காணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது

ஆசிரியருக்கு வணக்கம் ,

பெண்கள் பயணம்– இளையவள் பிரதீபாதேவி கடிதம் எழுதியிருந்தாள். பயணம்,பெண்கள் – கடிதம்

தோழி செல்வராணி இரு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்றிருந்தபோது நண்பர் சுப்ரமணியை சந்திக்க சொல்லியிருந்தேன். அந்த சந்திப்பை தொடர்ந்து செல்வராணி பெண்கள் செல்லும் பயணதிட்டதை சொல்ல சுப்ரமணி ஏற்பாடாக்கி கொடுத்தார்.

அவர்கள் காளிகேசம் காட்டிற்குள் ஒரு நாள் தங்கியிருந்தார்கள். அந்த பயணம் முடிந்தபின் சுப்ரமணி என்னை அழைத்து நோய் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் காணி மக்களுக்கு உங்களால் ஏதாவது செய்ய முடியுமா எனக்கேட்டார். பிரதீபாவின் கடிதத்தில் சுப்ரமணியம் அங்குள்ள வனக்காவலர் காந்திராஜனுடன் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்தார் என குறிப்பிட்டிருந்தார். அப்போது தான் புரிந்தது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என.

கன்னியாகுமரி மாவட்ட  வனக்கோட்டம் அழகியபாண்டியபுரம் வனசரக்திற்கு உட்பட்ட காளிகேசத்தில் உள்ள படுபாறை சூழல் சுற்றுலா மையம் பழங்குடியின காணி இன மக்களால் செயல் பட்டு வருகிறது .தற்போதுள்ள சூழ்நிலையில் சூழல் சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.அங்குள்ள மக்களுக்கு உணவுக்கான அரிசியும்,பருப்பும் மட்டும் அரசு வழங்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என எங்கள் கிளப் டென் அறக்கட்டளையின் நிறுவனர் தாமரை செல்வியிடம் இது குறித்து சொன்னபோது மிகவும் உற்சாகமாகி தொலைநோக்கு திட்டத்துடன் அவர்களுக்கு வேண்டியதை செய்வோம் என உறுதியளித்தார்.

இங்கு வாழும் மலைவாழ் காணி மக்கள் முன்பு காட்டு விவசாயம் செய்து பிழைத்து வந்தனர்.அவர்களின் நல்வாழ்வுக்காக சூழியல் சுற்றுலா சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.தற்போது அது மூடப்பட்ட நிலையில்.மீண்டும் காட்டு விவசாயத்தை தொடங்கினர்.ஆனால் காட்டு விவசாயம் தற்போது பெரும் சவாலானது விலங்குகள் சாப்பிட்டு போக மீதியே அவர்களுக்கு உணவவாக கிடைக்கும் நிலை.தன் உயிருக்கு ஆபத்தே என்றாலும் காட்டு விலங்கை கொல்ல முடியாது இப்போது .

நிலத்தில் உள்ளவர்களுக்கு அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் வழங்கும் உதவிகள் எளிதாக கிடைக்கும்.அதுபோன்ற உதவிகள் ஏதும் மலைவாழ் மக்களுக்கு சென்று சேர்வதில்லை.தங்களுக்கு உதவி தேவை என்பதை தெரியபடுத்தும் மொழி அவர்களுக்கு பேச வராது.(உங்கள் கதைகளில் வரும் மலை மொழி கதாநயகி கதையில் கோரன் பேசும் மொழி)

அங்கு செய்யும் பணிக்காக நண்பர் சுப்பிரமணியம் காணி மக்களுடன் ஒரு  கூட்டம் நடத்தினார். அவர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். அவர் சொன்னார் “அவங்களுக்க வாழ்க்கைக்கு சரியா வழிகாட்டல்லன்னா காட்டில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்கு அவர்களை மூளை சலவை செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கு,அதுனால காண்டிப்பா நாமோ ஏதாவது செய்யணும்” என்றார்.

முதற்கட்டமாக அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அங்குள்ள இரு குடிநீர் கிணறுகளை தூர்வாரும் பணியை மேற்கொள்ளவுள்ளோம் .அதுவே  அங்கு வாழும் மக்களுக்கும் ,சுற்றலா செல்லும் பயணிகளுக்கும் நீர் ஆதராம்.இப்பணி செவ்வனே முடிந்தபின் அங்குள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் மூங்கில் குடில்களையும் சீரமைக்கும் பணியை அந்த பழங்குடி காணி மக்களால் செய்ய உள்ளோம்.அதற்கான தினசரி கூலி அவர்களுக்கு கிடைக்கும்.கிளப் டென் அறகட்டளை அதற்கான நிதியை நண்பர்களிடமிருந்து திரட்டி கொண்டிருக்கிறோம்.

உங்கள் வாசkiகள் சென்ற பயணத்தால் காணி மக்களுக்கு ஒரு சிறு உதவி செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.பணிகள் முடிந்து உகந்த சூழ்நிலை அமைந்தபின் நண்பர்களுடன் தாங்கள் அங்கு வந்து தங்கி செல்லவேண்டும் வேண்டுகிறேன்.

ஷாகுல் ஹமீது ,

(கிளப் டென் அறகட்டளைக்காக)

ஆசிரியருக்கு வணக்கம்,

காளிகேசம் காணி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான குடிநீர்கிணறுகளை தூர்வாரும் பணியை செய்யவிருப்பதாக எழுதியிருந்தேன்.முழு அடைப்பு காரணமாக அந்த பணிகள் மிக தாமதமாக இரு தினங்களுக்கு நல்ல படியாக நடந்து முடிந்தது.

அங்கு வாழும் காணி மக்களுக்கும்,சுற்றுலா செல்வோருக்கும் அதுவே நீர் ஆதாரம்.முழு அடைப்புகாரணமாக எங்கள் கிளப்டென் நிர்வாகிகள் யாரும் அங்கு செல்ல முடியாத நிலையில். உங்கள் நண்பர் சுப்ரமணியத்தை காளிகேசம் பகுதிக்கு நேரில் சென்று  காணி மக்களை சந்தித்து அவர்களின் உடனடி தேவையை கேட்டறிந்து கிளப் டென் நிறுவனர் தாமரை அவர்களுக்கு தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிணறுகளை தூர் வாரும் பணிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிட்டிருந்தோம் .அறுபதாயிரம் ரூபாய் செலவானது.நண்பர்களிடம் நிதி கோரியதில் முப்பத்தி ஐந்தாயிரம் பங்களிப்பு கிடைத்தது.காளிகேசத்தில் பணிபுரியும் வன அதிகாரி காந்தி ராஜன் என்பவர் மூலம் அந்த பணிகளை திறம்பட செய்து முடித்தோம்.அங்கு  நேர்மையான அதிகாரி ஒருவர் இருப்பதால் இது சாத்தியமாகியது.

அந்த கிணறுகளில் சிறு விலங்குகள் முதல் காட்டு பன்றிகள் வரை உள்ளே விழுந்துவிடும் வாய்ப்பு அதிகம்.எனவே எப்போதும் அது பயன்பாட்டில் இருக்கும் வகையில் இரும்பு கம்பியால் மூடி  நைலான் வலைகொண்டு கிணற்றின் மேற்பகுதி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. கோடையில் விலங்குகளுக்கும் இந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து கேன்களில் கொண்டு செல்வதாக காந்தி ராஜன் சொன்னார்.

இரு மாதங்களுக்கு முன்பு அங்கு பயணம் சென்ற உங்கள் வாசகிகள்(செல்வராணி தலைமையில் பிரதீபா தேவி,மகேஸ்வரி இருவரும் முதல் பயண கட்டுரை எழுதவும்  மற்றும் ஆராய்ச்சி மாணவி அன்பரசி பறவைகள் குறித்து எழுதவும் துவங்கியுள்ளனர் )  எங்களிடம் காணி மக்களுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்த சுப்ரமணி மற்றும் இதில் தொடர்பே இல்லாவிட்டலும் உங்களால்தான் நண்பர்கள் இணைந்து இதை செய்வதற்கு காரணம் என்பதால் முதன்மையாய் உங்களுக்கும் நன்றி .

மேலும் காணி மக்களின் இயற்கை உணவு பழக்கத்தையும் அவற்றை தயாரிக்கும் முறைபற்றியும் இணையவழி  நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் .வருங்காலத்தில் அங்கு சுற்றுலா செல்பவர்கள்  அந்த உணவு பொருட்களை வாங்கி சென்று குறைந்த செலவில் ஆரோக்கியமான இயற்கை உணவை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

மேலும் காணி மக்களின் விளை பொருட்களை விற்பனை செய்ய ஒரு உறுதியான கூடம் ஒன்று அமைத்துகொடுக்கும் திட்டமும் போதிய நிதி கிடைத்தால் செய்து கொடுப்பதாக கிளப் டென் முடிவு செய்துள்ளது.

எங்களது நண்பர்கள் மட்டுமல்லாமல் இந்த கிணறு தூர் வாரும் பணிக்கு உங்கள் நண்பர்கள் பலர் பங்களிப்பு செய்து உதவினர் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

ஷாகுல் ஹமீது .

[email protected]

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 13
அடுத்த கட்டுரைமதார்- பேட்டி