மைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி

மைதிலி, 1939 ஆம் ஆண்டு, காக்கிநாடாவில், ஒரு வசதியான மேல்தட்டு பிராமணக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தவர். தந்தை சிவராமன் ஒரு பொறியாளர்.  தந்தையின் பணி நிமித்தம் காரணமாக சென்னையில் வளர்ந்தார். சென்னையில் இளங்கலை அரசியல் பயின்று, பின்னர் தில்லியில், முதுகலை டிப்ளமா பொது நிர்வாகம் பயின்று பட்டம் பெற்றார்.

அதன் பின்னர், அமெரிக்காவின் சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில், முதுகலை பொதுநிர்வாகம் பட்டம் பெற்று, ஐக்கிய நாடுகள் சபையில், ஆராய்ச்சி உதவியளாராகப் பணிபுரிந்து வந்தார். அந்தக் காலத்தில், அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த இந்து ராம், ப.சிதம்பரம் முதலியோர், மைதிலியைச் சந்தித்த காலங்களில், நிகழ்ந்த வாதங்களை நினைவு கூர்கிறார்கள்.

தான் பிறந்த சாதி/வர்க்க நலன்களையொட்டிய சுயநலப்பார்வை கொண்டிருந்தால், அவர் அந்தப் பணியில் தொடர்ந்து, ஐநா சபையில் பல பெரும் பொறுப்புக்களை வகித்திருக்கக் கூடும்..ஆனால், மைதிலி சாதாரண சுயநல மனிதரல்ல. பெரும் லட்சியவாதி. இடது சாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, வியட்நாம் போருக்கெதிரான குரல்களுடன் இணைந்தார். பின்னர் ஐநா வேலையை விட்டு, சென்னை வந்தார்.

இந்தியா வந்த அவர் இடது சாரி இயக்கங்களுடன் இணைந்து கொண்டார்.  என்.ராம் மற்றும் ப.சிதம்பரத்துடன் இணைந்து ரேடிக்கல் ரெவ்யூ என்னும் ஆங்கிலப் பத்திரிக்கையை நடத்தத் தொடங்கினார்.

1968 ஆம் ஆண்டு, கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த போது, களத்தில் இறங்கி, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுடன் இணைந்து, அந்தப் படுகொலைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டினார்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த நினைவேந்தலில், கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அதை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்..  44 பேர் எரித்துக் கொள்ளப்பட்ட செய்தி கேட்டவுடன், குன்றக்குடி அடிகளாரிடம் பேசிய கிருஷ்ணம்மாள், கீழ்வெண்மணிக்குச் செல்கிறார்.. அங்கே அவருடன் மைதிலி சிவராமன் இணைந்து கொள்கிறார்.

“மைதிலி வந்ததும், ஓடிப் போய்க் கட்டிகிட்டேன்.. நாங்க ரெண்டும் பேரும் ஒரே குடும்பம் மாதிரி.. எங்க மைதிலி, இங்லீஸ் மாதிரியே தமிழ்லயும் கணீர்னு பேசுவா”, என வ.கீதா ஒருங்கிணைத்த நினைவேந்தலில் கிருஷ்ணம்மாள் சொல்கிறார்.

இருவரும் ஒவ்வோரு வீடாகச் சென்று தகவல்கள் திரட்டுகிறார்கள்.. அவர்களுக்கு உள்ளூர் ஆதிக்க சாதிகளிடம் இருந்து மிரட்டல் வருகிறது.

கீழ்வெண்மணிக் கொலைகள் பற்றி அவர் திரட்டிய தரவுகள், கட்டுரைகளாக வந்தன. இந்தக் கொலைகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என அரசை எதிர்த்துப் போராடினார். ஆதிக்கச் சாதிகளுக்கு எதிராக இயங்கத் தயங்கிய அரசு இயந்திரம் வேறு வழியின்றிச் செயல்பட நேர்ந்தது. இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர், Haunted by Fire: Essays on Caste, Class, Exploitation and Emancipation.[   என்னும் பெயரில் புத்தகமாக வெளிவந்தன.

ஒரு சமூக அவலம் நிகழ்கையில், உடனடியாகச் செயல்பட்டுக் களத்தில் இறங்கி, தரவுகளைத் திரட்டி ஆவணமாக்குதல், பின்னர் அதற்கான நீதி மற்றும் நிவாரணம் கேட்கையில், எவ்வளவு இன்றியமையாத ஒரு காரியம் என்பதைக் கீழ் வெண்மணிக் கட்டுரைகள் நிரூபித்தன.

பல ஆண்டுகள் கழித்து, இன்னொரு அவலம் நிகழ்ந்தது. 1992 ஆம் ஆண்டு, 155 வனத்துறைக் காவலர்களும், 108 போலிசாரும், 6 வருவாய்த்துறை அதிகாரிகளும் கொண்ட குழு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி என்னும் கிராமத்தினுள் நுழைந்தது. வீரப்பன் பற்றிய தகவல் அறியவும், கடத்தப்பட்ட சந்தனக் கட்டைகளைத் தேடவும் எனக் காரணம் சொல்லப்பட்டது.

மொத்த கிராமமும் சூறையாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். 18 பெண்கள் பல்வேறு நபர்களால் கற்பழிக்கப்பட்டார்கள்.. மொத்த கிராமமும் சூறையாடப்பட்டது.

கேள்விப்பட்ட உடன் மைதிலி களமிறங்கினார். பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களைச் சேகரித்தார். மற்ற தரவுகளையும் திரட்டினார். திரட்டப்பட்ட ஆவணங்களை, தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலக் கமிஷன் முன்பு சமர்ப்பித்தார். வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டுகள் நடந்த அந்த வழக்கின் இறுதியில், இந்த நிகழ்வில் பங்கெடுத்த 269 பேர் தலித் வன்கொடுமைச் சட்டத்தின் கீழும், 17 பேர் மீது கற்பழிப்பும் நிருபிக்கப் பட்டுத் தண்டனை பெற்றார்கள்.  ஒடுக்கப்பட்டோர் எழுச்சியில் இது முக்கியமான திருப்பு முனை என்றால் மிகையாகாது.

1970 களில் சிஐடியு (centre of Indian trade unions) வில் தலைவர் சிந்தனுடன் இணைந்து பணியாற்றினார்.  ரயில்வே யூனியன், சிம்ப்ஸன்ஸ் ,  டி.ஐ சைக்கிள்ஸ், எம்.ஆர்.எஃப் போன்ற நிறுவனங்களில் தொழிலாளர் நன்மைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்துப் பலமுறை சிறை சென்றவர்.

பாப்பா உமாநாத்துடன் இணைந்து, 1981 ஆம் ஆண்டு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்க உதவினார் மைதிலி.

ஜூன் 13 ஆம் தேதி, இவருக்கான நினைவேந்தலைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சங்கரையா, நல்லக்கண்ணு, மைதிலியின் நண்பர்களான என்.ராம், ப.சிதம்பரம், விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் பிருந்தா கராட் உள்ளிட்ட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கெடுத்து, மைதிலியின் பங்களிப்பை மனம் நெகிழப் பகிர்ந்து கொண்டார்கள்.

சமூகப் பிரச்சினைகளில், ஒடுக்கப்பட்ட சாதிகளின் சார்பில் களமிறங்கி, ஆதிக்க சக்திகளான நில உடைமைச் சாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் காவல் துறையையும், அரசாங்கத்தையும் எதிர்த்து, துணிச்சலாக நின்று, உண்மையான தரவுகளைத் திரட்டி, ஜனநாயகம் அளித்துள்ள அனைத்துச் சாத்தியங்களையும் பயன்படுத்தி வென்று காட்டிய தீரர் மைதிலி.

பிரதிபலன் எதிர்பாராமல், மக்கள் நலனே முக்கியம் எனத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மைதிலியின் பங்களிப்பிற்கு தமிழ்ச் சமூகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

முந்தைய கட்டுரைமதார்- பேட்டி
அடுத்த கட்டுரைவிற்பனை!