வெண்முரசு ஆவணப்படம் – நியூ ஜெர்ஸி அனுபவம்

கடந்த மே 23, ஞாயிறு மாலை நியூ ஜெர்சியின் மான்வில் நகரில் வெண்முரசு ஆவணப்படம் திரையிடப்பட்டது. சென்ற வருடம் கோவிட் தொற்றின் தாக்கம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் கடுமையாக இருந்ததால் திரையரங்கு மற்றும் பொது இடங்களில் கூடுகைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன. சென்ற மே 19 லிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் திரையிடலாம் என்று முடிவு செய்தோம்.

திட்டமிடல், ஒருங்கிணைப்பு என பத்து நாட்களுக்கு முன்பே பணிகளைத் தொடங்கி விட்டாலும் படத்தொகுப்பின் கோப்புகளை இயங்கச் செய்வதில் சிக்கல்கள் வந்தவண்ணமிருந்தன. இந்த கோப்புகள் DCP (Digital Cinema Package) எனும் திரையரங்குகளில் இயக்கப்படுவதற்கான சிறப்பு வடிவத்தில் இருந்ததால் ஒவ்வொரு முறையும் திரையரங்கிலேயே சோதனை செய்ய வேண்டியிருந்தது. ராஜனும், ஆஸ்டின் செளந்தரும் ஊக்கமும், ஒத்துழைப்பும் கூடவே புதிய கோப்புகளையும் தந்தவண்ணமிருந்தார்கள்.

திரையிடல் அன்று நிறைய நண்பர்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அஞ்சனாவும் அவள் தோழிகளை அழைத்திருந்தாள். பெரும்பாலும் பதின்பருவப் பெண் குழந்தைகள். பெண்களும் ஆண்களும் சம அளவில் இருந்தார்கள். வெண்முரசை அது எழுதப்பட்ட போதே தொடர்ந்து வாசித்து முடித்த, உங்களை தினமும் வாசிக்கும் நண்பர்கள், அறம், புறப்பாடு மற்றும் சிறுகதை, கட்டுரைகள் வழியாக உங்கள் படைப்புகளைத் தொடரும் நண்பர்கள், வாசிக்க ஆர்வமும் எங்கு தொடங்குவது என்ற தயக்கமும் கொண்ட நண்பர்கள் என கலவையான பார்வையாளர்கள்.

மற்ற அமெரிக்க நகரங்களிலுள்ள நண்பர்கள் அவரவர் நகரங்களில் திரையிடும் முயற்சியில் இருப்பதாலும், பிற நாடுகளில் உள்ள வாசகர்களுக்கு இன்னும் காணும் வாய்ப்பு இல்லையென்பதாலும் இந்த ஆவணப் படத்தின் உள்ளடக்கத்தை விரிவாகச் சொல்லாமல், பார்க்கும் போதும், பார்த்த பின்பும் கண்ட, கேட்ட அனுபவங்களை மட்டும் பகிரலாமென்று நினைக்கிறேன்.

சரியாக மதியம் மூன்று மணிக்கு எல்லோரும் அரங்கில் அமர, மறைந்த முதுபெரும் எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் குறித்த ஒரு சிறு அறிமுகத்தையும் தமிழுக்கு அவரின் பங்களிப்பையும்  ஒரு சில வரிகளில் சொன்ன பிறகு ஒரு நிமிட மெளன அஞ்சலியோடு துவங்கினோம். அரங்கின் அரையிருளில், ஓசையடங்கி அனைவரும் எழுந்து நிற்க, வையத்துள் வாழ்வாங்கு பொருள் பொதிய வாழ்ந்தபின் வானுறைந்திருக்கிறார் என்று சொல்லும் போது நெகிழ்ச்சியில் கண்கள் நிறைந்தன.

தொடர்ந்து வெண்முரசைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தையும் இந்த ஆவணப்படத்தைப் பற்றிய சில சொற்களையும் பகிர்ந்த பின் திரையிடல் தொடங்கியது. திரை ஒளிரத்தொடங்கிவுடன் பின்னணியில் மெல்ல எழுந்து வந்த சேகண்டி போன்ற உலோக வாத்தியத்தின் ஓசை வளர்ந்து வளர்ந்து ’வெண்முரசு’ என்ற முப்பரிமாண எழுத்துக்கள் அறுபதடி நீளத் திரையை நிறைத்து பிரம்மாண்டமான சிம்ஃபொனி இசையில் நிலைகொள்ளும் போது அடுத்த ஒன்றரை மணி நேர பிரம்மாண்டமான பேசுபொருளின் முன்னறிவிப்பு போல் இருந்தது.

வெண்முரசு வரிசை நூல்களின் முகப்பு ஓவியங்கள் திரையின் எல்லாத் திசைகளிலுமிருந்து பெருகி மையத்தில் குவிந்து பின் விரிந்து திரை நிறைத்து நகர்ந்தன. வாசிக்கப்பட்ட போது நம் மனதோடு மட்டும் உரையாடிய ஒன்று பேருரு எடுத்து திரையளந்து நிற்பதாய் தோன்றியது.

நான் திரையையும் பார்வையாளர்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.  அனைவரின் கண்களும் திரையில் பதிந்திருந்தன. அகத்தில் ஏன் அந்த சிறு பதட்டம் என்று தெரியவில்லை. வெண்முரசின் ஆழத்தையும் அகலத்தையும் இந்தப் படம் சரியாகக் கடத்த வேண்டுமே என்ற படபடப்பால் இருக்கலாம். ஆனால் தேர்ந்த ஓவியனின் தூரிகையில் மெல்ல உயிர் பெற்று எழும் ஓவியம் போல் திரையில் படம் தனக்கான வடிவத்த அடைந்தவண்ணம் இருந்தது.

ஓடுபாதையில் ஓடிய விமானம் சட்டென வானிலெழும் கணமென பறக்கத் தொடங்கியது இருபத்து நான்காவது நிமிடத்தில். நீங்கள் கிருஷ்ணனை அறிந்து கொள்ள சரியான வழி அவனால் சூழப்படுவதுதான் என்று சொல்லி முடிக்க, விண்ணிலிருந்து எழும் குரலாய் வேய்ங்குழலின் பின்னணியோடு துவங்கி சிதார், சாரங்கி, சிம்ஃபொனி என அடுக்கடுக்காய் சூழ அரங்கையும், அமர்ந்திருப்போரையும் பிரிதொன்றில்லை என நிறைத்த இசையும், அந்த இசையில் தோய்ந்த நீலத்தின் கவித்துவமான வரிகளும்தான்.

நீலத்தில் வரும் அன்னை நீர்க்காகமொன்று ‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்று குஞ்சுகளைத் தன் நெஞ்சு மயிர்ப்பிசிறில் பொத்தியணைக்கும். இந்த மொழிக்குள் உறையும் இசையை ஒரு தேர்ந்த சிற்பியின் லாவகத்தோடு சிலையென எழுப்பியிருக்கிறார் நண்பர் ராஜன் சோமசுந்தரம். அவர் எழுப்பிய சிலைக்கு தங்கள் குரலால், வாசிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்கள் கமல், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி, ரிஷப் ஷர்மா, பரத்வாஜ் போன்ற சிறந்த கலைஞர்கள்.

இசையைத் தன்னுள் தேக்கிய செறிவான வரிகள், பாடியவர்களின் இனிமையான குரல், செவ்வியல் ராகத்தின் இனிமை, சிம்ஃபொனியின் பிரம்மாண்டம், ஒலிக் கோர்ப்பின் நுட்பம், அதற்கேற்ற படங்கள், காட்சியமைப்பு என உலத்தரம் வாய்ந்த ஒரு இசை ஆல்பத்தைப் பார்த்த உணர்வு எழுந்தது. பாடல் முடிந்தவுடன் தன்னிச்சையாக அரங்கில் கரவொலி எழுந்தது. எல்லோர் முகமும் இளவெம்மையில் இளகிய மெழுகாய் நெகிழ்ந்திருந்தது. பின்னர் ஒருமுறை கூட காட்சி முடியும் வரை எவர் முகத்தையும் நோக்கவில்லை.

என் சிறு வயதில் எங்கள் தெருவில் மார்கழி மாதத்தில் தெருவை நிறைத்துக் கோலமிடுவார்கள். முதலில் வெண்புள்ளிகள் எங்கும் சிதறிக் கிடப்பது போல் தோன்றும்.  நெளியும் கோடுகள் மெல்ல ஒவ்வொரு புள்ளியையும் இணைக்கத் தோடங்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம் கண் முன் ஒத்திசைவும் பிரமிக்க வைக்கும் சிக்கலும் கொண்ட அழகிய கோலம் மையத்தில் பூசணிப் பூவுடன் சேர்ந்து மலர்ந்திருக்கும். எழுத்தாளர்களும், கலைஞர்களும், வாசகர்களும் பேசிய எண்ணத் துணுக்குகள் மெல்ல ஒரு அழகிய ஓவியமாக உருமாறிக் கொண்டிருந்தது.

இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்ட தந்தி இசைக் கருவி போல் தொய்வற்ற கச்சிதமான காட்சி தொகுப்பு. பல மணி நேரங்களுக்கு மேல் ஓடும், வெண்முரசின் வெவ்வேறு தளங்களைப் பேசும் காட்சித் துணுக்குகளைக் கடைந்து 90 நிமிடங்களுகுள் சுருக்குவதென்பது கங்கையைச் சிமிழில் அடைப்பது போல்தான். பிரமிப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவும் அருமை, குறிப்பாக பாடலினூடே வரும் அந்த ட்ரொன் காட்சிகள். கடைசி ஆறு நிமிடங்கள் வெண்முரசின் தீம் இசை ஷண்முகவேலின் படங்களின் பின்னணியில் ஓடியது.

திரையில் நாகங்கள் பேருருக் கொள்ள, வானுயர்ந்த பெருவாயில்கள் கொடியசைத்துத் திறந்திருக்க, ஒளி கொண்ட வானும் அதன் கீழ் விண்முட்டும் மாளிகைகளும் கண்களை நிறைக்க முரசமும், யாழும், கொம்பும், குழலும் சிம்ஃபொன்பொனி வடிவில் அரங்கைச் சூழ வாசக மனங்களில் கற்பனையின் சாத்தியதால் விரிந்தெழுந்த பெரும் படைப்பு, தனக்கான ஒளியையும் உருவையும் கண்டுகொண்டு கூத்தாடியது போலிருந்தது. இசை முடிந்து திரையணையும் பொது ஒரு நீள் கனவிலிருந்து மீண்ட உணர்வு. சில நொடிகளுக்குப் பின்னரே இருப்பு உறைக்க, ஏதோவொரு மூலையில் எவரோ ஒருவர் கையொலி எழுப்ப பற்றிய தழலாய் அரங்கம் கரவொலி எழுப்பியது.

காட்சி முடிந்த பிறகு ஒருவரும் அரங்கை விட்டு அகலவில்லை. தனித்தனியாகவும், சிறு குழுக்களாகவும் தாமாக வந்து பேசிய வண்ணமிருந்தார்கள். கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. வெண்முரசு வாசகர்கள் வழிகாட்டும் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள். புதியவர்களின் கேள்விகள் பெரும்பாலும் வாசிப்பின் ஆரம்ப நிலை சிக்கல்களைச் சுற்றி இருந்தது. புத்தகமாக எங்கு வாங்குவது? கிண்டியில் கிடைக்குமா? ஒலிப்புத்தக வடிவில் கிடைக்குமா? என்று பல கேள்விகள்.

பெண்களில் சிலர் தயங்கி நின்று, சற்று தனிமை கிடைத்ததும் ‘எனக்கு வாசிப்புப் பழக்கமில்லை. வெண்முரசை வாசிக்க வேண்டுமென்று ஆவலாயிருக்கிறது. காலம் கடந்துவிட்டதா?என்னால் இயலுமா?’ என்று கேட்டார்கள். ஆரம்ப நிலை வாசகர்கள் எனும் நிலையிலிருந்து வெண்முரசை வந்தடைந்தவர்களின் அனுபவங்களைச் சொன்னோம். அடுத்த சில நாட்கள் பலர் தோலைபேசி, வாட்ஸ்ஆப் வழியாகத் தொடர்பு கொண்டார்கள். சிலர் உடனேயே வாசிக்கவும் ஆரம்பித்தார்கள். சிலர் ஒலி வடிவில் கேட்க ஆரம்பித்தார்கள். எல்லோரின் குரலிலும், எதிர்பாராமல் தரப்பட்ட பரிசைப் பிரிக்கும் குழந்தையின் மலர்ச்சி தெரிந்தது. ஓரிரு நாட்களிலேயே பலரும் ஏழெட்டு அத்தியாயங்களைத் தாண்டி விட்டிருந்தார்கள்.

இவையனைத்தையும் விட இந்தத் திரையிடலின் உச்ச பயன் மதிப்பாக நான் நினைப்பது பதின்பருவக் குழந்தைகள் ஆற்றிய எதிர்வினையும் எழுப்பிய கேள்விகளும்தான். பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் மாணவிகள். இந்த வயதுப் பெண்குழந்தைகளுக்கே உரிய கள்ளமின்மையும் கலகலப்பும் கொண்டவர்கள். இருவர் இணைந்திருந்தாலே அந்தச் சூழல் வாய் மூடாப் பேச்சும் வெடிச் சிரிப்புமாய் இருக்கும். கிட்டத்தட்டப் பத்துப் பேருக்கும் மேல் இருந்தார்கள். தமிழ் புரியும், ஆங்கிலத்தில் உரையாடும் குழந்தைகள். இது ஆவணப் படம் வேறு. அரங்கில் இருள் சூழ்ந்ததும் பேச்சும் சிரிப்பும் எழ ஆரம்பிக்குமோ என்ற சிறு நடுக்கமிருந்தது. ஒரே நம்பிக்கை, இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வியிலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பு உள்ளவர்கள்.

முதல் கேள்வியே இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டா என்பதுதான். இல்லை என்றதும் முகம் வாட, யாரவது மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா என்றார்கள். நான் வெண்முரசின் மொழிபெயர்ப்புக்கு முன்னுள்ள சவால்களைச் சொன்னேன். வெண்முரசின் பண்பாட்டு பின்புலம் செறிந்த கவித்துவமான அக மொழியை மொழிபெயர்ப்பதின் சிக்கல்களைச் சொன்னேன். புரிந்து கொண்டார்கள். அப்படியானால் வெண்முரசைப் படிக்கத் தமிழைப் பயில்வதுதான் ஒரே வழி என்று அவர்களே சொல்லிக் கொண்டார்கள்.

வெண்முரசைப் பற்றி வாசகர்களும் பிறரும் சொன்ன கருத்துக்களே ஒரு Fan Fiction போலிருந்ததாகக் கூறினார்கள். படைப்பு முழுவதையும் இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம்  என்பதை வியப்புடன் கேட்டுக்கொண்டார்கள். இதை எழுதிய உங்களின், இதைத் தங்களுக்குக்  கிடைத்த கொடையாகக்  கொண்டாடி மகிழும் வாசகர்களின் பேச்சில் இருந்த தீவிரம் தங்களைக் கவர்ந்ததாகச் சொன்னார்கள். பின் தங்களுக்குள் அவர்களுக்குப் பிடித்த மகாபாரதக் கதைமாந்தர்களைப் பற்றி பேசிக் கொண்டார்கள். நான் குறைத்து மதிப்பிட்டது மகாபாரத்திற்கு நம் சமூக ஆழ்மனத்தில் இருக்கும் இடத்தை. இலக்கிய வாசிப்பில்லாத  நண்பர்களுக்கும் மகாபாரதம் ஏதோவொரு வகையில் அறிமுகமாகி இருக்கிறது. ஏதோவொரு பாத்திரம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கும் சிறிய அளவிலாவது சொல்லியிருக்கிறார்கள்.

இங்குள்ள குழந்தைகளிடம் அர்ஜுனனும், கர்ணனும், பீமனும் மார்வெல், அவெஞ்சர்ஸ் படக்கதைகளின் சாகச நாயகர்களின் இணைக் கதாநாயகர்களாக வலம் வருவது போல் தோன்றியது. ஹாரிபாட்டர், பெர்சி ஜாக்ஸன் போன்ற சாகச, கற்பனாவாதப் புதினங்களின் மேலுள்ள பெரும் ஈர்ப்பை மகாபாரதக் கதைகளுக்கும் எளிதாக நீட்டிக் கொள்வதைத் அவர்களுடனான இந்த உரையாடலின் போது உணர முடிந்தது. மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன். நீங்கள் ஏன் எத்தனை முறை என்றாலும் இளையோரின் கேள்விகளை சலிக்காமல் எதிர்கொண்டு பொறுமையாக பதிலளிக்கின்றீர்கள் என்றும், புதியவர்களைச் சந்திப்பதில் பேருவகை அடைகிறீர்கள் என்றும் புரிகிறது.

மொத்தத்தில் வெண்முரசு என்ற படைப்பை கருவியாக வைத்து வாசிப்பின்பத்தை குறிப்பாக இலக்கிய வாசிப்பை கொண்டாடியிருக்கும் ஆவணப்படம் இது. வெண்முரசின் வாசகர்களுக்கு இது ஒரு பெரு விழவு. அவர்கள் ஒவ்வொரும் இந்தப் பெரும் படைப்பின் வழி கண்டடைந்த தங்களுக்கான வாசல்களை மற்ற வாசகர்களுக்கும் திறந்து வைக்கும் ஒரு முக்கிய ஆவணம். வாசிப்பின்பத்தை நுகராத புதியவர்களுக்கு வாசிப்பின் சுவையை அறிமுகப் படுத்தும் ஒரு முக்கியக் காட்சிப் பதிவு.

இளையோரும், புதியவர்களும் ஆர்வத்துடன் இதைப் பற்றி எழுப்பும் வினாக்களை எதிர்கொள்ளும் போது  நெடுந்தூரம் பயணித்த நம் மரபின் விதைகள் முற்றிலும் புதிய நிலத்தில், பண்பாட்டுப் பின்புலத்தில் முளைவிட்டு எழுவதாகத் தோன்றியது. இந்தக் களிப்பும் பெருந்தொற்றுதான். ராலே, ஆஸ்டின், நியூ ஜெர்சியைத் தொடர்ந்து மேலும் சில நகரங்களில் திரையிட அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த வாசக நண்பர்கள் உற்சாகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் சடங்கு ஒன்றுண்டு. இன்றும் கிரேக்க நாட்டின் தொல் நகரம் ஒலிம்பியாவில் வரலாற்றுக் கால உடையணிந்த மனிதர்கள் சூழ சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் குழியாடியிலிருந்து முதல் ஜோதி பற்றவைக்கப்படும். அந்த எரிதழலிருந்து அடுத்தவர் தன் பந்தத்தைப் பற்றவைத்துக் கொள்வார். ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் என்று ஒவ்வொரு நகராகத் தொடர்ந்து இறுதியில் ஒலிம்பிக் நிகழும் நகரை வந்தடையும். வியாசன் எனும் சூரியனில் இருந்து நீங்கள் கைதொட்டு எரியூட்டிய நெருப்பை ஒவ்வொரு வாசகரிடமும் கொடுத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஊராகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் கைகளில் இருப்பது எங்களுக்கான தழல் என்றாலும் இது சூல் கொண்டது சூரியனிலிருந்து.

இந்த ஆவணப் படத்தை சாத்தியப் படுத்திய ராஜன் சோமசுந்தரம், மூத்தவர் ஆஸ்டின் சௌந்தர், இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பெருஞ்செயலென்னும் பேரலையில் ஒரு துமியாக இருந்ததின் நிறைவின் இனிய களைப்புடன் வீடு திரும்பினோம்.

பழனி ஜோதி

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்
அடுத்த கட்டுரைபாலையாகும் கடல், கடிதம்- பாலா