கடவுளைக் காண்பது- கடிதங்கள்

கடவுளை நேரில் காணுதல்

அன்புள்ள திரு ஜெயமோகன்,

வணக்கம். வேலூரில் தங்கக்கோவில் நிறுவியுள்ள அருள்திரு நாராயணி அம்மா என்பவரிடம் சில ஆண்டுகள் முன்பு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஆன்மீக அனுபவம் சுவாரசியமாக இருந்தது.

அவருக்கு தீட்சையாக தரப்பட்ட நாமத்தை தொடர்ந்து மனதுக்குள் ஜெபித்தபடி இருந்தாராம். குறிப்பிட்ட காலத்திற்குப்பின், ஒரு நாள் பேருந்து பயணத்தின்போது தான் ஜெபித்துக் கொண்டிருந்த நாமத்துக்கு உரிய ரூபம் அவருக்கு தரிசனம் ஆகியிருக்கிறது. நாம் தொடர்ந்து ஜெபிக்கும் நாமம் அதற்குரிய வடிவம் கொண்டு எதிரே பிரசன்னமாகும் அனுபவத்தை அவர் பெற்றிருக்கிறார்.

அம்பிகையின் நாமத்தை தொடர்ந்து மனதில் ஜெபிப்பது மட்டுமின்றி அவள் திருவுருவை மனதில் பதிப்பதும் முக்கியமான ஆத்ம சாதனை என்பதை அபிராமி அந்தாதி உணர்த்துகிறது..

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே

புராணங்களில் ‘தவம் செய்து கடவுளைக் கண்டான்’ என மிக எளிதாக அந்த அறிதலே சொல்லப்பட்டுள்ளது. புராணங்களைப்பொறுத்தவரை ஓர் உண்மை உள்ளது, அவற்றில் மிக எளிதாக எது சொல்லப்படுகிறதோ எது மிக அடிக்கடி வருகிறதோ அதுவே மிக முக்கியமானது, மிகமிக நுட்பமானது –  என்னும் உங்கள் வரிகள் அருளாளர் அனுபவங்களை நமக்குள் ஒரோவழி தொகுத்துக்கொள்ள உதவுகின்றன.                                                                                                                                        நன்றி.

அன்புடன்                                                                                                                                                                                                                                                        மரபின் மைந்தன் முத்தையா

***

அன்புள்ள ஜெ

கடவுளைக் காணுதல் ஒரு நல்ல கட்டுரை. இன்று இரண்டு எல்லைகள்தான் கண்ணுக்குப் படுகின்றன. ரேஷனல் என்ற பேரில் ஆன்மிக அனுபவங்கள், உள்ளுணர்வுகள், அழகுணர்வுகள் எல்லாவற்றையும் மறுக்கும் ஒரு உலகியல்பார்வை. இன்னொரு பக்கம் ஆன்மிகம் என்றாலே ஒருவகை மேஜிக் என்று சொல்லும் மிகையான புராணப்பார்வை. இரண்டுக்கும் நடுவே தர்க்கபூர்வமான ஒருபார்வையை, தர்க்கத்துக்கு அப்பால் செல்வனவற்றை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நுட்பமான அணுகுமுறையை முன்வைத்திருக்கிறீர்கள். நன்றி

ஜே.தட்சிணாமூர்த்தி

பெருநதியில் எஞ்சியது

அன்னை சூடிய மாலை

முந்தைய கட்டுரைஹெ.எஸ்.சிவப்பிரகாஷின் குரு
அடுத்த கட்டுரைபாலையாகும் கடல்-பதில்