மதார்- தமிழ் விக்கி
சமகால தமிழ்க்கவிதைகள் மீதான விரிவான விவாதமாக அல்லாமல் இவ்வருட குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் மதார் அவர்களின் கவிதைகளின் மீதான விமர்சனம் மட்டுமாக குவித்து என் எண்ணங்களை தருகிறேன்.
எஸ்ரா பவுண்ட் முன்வைக்கும் ’படிமம்’ என்பது, ஒரு கருத்து அல்ல, அது ஒரு இயங்குதளம். அதாவது, ”அதிலிருந்து, அதன் வழியாக, தொடர்ந்து கருத்தாக்கங்கள் விரைந்து செல்லும் ஆற்றல் மிக்க எந்திரத்தைப்போல ஒளிகொண்டு திகழும் ஒரு ஆற்றல் மையம் (Vorticism, 1914)” என்பதை நினைவுறுத்துகிறது –
”உயரம் குறையக் குறைய
உயரம் கூடுவதைக் காணுகிறது
கிணறு”
என்ற கவிதை. யோசிக்குந்தோறும், பெயரிடப்படாத இக்கவிதையில் வரும் கிணறு என்ற படிமம் வேறு பலவாக மாறி மாறி, சகலத்தையும் மேலிருந்து கண்டு காத்து ரட்சிக்கும் மேசன் முத்திரையில் வரும் ஒற்றைக்கண்போல பிரம்மாண்ட வடிவெடுத்து விரிகிறது.
”ஒரு ரிலே ஓட்டப்பந்தய வீரர்களைப் போல
மூதாதையர்கள் தலைமுறைகளை உருவாக்குகிறார்கள்”
”குதிரை ஒன்று புல்லை மேய்வது போல
துர்ச்சொப்பனங்கள் மறைகின்றன”
என்பது போல பல அபாரமான புதிய படிமங்களை மதார் அறிமுகபடுத்துகிறார்.
”முகத்திற்குத்
தண்ணீர் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
மீண்டும் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்”
என்ற நுண்சித்தரிப்பில் அரூபமாக நிலைபெறும் வெயிலைப்போல,
”காஃபி ஆற்றும்போது
நறுமணக்கிறது
காற்று
வெயில் காலத்தை
ஆற்ற
ஒரு மாஸ்டர் தேவை”
என்ற வரிகளில் காற்றும், அதை ஆற்ற தேவைப்படும் மாஸ்டரும் உவமான உவமேயமாக வந்தாலும் எதை ஆற்றி எடுக்க வேண்டும், ஏன் எடுக்கவேண்டும் என்பவை சொல்லப்பாடாமல் உள்ளுறையாக நின்று கவிதையை வாசகனின் மனதில் நிகழச்செய்கின்றன.
”இடையனைத் தொலைத்த ஆடு
பாத வடிவில்
மேய்கிறது புல்லை
ஆட்டினை தொலைத்த இடையன்
தொடர்கிறான்
பாத வடிவ புல்லை”
என உவம உருபுகளின்(simile) பயன்பாட்டுக்கு தேவை ஏற்படுத்தாமல் உவமேயம் உவமானம் இரண்டுக்குமான எல்லைகளில் கோடழிந்து வேறுபாடுகள் தெரியாதபடி உருவகமாக மாறியும், அப்படி மாறிய உருவகத்தை மீறியும், தாண்டியும் சென்று கச்சிதமான ஒற்றை ஓவியமாக மாறியுள்ளதையும் பாராட்டியாக வேண்டும்.
படிமங்கள் என்பவை வரலாற்று கலாச்சாரங்களில் தங்கள் முறைமைகளை வழித்தடங்களையும் மாற்றிக்கொண்டு கிடைத்த இடங்களில் தற்காலிகமாக ஆக்கிரமித்து நின்று இளைப்பாறிச் செல்லும் நாடோடிகள்தான்.
என்றாலும் சில படிங்கள் அவற்றின் ஆகச்சிறந்த சாத்தியங்களை கண்டறிந்துகொண்டபின் அதே இடங்களில் என்றைன்றைக்குமாக உறைந்து நின்று விடும் சாத்தியமும் உண்டுதானே, என நான் நினைப்பதுண்டு. பின்வரும் கவிதையை படித்தபோது அந்த எண்ணத்தை மீட்டிக்கொண்டேன்.
”கட்டையாகவும் நெட்டையாகவும்
ஒரு திருமண பந்தல் ஜோடி”
”ஒரு உயரம் வானமாகவும்
இன்னொரு உயரம் பூமியாகவும் இருந்தது’
என்று வாசிக்கும்போது உயர வித்தியாசங்கள் கொண்ட ஜோடியையும், வானுக்கும் பூமிக்கும் உள்ள உறவையும் இதை விட சிறப்பாக சொல்லிவிட முடியாது என்பதைப்போல, வானும் பூமியும் என்றென்றைக்குமாக காலத்தின் முடிவிலியில் நிலைத்து நிற்கும் அழகிய ஓவியம் நம் நினைவில் விரிகிறது.
”எந்தக்காரணமும் இல்லாமல்
ஒரு தீக்குச்சியை கொளுத்து
அதன் பெயர்தான் ஒளி”
என ஒளியை உமிழும் ஒரே நோக்கத்திற்காக காலத்தின் சில துளிகளில் எரிந்து முற்றவிந்து இல்லாமலாகும் தீக்குச்சி, ஒரு காட்டையே எரித்து இரையாக்க முடிகிற வல்லமை கொண்டிருந்தும் அதன் சாத்தியத்தை இழந்து செயலின்றி அமைதி கொள்வதை,
”நமத்துப்போன தீக்குச்சி
ஒன்றுக்கும் உதவாது
எனச்சபித்து எறிகிறாய்
அது அமைதியாக விழுகிறது
என படிக்கும்போது உருவாகும் கவிதை ஒன்று என்றால்
அது அமைதியாக விழுகிறது
எரியாத காட்டின்
பறவைக்கூட்டிற்குக்கீழ்”
என முடியும்போது நமக்குள் உருவாகும் கவிதை வேறொரு விதமானது. அதன் இன்னொரு சாத்தியமான ”வெந்து தணிந்தது காடு” என்ற வரிதான் நமக்கு உடனே நினைவுக்கு வருவது. அது பறவையின் கூடு என்பதால் அமைதியாக விழுகிறதா? என்ற கேள்வியை வாசகனுக்குள் உருவாக்கி எழவைத்திருப்பதே இக்கவிதையின் வெற்றி. அப்படி ஒரு கேள்வியை எழுப்பி அதன் மூலம் கவிதையை வாசகனுக்குள் ’நிகழ’ வைப்பதன் சாத்தியத்தின் வழியாக தன்னை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மேற்சொன்ன இரண்டு கவிதைகளும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றின் மற்றொரு பக்கமாக உள்ளுறையாக நின்று ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அடைய முடிவதிலேயே ஆகச்சிறந்த சாத்தியத்தை கண்டறிந்து அதை ஆற்றி அடைவதுதான் செயல் தர்மம் என்பது போலவே, ஏதோ ஒரு காரணத்திற்காக செயலாற்றாமல் ஆகி அமைதியுள் ஆழ்ந்து அமைவதும்கூட ஒரு தர்மத்தின் பொருட்டே என்பதை நாம் உணரச்சாத்தியமாக்கி இருப்பது இக்கவிதையின் சாதனை.
***
சமகால நவீனக்கவிதையின் உள்ளடக்கத்தை, பாணியை ஒத்துவரும் எத்தனையோ பாடல்கள் நம் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் எட்டுத்தொகை நூல்களிலும் உள்ளன என்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. இலக்கிய மரபிலிருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு வானத்திலிருந்து குதித்தெழுந்ததே நவீனக்கவிதை என்று நாம் யாரும் நம்பவும் இல்லை. யாப்பின் இலக்கண வடிவத்தை மட்டும் விடுவித்து நீக்கி விட்டால் அவை உடனடியாக சமகால கவிதையாகிவிடும் என்பதை நினவுறுத்தும் பல செய்யுள்கள் நம்மில் உண்டு.
ஆங்கிலத்தின் அறிமுகமும் உலக நவீனக்கவிதையின் அறிமுகமும் தமிழ் மொழிக்கு வந்து சேர்ந்திருக்காவிட்டால் கூட, வெளி உலக தொடர்பே அற்றுப்போய்விட்டிருந்தால் கூட, நம் சங்கப்பாடல்களிலிருந்து தோன்றும் இழை ஒன்று வளர்ந்து பரிணாமடைந்து காலப்போக்கில் நேரடியாக முளைத்தெழுந்து வளர்ந்திருக்க சாத்தியமானதே இன்றைய நவீனக்கவிதை என்று பல சமயங்களில் எண்ணுவதுண்டு. சமீபத்தில் அப்படி எண்ணச்செய்தது மதாரின் இக்கவிதை:
”கடையைத் திறப்பதாகவும்
கடையை மூடுவதாகவும்
சொல்லிக்கொண்டு
ஊரையே திறக்கிறாள்
ஊரையே மூடுகிறாள்”
ஊரின் முகப்பாக அமைந்து ஊரையே அன்றாடமும் திறந்து மூடும் பூக்காரியின் கடையின் உள்ள பூக்கள், மற்றும் பூக்களிலிருந்து பரவும் நறுமணம் ஆகியவற்றை சொல்லாமல் தன் குறிப்பில் உள்ளடக்கி குறுந்தொகை அல்லது நற்றிணையின் ஒரு பாடல் போல அமைந்துள்ளது.
மதாரின் கவிதைகள் ஆன்மீக தேடல் கொண்டு நிறைகின்றன என்றாலும், உள்ளே தத்துவம் திணிக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளடக்கத்தின் பொருண்மை எடை கொண்டு கனத்து அழுத்தி, கவிதையின் முதுகை கூன வைப்பதில்லை. மாறாக எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் முதுகிலிருக்கும் பள்ளிப்பையின் சுமையை தூக்கி எறிந்து விட்டு,
”வாசல் தெளிக்கும் அந்த நொடியில்
வாளி வகுப்பறைக்குள்
இறுக்கமாக அமர்ந்திருந்தவை
இப்போது தனித்தனியாக
விளையாடச் செல்கின்றன”
என நீர்த்திவலைகளை கூட குழந்தைகளாக, தன் நண்பர்களாக பாவித்து அவைகளுடன் விளையாடச்செல்லும் குழந்தையின் குதூகலத்துடன்
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்த்துக்கொண்டோம்
“மரம்தானே நீங்க?”
என கேட்டும் குட்ட்டிப்பயலின் விளையாட்டுத்தனமான மனநிலையிலிருந்து எழும் கேள்விகளும் அதனால் அடையப்பெறும் தரிசனங்களினாலும் அமைகின்றன. மரத்தடியில் நிற்கும் அப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் குழந்தையுடன் அதுவரை பேசிக்கொண்டிருந்த சொற்களையெல்லாம் துறந்துவிட்டு சம்மணமிட்டு எதிரெதிரே அமர்ந்து பந்து பிடித்து விளையாடி பெற்றுக்கொள்ளும் சொற்களை கொண்டு உருவாகும் உலகில் அமைகின்றன. குழந்தைப்பருவம் தாண்டிய பிறகு உருவாகும் அங்கதமும் பகடியும் அற்றவை என்பதும் இன்னொரு காரணம்.
பைத்தியம் தெளிபவனின் மண்டையில் நிகழும் மாற்றங்கள் கூட பிச்சி கனகாம்பரமாகவும், பரோட்டா வாசனையாகவும், அழைக்கும் ஆட்டோக்காரர்கள், சினிமா போஸ்டர்கள், விரையும் வாகனங்கள், சாலையின் தரை, மழை, சிகரெட் புகை, சாரலுக்கு ஒதுங்கும் பெண்கள் என காட்சித்தெளிவு கொண்டு துலக்கம் கொள்கின்றன. அன்றாட வாழ்க்கையின் சுமை, வாழ்க்கையின் அழுத்தம், இருத்தலின் துயரம், இருத்தலின் பதற்றம் ஆகிய எதற்குள்ளும் இக்கவிதைகள் சிக்கிக்கொள்வதில்லை என்பது மட்டுமல்ல, எதைப்பற்றியுமான மெல்லிய துயரம் (melancholy) கூட இவற்றில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
***
”சன்னலை திறந்ததும்
ஒரு பெரிய ஆச்சரியம்
ஆகாசத்தின் கதவா, என் எளிய சன்னல்!”
என்பது போன்ற அழகிய படிமங்கள் கொண்ட கவிதைகள் உட்பட, தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் இலக்கை நோக்கி துல்லியமாக எய்யப்பட்ட அம்புகளின் நேர்த்தியுடன் அமைவதுடன், ஒவ்வொன்றும் தனக்கே உரிய திருத்தமான வடிவை அடைந்துள்ளதையும் காணமுடிகிறது.
”முகமறியா காற்றில்
என்ன அழகைக் கண்டு
இப்படி கொஞ்சி கொஞ்சி பறக்கிறது
வண்ணத்துப்பூச்சி”
என்பதைப்போல பல கவிதைகள் அன்றாட நேரடி அனுபவங்களிலிருந்து, அவ்வனுபவங்களை விளக்கும் எளிய சித்தரிப்பின் வழி கலையை நோக்கி செல்கின்றன. ”பஞ்சாரத்துள் அடைத்த படிமங்கள்” என்பது போல எப்போதும் விடாமல் கூவிக்கொண்டிருக்கும் ஆரவாரம் மிக்க படிமங்கள் அவர் கவிதைகளில் இல்லை என்பதைத்தான், மதார் (வலிந்து) படிமங்களை ”உருவாக்க” முயல்வதில்லை என்று முன்பு குறிப்பிட்டேன். இதை இக்கவிதைகளின் தனித்தன்மையாகவும் பலமாகவும் சொல்லவேண்டும்.
கவிஞன் உத்தேசிக்கும் இடம் பொருள் சார்ந்து உருவாகும் அகமொழி அல்லது மீமொழியில் (parole), மொழிக்கும் மீமொழிக்கும் இடையே விசேஷமாக உருவாகும் வெளியின் இடத்தில் கவிதை இயங்குகிறது. குறிப்புணர்த்த படிமங்கங்களும் தேவையாகின்றன. மொழியில் குறியீடுகள் படிமங்கள் ஆகியவற்றின் இடமும் தேவையும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆங்கிலம் தமிழ் என ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், கவிதையில் படிமத்தின் தேவையை சற்று மிகைப்படுத்தி புரிந்து கொண்டிருக்கிறோமோ, என்ற சந்தேகம் சில சமயங்களில் எழுவதுண்டு. கவிதையில், அப்படி படிமத்தின் அவசியத்தை மிகைப்படுத்திக்கொண்டுவிட்டதை டி.எஸ். எலியட்டின் நவீனக் கவிதை மீதான கருதுகோளின் முக்கியமான ஒரு குறைபாடகவும் கருதமுடியும் என நினைக்கிறேன்.
பெரும் காப்பியங்களும் நவீனக்கவிதைகளும் நேர் எதிரானவை என்பதால், கேன்டோஸ் (cantos) கவிதையை அதன் உள்ளடக்கத்திற்காக சாடும் ராபர்ட் பிளை, ”எஸ்ரா பவுண்ட் கவிதையை வெறும் ’அறிவின் தொகையாக’ பார்க்கிறார். கவிதையில் தன் எல்லா முக்கியமான எண்ணங்களையும் உரையாடல்களையும் செவ்வியல் துகள்களையும் கூடுமானவரை சேர்க்கிறார். ஒரு மனிதன் அந்த ஒரு புத்தகத்தை மட்டுமே வைத்திருந்தாலும் கூட அதிலிருந்து பொருளாதாரம், அரசு, கலாச்சாரம் ஆகியவை பற்றிய உண்மைகளையும் அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதைப்போல. கவிதையில், கவிஞனின் ஆழ்மனத்திற்கு பதிலாக உள்ளீட்டில் இப்போது பொருளாதாரம் இருக்கிறது என்பதால் கவிஞனின் ஆழ்மன போதத்தின் வெளிப்பாடாக அமையும் வாய்ப்பை கேன்டோஸ் இழந்து விடுகிறது”, என வாதிடுவதையும் நினைவு கொள்கிறேன்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவற்கு ஒரே வழி அதற்கு தொடர்புடைய ”புறவயமான” இன்னொரு ஒரு பொருளை (objective correlate or imagery), சூழலை அல்லது நிகழ்வுத்தொடர்களை கண்டறிவது மிகவும் அவசியமானது என டி.எஸ். எலியட் கருதுகிறார். கவிதையின் சாரம் என்பதே அப்படி கண்டறியப்பட்ட புறவயமான பொருளே, என அவர் வாதிடுவதையும் காணலாம். அப்படி ஒரு ”புறவயமான தொடர்புறுத்தலின்” தேவை என்பது, கவிதையை உள்நோக்கி அகவயமாக குவிப்பதற்கு பதிலாக அதை ஒரு அறிவியல் சமன்பாட்டைப் போல ஆக்கி புறவயமாக பொருள்களை அறிந்தறியும் செயலாக ஆக்கிவிடும் என்ற அபாயத்தை, பெருமளவுக்கு குறைத்து மதிப்பிட்டிருக்கிராறோ, என்ற எண்ணம் நமக்கு எழாமல் இல்லை. அப்படி திட்டமிட்டு உள்ளக்கிடக்கைகளுக்கு ஏற்ற புறவயமான தொடற்புறுத்தல்களை தேடிக்கொண்டிருப்பது கவிதையை முன்னோக்கிய செல்ல விடாமல் தடுத்து, அதை புறவயமான பெளதீக உலகை நோக்கி திருப்பிவிடுகிறது. மனதில் உருவாகும் மனஎழுச்சியின் உந்துதலை (impulse) அதன் வழியில் முன் செல்லாமல் தடுப்பதுடன் கவிதையை கவிஞனின் ஆழ்மனதிலிருந்து துண்டித்து, கவிதையின் தரிசனத்தை தட்டையாக்கி, அதை ஒரு ”கருத்து (idea)” என்பதாக பாவிக்க வேண்டிய நிலையை உருவாக்கி, இறுதியில் கவிஞனின் மனமே ஒரு அகவயமான பொருளாக சிறுத்து எஞ்சும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
ரிகார்டொ வுயங் (Ricardo Gullon) கூற்றுப்படி ’கவிதை என்பது உள்ளுணர்வை கடத்துவது’. என்று வைத்துக்கொண்டால், உள்ளுணர்வு என்பது கவிஞனின் ”தனிப்பட்ட அனுபத்தில்” ஆழ்மனதில் உறைந்திருப்பது – என்பதால், அதை வாசகனுக்கு அறியத்தர பெளதீக உலகின் புறவயமான பொருள்களின் பிணைப்பு அவசியமில்லை, என மாற்றுக் குரல்கள் எழுந்துள்ளன. அதைப்போல டி.எஸ். எலியட்டை மறுத்து, ஷ்பானிய விமர்சகரான கியோம் டெ தொர்ரே (Guillaume de Torre), மினஸோடாவின் கவிஞரான ராபர்ட் பிளை ஆகியோர் வாதிட்டுள்ளதையும் நினைவு கொள்கிறேன்.
கவிதையில், அதைப்போல புறவயமான தொடர்புறுத்தல்களின் இடம் பற்றியான மிகை மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்யலாம் என்பதற்கு சான்றாக மதாரின் கவிதைகள் அமைந்துள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக, பின்வரும் கவிதையை சொல்லாம் என நினைக்கிறேன்:
”பிரார்த்தனை ஏதுமற்றிருந்தேன்,
கைகளில் ஜில் காற்று
வீசிக் கொண்டே இருந்தது
கைகளை அப்படியே வைத்திருந்தேன்
பிரார்த்தனை செய்வதை விடவும்
அது நன்றாக இருந்தது”
என ஒரு எளிய இருப்பையே பிரார்த்தனையை மாற்றி,
“ஒரு அதிசய
காலை விழிப்பின் போது
நாம்
டெய்ரி காட்டுக்குள்
தொலைந்திருந்தோம்
ஒருவரை ஒருவர்
தேடிக் கொள்ளவில்லை”
என்பதைப்போல, கவிதையின் நுண்சித்தரிப்பில், அதன் தன்னியல்பான வெளிப்பாட்டில் உருவாகும் மொழியின் ஆரவாரமின்மையும், அதன் வழி உருவாகி நிலைபெறும் கலையமைதியையும் அடிக்கோடிட்டி, அவற்றை மதார் கவிதைகளின் முக்கியமான அம்சமாக இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன். இதை எழுதும்போது ”தத்துவ நூல்களில் நாம் தொடர்ந்து ஈடுபடுவது விடுதலை அனுபவத்தை பெறவே, எந்த தத்துவ நிலைப்பாட்டையும் நிறுவுவதற்காக அல்ல’ என்று எங்கோ எப்போதோ வாசித்த வரி நினைவுக்கு வருகிறது.
கவிதை அரசியலில் வலுவான ஆயுதமாக செயல்படக்கூடும். உரத்து பாடலைப்போல வாசிக்கப்படும்போது கேட்பவரின் நாடி நரம்புகளை முறுக்கேறச்செய்து ஆயுதம் ஏந்திச்சென்று போராடக்கூட தூண்டக்கூடும்தான். அரசியல் கவிதைகளை ’முக்கியமில்லாதவை’ என நான் கருதவில்லை.
ஆனால், இக்கவிதைகள் எதிலும் அரசியல் கருத்துகள் இல்லை என்பது தனிப்பட்ட முறையில் ஒரு வாசகனாக எனக்கு பெரும் மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இக்கவிதைகளின் புழங்கியுள்ள தொகுப்புத்தன்மையின் நேர்த்தியும், வடிவத்தின் மீதான கவனமும், மொழிப்பயிற்சியும் அபாரமானது.
கவிஞர் மதாருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
-வேணு தயாநிதி