குரு- ஆளுமையும் தொன்மமும்
அன்புநிறை ஜெ,
ஹெச்.எஸ். சிவபிரகாஷ் எழுதி ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்” நூலை வாசித்தேன்.
இந்நூலைக் குறித்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் எழுத்தாளர் நண்பர் சுனில் கிருஷ்ணன் “அபாரமான நூல், நீங்க அவசியம் படிக்கனும், நம் ஸ்ரீனிவாசன் சார் மொழியாக்கம்” என்றார். அன்றே இணையத்தில் வாங்கி விட்டேன். அடுத்த நாளே தளத்தில் தங்கள் அறிமுகக் குறிப்பையும் வாசித்தேன். “குரு என நாம் குறிப்பிடுவது நாமுணர்ந்த ஓர் அக உருவகத்தை. ஆகவேதான் ஒரே ஆசிரியர் வெவ்வேறு மாணவர்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறார்.” என்ற வரி மனதில் சென்று அமர்ந்து விட்டது. வீட்டில் புத்தகம் காத்திருந்தது. இந்தியா வந்து இப்போது தனித்திருக்கும் வீடுறை நாட்களில் முதலில் எடுத்து இதைத்தான்.
நூற்றுப்பதினாறு பக்கங்கள் கொண்ட சிறிய, மிகச் செறிவான நூல். இந்திய ஆன்மீக மரபுகளின் முக்கியமான பத்து கருதுகோள்களை பத்து வாயில்களாக உருவகித்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. வெறும் ஆய்வுக்கட்டுரை போலன்றி ஹெச்.எஸ். சிவபிரகாஷ் அவர்களது ஆன்மீக அனுபவங்களின் ஒளியோடு எழுதப்பட்ட நூல்.
ஆன்மீகம் குறித்த தேடல் கொண்டவர்களுக்கான அறிமுக நூல் இது எனக்கொள்ளலாம். தேர்ந்தெடுத்த வாயில்களுக்குரிய கருத்துக்களை விளக்க வேதாந்தம், சைவம், சமணம், பௌத்தம் என அனைத்து இந்தியத் தத்துவ மரபுகளின் பார்வையையும் அறிமுகப்படுத்தும் அதே வேளை, எந்த ஒரு குறிப்பிட்ட பள்ளியையோ சமயக் கருத்தையோ வலியுறுத்தாத நூல். ஒவ்வொரு கட்டுரையும் ஆன்மீகம் குறித்த பாவனைகள் ஏதுமின்றி, அந்தந்த நிலையை அறிமுகப்படுத்தி, அது குறித்த ஆசிரியரின் அனுபவம், அறிவர்களின், ஞானிகளின் பாடல் வரிகள், தத்துவ உருவகங்கள் வழியாக அக்கருதுகோளை விரிவாக்கி செல்கிறது. நாடுபவரின் உளத்தன்மைக்கும் இயல்புக்குமேற்ற வழிகளை அவரவர் தேறலாம்.
புறவுலகில் நின்றபடி அகவயப் பயணத்தை தொடங்குபவரின் கைப்பற்றி இட்டுச் செல்லும் குரு எனும் முதல் வாயில் தொடங்கி மந்திரம், தெய்வம், பிராணன், மனம் என அருவமான வாயில்களைக் காட்டி, அறிதலுக்கு அப்பாற்பட்ட நிலையான அனுத்தரம் வரை பேசுகிறது. உள்முகமான பயணத்தின் பல்வேறு நிலைகளில் மேலும் திறந்துகொள்ளக் கூடிய நூலென உணர்கிறேன்.
தத்துவக் கலைச்சொற்களையும் ஆன்மீகச் செறிவு கொண்ட கவிதை வரிகளையும் மிக நேர்த்தியாக பொருள் விளங்கும் வண்ணம், சாரம் குன்றாது தமிழில் மொழி பெயர்த்திருக்கும் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றி.
அறுபது நாட்களில் ஆன்மீக மலர்ச்சி, குறுகிய காலத்தில் குண்டலினியை எழுப்புவது போன்ற போலி குறுக்குவழிக் கையேடுகள் இணையமெங்கும் மலிந்திருக்கும் இன்றைய சூழலில் இது போன்ற நேர்மையான ஆன்மீகம் குறித்த அறிமுகப் புத்தகங்கள் தமிழுக்கு ஒரு வரம்.
அன்புடன்,
சுபா