கடிதங்கள்

கேரளமும் பக்தி இயக்கமும்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமாயிருக்கிறீர்களா ?

‘கேரளத்தில் பக்தி இயக்கம்’ பற்றிய தங்கள் கட்டுரையில் நாராயணபட்டத்ரி பற்றியும், அவர் இயற்றிய நாராயணீயம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. கே.எம். ஜார்ஜ் எழுதிய நூலில் அது பற்றி இல்லை என்பதாலா? வைஷ்ணவ சம்பிரதாயத்தையும், அதன் அங்கமான பக்தி இயக்கத்தையும் மிகப்பெரிய அளவில் கேரளத்தில் வேறூன்றச் செய்தது பட்டத்ரியின் நாராயணீயம் அன்றோ? அல்லது, பட்டத்த்ரியின் கால நிர்ணயம் சரிவர இல்லை என்பதால் அதைக் குறிப்பிடவில்லையா?

நன்றி.

ஆமருவி தேவநாதன்

www.amaruvi.in

அன்புள்ள ஆமருவி தேவநாதன்,

நாராயணீயம் முக்கியமான படைப்பு. ஆனால் அது சம்ஸ்கிருத இலக்கியம். அக்கட்டுரையில் நான் மலையாள இலக்கியங்களைப் பற்றியே பேசுகிறேன். இந்தியா முழுக்க சம்ஸ்கிருத இலக்கியம் உள்ளூர் இலக்கிய இயக்கங்களுடன் சம்பந்தப்படாத தனித்த இயக்கமாகவே இருந்துள்ளது.

மேல்பத்தூரை கேரள இலக்கிய மரபுடன் இணைக்கமுடியாது. அப்பைய தீட்சிதர் போன்ற அவருடைய சமகால சம்ஸ்கிருத கவிஞர்களுடன் இணைத்து இன்னொரு இலக்கியமரபைச் சேர்ந்தவராகவே கருதவேண்டும்

ஜெ

சூமுலகம்

அன்புள்ள ஜெ

உங்கள் ஸூம் உரையாடல் பற்றிய கட்டுரையில் அணிந்திருந்த டிஷர்ட்டுகள் நன்றாக இருந்தன. ஊரடங்குக் காலகட்டத்தில் பொதுவாக தலைசீவாமல், சவரம் செய்யாமல் இருக்கும் முகங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் உங்கள் தோற்றம் உற்சாகமளித்தது.

எம். கணேஷ்

அன்புள்ள கணேஷ்,

நான் அதை அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கூடுமானவரை ஊரடங்குக் காலத்தில் நன்றாகச் சவரம் செய்து, தலைசீவிக்கொண்டு புத்துணர்வுடன் இருக்கும்படி. அது நமக்கே உற்சாகத்தை அளிப்பது.

அதோடு நாள்தோறும் நான்குபேருடன் உரையாடுகிறேன். அவர்களுக்கு நான் காட்டவேண்டிய முகமும் அதுவே. அது பொதுமுகம். அத்துடன் என்னைப் பொறுத்தவரை சோர்வான சலிப்பான மனநிலை என்பது பொதுவாகவே கிடையாது. உற்சாகமில்லாத நாளும் இருக்காது. சில தருணங்கள் இருக்கலாம், அதை மிக நெருக்கமானவர்கள் அன்றிப் பிறர் அறியமுடியாது.

அந்தச் சட்டைகள் என் திருப்பூர் நண்பர் அழகுவேல் அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பியவை. அவர் அடிக்கடி அப்படி டீஷர்ட்டுகள் அளிப்பதுண்டு.

என்னுடைய எல்லா ஆடைகளும் அன்பளிப்பே. சொந்தமாக உடைகள் எடுத்து நெடுநாட்களாகிறது. ஆகவே என் நண்பர்களுக்கு தோன்றும் கோலத்தில் நான் தோற்றமளிக்கிறேன்.

நண்பர் கேலிசெய்ததுபோல கோயில்சிலைபோல் ஆகிவிட்டேன். பிடித்தமானதை கொண்டுவந்து அணிவித்துப் பார்க்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைமதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்
அடுத்த கட்டுரைகடவுளை நேரில் காணுதல்