்.

நான் பல விமானப்பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அப்போது விமானப்பயணங்களில் கொந்தளிப்பான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன என அறியாமலிருந்தேன். ஆகவே தட்டில் வைத்து தரப்பட்ட முகம்துடைக்கும் டிஷ்யூவை ஒரு தின்பண்டம் என அருண்மொழிக்குச் சொல்லி அவள் முகர்ந்து பார்த்து “என்னமோ அமெரிக்க மணம் வருது வேண்டாம்”என்று மறுத்துவிட்டாள். அமெரிக்க நாகரீகத்துடன் ஒத்துப்போவதா வேண்டாமா என நான் தயங்கிக்கொண்டிருக்க அப்பாலிருந்த கனவான் அதை எடுத்து முகம் துடைத்து எனக்கு நல்வழி காட்டினார். நான் தின்பதைப் பார்த்து மற்றவர்கள் தின்னாமல் காத்தருளினார்.

”ஓர் அறிவிப்பு.யாரும் கவலைப்பட வேண்டாம், அத்தனைபேருக்கும் கம்ப்ளீட் இன்ஷ்யூரன்ஸ் கவரேஜ் உண்டு!”

எண்பதுகளில் ஏர் இந்தியா மட்டும்தான். அதுவும் நினைத்த நேரத்தில் போகும். போகாமலும் இருக்கும். வருபவர்களுக்கும் அவசரமெல்லாம் இல்லை. ஃப்ளைட் கேன்ஸல் என சகஜமாக அறிவிப்பார்கள். அவர்களும் “சீதா, இன்னிக்கும் ஃப்ளைட் கேன்ஸல்டீ… டிபன் எடுத்து வையி…”என போன் பண்ணி சொல்லிவிட்டு சாவகாசமாக கிளம்பிச் செல்வார்கள்.

விமானடிக்கெட் விலை மிக அதிகம். எனக்கு எழுநூறு ரூபாய் மாதச்சம்பளம் இருந்த காலத்தில் திருவனந்தபுரம் டெல்லி விமானச்செலவு நான்காயிரம் ரூபாய். இன்றைய கணக்கு என்றால் மூன்றரை லட்சம் வரவேண்டும். ஆகவே விமானங்களில் ஆளே இருக்காது. பலசமயம் ஏசுதாஸ் மட்டும் உள்ளே உட்கார்ந்திருப்பார். அவர் இண்டியன் ஏர்லைன்ஸின் செட்பிராப்பர்ட்டி போல.

”ரொம்ப செலவுகுறைஞ்ச விமானமா இருக்கே, டிக்கெட்டுக்கு எவ்ளவு குடுத்தீங்க?”

விமானம் ஏறும்போது சிலுவைபோட்டுக் கொள்வது, பிரார்த்தனை செய்வது வழக்கமாக இருந்தது. அதேபோல விமானம் இறங்கும்போது கைதட்டுவதும் எண்பதுகளில் வழக்கம். நான் நெடுங்காலம் இந்தியன் ஏர்லைன்ஸின் டப்பாக்கள் பறப்பதன் விந்தையைக் கொண்டாடுகிறார்கள் என நினைத்திருந்தேன். அது ஒரு வெள்ளைக்காரப் பழக்கம் என எழுபதுகளின் சினிமாக்களை மறுபடி பார்க்கும்போது கண்டடைந்தேன்.

விமானநிலையங்களும் ஓய்ந்து கிடக்கும். இறுக்கமான முகம் கொண்ட விஐபிக்கள் விஐபித்தனமாக செல்வார்கள். நாம் அவர்களை வாய்பிளந்து வேடிக்கை பார்க்கலாம், அதை அவர்கள் விரும்புவார்கள். ரொம்பவும் விஐபித்தனமாக இருப்பவர்கள் விஐபிகள் அல்ல , ஓஸி ஃபிளைட்டில் பயணம் செய்யும் அரசு அதிகாரிகள் என்பது தெரியும்.

”சாப்பாடு மோசமா? காப்டன் இப்ப ஜோக்கடிப்பார், அதக்கேளுங்க”

முதன்மை வாடிக்கையாளர்கள் விந்தையானவர்கள். நான் பயணம் செய்த ஒரு விமானத்தில் அன்றைய அமைச்சர் ஒருவர் கால்கள் இரண்டையும் மேலேற்றி வைத்து குந்தியே பெரும்பாலும் அமர்ந்திருந்தார்.அருகே துணைக்கு வந்த ஒருவனிடம் மிகமிக உச்சக்குரலில் கூவிப்பேசிக்கொண்டும் அடிக்கடி விமானப்பணிப்பெண்ணை “இந்தாடி… ” என அழைத்துக் கொண்டும் இருந்தார்.

அன்றெல்லாம் விமானம் ஏறியதுமே விமானப்பணிப்பெண்களை ‘பார்வையிடும்’ வழக்கம் உண்டு. அழகான பணிப்பெண்கள் அரிதினும் அரிது. அவர்களை அவர்கள் பார்க்காதபோது பார்ப்பது விமானப்பயண அனுபவத்தில் முக்கியமானது. பார்ப்பதை உணர்ந்தால் அவர்கள் வேண்டுமென்றே வேகமாக ஆங்கிலம் பேசி நம்மை சிறுமைசெய்துவிடுவார்கள்.

”குப்பை கலெக்ட் பண்றோம்…அஞ்சு டாலர் கட்டணம், அஞ்சு டாலர்”

விமான ஆங்கிலம் ஒரு மாயம். பணிப்பெண்களும் பைலட்டுகளும் எவ்வளவு விரைவாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என நான் வியந்ததுண்டு. அது ‘ஆஸ் ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ வகை ஆங்கிலம்தான், நாளுக்கு நாநூறுதடவை சொல்லி மனப்பாடமானது என தெரிய பல ஆண்டுகளாகியது.

ஆங்கிலம் விமானப்பயணத்தின் சிக்கல்களில் ஒன்று.  தமிழகத்தின் இளந்துடிப்பு அரசியல்வாதி ஒருவர் இயக்குநருக்கான தேசியவிருது வாங்கிய ஒளிப்பதிவாளருடன் முதல் விமானப்பயணம் செய்யும்போது “தம்பி அண்ணனுக்கு இன்னொரு பீர் வேணும்டா. இன்னொண்ணுன்னு எப்டி கேக்கிறது?”என்று கேட்டிருக்கிறார்

“ஒன்ஸ் மோர்னு கேளுங்கண்ணே”

அரசியல்வாதி ‘தங்கையை’ கைசுட்டி அழைத்து சொன்னார். “ஒன்ஸ் பீர்!”

”ஓர் அறிவிப்பு. எங்களோட மதிப்புக்குரிய முதல்வகுப்பு எலைட் கஸ்டமர்ஸ்  மட்டும் முதல்ல வாங்க”

இந்தியன் ஏர்லைன்ஸில் அன்று முற்றிய பேரிளம்பெண்கள் பணிப்பெண்களாக இருந்தனர். இப்போது கனிந்த மூதாட்டியர். நமக்கு சாப்பாட்டு பரிமாறிவிட்டு “கொட்டிக்கிட்டு தூங்குடா, கடன்காரா” என அதட்டிவிடுவார்களோ என்று பதற்றமாக இருக்கும்.

நான் ஒரே ஒருமுறை சிங்கப்பூர்-சென்னை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தேன். அது டவுன்பஸ் கூட இல்லை, ’பாஸஞ்சர் லாரி’ என ஒன்று ஆந்திராவில் ஓடுமே அது. ரீ ரீ என ஆரன் ஒலிகூட கேட்டுக்கொண்டிருப்பதாக பிரமை. வழியில் நிறுத்தி ‘மெராஸ், மெராஸே” என்று கூவி ஆளேற்றவில்லை, அவ்வளவுதான்.

”இது பிஸினஸ்கிளாஸ் தானே?”

முழுக்க முழுக்க குருவிகள். விமானம் மேலெழுந்ததுமே லுங்கிக்கு மாறினார்கள். பொட்டலங்களை விரித்து நடைபாதையில் கொட்டி பொருட்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். சிலர் நடைபாதையிலேயே படுத்துவிட்டார்கள். பணிப்பெண்ணை “யக்கா!’ என சொந்தமாக அழைத்தார்கள். பூசல்கள், சிரிப்புகள்.

பணிப்பாட்டிகளும் பாசமாக இருந்தார்கள். மேலும் ஒரு மிடறு பீர் கேட்டவனை “த சும்மா கெட” என அதட்டினார்கள். “டேய் சரவணா,  என்ன உத கேக்குதா உனக்கு?”என நல்வழிப்படுத்தினர். சென்னையை வந்தடைந்தபோது மொத்த விமானமும் ஆழ்துயிலில் இருந்தது. “டேய், கண்ணா, எந்திரிடா. ஊரு வந்தாச்சு பாரு” என்ற தொனியில் அத்தனைபேரையும் எழுப்பினார்கள்.

”அறிவிப்பு. விபத்து நடந்தா ஆக்ஸிஜன் மாஸ்க் கீழே வரும். கிரிடிட் கார்டை தேய்ச்சு அஞ்சு டாலர் பணம் கட்டி அதை நீங்க மாட்டிக்கிட்டு பக்கத்திலே இருக்கிறவங்களுக்கு உதவுங்க” 

கொழும்பு- சென்னை விமானத்தில் ஒருமுறை மது ஏலம் விட்டார்கள். “போனா வராது, பொழுதுபோனா சிக்காது. பிளாக்லேபில் ஒரிஜினல்… அங்க டூட்டி ஃப்ரீயிலே கிடைக்கிறதெல்லாம் கலீஜு… நம்பி ஏமாறாதே. நம்பினார் கெட்டதில்லை! சார், ஒரு பிளாக்லேபில் எடுக்கட்டுமா? நல்லா இருக்கும்”

என்னருகே இருந்த ஒருவர் நான் வாங்குவதில்லை என அறிந்து திகைப்படைந்தார். அருண்மொழியும் வாங்கவில்லை என உணர்ந்து மேலும் திகைப்படைந்தார். “ஆளுக்கு ரெண்டு பாட்டில் அலௌடு சார். நீங்க ரெண்டு வாங்கிக்கிடுங்க… வெளியே வந்ததும் எங்கிட்ட குடுங்க. பாட்டிலுக்கு முந்நூறு ரூவா லாபம் நிக்கும் சார்”

“பயணிகள் கவனிக்கவும். விமான ஊழியர்களை தரக்குறைவாகப் பேசினால் முதல் கெட்டவார்த்தைக்கு முப்பது டாலர் அபராதம். அடுத்த ஒவ்வொரு கெட்டவார்த்தைக்கும் ஐம்பது டாலர் வீதம் வசூலிக்கப்படும்”

நான் மறுத்துவிட்டேன். தேசப்பொருளியலை சீரழித்தவனைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே வந்தால் பலர் கைக்குழந்தைகளை என புட்டிகளை அணைத்துக்கொண்டு செல்வதைக் கண்டேன்.

உலகில் பலநாடுகளில் பல விமானநிலையங்கள். விமானநிலையம் பற்றி நான் ஒரு வெண்முரசே எழுதலாம். நியூயார்க் விமானநிலையம் கோயம்பேடு மாதிரி.ஆனால் எப்படியோ எல்லாரும் ஏறி எல்லாரும் இறங்கி எல்லாம் நடந்துவிடுகிறது. அது ஏன் என எவருக்கும் தெரியாது. அமெரிக்காவில் சில விமானநிலையங்கள் உள்ளூர் மோட்டல்கள் மாதிரி இருக்கும்.

”பைலட் வேலைக்கு உங்க ரெஸ்யூம் நல்லாருக்கு. ஆனா அனுபவங்களிலே 62 டேக் ஆஃப் 54 லேண்டிங்னு இருக்கு, அதான் குழப்பமா இருக்கு”.

ஜாம்பியாவில் ஓர் விமானநிலையம்தான் விசித்திரம். எதையோ மென்றுகொண்டிருந்த கரிய குண்டு மாமிக்களிடம் எங்கே செக்யூரிட்டி செக் என்று கேட்டேன். அதெல்லாம் தேவையில்லை போய் ஏறிக்கொள் என்று மென்றபடியே அன்புடன் சொன்னார்கள்.

விமானத்தை நோக்கி ஓடி இடம்போடாவிட்டால் வேறு ஆள் ஏறிவிடுவார்கள். கவலை வேண்டாம், அடுத்த விமானத்தில் அதே டிக்கெட்டில் ஏறிக்கொள்ளலாம்.என்னை ஒரு மாபெரும் கருப்பின மாமி முழங்கையால் இடத்து அப்பாலி விலக்கி ஏற கதவு சாத்தப்பட்டது.

“வேணுமானா தாவலாம். ஒரு சின்ன கட்டணம் கட்டினா நாங்க இணைப்பு குடுப்போம்”

ஆனால் இரண்டுமணிநேரத்தில் அடுத்த விமானம் இருந்தது. கீழே பொட்டல்போன்ற நிலத்தில் சென்ற யானைகளைக் காட்ட விமானி விமானத்தை தழைத்து வளைத்து மேலெழுப்பி எங்களை உற்சாகப்படுத்தினார்.  விண்டூக்கில் விமானம் கீழிறங்கியதும் நேராக இறங்கி சென்றுவிடவேண்டியதுதான். லக்கேஜ்? அது யோகமிருந்தால் வந்துசேரும். ஆனால் வந்து சேர்ந்தது.

ஆப்ரிக்க விமானங்களில் பொழுதுபோக்குகள் தேவையில்லை, விமானங்களே பொழுதுபோக்காக அமையும். நமது பெட்டிகள் எங்கே சென்றிருக்குமென ஊகிப்பது மயிர்க்கூச்செறியும் அனுபவமாகவும் அமையும் என அ.முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். அது உண்மை, என் பெட்டி ஒருநாள் கழித்து வந்துசேர்ந்தது. அது அதிருஷ்டமுள்ள பெட்டி என்றார்கள். மிச்சபெட்டிகள் விமானநிலையத்தில் தூசு போர்த்தி அமைந்திருந்ததைக் கண்டேன்.

”நெருக்கடிநேரத்திலே ஆக்ஸிஜன் மாஸ்க் கீழே வரும். அவசரமா டிவீட் பண்றதுக்கு முன்னாடி அதை மூக்கிலே பொருத்திக்கிடுங்க”

செலவுகுறைந்த விமானங்கள் தொண்ணூறுகளில் வந்தன. விமானநிலையங்கள் சந்தடி மிக்கவையாக மாறின. “ஏ ராசுக்குட்டீ, இந்தாலே வாடீ… இங்கபாரு கமலஹாசண்டீ…ஆமாடீ அவனே தாண்டீ!”என்னும் வகையான பரவசக்கூச்சல்கள் கேட்கலாயின. ஏர்போர்ட் கார்ப்பெட்டில் தூங்குபவர்கள், விமானம் தாமதமானால் நைட்டிக்கு மாறிக்கொள்ளும் குடும்பப்பெண்கள், ”செத்த அந்தால தள்ளித்தான் உக்காருறது, உங்க அப்பன் வீட்டு எடமொண்ணும் இல்லதானே?” வகை பெரியப்பாக்கள் எல்லாரும் விமானநிலையங்களில் தென்படலாயினர்.

இப்போது விமானநிலையம் மிகமிக சுவாரசியமானது. மெட்டல்டிடெக்டருக்குள் குடும்பமாக நுழைபவர்கள், தேங்காய்துருவியை துணியில்சுற்றி எடுத்துவருபவர்கள், காதில் இயர்போன் மாட்டி சூயுங்கம் மென்றபடி திரிபவர்கள். ஒருவர் செக்யூரிட்டி பெல்டை கழற்றச் சொன்னதும் கழற்றி, கைதூக்கச் சொன்னதும் தூக்கினார். அவருடைய ஜீன்ஸ் தொளதொள வகை. அடியில் சிவப்பு அண்டர்வேர் போட்டிருந்தார்.

”உங்க விமானம் போயிடுச்சு சார். ஆனா எங்களோட டிரோன் சர்வீஸ் இருக்கு…”

உள்ளே டீகாப்பி எல்லாவற்றுக்கும் காசு. பச்சைத்தண்ணீர் அரை டம்ளர்தான். மேலே கேட்டால் கோக் வாங்கு என்னும் பார்வையை அளிப்பார்கள். நான் ஒர் எண்ணத்தை எழுதியனுப்பினேன். விமானத்தில் ரத்தச்சிவப்பான காரச்சட்டினியுடன் இட்லி இலவசமாகக் கொடுக்கலாம். குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால் கோப்பை எழுநூறு ரூபாய். நல்ல வசூலாகும்.

ஆனாலும் விமானநிலையங்கள் நமக்கு அணுக்கமானவை. நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்னும் நிலையின் நிம்மதியை அளிப்பவை. திருவனந்தபுரம் பழைய விமானநிலையம் எனக்கு அப்படிப்பட்டது. ஒரு பழைய தறவாடு வீடுபோன்ற தோற்றம். தெரிந்த முகங்கள். பரபரப்பே இருக்காது. முக்கியமாக எல்லா தின்பண்டங்களும் பலநாட்கள் பழகி வீட்டுச்சுவை வந்துவிட்டவை.

”சாரிங்க, சீட்டெல்லாம் மாத்த முடியாது. அப்றம் எல்லாரும் கேக்க ஆரம்பிச்சிருவாங்க”

விமானப்பணிப்பெண்களுக்கு என்னை தெரியும். நான் விமானத்தை மறந்து வாசித்துக்கொண்டிருந்தால்  “ஜெயேட்டா, வண்டி எடுத்து கழிஞ்ஞு கேட்டா”என அழைத்துச் சொல்வார்கள். பலரும் ஒழிமுறி ரசிகைகள்.

ஒருமுறை பிந்திவிட்டது. விமானத்தின் கதவை மூடிவிட்டார்கள். உள்ளே போகமுடியாது என புதுமுகம் பணிப்பெண் சொன்னாள். எனக்குப்பின்னால் வேறொரு விமானத்திற்காக சுரேஷ் கோபி நின்றிருந்தார். அவருக்கே உரிய பாணியில் “கேற்றிவிடு மோளே, ஞானல்லே பறயுந்நது?”என்றார்

”உங்க பொண்ணு சாப்பிடுற விதம் வித்தியாசமா இருக்கே? ஏர்ஹோஸ்டஸா இருக்காளோ?”

“செரி சேட்டா” என்ற அந்தப் பெண் என்னை பலவகை இண்டு இடுக்குகள் வழியாக அழைத்துச் சென்று ஒரு ஏணி வழியாக ஏற்றி விமானக்கதவை தட்டி திறந்து ஏற்றிவிட்டாள். “தெய்வத்தின்றேயும் நம்முடெயும் சொந்தம் ஏர்ப்போர்ட்”

இப்போது அதை மாற்றிவிட்டார்கள். பளபளவென புதிய இரு விமானநிலையங்கள். அந்தப் பழைய ஏர்ப்போர்ட்தான் எனக்கு பிடித்திருக்கிறது. எவ்வளவு கடந்தகால நினைவுகள். பழைய திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இறங்கி இருபது ரூபாய்க்கு ஆட்டோ பிடித்து தம்பானூர் வந்து நாகர்கோயில் பஸ்ஸில் ஏறலாம். எல்லாம் சோஷலிசம். புதிய விமானநிலையத்தின்முன் ஆட்டோவே இல்லை.

27விற்பனை!

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்
முந்தைய கட்டுரைபாலையாகும் கடல்-பதில்
அடுத்த கட்டுரைகொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்