விற்பனை!

“நீங்க எங்களோட ஞாபகசக்தி வளர்ச்சிப் பயிற்சியிலே பங்குபெற்று பயனடைய முடியும்னு நினைக்கிறீர்களா? தயவுசெஞ்சு எண் 3526273939017394726384072549190 ஐ அழுத்தவும்”

நான் வாசித்த சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று இது. அமெரிக்காவில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு ஏஜென்ஸிகள் உண்டு. அவற்றில் ஒன்றில் ஓர் அமெரிக்க இளைஞன் நுழைந்தான். “சொல்லுங்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர்வதனால் என்ன லாபம்?”

ஏஜெண்ட் உற்சாகமானார். “ஏகப்பட்ட லாபங்கள் உள்ளன. முதலில் நீங்கள் ஆண்மையானவராக மாறுவீர்கள். அழகிய பெண்களால் விரும்பப்படுவீர்கள். நீங்கள் உலகம் முழுக்கச் சுற்றமுடியும். அங்கேயும் பெண்கள் நிறைந்திருப்பார்கள். வீட்டிலும் ஊரிலும் உங்களுக்குப் பெரிய மதிப்பிருக்கும். மேலும் ஏராளமான பணரீதியான லாபங்கள்…”

”நான் ஒரு அற்புதமான சேல்ஸ்மேன். நீங்க அதியற்புதமான கஸ்டமர். நாம ரெண்டுபேரும் இணைஞ்சா பிரமாதமா செயல்பட முடியும்!”

கேட்கக்கேட்க வந்தவன் முகம் தெளிந்தான். ஏஜெண்ட் கேட்டார். “சரி , சேர்ந்துவிடுகிறீர்களா? ஒரு அட்மிஷன் போட்டுவிடவா? ஐந்தாண்டுகளா? பத்தாண்டுகளா?” பரபரவென்று படிவங்களையும் பேனாவையும் எடுத்தார்.

வந்தவன் சொன்னான். “என்னை மறந்துவிட்டீர்கள். நான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து உங்கள் பேச்சைக்கேட்டு ராணுவத்தில் சேர்ந்துகொண்டவன். லீவுக்கு வந்திருக்கிறேன். மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக இதைக் கேட்க வந்தேன்.”

”நீங்க ரொம்பகாலமா ஆன்லைன்லதான் பொருட்களை வாங்குறீங்க. ஆனா அதனாலே நீங்க வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் என் மூக்குநுனியிலே டபிள்கிளிக் பண்ணவேண்டியதில்லை”

உண்மையில் இந்த சேல்ஸ் பேச்சுக்கள் இல்லையென்றால் நாம் வாழ்க்கையில் எவ்வளவு சோர்வை அடைந்திருப்போம். காலையில் கடனே என்று எழுந்து டூத்பேஸ்டை பிதுக்கும்போது நம்மையறியாமலேயே கோல்கேட் விளம்பரம் நினைவுக்கு வந்து உற்சாகம் உருவாகிறதா இல்லையா? நானெல்லாம் அந்தக் காலத்தில் “closeup for closeups” என்ற விளம்பரத்தை நம்பித்தான் பெண்களையே அணுகத் துணிவுபெற்றேன்.

துபாய்க்காரர்கள் அந்த அமெரிக்க ராணுவவீரனைப் போலத்தான். லீவுக்கு வந்த இடத்தில் ஆடம்பரமாகப் பேசுவார்கள். “அங்கே எல்லா ரூமும் ஏஸிதான். அடுக்களைகூட ஏஸி. எனக்கெல்லாம் ஏஸியில்லாம இங்க தூக்கமே வரல்லை” மாடல் பேச்சுக்கள்.

”ஆட்டமாட்டிக் கஸ்டமர் கேருக்கு நல்வரவு. நீங்க நிதானமான ஆளா இருந்தா எண் ஒன்றை அழுத்தவும். பிலாக்காணப் பார்ட்டின்னா ரெண்டு. மண்டைகாய்ஞ்சவர்னா மூன்று…”

அதை ஒரு புதியவனிடம் பேசிய அச்சுதன் மாமாவிடம் நான் கேட்டேன். “துபாய் நல்ல சௌகரியமா அண்ணா?”

“அதொரு பெரிய தோசைக்கல்லாக்கும் மருமகனே”

”குவைத்து?”

“அது சீனச்சட்டி, கடலைய அப்டியே போட்டு வறுக்கலாம்”

“சவூதி?”

“அது இது மாதிரி இல்ல, நேரடியா அடுப்பு”

“அப்ப ஏன் இப்டி சொல்றீங்க?”

“இப்டிச் சொல்லித்தானே என்னைய அங்க போகவச்சானுக”

“இவன ஏமாத்தி அங்க கொண்டு போகப்போறீங்களா?”

“இல்லடே மருமகனே. இங்க வந்ததுமே மறுபடி போகவேண்டாம்னு தோணும். அத நாம சொன்னதுமே பெஞ்சாதி மூஞ்சி கறுத்திரும். போகாம இருக்க முடியாது. இங்க இருக்கிற பத்துநாளும் இதையே சொல்லிட்டிருந்தா பத்தாம்நாளு நமக்க மனசே மாறி போகணும்னு தோணிடும் பாத்துக்க”

”உங்க பெர்மாமென்ஸ் நல்லா இருக்கு. உங்க சம்பளத்தைக் கூட்டுறதுக்குப் பதிலா மத்தவங்க சம்பளத்தை கொஞ்சம் குறைச்சா உங்களுக்கு திருப்தியா இருக்குமா?”

நான் எப்போதுமே விற்பனையிலும் வாங்குவதிலும் ஏமாளி. அந்தப்பெயரை மாற்ற ஒரு உத்தியை ஒரே ஒரு முறை கடைப்பிடித்தேன். அக்காலங்களில் மாக்கல்லில் சட்டி செய்து கொண்டுவந்து ஊர்முகப்பில் போட்டு விற்பார்கள். என்னிடம் ஒன்று வாங்க அனுப்பினாள் அம்மா. விலை இருபது ரூபாய் சொன்னான். நான் பத்துக்கு கேட்டேன். பதினைந்தை விட்டு இறங்க மறுத்தான். வாங்கிவிட்டேன்.

வரும்வழியில் ராதாகிருஷ்ணனிடம் ஐந்து ரூபாய் கடன்வாங்கினேன். அம்மாவிடம் ஒரு சட்டி பத்துரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லி கெத்து காட்டினேன். அப்பால் அப்பா கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்திருக்கிறர். எனக்கு அது தெரியவில்லை. மறுநாள் முப்பது ரூபாய் தந்து மூன்று சட்டி வாங்கிக்கொண்டுவரச் சொல்லிவிட்டு போனார். முகம் வழக்கம்போல கடுகடுவென இருந்தது. நான் சார்த்ர் சொன்னதுபோல சிரிப்பு வரும்வரை அழுதேன்.

”உங்க பாஸ் சொல்ற எல்லா ஜோக்குக்கும் பயங்கரமாச் சிரிக்கிற ரெப்ரசெண்டேட்டிவ் வந்திருக்கார்னு அவர்கிட்டேசொல்லுங்க”

சந்தையில் பொருட்களை விற்பது ஒரு கலை. அதாவது கொலையும் ஒரு கலை என்பதுபோல. அதிலும் மாட்டுவிற்பனை என்பது ராஜதந்திரிகளுக்கு உரியது. நாம் மாட்டுடன் நிற்கும் போது ஒருவர் வந்து “இதுக்கு என்ன சீக்கு? வயத்தால போவுதா?” என்பார். இன்னொருவர் வந்து “மாட்டுக்கு ஷயரோகம் உண்டோ?” என்பார். அப்படி பல நலம் விசாரிப்புகளுக்கு பின் ஒருவர் வந்து நூறுரூபாய் மதிப்புள்ள மாட்டுக்கு நூற்றைம்பதுக்கு கேட்பார். உடனே நாம் மலர்ந்து இருநூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறையாது என்போம்.

அதன்பின் எழுபது முதல் தொண்ணூறுவரை விலைபேசப்பட்டால் கொடுக்க மாட்டோம். நூற்றைம்பது பேசப்பட்டிருக்கிறதே! அதற்கு ‘சாடைவிலை’ என்று பெயர். ஆனால் ஒருகட்டத்தில் எவருமே மாட்டை கேட்க மாட்டார்கள். நாம் மனமுடைவோம். மாட்டுடன் திரும்புவது கேவலம். மாடே என்ன நினைக்கும்? ஆகவே நாற்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு திரும்புவோம். சாடைவிலை ஆசாமி கேட்டதுமே இந்தா என்று விற்கத்தயாரானால் அவர் சுதாரித்துக் கொண்டு ‘இந்நா பைசாவோட வாறேன்’ என்று கிளம்பிச்சென்று மறைவார்.

”இந்த ஆண்டின் சிறந்த சேல்ஸ்மேன் விருதை உங்களுக்கு அளிக்கிறதிலே பெருமை கொள்கிறோம். 12 ஈஸி தவணைகளிலே நீங்க 19.95 டாலரைக் கட்டினாப்போரும். விருது உங்களுக்கு!”

நான் மாட்டுடன் கண்ணீர்விட்டு நின்றபோது ராதாகிருஷ்ணன் அதை விற்றுத்தரும் பொறுப்பை ஏற்றான். ஒருவன் “மாடு என்ன வெலெ?”என்று கேட்டபோது “புரோக்கருக்கு வெலை சொல்லுறதில்லை” என்றான். அவன் உண்மையிலேயே வியாபாரி. சீண்டப்பட்டு “புரோக்கரா? இதே சந்தையிலே வாரம் நாநூறு மாடுகளை வாங்குதவனாக்கும்” என்றார். ராதாகிருஷ்ணன் சிரித்து “செரி, இருக்கட்டு. நமக்குள்ள என்ன?” என்றபின் உரக்க வேறுபக்கம் பார்த்து “புரோக்கர்மாரெல்லாம் தள்ளுங்க. விக்கிறவங்க வாங்க” என்றான்.

அவருடைய கௌரவத்தை உசுப்பிவிட்டான். அவர் அந்த மாட்டை பத்துரூபாய் கூடுதலாக அளித்து வாங்கினார். அந்த பத்து ரூபாய்க்கு நாங்கள் பரோட்டாவும் பீஃப் கறியும் தின்றோம். “அவனுக நம்ம கௌரவத்தை எளக்குவானுக, நாம அவனுக கௌரவத்தை எளக்கி விடணும்” என அந்த வணிக உத்தியை அவன் சொன்னான்.

”வழக்கமா டேவ் மாசந்தோறும் சிறந்த சேல்ஸ்மேனுக்கான விருதை வாங்குவான். இந்த மாசம் எனக்கு வித்திட்டான்’

சந்தையின் வணிக உத்திகள் அபாரமானவை. தேங்காய் கொஞ்சம் முற்றலென்றால் வெயிலில் வைத்து வாடி நிறம் மங்கவைத்து முற்றலென்று தோன்றச்செய்யலாம். ராதாகிருஷ்ணன் புளியங்கொட்டைத்தோலை அரைத்து காய்ச்சி அதில் தேங்காயை முக்கி ஊறவைத்து உலரச்செய்தால் அது படுமுற்றல் தேங்காய் என தோற்றமளிக்கும் என்பதைக் கண்டுபிடித்தவன். கோழியை கடைக்குக் கொண்டுபோகும் முன் பார்சோப் போட்டு குளிப்பாட்டி துவட்டினால் அதன் தூவல் பளிச்சென்று இருக்கும் என்பது இன்னொரு கண்டுபிடிப்பு.

ஆனால் விற்பனையாளன் என்றுமே விற்பனையாளன்தான். வாங்குபவன் என்றுமே வாங்குபவன்தான். ராதாகிருஷ்ணனின் நண்பனாக இருந்தும் நான் கடைசிவரை விற்பதில் தேறவோ வாங்குவதில் சுதாரித்துக் கொள்ளவோ இல்லை. ஒருமுறை சந்தையில் ஒருவன் டிரான்ஸிஸ்டர் ரேடியோ விற்றான். ஒரு ரேடியோ வெறும் இருபது ரூபாய். நான் ஒன்றை எடுத்து பரிசோதித்தேன். வெவ்வேறு ஸ்டேஷன்களை மாற்றிவைத்தேன். பாடியது. பணம்கொடுத்து வாங்கிவிட்டேன். பரீட்சைக்கு ஃபீஸ்கட்டவேண்டிய பணம்.

இளையராஜாவையே வாங்கிவிட்ட மிதப்பில் வீடு திரும்பினேன். ஆனால் ரேடியோவில் சத்தமே இல்லை. வண்டுச்சத்தம்கூட! ராதாகிருஷ்ணன் கழற்றிப்பார்த்தான். அது வெறும் பிளாஸ்டிக் டப்பா. ஆனால் பாடியதே?

”நீ அவன் முன்னாலே வச்சு திருப்பிப் பாத்தியா?”

”ஆமா”

”அவன் உன் கையை பாத்திருக்கான். அதுக்கேத்தமாதிரி அவன் கையிலே இருந்த நிஜ ரேடியோவிலே ஸ்டேஷன் மாத்தியிருக்கான்”

“ஆளு கில்லாடி இல்ல?” என்று நான் முகம் மலர்ந்தேன்.

“நீயெல்லாம் வெளங்கவே மாட்டே”

”என்னைய உங்க சேல்ஸ்மேனா வைச்சுக்கிட்டா உங்களுக்கு ஒரு கம்ப்ளீட் மணிபேக் கேரண்டி தாரேன். இப்பவே முடிவெடுத்தீங்கன்னா உங்களுக்கு நூறு ரூபா மதிப்புள்ள அதியற்புதமான ஒரு செட் கத்தி தருவேன். முழுக்க முழுக்க ஃப்ரீ… இருங்க இன்னும் ஆஃபர் இருக்கு…” 

கொங்கு வட்டாரத்தைப் பற்றி அரங்கசாமி சொன்னார். “மிகச்சிறந்த சேல்ஸ்மேன்களும் மிகச்சிறந்த வாடிக்கையாளர்களும் உள்ள ஊர் சார் இது”. அதாவது சேல்ஸ்மேனின் கோணத்தில் சிறந்த வாடிக்கையாளர்கள். ஆகவேதான் ஈமுகோழி முதல் சகாராவில் தேக்கு நடுவது வரை எல்லாவற்றுக்கும் அங்கே ஆளிருக்கிறது. தேவாங்கை சவரம் செய்து குள்ளச்சித்தராக விற்கமுடிகிறது. சித்தரையே விலைகொடுத்து வாங்க திறந்த உள்ளம் இருக்கிறது!

அதிலும் வட்டாரவேறுபாடு உண்டு. கோவை நகரில் வாடிக்கையாளரை விட சேல்ஸ்மேன்கள் கொஞ்சம் திறன் குறைவானவர்ககள். ஈரோட்டில் வாடிக்கையாளர்கள் சேல்ஸ்மேனின் நலனில் அதீத ஆர்வம் கொண்டவர்கள். ஈமுகோழிக்கு பணம் கட்ட ஈரோட்டுக்காரர்கள் வரிசையில் நின்று ‘என் பணத்தை வாங்கு, நான் முன்னாடியே வந்தாச்சு’ என அடிதடியில் ஈடுபட்டதாகச் சொன்னார்கள்.

டெலிபதி மார்க்கெட்டிங். “யோசிச்சுப் பாருங்க! நீங்க இல்லாம ஆனா உங்க குடும்பம் என்னத்துக்கு ஆகும்?”

எங்களூரில் உச்சகட்ட சேல்ஸ்மேன்கள் கல்யாணத் தரகர்கள்தான். பையனுக்கு உயர்ந்த இடத்தில் வேலை என்றால் எட்டாம் மாடியில் பெயிண்ட் அடிப்பவன் என்று பொருள். ‘ஃபுட் இண்டஸ்டிரியில் சப்ளைச்செயின் மெயிண்டெயின் பண்றார்’ என்றால் ஓட்டலில் சப்ளையர்.

என் மாமா ஒருவர் கல்யாணம் செய்தார். “பொண்ணு பேசினா, பொழுதெல்லாம் உக்காந்து கேக்கலாம்” என்று தரகர் சொன்னது அவளுக்கு திக்குவாய் இருப்பதைப் பற்றி என்று சிந்தித்திருக்கவில்லை. அவசரமாக துபாயிலிருந்து வந்து கல்யாணம் செய்து அடுத்த ஃப்ளைட்டில் திரும்பிய அண்ணா ஒருவரிடம் “பெண் தேவியைப்போல இருப்பா” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ”கட்டுறவனுக்கு மனசுல எப்பவும் நிம்மதி உண்டு, பாத்துக்கிடுங்க”

”புதிய ஆராய்ச்சிகள் காட்டுறபடிப் பாத்தா நம்ம பிராடக்டை நம்ம முயற்சியே இல்லாம வாங்குறவங்களோட பெர்சண்டேஜ் இது…”

அண்ணா நினைத்தது லட்சுமி தேவி. புரோக்கர் உத்தேசித்தது  இசக்கி தேவியை என்பது கல்யாணப்பந்தலில் தெரிந்தது. ஆனால் மனக்குறை இல்லை. பெண்ணை ஊரில் பலவகை ‘பூவாலன்கள்’ நடுவே விட்டுவிட்டு துபாயில் எத்தனை காலம் வேண்டுமென்றாலும் இருக்கலாம். மனநிம்மதிக்கு புரோக்கர் அளித்த ‘கேரண்டி’ உண்டு.

பழைய விகடன் ஜோக் ஒன்று. கலர்ப்படம் ரிலீஸ். டிக்கெட் கௌண்டருக்குள் கைவிட்டு கிராமவாசி கேட்கிறார். “கலர் கேரண்டி உண்டுங்களா?” அக்காலத்தில் துணி எடுக்கும்போது அவசியம் இதைக் கேட்போம். நானெல்லாம் பிளாஸ்டிக் பக்கெட் வாங்குமிடத்தில்கூட கேட்டிருக்கிறேன்.

”என்ன பார்வை அப்டி? இதுக்கு முன்னாடி குறுந்தொழில்முனைவோரை பார்த்ததே இல்லியா?”

அப்பாவியான நளினாக்ஷன் ஆசாரி பெண்பார்க்கும்போது கூடச் சென்ற தோழர்கள் ‘லே, பெண்ணு நல்ல நெறமாக்கும், கலர் கேரண்டி உண்டுமான்னு அவளுக்க அப்பன்கிட்ட கேளுலே. பிறவு பேச்சு வந்திரப்பிடாது’ என உசுப்பிவிட அவர் கேட்டே விட்டார் என்று ஒரு நிகழ்வைச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மதமாற்ற நிறுவனங்கள், மானுடதெய்வங்களின் ஆட்களுக்கு மார்க்கெட்டிங் முதன்மையாகச் சொல்லித்தரப்படுகிறது. மார்க்கெட்டிங் அவர்களுக்கு ஏன் முக்கியமென்றால் சுறாமீன் நீந்தினால்தான் மிதக்க முடியும் என்பதுபோலத்தான். அவர்கள் ஓயாது பிரச்சாரம் செய்துகொள்வது அவர்களுக்கேதான். பிரச்சாரம் செய்யாவிட்டால் அவர்களுக்கே நம்பிக்கை போய்விடும்.

’புவியீர்ப்புவிசைதான் காரணம்னு சொல்லிடலாமா?”

பஸ்ஸில் என்னருகே இருந்த ஒருவர் ‘சார், இப்ப ஆன்மிகமா பாத்தியள்னா…” என ஆரம்பித்ததுமே என் வழக்கமான ஆயுதத்தால் தடுத்தேன். “நான் ஏற்கனவே மாறியாச்சு சார்”

ஆனால் அந்த ஆள் வல்லாளகண்டன். அவர் ஒரு கத்தை துண்டுப்பிரசுரங்களை எடுத்து என்னிடம் தந்து “செரி, அப்ப நீங்க அந்தப்பக்கம் இருக்குத ஆளை மாத்துங்க. நான் இந்தாலே போறேன்” என்றார். சகட்டுமேனிக்குச் சலிக்காத  ஆன்ம அறுவடை!

விற்பனையாளர்கள் போல நம்பிக்கையாளர்கள் வேறில்லை. உலகையே அவர்கள் வாய்ப்புகளாகப் பார்க்கிறார்கள். வரலாற்றை விற்கப்பட்டவற்றால் வரைகிறார்கள். ஒரு விற்பனையாளர் எகிப்து சென்று பிரமிடுகளைப் பார்த்து வியந்து “டூட், அந்தக்காலத்திலேயே இங்க மல்டி லெவல் மார்க்கெட்டிங் இருந்திருக்கு” என்றதாக ஒரு நகைச்சுவை உண்டு.

வெளியே போய் ஏதாவது சேல்ஸ்மேனை கூட்டிட்டுவா. மூடுசரியில்லை. நல்லா யாரையாவது திட்டணும் போல இருக்கு”

சேல்ஸ்மேன்களில் சிலர் புத்திசாலிகள். சேல்ஸ்கேர்ல்களில் சிலர்  அதிபுத்திசாலிகள். ஆகவே மக்கு மாதிரி தோற்றமளிப்பார்கள். முன்பு ஒரு பெண் ஒரு பிளாஸ்டிக் வட்டையைக் கொண்டுவந்தாள். அதற்குள் அதற்குள் அதற்குள் அதற்குள் என பத்துப்பதினைந்து வட்டைகளை வைக்கலாம். வைத்து காட்டினாள்.

‘இம்ப்ரெஸ்’ ஆகிவிட்ட அருண்மொழி பெரிய வட்டையை எடுத்து தன் கண்ணெதிரே தூக்கிப் பார்த்து “இதிலே என்ன வைக்கலாம்!” என்று கேட்டாள். விற்பனைச் சிறுமி ஆர்வத்துடன் “மத்த வட்டையை எல்லாம் வைக்கலாம் மேடம்” என்று மீண்டும் வைத்துக் காட்டினாள். மேலும் ‘இம்ப்ரெஸ்’ ஆன அருண்மொழி ஐநூறு ரூபாயில் அதை வாங்கினாள்.

உண்மையில் அவள் கேள்விக்கு அதைவிட சிறந்த பதில் இருக்க வாய்ப்பில்லை. கடைசிவரை அந்த பெரிய வட்டைக்குள் சிறியவட்டைகள் மட்டுமே இருந்தன

“வெரிகுட்…வேலைக்கான விண்ணப்பத்திலே எல்லா தகவலும் முழுப்பொய்… நீங்கதான் நல்ல சேஸ்ல்மேன்… அப்பாயிண்டட்”

விற்பனையாளர்களில் எல்லாவகை திறமையானவர்களும் உண்டு. ஒரு பையன் வந்து நாநூறு பக்க புத்தகத்தை காட்டி “சார் பொது அறிவுசார். பொது அறிவு. உலகத்திலேயே பெரிய பறவை என்னான்னு கேட்டியள்னா…” என்றான். வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும் வாசலிலேயே நின்றான்

“தம்பி இங்கபாரு, எவ்ளவு பெரிய லைப்ரரி வீட்டுக்குள்ளே வைச்சிருக்கேன். இந்த பொது அறிவு புத்தகத்தாலே எனக்கு என்ன பிரயோசனம்? நீயே சொல்லு” என்றேன்.

“இவ்ளோ புத்தகம் காசு குடுத்து வாங்கி வச்சிருக்கீங்க சார், இந்த ஒரு புக்கும் கூடவே இருந்தா என்ன சார்?”

வாங்கிவிட்டேன். லைப்ரரியில் இப்போதும் இருக்கிறது. பொதுஅறிவுக் களஞ்சியம். பொதுஅறிவு என்பது வாடிக்கையாளருக்கு தேவையானது, பெரும்பாலும் இல்லாதது.

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்
முந்தைய கட்டுரைமைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி
அடுத்த கட்டுரைவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்