மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்

மதார்- தமிழ் விக்கி

ஜெயமோகன் அவர்களுக்கு,

மதாரின் கவிதைகள் பற்றி என் தளத்தில் எழுதிய குறிப்பு:

மதாரின் கவிதைகளில், எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது அவற்றில் இருக்கும் கற்பனை வளம். பல விதங்களில் விரியும் அவரின் கற்பனையின் வீச்சே, இப்புத்தகத்தை விருதுக்கு தகுதியாக்கியிருக்கிறது.

அவர் கவிதைகளில், பந்து சிரிக்கிறது; டெய்ரி மில்க் விதைகள் முளைத்து மரமாகி, காடாகின்றன; கிணறு தன் கப்பியில் நீர் அருந்துகிறது; வெயில் பறக்கிறது குக்கூ என்று கூவியபடி; ஆடு புல்லை பாத வடிவில் மேய்கிறது; கவிஞன் திகிலுடன் வெயில் கழுவி முகம் தேடுகிறான்; கதவும் கவிஞனும் தத்தமது இளம் பருவத்தை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள்; அதிலும் கதவு தன்னை மூத்தவன் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறது; ராட்டினம் ஏறும் செருப்பு வியக்கிறது;சொல்லை கவிஞன் குழந்தையோடு பந்து விளையாட்டாய் விளையாடுகிறான்; ஒருக்களித்துத் துயிலும் நாய், பூமியின் இதய ஓசையையும் குழந்தையின் காலடி ஓசையையுமே சட்டை செய்கிறது; தனித்தனியாக மழை விளையாட்டு விளையாடச் செல்கின்றன வாளி என்னும் வகுப்பறைக்குள் இறுகி அமர்ந்திருந்த தண்ணீர் துளிகள்; டைரி எழுதும் பெண்ணிடம் அறைச்சுவர்கள் நெருங்கி வந்து அமர்ந்து கொள்கின்றன; வெயில் பறந்து பறந்து குளிக்க நீர் தேடுகிறது; முகத்தில் வந்தறைந்த நீரினால் வெயில் தும்மி விடுகிறது; ஆகாசத்தின் கதவாகிறது கவிஞனின் சன்னல்;

மிகவும் புதியதான இக்கற்பனைகள் நம் மனதிற்கு மிக நெருக்கமானவையாகி விடுகின்றன. அவற்றின் புதுமையாலேயே நம் மனதில் நெடுங்காலம் நீடிக்க வல்லவையாகி விடுகின்றன்.

மதாரின் கவிதைகளில் உள்ள கள்ளமின்மை பற்றி பெரும்பாலான வாசகர்கள் வியக்கிறார்கள். இளம் வயதிலிருப்பவரான கவிஞர் காதல் கவிதைகளாக அடுக்காமல், தத்தி தத்திப் பேசும் குழந்தையோடு பந்து விளையாடுபவராக இருக்கிறார்; தோளில் ஒரு சிறியவளைத் தூக்கிக் கொண்டு கதை சொல்பவராக இருக்கிறார்; ஒரு சிறுமி கண்ணாடி முன் நின்று சேலை கட்டிப் பார்ப்பதை கவிதையாக்குகிறார்; மெழுகுவர்த்தி முன் அமர்ந்திருக்கும் பெண்ணின் தனிமையை எழுதுகிறார்; சொந்த ஊர் திரும்பியவனின் ரசனைப் பட்டியலில் நதிக்கு ஓடும் பிச்சியும் இருக்கிறாள்; இந்த கள்ளமற்ற நோக்கே வாசகர்களின் மனதை மலரச் செய்கிறது.

எந்தக் காரணமும் இல்லாமல் கொளுத்தப்பட்ட தீக்குச்சியின் ஒளி தான் மதாரின் கவிதைகள். அவருக்கு வாழ்த்துகள்.

அன்புடன்

கல்பனா ஜெயகாந்த்

முந்தைய கட்டுரைபாலையாகும் கடல், கடிதம்- பாலா
அடுத்த கட்டுரைகடிதங்கள்