‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 18 ஆவது நாவல் ‘செந்நா வேங்கை’. இந்த நாவலைப் பொருத்தவரை ‘செந்நா வேங்கை’ என்பது, குருஷேத்திரப் போர்க்களம்தான். சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் “போர் நிகழும் மண்ணை, ‘வேட்டை முடித்த வேங்கையின் செந்நா’ என்கின்றன நூல்கள்” என்று கூறுகிறான்.

சங்கன், ஸ்வேதனிடம், “குருஷேத்திரத்தில்தான் போர் நிகழும். ஏனெனில், அதுதான் குருதிநிலம். இந்திரன் விருத்திரனை வென்ற இடம். பரசுராமர் ஷத்ரியர்களின் குருதியை ஐந்து குளங்களாகத் தேக்கிய மண். அங்கு நிகழ்ந்தால் போர் அறத்திலேயே இறுதியில் சென்று நிலைக்குமென்று நம்புகிறார்கள். அதற்குத் தொல்நூல்களில் ‘அறநிலை’ என்றே பெயர் உள்ளது” என்றான். ‘அறநிலை’ என்று அறியப்பட்ட ‘குருஷேத்திரம்’, குருதிகுடிக்கும் செந்நா வேங்கையெனக் காத்திருக்கிறது.

வீரர்கள் ‘தாம் இறப்போம்’ என்று எண்ணியும் துணிந்துமே அந்தப் போர்க்களத்தை நோக்கிச் செல்கின்றனர். தாரை பானுமதியிடம், “அவைநின்று பழிகொண்ட பெண் சொன்ன சொல் அவ்வண்ணமே நிகழ்ந்தாக வேண்டும். அதுவே இங்குப் பெண்ணுக்குக் காவலெனத் தெய்வங்கள் உண்டென்பதற்கான சான்று. தலைமுறை தலைமுறையெனப் பிறந்தெழுந்து வரும் பெண்கள் அனைவருக்கும் நம் மூதாதையர் உரைக்கும் சொல்லுறுதி அது. பிறிதொன்று நிகழாது” என்கிறார். இதனை அத்தனை வீரர்களும் உணர்ந்திருந்தனர். வேள்வியில் ஊற்றப்படும் நெய்யெனத் தழலை நோக்கி, ஒழுகி ஒடுகின்றனர். இது போர்வேள்வி. பெண்பழியைத் துடைக்க இயற்றப்படும் பெருங்களவேள்வி.

இந்தப் போரில், ‘அறத்திற்கு எதிராக நிற்கும் தரப்புக்கு வெற்றி கிடைக்காது’ என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் குறிப்புணர்த்துகின்றன. அஸ்தினபுரியின் அரசவைக்கு வரும் பிதாமகர் மூத்த பால்ஹிகரை வணங்குவதற்காகப் பிதாமகர் பீஷ்மர் செல்கிறார்.

“அவர் கைகளைக் கூப்பியபடி முன்னால் சென்று பால்ஹிகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடி வணங்கினார். பால்ஹிகர் அவர் தலைமேல் கைவைத்து ‘புகழ் சேர்க!’ என்றார். பீஷ்மர் எழுந்து பூரிசிரவஸிடம் “தன்னை அறியாமல் சொல்கிறார். எனினும் சரியாகவே அவர் நாவில் வருகிறது. மூதாதையரும் அன்னையரும் நா மறந்தும்கூட, ‘நாம் வெற்றி பெறுவோம்’ என்று வாழ்த்துவதில்லை” என்றார். பீஷ்மர் தனக்குத்தானேயென, “அதுவும் ஒருவகையில் சரிதான். ஷத்ரிய மரபின்படி நோயுற்றிறப்பது ஓர் இழிவு. படைக்களத்தில் இறப்பவரே விண்ணுக்குரியவர்” என்றார். பின்னர் இடறிய தாழ்ந்த குரலில் “தன் குருதியினன் ஒருவன் கையால் இறப்பதென்பது மேலும் சிறப்பு. அது தன்னால் தான் தோற்கடிக்கப்படுதல். மண்ணில் பிற குருதியர் எவர் முன்னாலும் தோற்றதில்லை என்ற புகழுடன் விண்ணேக இயலும்” என்றார்.

கௌரவர்களின் தரப்பில் இணைந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தாம் ‘அறத்திற்கு எதிராக நிற்கிறோம்’ என்பது தெரிந்திருக்கிறது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட காரணம் இருக்கத்தான் செய்கிறது.

துரியோதனனுடன் ‘செஞ்சோற்றுக்கடன்’ என்றும் ‘தோழமை’ என்றும் கர்ணனும் பூரிசிரவஸ் இணைந்திருக்க, ‘அஸ்தினபுரியின் அரியணையைக் காப்பவன்’ என்ற கடமை உணர்ச்சியில் பிதாமகர் பீஷ்மரும் துரியோதனனுடன் நிலைகொள்கிறார். பிதாமகரின் வழியினைப் பின்பற்றுபவர்களாகத் துரோணரும் கிருபரும் நின்றுகொள்கிறார்கள். ‘வேதத்தைக் காப்பவர்கள்’ என்ற பெயரிலும் ‘இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்பிய புதிய வேத மெய்மையைப் புறக்கணிப்பவர்கள்’ என்ற பெயரிலும் பிற ஷத்ரியர்களும் சல்லியரும் துரியோதனனுடன் இணைந்து நிற்கிறார்கள். ‘உடன்பிறந்தோர்’ என்ற நிலையில் குண்டாசி, விகர்ணன் உள்பட கௌரவர்கள் நூற்றுவரும் துரியோதனனுக்கு நிழலாகின்றனர்.

திருதராஷ்டிரருக்கும் பிரகதிக்கும் பிறந்த யுயுத்ஸு மட்டுமே இளைய யாதவர் இருக்கும் தரப்பே ‘அறத்தின் தரப்பு’ என்பதை நன்கு புரிந்துகொண்டவன். அவனால் மட்டுமே முழுத் தெளிவுடன், திடமான முடிவினை எடுக்க முடிகிறது. அவன் துரியோதனனிடம் நேரடியாகவே பேசி, பாண்டவர்களின் அணியில் சேர்ந்துகொள்ள அனுமதிகேட்கிறான். அவனுக்கு உரிய அஸ்தினபுரியின் பங்கினை வழங்கி, அவனை வழியனுப்பி வைக்கவே துரியோதனன் விரும்புகிறான். துரியோதனனின் பெருந்தன்மைக்கு அளவேயில்லை என்றுதான்படுகிறது.

பாண்டவர்களின் அணியில் இணைந்துள்ள நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் மலைக்குடிகளும் இன்னபிற குடியினர் அனைவரும் ‘பெண்பழி’க்கு நிகர்செய்யவே போருக்கு வந்தவர்கள். உண்மையில், அவர்களுக்குள்தான் ‘அறம்’ குருதியாக ஓடுகிறது.

இதனை ஸ்வேதன் – திருஷ்டத்யும்னன் உரையாடலின் வழியாக அறிய முடிகிறது. ஸ்வேதன் திருஷ்டத்யும்னனிடம், “ ‘இப்போரில் எங்களுக்கான இடம் என்ன?’ என்று மட்டுமே அறிய விரும்புகிறோம். ‘எங்களுக்கு எது கிடைக்கும்?’ என்ற கணிப்பை முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில், ‘எங்கள் தலைவர்களுக்காகப் போரிடவேண்டும்’ என்ற ஒரே நோக்கில் கிளம்பி வந்தோம்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் குலாடரே, இங்குப் படைகொண்டு வந்திருக்கும் அரசர்களில் எவரும் மெய்யாகவே இன்றுவரை போருக்குப் பின் தங்களுக்குக் கிடைப்பதென்ன என்று கேட்டதில்லை. அவர்கள் கேட்கத் தயங்கியிருக்கக்கூடுமோ என்று ஐயுற்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நான் உசாவியிருக்கிறேன். அதன் பொருட்டு விருந்துகளை ஒருக்கியிருக்கிறேன். நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் கோரிப் பெறுவதற்கென எதுவுமே அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளிக்க மட்டுமே வந்திருக்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இதுபோல வென்ற பின் கொள்வதற்கில்லாத ஒரு படை இதற்கு முன் திரண்டிருக்காது” என்றான். “பின்னர் எதன் பொருட்டு அவர்கள் படைகொண்டு வந்திருக்கிறார்கள்?” என்று ஸ்வேதன் கேட்டான். ‘பெரும்பாலானவர்கள் பெண்பழி தீர்க்கும் கடமை தங்களுக்குண்டு’ என்று வந்திருக்கிறார்கள். அன்னையர் அவர்களுக்கு அளித்த ஆணையைத் தலைமேற்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியோர் இளைய யாதவரின் கொள்கைமேல் பற்றுக் கொண்டு, அதற்கென நிலைகொள்ள விழைந்து வந்தவர்கள். நானும் விராடரும் மட்டுமே யுதிஷ்டிரரின் முடிநிலைக்க வேண்டுமென்றும் அவர்கள் கொடிவழி அஸ்தினபுரியை ஆளவேண்டுமென்றும் விரும்பி வந்திருக்கிறோம். ஏனெனில், எங்கள் குருதியின் வெற்றி அது” என்றான்.

அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரர் அறத்துக்கும் அறமின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில், ஏறத்தாழ துலாக்கோலின் முள்ளெனத் தன் நிலைப்பாட்டினை நிறுத்தி, இந்தப் போரை விலகியிருந்து காண்கிறார். இந்த நிலைப்பாட்டினை எடுக்க அவர் தன்னை வெறும் ‘சூத குடியினன்’ என்றே கருதிக் கொள்கிறார்.

திருதராஷ்டிரர் தன் மகன் குண்டாசியிடம், “நீ வஞ்சினம் உரைக்கச் செல்லவில்லையா?” என்றார். “இல்லை, நான் பாண்டவர்களைக் கொல்வதாக வஞ்சினம் உரைக்கமாட்டேன்” என்று குண்டாசி உரக்க சொன்னான். திருதராஷ்டிரர் சிலகணங்கள் அசையாமல் நின்றுவிட்டு, “ஆம், ஒருவனாவது அவ்வாறு எஞ்சட்டும்” என்றார். திருதராஷ்டிரர் தன் தம்பி விதுரரைப் போலவே இந்தப் போரிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்.

குண்டாசி காந்தாரியிடம், “நான் அங்கு சென்றுவிட விழைகிறேன்” என்றான். காந்தாரி புன்னகைத்து, “ஆம், இந்த நிலத்துக்கான பூசல்களை எல்லாம் விட்டுவிட்டு என் மைந்தர் அங்கே சென்று அன்னையின் மைந்தர்களாகச் செம்புழுதியாடி வாழ்ந்தால் அதைவிட நான் விழைவதொன்றும் இருக்கப் போவதில்லை” என்றாள். காந்தாரிக்கும் இந்தப் போரில் துளியும் விருப்பம் இல்லை.

திருதராஷ்டிரர் தன் அருகே வந்த காந்தாரியிடம், “மைந்தர்களுக்கான பலி அல்லவா?” என்றார். “ஆம்” என்று அவள் சொன்னாள். “என் மைந்தர்கள் அங்கே உபப்பிலாவ்யத்திலும் உள்ளனர்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். குண்டாசி தன் முதுகெலும்பு குளிர்வதைப்போல் உணர்ந்தான். கணம்கணமென அவன் காத்திருந்தான். காந்தாரி “ஆம், அவர்களுக்காகவும் பூசனை நிகழட்டும்” என்றாள்.

பெருந்தந்தையும் பேரன்னையும் இந்தப் போரில் அறம் வெற்றி பெற  வேண்டும் என்றும் போரின் முடிவில் தங்களின் புதல்வர்களுள் ‘அறப்புதல்வர்கள்’ மட்டுமே வாழ வேண்டும் என்றும் விழைகின்றனர்.

ஆனாலும், திருதராஷ்டிரர் குருஷேத்திரத்துக்குச் செல்கிறார். அங்குச் சஞ்சயனின் உதவியுடன் போர்க்காட்சிகளைக் கேட்டறிந்து, தன் உள்ளத்தால் அவற்றைக் காட்சியாக்கிக்கொள்கிறார்.

பிற மகாபாரதப் பிரதிகளில் இடம்பெற்றிருப்பதுபோல, ‘ஞானக்கண்’கொண்டு சஞ்சயன் போர்க்காட்சியைக் கண்டு, திருதராஷ்டிரருக்கு உரைப்பதுபோல இந்த வெண்முரசில் காட்சியை அமைக்காமல், பகுத்தறிவோடு இந்தக் கதைநிகழ்வினைக் கையாண்டுள்ளார் எழுத்தாளர்.

பீதர்களிடம் பெற்ற இரண்டு ஆடிகளை ஒருங்கிணைத்து (துல்லியமான தொலைநோக்கி) வெகுதொலைவில் நடைபெறும் போர்க்காட்சியைச் சஞ்சயன் மிகத் துல்லியமாகக் கண்டு, அவற்றைத் தன் சொற்களில் தொகுத்து, திருதராஷ்டிரருக்கு உரைப்பதுபோலக் காட்சிப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர்.

இந்த நாவல் முழுவதும் போருக்கான இறுதி ஒருக்கத்தைப் பற்றியே பேசுகிறது. நாவல் முதல்நாள் போரின் அழிவைப் பற்றிப் பேசி நிறைவுகொள்கிறது. போருக்கான முன்திட்டமிடல்கள், படைநகர்வுகள், பாசறை அமைப்புகள், போர் அடுமனை முதல் போர் இடுகாடு வரை அனைத்தைப் பற்றியும் மிக மிக விரிவாகவும் தெளிவாகவும் இந்த நாவல் பேசுகிறது.

‘போர்ஒருக்கத்தை’ மட்டுமே மையப்படுத்தி ஒரு முழு நாவலை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ஏன் எழுத வேண்டும்?. அப்படியென்ன முதன்மைத்தன்மை இந்தப் போருக்கு இருக்கிறது? இந்த வினாக்கள் நாம் விடைகளைத் தேட முனையும்போது, அவை நம்மை ஒட்டுமொத்த ‘வெண்முரசு’ தொடர் நாவல்களை நோக்கித் திருப்பிவிடுகின்றன.

120 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதவர்ஷத்தில் நிகழும் பெரும்போர் இது. ஏறத்தாழ நான்கு தலைமுறையினர். நான்கு தலைமுறையினரின் நேரடிப் பிரதிநிதியாகப் பிதாமகர் மூத்த பால்ஹிகர் வந்துநிற்கிறார். இந்தப் போரைத் தலைமையேற்று நடத்தும் இருபெருந்தலைவர்கள் தருமரும் துரியோதனனும் ஆவர். அவர்கள் பிறக்கும்போதே இந்தப் பெரும்போர் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், நாள் மட்டும் குறிக்கப்படவில்லை.

அந்தத் தலைவர்கள் இருவருமே தங்களின் முதுமையை நெருங்கியவர்கள்தான். ஒவ்வொரு நாளும் இந்தப் பெரும்போருக்காகக் காத்திருந்தவர்கள்தான். ஆனால், தங்களால் முடிந்தவரைக்கும் போருக்கான நாளைத் தள்ளிவைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒவ்வொரு நாளும் அந்தப் போரை வெவ்வேறு வகைகளில் தங்களின் ஆழ்மனத்திற்குள் நிகழ்த்திக்கொண்டே இருந்தார்கள்.

பாரதவர்ஷத்தில் வாழும் ஒவ்வொரு ஷத்ரியரும் இந்தப் போருக்காகக் காத்திருந்தனர். இந்தப் போரில் பங்கெடுக்கவும் போருக்குப் பின்னர் தங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் போர், ‘பேரறத்தை நிலைநாட்டுவதற்கான போர்’ என்றே எல்லாத் தரப்பினராலும் நம்பப்பட்டது. எல்லாவகையிலும் இந்தப் போர் அதை நோக்கியே நகரத் தொடங்கியது. அதனால்தான் காந்தாரி தம் மைந்தர்களை வாழ்த்தும்போது, “அறம் வெல்க!” என்று மட்டுமே வாழ்த்துகிறார். போர்க்களத்தில் தன்னிடம் வந்து வாழ்த்துபெறும் தருமனைப் பிதாமகர் பீஷ்மர் “அறம் வெல்க” என்றே வாழ்த்துகிறார்.

‘பாரதவர்ஷத்தில் அறத்தை நிலைநாட்ட எழுந்த பெரும்போர்’ என்ற வகையில் இந்தப்போர் முக்கியத்துவம் கொள்கிறது. அதனால்தான் இந்தப் போருக்கான ஒருக்கத்தைப் பற்றி எழுத்தாளர் ஒரு நாவல் முழுக்க எழுதியுள்ளார்.

‘வெண்முரசு’ தொடர் நாவல்களுள் ஒன்றான ‘வெண்முகில் நகரம்’ நாவலில் அறிமுகமான பூரிசிரவஸ் பின்னாளில் அஸ்தினபுரியின் தூதனாகவே பாரதவர்ஷம் முழுவதும் அலைகிறான். எல்லாவிதமான இளிவரல்களுக்கும் அவன் இலக்காகிறான். ஆனாலும் அவன் மனங்கலங்குவதில்லை.

வாள்வீச்சும் சொல்வீச்சும் கொண்ட இனிய இளைஞனாகவும் (வயதானாலும்கூட) தன்குலத்தை வரலாற்றில் நிலைநிறுத்தும் வகையில் எதிர்காலவியல்நோக்கோடு  செயல்புரிபவனாகவும் திகழ்கிறான். தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் வசதிகளையும் முற்றிலும் தன்குடியினரின் பெருவளர்ச்சிக்கே செலவிடுகிறான்.

அவனின் உண்மை நோக்கம் இந்த நாவலில்தான் எழுத்தாளரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக அஸ்தினபுரியோடு நெருங்கிய தொடர்பிலிருந்த அவன் தன்னுடைய மலைநாடான, மிகச் சிறிய சிற்றரசான, பாரதவர்ஷத்தின் கண்களுக்குத் தெரியாமலிருந்த பால்ஹிக நாட்டை பெருஞ் சாலைகளை உடைய, நாகரிகம் மிக்க ஒரு வணிக நாடாக மாற்றிவிடுகிறான்.

நிகழவுள்ள பெரும்போருக்கான படைஒருக்கத்தில் தனக்கு உதவியெனத் தன்னுடைய கொடிவழியினரை அழைத்துவந்து, அவர்களுக்குப் படையொருக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறார். பின்னர் அவர்களைப் பாதுகாப்பாகத் தன் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைக்கிறான். தன்னுடைய மலைநாட்டின் எதிர்காலத்தைத் தன் வாழ்நாளிலேயே மாற்றியமைத்து விடுகிறான். மூத்த பால்ஹிகரை அழைத்துவந்து கௌரவப் படையினருக்குப் புத்தூக்கம் கொடுக்கிறான்.

‘எதற்காக இதையெல்லாம் அவன் செய்தான்?’ என்பதற்கு விடையாகப் பின்வரும் அவனது வாய்மொழியே சான்றாகிறது. “முற்றிலும் பயனுறுதி கொண்ட ஒன்றை மட்டுமே இயற்ற வேண்டுமென்று எண்ணி எவரும் எதையும் செய்ய இயலாது. பணியாற்றுவது எனது நிறைவுக்காக. நான் வாழ்கிறேன் என்பதற்காக”. உண்மையில் அவன் தன் வாழ்நாளில் பயனுறுதிகொண்ட ஒன்றைத்தான் மிகச் சரியாகச் செய்திருக்கிறான்.

அவனுடைய நோக்கங்களும் திட்டங்களும் செயல்பாடுகளும் துரியோதனனுக்குத் தெரிந்தே இருக்கின்றன. துரியோதனன் மனம் உவந்து அவற்றையெல்லாம் ஏற்கிறான். அவற்றின் பின்விளைவுகள் அனைத்தையும் அவனுக்கு அஸ்தினபுரியின் கொடையாகவே அளிக்கிறான். துரியோதனனின் விரிந்த உள்ளத்துக்குச் சான்றாகப் பால்ஹிகபுரியின் பெருவளர்ச்சியையும் நாம் சுட்டிக்காட்டலாம். துரியோதனன் தோழமையைப் பேணுபவன். அவனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு தோழமைகளுள் ஒருவர் கர்ணன்; மற்றவன் பூரிசிரவஸ் என்றே நான் கருதுகிறேன்.

துரியோதனனால் பூரிசிரவஸ் நிமிர்வுகொள்வதைப் போலவே திரௌபதியால் சாத்யகி நிமிர்வுகொள்கிறார். சாத்யகியின் மகன் அசங்கனுக்குத் திருஷ்டத்யும்னனின் மகள் சௌம்யையைத் திருமணம் செய்து வைக்கிறார் திரௌபதி. ஷத்ரியகுடியில் மணவுறவு ஏற்படுகிறது. அதுவும் அரசரின் மகளோடு மணவுறவு. இதன் வழியாகச் சாத்யகியின் தலைமுறை புதிய வெளிச்சத்தை நோக்கி முன்னெட்டு வைக்கிறது. சாத்யகிக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையே உள்ள தோழமையும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

ஒட்டுமொத்த வெண்முரசில் உறவினர்களுக்கு இடையில் நிகழும் அகம், புறம் சார்ந்த கொடுக்கல் – வாங்கல்கள் விளைவிக்கும் நன்மைகளைவிடத் தோழமைக்குள் நிகழும் அகம், புறம் சார்ந்த கொடுக்கல் – வாங்கல்கள் மிகுந்த நன்மையை விளைவிக்கின்றன.

ஆண்கள் மிகுந்த பொறாமைப்படும் ஒரு கதைமாந்தராக மூத்த பால்ஹிகர் திகழ்கிறார். தன் முதுமையை மீண்டும் மீண்டும் வெல்கிறார். உடற்திறனை மீட்டெடுக்கிறார். புதிய புதிய மணவுறவுகளின் வழியாகத் தன் தலைமுறையினரைப் பெருக்குகிறார். இறுதியில் அஸ்தினபுரியில் ஹஸ்தியின் மணிமுடியை அணிகிறார். நான்கு தலைமுறையினரின் நினைவுப்பெருக்கில் திளைக்கிறார். முக்காலத்தையும் அழித்து நம் கண்முன் நிஜத்தில் நிற்கும் வாழும்தொன்மமாக இருக்கிறார் அவர்.

‘வெண்முரசு’ தொடர் நாவல்களுள் பலவற்றுள் பலதருணங்களில் திருதராஷ்டிரரின் விரிந்த உள்ளத்தையும் அதற்கு இணையாகத் துரியோதனனின் பெருந்தன்மையையும் காணமுடிகிறது. ‘பெருந்தந்தையின் மூத்தமகன்’ என்ற நிலையில் துரியோதனனும் அத்தகைய உளவிரிவினைப் பெற்றவனாக இருக்கிறான்.

அஸ்தினபுரியைவிட்டுப் பாண்டவர்களின் 13 ஆண்டுகாலம் விலகியிருந்தபோது, துரியோதனன் அஸ்தினபுரிப் பேரரசின் எல்லைக்குட்பட்ட நிலத்தில் வாழும் மக்களுக்கு ஒருகுறையும் இல்லாதவாறும் அப்பகுதியில் ஓர் அறப்பிழையும் நிகழாதவாறும் நல்லாட்சியை நடத்துகிறான். அதில் பிதாமகர் பீஷ்மர் உள்ளிட்ட அனைவருக்குமே மாற்றுக்கருத்துகள் இல்லை.

வியாசரின் மகாபாரதம் முதல் காலந்தோறும் எத்தனையோ பேர் எழுதிய அனைத்து வகையான மகாபாரதங்களும் துரியோதனனைக் கீழ்மகனாகவும் எதிர்நிலைநாயகனாகவும் உருக்காட்டியபோது, எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் மட்டும் தன்னுடைய மகாபாரதத்தில் துரியோதனனை மிகுந்த உளவிரிவுகொண்ட நாயகனாகவே நம் முன் நிறுத்துகிறார்.

மிகுந்த நல்லவனாக இருக்கும் துரியோதனன், பாண்டவர்களுக்காக மும்முறை தூதுவந்த இளைய யாதவரை வெறுங்கையுடன்தான் திருப்பி அனுப்புகிறான். பாண்டவர்களை முற்றழிக்கவே துடிக்கிறான். துரியோதனன் ஏன், எதற்காக எதிர்நிலைநாயகனாக மாறினான்? என்பதற்குரிய விடையைத் துரியோதனனின் வாய்மொழியாகவே அளித்துள்ளார்.  துரியோதனன் தன்னுடைய நிலைப்பாட்டினைத் தன் தம்பி குண்டாசியிடம் மனந்திறந்து பகிர்ந்துகொள்கிறான்.

குண்டாசியின் தோளில் கைவைத்து மெல்லிய புன்னகையுடன் துரியோதனன் சொன்னான், “இளையோனே, இவையனைத்தையும் ஏன் இயற்றுகிறேன்? இறுதியில் என்ன எய்துவேன்? என்று எனக்கு இன்றும் தெரியவில்லை. பிறிதொன்றின் மேலேறிச் சென்றுகொண்டிருப்பவன் நான். பெரும்புயலுக்குத் தன்னைக் கொடுக்கையில் சருகு ஆற்றல் கொண்டதாகிறது. பிறிதொரு நிலையிலும் தான் கொள்ளமுடியாத விசையை எய்துகிறது. அழிவாக இருக்கலாம், ஆயினும் அது ஓர் உச்சநிலை. இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தன்னுள் ஆற்றலை உணருகையில் அந்த உச்சத்தையே கனவு காண்கிறார்கள். அஞ்சித் தயங்குபவர் உண்டு. தங்கள் சுற்றத்தையும் உறவையும் எண்ணி நின்றுவிடுபவர் உண்டு. அவையிரண்டையும் கடப்பவர்கள்கூட அறத்தை எண்ணி அதற்கப்பால் செல்வதில்லை. நான் என் உச்சம் நோக்கிச் செல்லவேண்டுமென்ற எண்ணம் மட்டும் கொண்டவன். அதன்பொருட்டு நான் கடந்த அனைத்து அறங்களையும் நான் நன்கு அறிவேன். ‘அறத்தை மீறாதவனுக்கு முழு விசை இல்லை’ என்பதொன்றே நான் சொல்ல எஞ்சுவது. ஆனால், நான் கடந்த அறங்களின் அனைத்து எல்லைகளிலும் எனது துளி ஒன்று நின்று ஏங்குகிறது. உனது சீற்றத்திலும் விகர்ணனின் துயரத்திலும் மட்டுமல்ல, சுபாகுவின் நிகர்நிலையிலும் என் மைந்தனின் விலக்கத்திலும் வெளிப்படுவதும் நானே என்றான் துரியோதனன். வீம்புடன் தலை தூக்கி, குண்டாசி சொன்னான், “அன்னை முன் நான் உரைத்த வஞ்சினம் ஒன்றுதான். ‘இப்போருடன் என் குடி முற்றழியுமென்றால், என் குருதிமேல் தெய்வங்கள் வீழ்த்திய பழி அனைத்தும் அழிந்து போகட்டும். நம் கொடிவழியில் எவரேனும் ஒருவர் எஞ்சுவாரென்றால்கூட அவர் தூயராக, நிறைவுற்றவராகப் புவி வாழ்த்துபவராக விண்ணேக வேண்டும். அதன் பொருட்டு களத்தில் என் தலைகொடுக்கிறேன் தேவி’ என்று சொன்னேன்.” புன்னகையுடன் அவன் தோளை அழுத்தி, துரியோதனன் சொன்னான், “அதை நானும் வேண்டினேன் என்று கொள்க!” என்று.

‘அறத்தை மீறாதவனுக்கு முழு விசை இல்லை’ என்பதே துரியோதனனின் தரப்பு நியாயமாக இருக்கிறது. அதனாலாலேயே, ‘அறத்துக்குக் கட்டுப்பட்டவனே முழு விசை கொண்டவன்’ என்பதே தருமர் தரப்பு நியாயமாகத் திகழ்கிறது என்று நாம் கருதலாம்.

தருமரின் அதீதஅறத்தை எப்போதும் எள்ளிநகையாடுபவராகவே பீமன் இருக்கிறார். துரியோதனனின் அறமீறல்களைச் சுட்டிக்காட்டி, இளிவரல் செய்பவனாகக் குண்டாசி இருக்கிறான்.

அறத்துக்கும் அறமீறலுக்குமான இழுவிசையே குருஷேத்திரத்தில் போர்வடிவில் நிலைகொள்கிறது. இரண்டுதரப்புகளும் தம்முள் முழுவிசை கொள்ளவே விழைகின்றன. இதையே ‘ஊழ்’ எனலாம். இதனை விளக்க, நாம் நகுலன்-சகதேவனுக்கு இடையில் நிகழும் ஓர் உரையாடலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“கைவிரல்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அளவிலும் இயல்பிலும் படைத்த தெய்வங்கள் அறிந்த ஒன்று நமது படைகளில் உறையக்கூடும்” என்றான் சகதேவன். நகுலன், “ஆனால் மானுடர் உருவாக்கும் கருவிகள் மானுடக் கைகளைவிட பலமடங்கு விசையும் ஆற்றலும் செயல்முழுமையும் கொண்டவை. அவற்றில் இந்த மாறுபட்ட இயல்புகளின் தொகுப்புத்தன்மை இல்லை” என்றான். “ஆம் மானுட உறுப்புகளைக்கொண்டு உருவாக்கும் கருவிகள் அவ்வுறுப்புகளை விடத் திறன்மிக்கவை, விசைகொண்டவை. ஆனால், முன்பு வகுக்கப்படாத ஒரு செயலைச் செய்கையில் கருவிகள் தோற்றுவிடுகின்றன. மானுடக் கைகள் தங்கள் வழியை முற்றிலும் புதிதெனச் சென்று கண்டுகொள்கின்றன. கணந்தோறும் மாற கைகளால் இயலும் கருவிகளுக்கு அத்திறன் இல்லை” என்று சகதேவன் சொன்னான்.

இந்த உரையாடலில் இடம்பெறும் ‘படைக்கருவி’ என்ற இடத்தில் நாம் மனிதரையும் ‘மானுட உடற்தன்மை’ என்ற இடத்தில் நாம் ஊழையும் பதிலீடுசெய்து வாசித்துப் பார்க்கலாம். ‘ஊழின் கையில் இருக்கும் படைக்கருவிதான் மானுடர்’ என்ற தெளிவு நமக்குக் கிடைக்கும். இந்தப் பெரும்போர் ஊழின் ஆடல் அல்லாமல் வேறு என்ன?

என்னைப் பொருத்தவரையில் இது ‘வெண்முரசு’ அல்ல; ‘ஜெயமோகனின் மகாபாரதம்’தான். இந்தத் தலைமுறையினருக்கும் இனிவரும் அதிநவீனத் தலைமுறையினருக்கு ‘மகாபாரதம்’ என்பது, ‘வெண்முரசு’ என்றே அமைவுகொள்ளட்டும். வாழ்வியலுக்குரிய அழியாப்பேரறம் இந்த வெண்முரசின் வழியாகவே இனி எக்காலத்துக்கும் ஒலிக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!

முனைவர் . சரவணன், மதுரை

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரை’சயன்டிஸ்ட்!’
அடுத்த கட்டுரைபாலையாகும் கடல் – கடிதம்