குமரகுருபரன் விஷ்ணுபுரம் – விருதளிப்பு நிகழ்வு

குமரகுருபரன்

குமரகுருபரன் விருது

அன்புள்ள ஜெ,

இன்று காலை (09/06/2021) எழுத்தாளர் தேவிபாரதியின் இல்லத்தில் வைத்து மதாருக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது. ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், சிவா, சந்திரசேகர், பிரபுவுடன் நானும் ஒரு வாகனத்தில் கிளம்பினோம். திருப்பூரிலிருந்து ராஜமாணிக்கம், செந்தில், அந்தியூர் மணி, பாரி ஆகியோர் வந்திருந்தனர். ஈஸ்வர மூர்த்தி தனியாக பைக்கில் வந்தார். (அனைத்து வாகனங்களும் தனித்தனியாக ஈபாஸ் எடுத்திருந்தோம்).

தேவிபாரதியின் வீடு திருப்பூர் மாவட்டம் புது வெங்கரையாம் பாளையம் (நத்தகடையூர்) என்ற ஊரில் இருந்தது. ஈரோடு திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்த அழகிய ஊர். ஊரை நெருங்கியதில் இருந்து கிருஷ்ணன் முன்பு வந்த பயணத்தில் இவ்வழியை தவறவிட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார். கொரோனாகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழக்கம் போல் வழியை தவறவிடுதல் என ஒவ்வொன்றாக நிகழ்ந்தது. வண்டியை ஆற்றுக்கு அப்பால் ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு, நொய்யல் ஆற்றைக் கடந்து தேவிபாரதியின் வீட்டிற்கு செல்லும் படியாகியது.

ஈஸ்வர மூர்த்தியின் சொந்த ஊர் என்பதால் அவர் வந்ததும் வீடு கண்டுபிடிக்கும் படலம் எளிதானது. விழாவிற்கு அவர் தன் தங்கை, தங்கையின் குழந்தைகளுடன் வந்திருந்தார். பின்னாலேயே ராஜமாணிக்கத்தின் காரும் வந்து விட்டது. ஆக எல்லோரும் திட்டமிட்டது போல் தேவிபாரதியின் வீட்டிற்குக் காலை 10:30 சென்று சேர்ந்தோம்.

முகமது மதார் முன்னரே வந்து, தேவிபாரதியுடன் அவரது நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். தேவிபாரதியின் நண்பர் குற்றாலம் தர்மராஜனும் உடன் இருந்தார். அவர் குற்றாலம் பட்டறையில் உங்களுடனான நினைவுகளை மீட்டி எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். எல்லோரும் ஒன்று சேர, தேவிபாரதியின் வீட்டில் விருது விழா மனநிலை உருவாகியது. இத்தனை பேர் வருவோம் என தேவிபாரதி எதிர்பார்க்கவில்லை. இத்தனை முகங்களைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தார்.

முதலில் மதாருக்கு சால்வையை அணிவித்து விருதையும் தேவிபாரதி வழங்கினார். அதன்பின் தேவிபாரதி மதாரின் கவிதைகள் தனக்கு அறிமுகமானது குறித்தும், பாளையங்கோட்டையுடனான தன் நெருக்கத்தைப் பற்றியும், அங்கிருந்து வந்த கவிஞர் என்பதால் மதார் தனக்கு எத்தனை நெருக்கமாகிறார் என்பதைப் பற்றியும் கூறினார். மதாரின் வாசிப்பார்வத்தை பற்றியும், முதல் தொகுப்பான வெயில் பறந்தது தொகுப்பில் அவரது கவிதைகள் அடைந்த வெற்றி குறித்தும் சிறிய உரை ஆற்றினார்.

கிருஷ்ணன் நாளை சூம் சந்திப்பில் பேசப்போகும் உரையின் முன்வரைவாக சின்ன விவாதத்தை முன்னெடுத்தார். மதாரின் தத்துவ இலக்கற்ற ஆன்ம தேடல் கவிதையை எங்குத் தொடுகிறது என்பதைப் பற்றிப் பேசினார்.

இடையனைத் தொலைத்த ஆடு

பாத வடிவில்

மேய்கிறது புல்லை

****

பாத வடிவம் முடியும் இடத்தில்

காண்கிறான்

பாத வடிவில் புல்லை

மேயும் ஆட்டை

தேவதச்சன் சென்று தொடும் ஒத்திசைவு மதாரின் கவிதைகளில் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றிப் பேசினார்.

சந்திரசேகர் மதார் கவிதையில் ஏற்படுத்திய விளையாட்டுத் தனங்களை ஒட்டி பேசினார். ராஜமாணிக்கம் தன்னறம் குழுவோடு மதார் கவிதைகளை ஒப்பிட்டுக் கொண்டு அடைந்த வாசிப்பனுபவத்தை முன்வைத்தார்.

ராட்டினம் ஏறும்போது

செருப்பு வியக்கிறது

பறவைகள் காலணி அணியும்

நாள் வந்துவிட்டது

இறங்கும்போது நினைக்கிறது

சோம்பேறிப் பறவை

இடை விடாத சுற்றுகளில்

முடிவு செய்கிறது

கிறுக்குப் பறவை

குற்றாலம் தர்மராஜன் பேசும் போது மதார் கவிதைகளில் பிரயத்தனமே இல்லாமல் பயின்று வரும் தொன்மங்களையும், தேவதச்சன் கவிதைகளை சென்று தொடும் இடங்களையும் பற்றிச் சொன்னார். பாரி குழந்தையின் கள்ளமின்மையை தொடும் கவிதைகளை முன்வைத்து, முகுந்த் நாகராஜன் குழந்தைக் கவிதைகளோடு மதாரின் கவிதைகளை ஒப்பிட்டு பேசினார். கவிதை விவாதத்தில் ஊட்டி குருகுலத்தில் சுவாமி வியாசப் பிரசாத் எடுத்த தத்துவ வகுப்புகளை அந்தியூர் மணி மீட்டெடுத்தார்.

இறுதியாக மதார் பேசினார். அவர் கவிதைகளை ஒவ்வொருவரும் வாசித்த விதம் குறித்தும், அக்கவிதைகள் எழுதிய தருணங்களின்  நினைவுகள் குறித்துமாக அவர் தன் பேச்சை அமைத்தார். மதாரின் நன்றி உரையோடு வழக்கமான நம் குமரகுருபரன் விழா போல் நடந்து முடிந்தது இன்றைய நிகழ்வு.

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

முந்தைய கட்டுரைதத்துவவாதிகளின் கால்பந்தாட்டம்
அடுத்த கட்டுரைஇளையராஜா-கலை, மனிதன்