விஷ்ணுபுரம் வாசிப்பு- மஞ்சுநாத்

விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

பாரதத்தின் தத்துவ ஞான குவியல்கள் மூலம் விஷ்ணுபுரம் எனும் பெருங்கதையை கட்டமைத்திருக்கிறார். இது பூத்து இதழ் விரித்து வசந்தம் பரப்பி தேன் தந்து ஒவ்வொரு மடலாய் கீழ் உதிர்ந்து நீரில் கரைந்து போகும்  மெளரி* யைப்(*தாமரை) போன்றது.

தத்துவங்களை கதையாக்குவது சுலபபமல்ல,அதுவொரு ஓட்டை தோனி மூலம் சுழித்தோடும் பேராற்றைக் கடப்பது போன்றது. எழுத்தாளனின் தகவல் சேகரிப்பு மட்டும் என்பது பெரும் சுமை மூழ்கடிக்கவே செய்யும். தனது விழிப்புணர்வில் வைத்து அனுபவமாக்கி கொள்ளும் யுக்தியே அந்த தோனியின் ஓட்டையை அடைக்கும் . இது மதிப்பு வாய்ந்தது.

விஷ்ணுபுரம் புதிய கதை சொல்லும் பாணியை தருவித்து கொள்கிறது. வேதங்கள்,புராணங்கள், இதிகாசங்கள், தத்துவ ஞாண நூல்கள் , விவாதங்கள்,கதைகள், சுய கேள்வி பதில்கள், விமர்சனங்கள், காவியத்தன்மை, நாடகத் தன்மை.. என இதன் உள்ளீடுகள் நீள்கிறது. பல உள்ளீடுகளின் அழுத்தம் நிறைந்த நெருக்கம் வாசகனை உள்ளீடற்ற சூன்யத்தின் உச்சத்தை நோக்கி நகர்த்துகிறது.

படைப்பாளியின் மனம் பிரபஞ்சத்தை விட விரிவடையும் திறன் கொண்டது .ஆனால் அது கடற்கரையில் சிறுவர்கள் கட்டி விளையாடும் மணற் கோட்டைகளை தான் திரும்ப திரும்ப உருவாக்குகிறது. அதன் பிரமாண்டம் கட்டுபவனின் கை வலிமையையும் கற்பனைத் திறனையும் சார்ந்தது. பிரபஞ்சத்திடமிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்று போல் இருந்தாலும் புலன்கள் வழியே  அவை வெவ்வேறாக வெளிப்படுகின்றன.

மாயக்கதைகளில் வரும் மாயநகரின் பிரமாண்ட வர்ணனைகள் பொருந்தும் மா நகரமாக விவரிக்கப்படும் மகாபத்மபுரம் , அக்னிபுரம் என்று புராணங்கள்  விளிப்பதாக கூறும் விஷ்ணுபுரம் பூவுலகின் ஈடு இணையில்லாத ஷேத்திரடணமாக காட்டப்படுகிறது. புராணங்கள், வரலாறுகள், செவிவழிக் கதைகள் யாவும் விஷ்ணுபுரத்தை ஒப்புயர்வற்றதாக பேசுகின்றன.

பெரு நிலம் விழுங்கிய கோவில் கட்டுமாணங்கள், வான்முட்டும் உயரங்களுடைய கோபுரங்கள், மலைகளின் உச்சி தொட போட்டியிடும் நுழைவாயில்கள் என ஒரு விஸ்வரூபம்  விரிகிறது.தோரண வாயிற் காவலர்களான கருடாழ்வர் ,விஷ்வக்சேனர் பிரம்மாண்டத்தின்  முன் மக்கள் சுண்டெலிகள்.

விஷ்ணுபுரத்தை நெருங்கும் போது மட்டுமே ராஜகோபுரத்தை காண இயலும் உள்நுழைந்த பிறகு அதன் பிரமாண்டத்தை தலை உயர்த்தி முழுவதுமாக தரிசிக்க இயலாது. கோவில் உள்ளே உள்ள மூல விஷ்ணுவும் அப்படித்தான்  . மூலவர் சிலை அறுநூறு கோல் நீளம் உடையதாம். இதன் தரிசனத்தை மூன்று கருவறைகள் மூலமே காண முடியும். முதல் கருவறையில் பாதம், அடுத்து உந்தி, இறுதியில் முகம்.

முகவாசல் திறக்கும் போது ஞானசபையும் , உந்தி வாசல் திறக்கும் போது தர்க்கசபையும் கூடுகின்றன. பாதவாசல் திறக்கும் போது ஸ்ரீபாதத் திருவிழா. ஒவ்வொரு வாசலும் 4 வருடங்கள் திறந்திருக்கும். முழுமையான ஞான செழுமை அடைந்த ஒருவர் தான் பூரண தரிசனத்தை அடைய முடியும்.

விஷ்ணுபுரம் காவியத்தன்மை கொண்ட கதைப் புனைவாக  3 பகுதிகளாக  விவரித்து சொல்லப்படுகிறது.

முதல் பகுதி ஸ்ரீ பாத காண்டம் :

விமர்சையான ஸ்ரீபாத திருவிழா,  விஷ்ணுபுராண வரலாறு ,  வழி பிறழ்ந்த பக்தி நெறி சமூகம் அதன் எதிரொலிப்பு என நகர்கிறது.

பாரதவர்ஷாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் ஸ்ரீபாத திருவிழாவிற்கு அலையலையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.  நகர் முழுவதும்  நெரிசல் . அப்பங்கள் மலை போல் அடுக்கப்பட்டுள்ளன. மலர்கள் வீதிகள் முழுவதும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

விஷ்ணுபுரத்தின் செந்தீர்த்தமாக சோனா நதி . இதன் பழைய பெயர் பவழ வரி. அது போல் அதற்கு பசுங்குன்றம் எனும் ஹரிததுங்கா மலை சிகரமும் புனித மலையாக ஸ்தபிக்கப்படுகிறது.

பிரமாண்ட தேர் சக்ரத்தின் அச்சு வரை தான் யானையின் துதிக்கை செல்லும். தேரைச் செப்பனிட யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பை பிடுங்கும் போது சக்ரம் சரிந்து யானையின் துதிக்கை நசுங்கி இரத்த சகதியாகுகிறது. இதனால் மதம் கொண்ட யானை  தெருவில் தெரித்தோடுகிறது. இதில் 20 பேர் நசுங்கி மரணிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த  போர் யானை வரவழைக்கப்படுகிறது. பாகனின் அலறலை செவிசாய்க்காமல் அவனது  யானையை போர் யானை மூலம் குத்தி சாய்க்கிறார்கள். விசாரனையில்  தேர் தலைமை சிற்பி பலிகடவாகிறார். கண் மூளியாக்கப்பட்டு கை விரல்கள் இரண்டும் வெட்டுப்படுகிறது.

விஷ்ணுபுரத்தின் நிழலண்டி பிழைக்க வரும்  சங்கர்ஷணனுக்கு  அது  தழலாக மாறி விடுகிறது. ஞானசபை அரங்கேற்றத்தில் ஞானசூன்யங்கள்  தளும்புவது அவனது சுய உணர்ச்சியை கொந்தளிக்கச் செய்கிறது. காவிய அரங்கேற்றத்தை வெறுத்து போய் தேவரடியார்களுக்கு சிருங்கார கவி புனைவதே மேல் என்று செல்கிறான்.

அவனுக்கும் அவனது மனைவி லக்ஷ்மிக்கும் அக வாழ்வு ஒத்துப்போவதில்லை. குறிப்பாக ஆண் தனது இயலாமையை வெளிப்படுத்த  ஒரு போதும் விரும்புவதில்லை ஆனால் அது நீச்சல்  தெரியாதவன் நதி மீது செய்யும் முரட்டு சலம்பல் போல பிரதிபலித்து விடுகிறது. மகன் அனிருத்தன் கோவிலில் வேடிக்கை பார்க்கும் போது சிலை சரிந்து அதே இடத்தில்  மாண்டு போகிறான். தீயை விட மோசமான புத்திர சோகமும் போதாதக் குறைக்கு மனைவிக்கு பைத்தியமும் பிடிக்கிறது.தாசி பத்மாட்சி அவனை ஆற்றுப்படுத்துகிறாள்.வேதப் பாட சலையின் நியமத்தை உதறிய பிங்கலன் தனது தேடலை தேவரடியார் மடியில் தேடுகிறான்.

மக்கள் இதிகாச கற்பனை மாயஜால பூதத்தின் மயக்கத்தில் வண்டுகளாக இருக்கிறார்கள். கோவிலின் தலைமை ஸ்தபதி பிரேசேனன் கூறும் கட்டுமான அறிவியல் நுணுக்கங்கள் மூலம் அது உடைத்தெறியவும் படுகிறது.

மதுரை தலைமையின் கீழ்   இருப்பதாக கூறும் விஷ்ணுபுரத்தில் கதைப்படி அப்போதிருந்த பாண்டிய மன்னன் செம்பியன் கடுங்கோன் சுந்தர பாண்டியத் திரிபுவனச் சக்ரவர்த்தி.ஜெ.மோ பாண்டியனின்  உருவத்தையும்  ஒழுக்கத்தின் மீதும் பெரும் விவாவதங்கள் செய்யுமளவிற்கான எதிர்மறை கருத்துகளை சித்தரிக்கிறார்.

நிஷாதர்கள் விஷ்ணுபுரத்தின் பூர்வக்குடிகளாக சொல்லப்படுகிறது. திருவிழாவின் போது அவர்களின் பூசை மரபுக்கான உரிமை தரப்படுகிறது. வாத்தியக்கார மகன் திருவடி எனும் சிறுவன் மகாசங்கீத பித்திற்கு ஆட்படுகிறான். நீதி, நேர்மை , ஒழுங்கு சிதைந்த விஷ்ணுபுரத்தில்ஆச்சாரியர்களும், பிராமண பட்டாச்சாரியர்களும் கூட தாசி வீட்டிற்கு செல்கிறார்கள்.

விஷ்ணுபுரத்தை சிதிலமாக்க ஶ்ரீபாதமார்க்கி பிரளய தேவி சிலையை சிற்பிக்கு தெரிய வண்ணம்  மனோவசிய முறையில் தாந்ரீரிகத்தை பிரயோகித்து உருவாக்கி விடுகிறான்.  இச்சிலை சர்வநாச முத்திரை, மகா சூன்யா முத்திரையுடன் நீரும் நெருப்பும் கொண்ட உடலாய் விஷ்ணுபுரத்தை அழிப்பதற்காக காத்திருக்கிறது.

பாதமார்க்கி கங்காளர் கருத்துபடி மூலகத்தில் இருப்பது விஷ்ணு அல்ல .அவர்களது மகா யோகர் சிலை ,அவர் உங்கள் நாராயணனுக்கும்  தந்தை என்கிறான். பிரளயதேவி கண் திறக்கும் போது விஷ்ணு மகாநிர்மால்யம் அடைவார்.

இதில் தோல்வியடைந்தாலும், மகா கோபுரத்தினை பிடிப்பு அச்சைக் களைத்து சரிய வைக்கும் கமுக்கம் அறிந்த அந்த ஒரேயொரு சிற்பியின் மனதை கட்டுபடுத்தி அதை செய்ய திரும்பவும்  ஏவுகிறான்.

இரண்டாம் பகுதி கெளஸ்துப காண்டம்

கிருஷ்ண பட்சி விவாதங்கள் பெளத்தன் வெற்றி – தத்துவ விளக்கங்கள் என வேகமெடுக்கிறது.

மகாகாலன்  காசியபன் என்கிற சிறுவனுக்கு ஞான தீட்சை தருகிறான். அது எல்லயற்ற பரப்பின் விஸ்தாரத்தை கை கொள்ளும் சூன்ய தியான தீட்சையாகிறது.பவதத்த மகாபாதரின் காலத்தில் நடந்த கிருஷ்ண பரீட்சையின் போது வடக்கில் இருந்து வந்த பெளத்தனும் சக்ராயன மார்க்கத்தின் ஆதிகுருவான

திக்நாக மகாபாதரின் வழி வந்த முதன்மை சீடனுமான அஜிதன் (காசியபன், உபகாலன், சியாமன், மகாவீரன், அபராஜிதன் …,) . பாரத முழுவது 8 ஞான சபைகளை வெல்கிறான். இறுதியாக காஞ்சியில் அபி தர்ம பரிஷத்தை வென்று விட்டு விஷ்ணபுரத்தின் கிருஷ்ண பரீட்சை விவாதத்தில் அறுவகை மரபுகளை சார்ந்த ஞானிகளுடன் விவாதம் புரிகிறான்.  ராஜகிருக நகரில் மகா கஸ்யபரால் தொகுக்கப்பட்ட உபதேச மொழிகளை அடிப்படியாக கொள்கிறான்.

பிரத்யட்சம்,அனுமானம் என்ற பெளத்த சாரங்கள் மூலம் வேதஞானிகள், சைவ ஞானிகள், சாங்கிய ஞானிகள்… என அனைத்து மரபினரையும் வாதில் வெல்கிறான். இதை ஏற்றுக் கொள்வதற்கு போதுமான பெளத்த கருத்துகளை நிறுவவில்லை. ஆனால் ஜெ.மோ அவனது அணுகுமுறையைப் பற்றி பேசுகிறார்.

எதிர்வாதியின் அணுபவத்தை புறக்கனிக்கிறான். தருக்கத்தை தூண்டி அவர்கள் அணுபவத்தை கவித்துவத்தில் சிக்க வைத்து ஞாண அதிகாரத்தை  கைப்பற்றுவதாக கூறுகிறார்.

அஜிதன் விஷ்ணுபுரத்தை தருக்க அமைப்பாகவே கருதுகிறான்.   மகா கோபுரத்தை கற்குவியலாக்கி  அக்கற்களை கொண்டே தனக்கான கோபுரத்தை கட்டமைத்துக் கொள்கிறான்.  சுமார் 200 வருடங்கள் பெளத்தர்கள் ஆட்சி, அஜிதனின் நண்பன்  முதல் தர்மதிகாரி சந்திரகீர்த்தி . வஜ்ராயன பெளத்ததில் அபிசர கர்மங்களை பிரயோகிக்கும் முறைகளை சிலர் செய்தனர் . அதிபன் ஒருவன் மூலம் விஹாரமும் இடிபடுகிறது. புத்த பிட்சுகளும் கொல்லப்படுகின்றனர்.

பின்பு பிரபாதத்தர் விஷ்ணுபுரத்தைகைப்பற்தினாலும் அது அரை வட்ட சக்ரமாகவே ஸ்தபிக்க முடிகிறது.தர்ம சக்கரம் அழிந்து விஷ்ணு சக்கரம் சுழல ஆரம்பித்தபோது முகலாயர்கள் படையெடுப்பும் கிளர்ச்சிகளும் சீரழிவை விரைவுப் படுத்துகிறது.

மூன்றாம் பகுதி மணிமுடிக் காண்டம்:

படிப்படியான அழிவு மகா சூன்ய தரிசனம் என ஒரு மூர்க்கத்தோடு காட்டாறு போல் வேகமெடுக்கிறது. இந்த காவிய புனைவெழுச்சியின் பிரமாண்டம் அதன் அழிவில் தான் தெரிகிறது. ஏனெனில் துவக்கத்தில் கட்டமைப்பில் சிக்கிக் கொள்ளும் படைப்பாளின்   கவனம் அழிவில் வெகு கூர்மையை கை கொள்கிறது.

அழிந்த இடிபாடுகளில் தன் தடயத்தை துருத்தி காட்டும் விஷ்ணுபுரத்தின்  இறுதி தலைமுறையின் வாழ்க்கையையும்  நதி, மலை, காடு ,விலங்குகள், வீடு , மனிதர்கள் , மழை ..,என காட்சிப்படுத்தும் ஜெ.மோவின் எழுத்து ஒரு மகாபிரளயத்தை நேரலையாக  வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது.

சில தத்துவ புரிதலில் ஜெ.மோ பிழை எற்படுத்துகிறார். அனுபவத்தை கதையாக்குதலுக்கும்  தகவல்களை கதையாக்கி தருதலுக்குமுள்ள வித்தியாசமே அது. விசுத்தி எப்பொழுதும் மோனம்  ததும்பம் நிலையல்ல . அது ஒரு கொந்தளிப்பு. சக்தியின் முழுப்பிரவாகம். செயல் அதீதம் கொண்டது.விசுத்தி சாதனாவில் உச்சம் பெற்ற யோகிகள் குறைவாகவே இருப்பதற்கு அது தான் காரணம். அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமெனில் நிறைய இடங்களில்  தருக்கங்கள் மட்டுமே மோதிக் கொள்கின்றன.  தரிசனங்கள் அல்ல.  விஷ்ணுபுர  ஆதிதோற்றத்தை அதன் கட்டுமான உருவாக்தை அதிகம் பேசவில்லை.

விவாதங்கள் வழியே கோசங்ளை தத்துவ சட்டகத்தில் பொறுத்தி அதை பல பரிமாணங்களில் விளக்கி செல்வது புதுமையானது.அற்புதமானது.ஆன்மீகம் நவீன இலக்கியத்திற்கானது அல்ல என்பது இன்றும் சிலரின் பிடி வாதமாக உள்ளது. அதை தகர்த்தெரியும் சாத்தியங்கள் கொண்டதாக இருப்பதலே இந்நூல் இன்று வரை சர்சைக்குள்ளான படைப்பாக வைத்து பேசப்படுகிறது.

ஜெ.மோ தனது தத்துவ ஞான சாரங்களின் புரிதலை பல பரிமாணங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார்.

“மாற்று இல்லாத, சமரசம் இல்லாத தனிமை. இந்த தனிமை இம்மிக்கூட மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இதிலிருந்து தப்ப தான் கவிதை காமம் உறவுகள் சமூகம் தத்துவங்கள் எல்லாமே.”

“ஓர் அமைப்பு அன்றாட வாழ்வாக மாறும் போது எல்லாம் சகஜமாகிவிடுகிறது .அன்றாட  அநீதி என்பது அநீதியல்ல. ஒரு முறைமை அவ்வளவுதான்.”

“சூழ்நிலைக்கு ஏற்பவே மனம் தருக்கங்களை உண்டு பண்ணுகிறது உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது .சிக்குமெல் சதுரங்க விளையாட்டு வழியாகவே பரமஞானத்தை அடைந்து விட முடியும்.”

“பயனற்ற ஞான வழி எதுவுமில்லை. எனவே எந்த ஒரு தரிசனமும் அழிவதில்லை. எனவே எந்த ஞானத்தையாவது ஒருவன் வெறுதானென்றால் இழுத்துரைத்தானென்றால் அவனுடைய அகத்தில் ஒளி குடியேற முடியாது.”

“பூமி மீது ஒவ்வொரு உயிருக்கும் உண்மையாக வாழ்வது என்ற மகத்தான கடமை உள்ளது. அதிலிருந்து தப்ப வேடத்தை போட்டு பசப்புகிறான் மனிதன். அவனுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் துவங்க வேண்டிய இடம் தெரிந்து தான் இருக்கும். ஒவ்வொரு கனமும் அந்தப் பிரக்ஞை அவனைப் பின் தொடர்ந்தபடி தான் இருக்கும்.”

திபெத் பீடபூமியின் நிகரற்ற மறைஞானிகளில் ஒருவரான பத்மஷாம்பவா என்கிற மிலரெபா வரை தேடல் கொண்டு இறுதியில் பெளத்தம் விஷ்ணுவின் வேறொரு பரிமாணமாகவே காட்டமைக்கப்படுகிறது.

இந்த படைப்பின் புனைவில் கதாபாத்திரங்களின் பங்களிப்பை விட களத்தின் பங்களிப்பே அதிகம்.களத்தின் விஸ்தரிப்பை காட்டவே  கதாபத்திரங்கள் இயங்குகின்றன.

பொதுவான வாசகனுக்குரிய படைப்பாக  இல்லாதது இதன் குறை அல்ல. ஏனெனில் இது தேடல் நிறைந்த வாசகர்களுக்கான படைப்பு .

புதுவித அனுபவத்திற்கான தேடல் என்பது எதையும் ஒரு தடையாக பொருட்படுத்திக் கொள்ளாது. தங்கு தடையின்றி பாகுபாடற்ற நிலையில் அது பயணம் மட்டுமே இலக்காய்  கொண்டிருக்கும். தேங்கி போனால் அது தூர்நாற்றம் கொண்ட கழிவு. தேடல் கொண்டால் அது மகா சமுத்திரத்திற்கான  துடிப்பு.

அன்புடன்

மஞ்சுநாத்

புதுச்சேரி

விஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்

விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்

விஷ்ணுபுரம் -கடிதம்

விஷ்ணுபுரம் வாசிப்பு -பிரவீன்

முந்தைய கட்டுரைவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்