கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 13

அன்புள்ள ஜெ

கதாநாயகி நாவலுக்கு பெண்கள் யாரும் எதிர்வினையாற்றவில்லை என்று எழுதியிருந்தீர்கள். வாசிக்க வாசிக்க அதற்கு மனதளவில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருந்தேன் தான். ஆனால் எழுதவேண்டுமென்று தோன்றவில்லை. இப்போதும் அப்ஜெக்டிவாக விமர்சனப்பூர்வமாக எதையும் எழுதமுடியுமா என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த கொந்தளிப்புகளை அறிவேன். எழுத்தில் எரிக்கநினைக்கும் கச்சாப்பொருள் அது. நேர்வார்த்தைகளில் அவற்றைப் பேசினால் அபத்தமாக இருக்கும். சமநிலை இருக்காது. பேசினாலும் எப்படியும் மாறுவேடம் அணிவித்து முன்வைக்கத்தான் முடியும். அங்கதமாகவோ கசப்பாகவோ இல்லை கண்ணாடி அணிவிக்கப்பட்ட தீவிரமான ஆராய்ச்சிபாவனையோடோ. கதையில் சுற்றிச்சுற்றி வரும் மொழிவிளையாட்டுகளைப்போல. ஆனால் உண்மையில் அவற்றைச் சலிப்பாக உணர்கிறேன். ஏனென்றால் அவையெல்லாம் அரைபுனைவு. ஆகவே பொய்.

ஓர் உதாரணம் சொல்கிறேனே? நான் இப்படித் தொடங்கலாம். “பொதுவாக கைவிடப்பட்ட பங்களாவில் எழுத்தாளரைத்தான் பேய் பிடிக்கும். இங்கே எழுத்தாளரே ஒருவகையான பேய். சரிதான், எழுத்தாளர் பெண் என்கையில் பேயாகத்தானே வரமுடியும்?”– இப்படி ஏதாவது. கொஞ்சம் அங்கதம். கொஞ்சம் கசப்பு. கொஞ்சம் சுய ஏளனம். நீலகேசி ஒரு பேய். காரைக்கால் அம்மையார் இன்னொரு பேய். மரபில் இருக்கிறதே? அப்படியே கண்ணாடியைத்திருப்பிக் காட்டலாம். அந்த நாவலே கண்ணாடிகளின் அறை. நாயகி எண்ணியதை ஆசிரியை எழுதி வாசகி வாசித்ததாக நாயகன் எண்ணுவதை ஆசிரியர் சொல்வது. அதற்குள் இன்னொரு கண்ணாடியை கொண்டுப்போய் மாட்டிவைக்கலாம்.

ஆனால் அப்படி வைப்பதில் ஓர் இடுங்கல் தன்மை உள்ளது. பிம்பத்தை பிம்பத்தால் மதிப்பிடுவது. மொழியை மொழியால் அளைவது. நேரடியாக எதிர்கொள்ளமுடியாத மெடூசாவின் முகத்தை நூறு நூறு பிம்பங்களாகப் பிளந்துபோடுவது. ஆனால் மெடூசாவுக்கு அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்தாகவேண்டிய நிர்பந்தம் இருக்கிறதே? பாம்புக்கூந்தலை படியவைக்க வேண்டுமே? :)

சரி மெடூசாவை விடுவோம் பாவம். எத்தனை தலைமுறை ஆணியவாதிகளும் பெண்ணியவாதிகளும் தான் அவளோடு சிண்டுமுடி பிடிப்பது. இத்தனை பிம்பங்கள் மூலம் அங்கே எதிர்கொள்ளமுடியாமையோடு நிலைப்பது என்ன? பெண்ணுக்கு அவள் பெண் இருக்குப்பும், விரிந்த மானுடத்தன்மைக்கும், எப்படியோ ஒரு முரண் கற்பிக்கப்படுகிறது. சுரண்டல் தொடங்குவது இந்த முரணிலிருந்து தான். பேய் என்பதே அந்த முரண்பாட்டின் தலைகீழாக்கம் அல்லவா?

என்னிடம் மேலதிகமான அறிவு பெண்மையில் ஒரு குறைபாடு என்று நேரடியாகவே சொன்னவர்கள் உண்டு. பெண்களுக்கு மானுட விரிவு சாத்தியப்படாதென்று சொன்னவர்கள் உண்டு. அறிவின் விலைக்கு பெண்மையும் பெண்மையின் விலைக்கு அறிவும் பேரம்பேசப்பட்டதுண்டு. பெண்கள் மத்தியில் அறிவால், அறிவார்ந்தோர் மத்தியில் பெண் என்பதால் அன்னியப்பட்டதுண்டு.

ஆனால் என் அனுபவத்தில் அதைத்தாண்டி மேலும் முக்கியமான ஒன்றை உணர்ந்திருக்கிறேன். அது எந்நிலையிலுமே, நான் என்னை இயல்பாகவே ஒருங்கிணைவோடு தான் உணர்கிறேன் என்பது. பிளக்கும் பார்வைகள் ஒவ்வொரு முறையும் எனக்கு வியப்பையும் திகைப்பையுமே அளிக்கின்றன. ஏனென்றால் எனக்குள் பிளவுகள் இல்லை. பெண்மைக்கும் விரிந்த மானுடத்தன்மைக்கும் என் வரையில் எந்த முரணும் இல்லை. என் உடலுக்கும் மனதுக்கும் புத்திக்கும் ஆன்மாவுக்கும் இடையே எந்த முரணையும் நான் உணர்ந்ததில்லை. ஆண்களோ பிறரோ இதில் சொல்ல ஒன்றும் இல்லை.

ஆனால் முரண் இருக்கிறது, பெண்ணின் இடம் எப்போதும் வேறு, பெண் என்பதாலேயே மானுடத்தின் ராஜபாதையில் உனக்கு இடமில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு என்ன பதில் சொல்வது? இல்லை, என் உள்ளூணர்வு சொல்வது வேறு, நான் உணரும் ஒருங்கிணைவு மானுடப்பொதுவானது தான் என்று மட்டும் தானே? அந்த ஒருங்கிணைவை உணர்ந்து அதன் படி authentic-ஆக வாழமுடியாமல் போனால் அது ஒரு தீவிரமான தத்துவப்பிரச்சனை அல்லவா?

இந்த ஆதாரச் சிக்கலைத்தானே கதாநாயகியர் அங்கதமாக கசப்பாக வஞ்சமாக ஆக்குகிறார்கள்? ஆனால் இதை கசப்புகள் வழியாக கழித்துவிட்டுப்போவது எப்படி நிறைவுகொள்ளச்செய்யும்? இந்த நாவலில் வெளிப்படும் ஃபிரான்செஸ் பர்னியின் அங்கதம், ஈவிலினாவின் கசப்பு, ஹெலேனாவின் வஞ்சம், இவை இந்த நாவலுக்குள் பொருத்தமாக வெளிப்படுபவை தான் – மெய்யனின் மனதில் உருவாகும் பிம்பங்கள் என்ற வகையில். மெய்யனிலிருந்தே அப்பா கிறிஸ்ப் வழியாக வர்ஜீனியஸ் வரை ஒரு கோடை இழுக்கமுடியும். அவர்களுக்கு அந்த எதிர்வினை தேவையாகிறது. ஆனால் அதனால் என்ன? என் வாழ்வில் அந்த பிம்பங்களுக்கு பிம்பங்கள் என்பதைத்தாண்டி என்ன அர்த்தம் இருக்கிறது? என்று என்னை நான் கேட்டுக்கொள்கிறேன்.

மானுடமனம் போடும் வேடங்கள் பிரதிவேடங்களை துல்லியமான சித்திரங்களாகக் காண முடிகிறது. ரசிக்க முடிகிறது. கதார்ட்டிக்காக அதைக் கடக்க முடிகிறது. ஆனால் இவையெல்லாமே எதிர்வினைகள். வாழ்க்கையில் வழிகளாக திறக்காதவை. கசப்பை, அங்கதத்தை, வஞ்சத்தை, எதிர்வினையாக வைப்பதை இறுதியான வழிகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் இயல்பாக நேராக உணரும் ஒருங்கிணைவை அவை குலைக்கின்றன. ஆகவே அவற்றிற்கு மேலான ஒன்றை எதிர்பார்க்கிறேன்.

*

நான் ஃபிரான்ஸெஸ் பர்னியை வாசித்ததில்லை. ஆனால் அவரிலிருந்து தோன்றிய ஐரோப்பிய பரப்பின் 18ஆம், 19ஆம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர்களை வாசித்திருக்கிறேன். அவர்களில் பலரும் தங்கள் எழுத்தில் இந்தச்சிக்கலை ஏதோ ஓர் வடிவில் பேசுகிறார்கள். ஜார்ஜ் எலியட்டின் மிட்டில்மார்ச்சில் வரும் டோரதி புரூக் என்ற கதாபாத்திரத்தை ஆசிரியர் அறிமுகம் செய்யும்போதே அவிலாவின் புனித தெரெசாவுடன் ஒப்பிடுகிறாள். அந்தவகை ஆற்றலும் தீவிரமும் கூடிய ஒரு பெண்ணுக்கு யதார்த்த வாழ்வில் மதிப்பென்ன என்று கேட்கிறாள். அவருடைய ரொமோலா என்ற நாவலின் நாயகி மோசக்கார கணவனையும் தான் நம்பிக்கைவைத்த கிறுக்கனான மதகுருவையும் கடந்து தன் மீட்பை எளியோர் சேவையில் கண்டுகொள்கிறாள் (கிட்டத்தட்ட மணிமேகலையைப் போல). சார்லட் பிராண்டியின் ஜேன் அயர், அன்னி பிராண்டியின் ஹெலென், லூயீசா ஆல்காட்டின் ஜோ, ஜார்ஜ் சாண்டின் கான்சுவேலோ என்று பல பாத்திரங்கள். கல்வியிலும் கலையிலும் சேவையிலும் முழுமைபெறுபவர்கள்.

சுவாரஸ்யமாக, கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே கதை இறுதியில் திருமணமும் செய்துகொள்கிறார்கள். அக்காலத்திலேயும் சரி இப்போதும் சரி இந்த முடிவு, குறிப்பாக பெண்கள் மத்தியில், புருவம் உயர்த்தியிருக்கிறது. ஒரு தனி மனித இருப்பாக தன்னளவில் முழுமைபெறுவது தானே லட்சிய பெண்ணின் கொள்கையாக இருக்கவேண்டும்? எதுக்கு கல்யாணம் குட்டி? என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் பிளவு. ஆனால் ஆசிரியர்கள் அப்படி நினைக்கவில்லை. அவர்களில் பலரே மணமாகாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆணின் முழுமை பேராண்மையில் நிகழ்கிறது. மகாவீரரைப்போல. அப்படியெனில் பெண்ணின் முழுமை பெரும்பெண்மையில் அல்லவா நிகழவேண்டும்? இப்படி அடிக்கடி யோசித்திருக்கிறேன். அதே சமயம் ஆண்மை பெண்மை போன்ற கருத்துகளே ஆணவக்கட்டமைப்பின் அங்கங்கள். நாம் நம்மில் செறுக்குக்கொள்ளும் அம்சங்கள். அத்தனைப்பெரிய எடையை வைத்துக்கொண்டு எப்படிப் பறக்க முடியும்?

இருந்தாலும் ஃபிரான்செஸ் பர்னிக்கு அந்த அறுவைசிகிச்சையின் வழி ஏற்படும் விடுதலையானது என்னை திகைக்கவே செய்கிறது. அது ஓர் உருச்சிதைவு. ஏதோ இயற்கை விரோதம் இருக்கிறது அதில். அப்படி ஒரு விடுதலை சாத்தியமாகுமா என்று நான் சந்தேகப்படவில்லை. ஆனால் அதுதான் வழியா? அது மட்டும்தானா? உடலில் விழுந்த அடிகளை ஆற்ற உடலையும், மனதில் விழுந்த அடிகளை ஆற்ற மனத்தையும் சிதைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? பெண் விடுதலையாக ஆணாக வேண்டுமா? குறைந்தபட்சம் பெண்மையை கழித்துக்கொள்ள வேண்டுமா? ராதா பாவனையில் தங்களை மூழ்கடித்துக்கொண்டு பெண்ணாகி மோட்சம் கண்ட ஆடவருக்கு நிகரான செயலா இது?

களிற்றுயானைநிறையில் சம்வகை முன்னாள் படைத்தலைவர் வஜ்ரதந்தரின் கவசத்தை அணியும் இடமும் இதே நிலைகொள்ளாமையை உருவாக்கியது. அவள் அந்த கவசத்தை அணிந்தபோது அதன் எடையை என் தோளில் நான் உணர்ந்தேன். ‘அவள் அதை நிறைக்க வளர்வாள்’ என்று ஒரு கதாபாத்திரம் அப்போது சொல்லும். ‘வளரவேண்டுமா’ என்று என்னை நான் பலவீனமாகக் கேட்டுக்கொண்டேன். அந்த கவசம் சென்றகாலத்து அதிகாரத்தின் குறியீடு. அந்த அதிகாரம் அந்த ஆணுடுப்புடன் சம்பந்தப்பட்டது. அந்த அதிகார உடுப்பை அணிந்துகொள்ளாமல், தன்னை உருமாற்றிக்கொள்ளாமல், பெண்ணால் தன்னளவில் நிற்க முடியாதா?

இன்று மேற்கத்திய நாடுகள் பலவற்றில் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். பதின்பருவத்துப் பெண்கள் தங்களை ஆண்களாக, அல்லது இடைப்பாலினத்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆணின் பெயர், ஆணின் உடுப்புகள், நடை, பாவனை, எல்லாம் அணிகிறார்கள். இப்படி அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு gender identity disorder அல்லது gender dysphoria இருக்கிறதென்றும், அவர்களுக்கு male gender affirmation செய்யப்பட வேண்டும் என்றும் உளவியலாளர்கள் கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் விருப்பப்பட்டால் அவர்களுக்கு testosterone அளிக்கப்படுகிறது. பருவமடைதலை தடுக்கும் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

பன்னிரண்டு, பதிமூன்று வயது பெண் குழந்தைகள் கூட தங்களுக்குப் பெண்ணாக வேண்டாம் என்று சொல்லி இந்தப்பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் பலர் இருபது வயதை கடப்பதற்கு முன்னாலேயே தங்களுடைய மார்பகங்களை அகற்ற அறுவை சிகிச்சையையும் செய்துகொள்கிறார்கள். கருப்பையை அகற்றிக்கொள்கிறார்கள். Gender பற்றிய பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் இந்த போக்குகளை வரவேற்கிறார்கள். உளவியலாளர்கள் மருத்துவர்கள் பலர் இதை ஆதரிக்கிறார்கள். அறுவை சிகிச்சைகள் எல்லாமே இலாபகரமானவை. இதற்குப்பின்னால் மருந்து கம்பெனிகளின் கையும் உள்ளது.

துயரமென்னவென்றால், இவற்றின் முடிவில் நல்ல உடல்நிலையிலுள்ள பெண்கள் ஆண்களாக மாறுவதில்லை. மாறாக, தன்னுடைய எலும்புகளின் வலிமையை இழந்து, பருவமடைதல் சரியாக நிகழாமல் போவதால் கருத்தரிப்புக்கான சாத்தியம் வெகுவாக குறைந்து, உடல் சிதைந்து, அதன் நுண்ணுணர்வு வெகுவாக மழுங்கடிக்கப்பட்டு, ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை இழந்த பெண்களாக பலர் நிற்கிறார்கள்.

இவ்வகையில் ‘ஆணாகும்’ பல பெண்கள் சில வருடங்களிலேயே இதில் தேவையில்லாமல் சிக்கிக்கொண்டதாக உணர்கிறார்கள். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கீரா பெல் [Keira Bell] என்ற இருபத்திமூன்று வயதுப் பெண் பிரிட்டனில் டாவிஸ்டாக் [Tavistock] என்ற மருத்துவமனைக்கு எதிராக வழக்குத்தொடர்ந்தார் [பார்க்க]. தன்னைச் சரியாக பரிசோதனை செய்யாமல், தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பருவமடைதலை தடுக்கும் மருந்துகளும் டெஸ்டாஸ்டிரோனும் தனக்கு மிட்டாய் போல அளிக்கப்பட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் கூறுகிறார். அந்த வழக்கையும் வென்றார்.

ஆனால் இச்சிறுமியர் ஏன் ஆண்களாக மாற நினைக்கிறார்கள்? இவர்களில் பலரும் ஒரே விஷயத்தை சொல்கிறார்கள். அவர்களுக்கு ஆணாக மாற விருப்பமில்லை. ஆனால் கண்டிப்பாக பெண்ணாக இருக்க வேண்டாம்.  பெண்மை என்பதையே ஏதோ நீச்சமான ஒன்றாக, அசௌகரியமான ஒன்றாக இவர்கள் பார்க்கிறார்கள்.

ஏன்? காட்சி ஊடகங்கள் பெண்களின் பிம்பங்களை கவர்ச்சியின் அடையாளமாகவே கையாள்வது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு காலத்தில், மேற்கிலேயும்கூட, போர்னோகிராஃபி என்பது ரகசியமாக பார்க்கப்படக்கூடிய, நல்ல உரையாடலில் பேசத்தகாத ஒரு சபலமாகவே இருந்துள்ளது. இன்று எல்லோர் உள்ளங்கையிலும் எந்நேரமும் காணக்கிடைக்கிறது. பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் பார்க்கிறார்கள். மிகச்சிறு வயது முதலாகவே உடற்சார் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அப்படியென்றால் பெண் என்றால் உடற்பாகங்களின் குவியல், போகப்பொருள் என்ற நினைப்பு அந்தச்சிறுவர்கள் மனதில் தோன்றியிருக்கலாம். தவிர, ஆணுக்கு அமையும் வெளிகள் சற்று விரிவானவை. புறநோக்கு கொண்டவை. அதிகாரம் உடையவை. மற்ற ஆண்களை எளிதில் உள்ளிழுத்துக்கக் கூடியவை. பெண்ணாய் இருப்பது அங்கே லையபிலிட்டி. ஆகவே அறிவுசார், புறவுலகு சார் விருப்பங்கள் உள்ள பெண்கள் எல்லா வகையிலேயும் ஆணாகவே மாறிவிட முடிவு செய்கிறார்கள். பெண் என்ற அடையாளத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

அப்படி வெளியேறுகிறவர்களில் ஒரு சாராருக்கு தங்கள் உடல் நலிவடைந்தாலும் பரவாயில்லை, பக்கவிளைவுகள் ஏற்பட்டாலும் சரி. பெண்ணாய் இருப்பதை விட ஆணாய் வாழ்வது மேல் – அல்லது பெண்ணல்லாதவளாய் வாழ்வது மேல் – என்று அந்த வாழ்க்கைமுறையிலேயே நீடிக்கிறார்கள். தங்களை துறத்திய பேய்களிலிருந்து விடுதலையடைந்து விட்டதாக சொல்கிறார்கள். ஃபிரான்செஸ் பர்னியின் விடுதலையாக நாவலில் சொல்லப்படுவதை இத்துடன் தொடர்பு படுத்திக்கொள்கிறேன்.

இதை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எதற்காக ஒருவர் இப்படி உடலையும் மனத்தையும் சிதைத்துக்கொள்ள வேண்டும்? ஏடன் தோட்டத்து ஆப்பிளை தின்றதற்காக, இயேசு சிலுவையில்  ஏற்றப்பட்டபோது சிரித்ததற்காக, இப்படி ஏதும் கடந்தகால பாவத்துக்கான தண்டனையா இது? அல்லது பெண்ணாய்ப் பிறப்பெடுத்த இருத்தலியல் குற்றத்துக்காக  உடலை வறுத்திச் செய்யப்படும் நோன்பா?

என் அனுபவம் வேறு. நான் பதினெட்டு வயதில் தாகூரின் சித்ராங்கதா என்ற நாடகத்தை வாசித்தேன். அதன் வழியாக இந்த உலகத்தில் பெண்ணின் இடம் என்ன என்று ஒரு திறப்பை அடைந்தேன். அதன் பிறகு கொற்றவை. அப்படிப் பல பயணங்கள். அங்கிருந்து சொல்கிறேன். வஞ்சம், கசப்பு, சுயவதை தாண்டிய ஒன்றை எதிர்பார்க்கிறேன். சொற்களின் இடுங்கிய வழிகள் வேண்டாம். பேய் வாழ்க்கையின் குறுகல் வேண்டாம்.

காட்டின் விரிவு வேண்டும். துப்பனின் உலகம் போன்ற ஒன்று. மெய்யனின் ஆசிரிய வாழ்வைப்போல ஒன்று. அதை பெண்ணாகவே இருந்து அடைதல் சாத்தியப்பட வேண்டும். மானுட விரிவை நோக்கிச்செல்லும் ஆண்களை யாரும் ஆண்மையை இழக்கச் சொல்வதில்லையே? அல்லது ஆணாக பிறந்ததால் மானுட விரிவு சாத்தியமாகாது என்று சொல்வதில்லையே? அந்த மாதிரி, இயல்பாக.

இல்லை, பெண் தன்னை உருகுலைத்து வஞ்சம் தீர்த்து தான் அந்த இடத்தை அடையமுடியும் என்றால், அது இந்த உலகின் இயங்குதலிலேயே நெய்யப்பட்டுள்ள

விதி என்றால், அது மாபெரும் அநீதி. அப்படியென்றால் இங்கே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் சமரசம் தான்.

சுசித்ரா

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 15
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 14
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 13
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 12
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 11
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 10
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 9
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 8
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 7
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 6
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 5
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 4
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 3
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 2
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 1
முந்தைய கட்டுரைஒப்புக்கொடுத்தல்- யோகேஸ்வரன் ராமநாதன்
அடுத்த கட்டுரைகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது