’மரபணு’

“நம்பிச் சாப்பிடுங்க சார், ஜெனெட்டிக் எஞ்சீனிரியங் முறைப்படி நாங்களே பயிர் செஞ்சது எல்லாமே”

ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் வருவதற்கு முன்னமே என் அப்பாவுக்கு அதைப்பற்றிய உள்ளுணர்வு இருந்தது. எழுபதுகளில் ஜெழ்சி,கூஸா வகை மாடுகள் இந்தியாவுக்கு வந்தன. நம்மூர் மாடுகள் நல்ல தமிழில் அம்மா என்று அழைக்க இவை தகரம் பிளந்த ஓசையில் ங்கீஈஹே என்றன.

என் அப்பா சட்டென்று ஒருநாள் கண்டுபிடித்தார். அவர் அப்போது திண்ணையில் இருந்தார். முற்றம் வழியாக ஒரு ஜெழ்ஸி மாடு சென்றது. எங்கள் மாடு அதைப்பார்த்து “என்ன?”என்றது. அது ‘ஒண்ணுமில்லே, இந்நா கிடக்கேன் சாவாம” என்றது. அப்பா பாய்ந்து எழுந்துவிட்டார். அந்த அறிதலின் விசையால் அவர் உடல் நடுங்கியது.

“டேய், இது மத்ததாக்கும். களுதை… டேய், கழுதையக் கலந்து இந்தச் சீமைப்பசுவை செஞ்சிருக்காண்டேன்…டேய் கழுதைடே அது” என்று அப்பா கூச்சலிட்டார்

“கொஞ்சம் கிட்டப்பார்வைய சேத்துக்கிடுங்க, ஏன்னா கண்ணாடிபோட்ட குழந்தைங்க க்யூட்டா இருக்கும்”

தங்கையா நாடார் நம்பவில்லை. அப்பா ஒடி கதை சொன்னார். ஒடி வித்தை செய்பவன் தன்னை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றலாம், ஆனால் உடலின் ஒரு பகுதி மனிதனாகவே எஞ்சும். “அதுக்க சத்தத்தை மாத்த முடியல்ல பாத்தியாடே?”

நான் தங்கையா நாடாரைப் பார்த்தேன். அவர் ஞானம் திகழ புன்னகைத்து “பிள்ளே, கொஞ்சம் அடங்கி கிடக்கணும். அது இங்கிலீசு மாடாக்கும். அப்டித்தான் விளிக்கும். நம்ம பசு மாதிரி தமிழிலே அம்மான்னு விளிக்க அதுக்கு என்ன தெரியும்?”

அப்பா சீற்றத்துடன் “அப்ப இங்கிலீசிலே மதர்னு சொல்லட்டும் டே…என்ன மயிருக்கு களுதைக்கு காமம் வந்தமாதிரி விளிக்குது?”என்றார்.

நான் மெல்ல “இங்கிலீசிலே மம்மீன்னு விளிப்பாக” என்றேன்

”ஆமா, அதாக்கும். அது மம்மீன்னாக்கும் விளிச்சது” தங்கையா நாடார் விளித்துக் காட்டினார் “ம்ம்மம்மீஹ்ஹ்ஹ்”

அப்பா என்னை பார்த்து “போயி படிடா… வந்து நிக்குதான்” என்று கையை ஓங்கினார்

வாதத்தில் தோற்றாலும் அப்பா அதை நம்பினார். கடைசிவரை அவர் ஜெழ்சி பசுவின் பாலை குடிக்கவில்லை. வெளியே போனால் ‘கட்டன் சாயா’தான். வீடுகளில் என்றால் “நாட்டுப்பசுதானே?”என்று கேட்டுக்கொள்வார்.

”நான் வெயிட்டர் இல்ல. நான் ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் சயண்டிஸ்ட். நீங்க இப்ப சாப்பிட்ட ஆடு பத்தி உங்க கருத்து என்ன? ஒரு சர்வேக்கு தேவைப்படுது”

நீண்டநாட்களுக்குப்பின் தங்கையா நாடாரும் ஜெனெட்டிக் எஞ்சீனியரிங்கில் நம்பிக்கை வைக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் யாருடைய கல்யாணத்துக்கோ போய் விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள். தங்கயா நாடார் கேட்டார். ‘பிள்ளே ஒரு சம்சயம்”

“என்னது?” என்று அப்பா ஏப்பத்துடன் கேட்டார்.

”இப்பம் இந்த களுதைய பசுவிலே சேக்குதது மாதிரி மனுசனிலே எருமையை சேக்க முடியுமா?”

‘ஏன்வே?”

“இந்த கல்யாணப்பய இப்டி இருக்கானே? உம்மாணை பிள்ளை, அவன் சிரிச்சப்ப நான் பக்கத்திலே எங்கிணயோ எருமைக்கிடா நிக்குதுன்னு நினைச்சுக்கிட்டேன்”

அப்பா அதை முன்னெடுக்கவில்லை. அப்படி ஒரு சாத்தியத்தை ஏற்றுக்கொண்டால் அவரை மற்றவர்கள் கரடி என அழைப்பதற்கான உயிரியல் நியாயம் உருவாகிவிடும்.

”ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் பத்தின பயம்லாம் மிகைப்படுத்தப்பட்டது. இதுவரை நடந்த ஆக்ஸிடெண்டை எல்லாம் ரெண்டு துடுப்புகளாலே எண்ணிடலாம்”

நான் பத்தாம் கிளாஸ் படிக்கும்போது துர்க்காப்பிரசாத் கத்ரி என்ற இந்தி எழுத்தாளரின் நூல்களை ஆங்கிலம் வழியாகப் படித்தேன். எல்லாமே கடுமையான துப்பறியும் சாகசநாவல்கள். அதிலொன்றில் ஓர் ஆய்வுக்கூடம் உடைந்துவிடுகிறது. அந்த மருந்து கங்கையில் கலந்து கங்கையிலுள்ள மீன்களெல்லாம் ம்யூட்டேஷன் ஆகிவிடுகின்றன. நீரிலிருந்து எழுந்து அலாக்காக ஒரு படகையே விழுங்கிவிட்டுச் செல்கிறது ஒரு மீன். உள்ளிருக்கும் ஆட்களுடன்தான்.

அந்நாவல்தான் எனக்கு ஜெனெட்டிக் எஞ்சீனியரிங்கில் நம்பிக்கையை வரவழைத்தது. மீன்பிரியனான நான் கடல்மீன்களை அந்த அளவுக்கு பெரிதாக்கினால் நாம் சோற்றுக்குப் பதில் மீனையே சாப்பிடலாம் என ஆசைப்பட்டேன். கமுகுப்பாளை பையுடன் சென்று சாளைமீனை எண்ணி வாங்கவேண்டியதில்லை. சாளைகள் ஒவ்வொன்றும் திமிங்கலமாக ஆனால் அதுவல்லவா வாழ்க்கை!

”இத முதல்ல மக்கள் சாப்பிடட்டும். அப்பதானே பத்துப்பதினஞ்சு வருசம் கழிச்சு என்ன ரிசல்ட்டுன்னு தெரியவரும்?”

ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் பற்றிய ஐயங்கள் உலகமெங்கும் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதன்பொருள் மனிதர்கள் அவர்கள் இப்போதிருக்கும் வடிவில் திருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதல்ல.அவர்களுக்கு சகமனிதர்களிடம் நம்பிக்கை இல்லை. என் மூஞ்சியை சீரமைக்கும் பொறுப்பை நான் இன்னொருவரிடம் ஒப்படைத்தால் அது எப்படி இருக்குமென எனக்கு தெரியும்.

விலங்குகளையும் மரங்களையும் இணைத்து புது உயிரினங்களை உருவாக்கி மாமிசத்தை பயிரிடுவது பற்றிய ஒரு அறிபுனை கதையை நெடுநாட்களுக்குப்பின் வாசித்தேன். நாவில் எச்சில் ஊறியதை அறிந்ததும்தான் நான் மாறவே இல்லை என உணர்ந்தேன்.

[அதில் மற்ற மரங்களை உண்ணும் ஒட்டுண்ணிகள் சில ஊனுண்ணிகளாக மாறி அதிபயங்கர வேட்டைகளில் ஈடுபட ஆரம்பித்துவிடும். நம் காலுக்கு கீழே வேர்கள் கொண்ட ஒரு மரம் நம்மை கவ்விச்சாப்பிடுவதைப்பற்றி யோசித்துப்பாருங்கள்]

“அம்மா நான் பிறக்கறதுக்குள்ள என்னோட மரபணு மாற்றம்லாம் முழுசா நடந்திட்டுது இல்ல?”

ஜிஎம் பருத்தி அறிமுகமானபோது அதை எதிர்த்துப் பேசிய எஸ்.என்.நாகராஜன் விவசாயிகளிடம் சுருக்கமாக சொன்னார். “பருத்திய மனுசன் மாத்திருவான். பருத்தி பூச்சியை மாத்திரும். அந்த பூச்சிய மனுசனாலே மாத்த முடியாது. ஏன்னா அது தன்னைத்தானே மாத்திக்கிட்டே இருக்கும். அவ்ளவுதான் விஷயம்”

அத்தனை விவசாயிகளும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் ஒரு சத்யகிறிஸ்தவரான நாடார் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் தயங்கினார். “இல்லே அய்யா. இப்ப செடியும் பூச்சியும் எல்லாம் கர்த்தருக்க சிருஷ்டிகளாக்குமே… செடிய மாத்த விடுத கர்த்தரு ஏன் பூச்சிய மாத்த விடுதாரில்ல?”

”உங்கம்மாதான் கூப்பிடுறாங்க. உன்னோட ஜெனெட்டிக் மேக்கிங்கிலே ஏதோ விட்டுப்போச்சாம்.சரிபண்ணணுமாம்”

அதற்கு எஸ்.என்.நாகராஜன் விழிபிதுங்கிவிட்டார். [அவர் விழிகள் ஏற்கனவே கொஞ்சம் பிதுங்கியவைதான்] அவருக்கு மரபணுவியல்தான் தெரியும். கேள்வி இறையியல் சார்ந்தது. வேதசகாயகுமார் இறையியலை அறிந்தவரல்ல என்றாலும் அதைக் கையாள அறிந்தவர்.

“இருங்க நான் சொல்லுதேன்” என்று வேதசகாயகுமார் ஆரம்பித்தார்.  “இஞ்சபாருங்க, பைபிள் பிரகாரம் கடவுள் பருத்திய படைக்கல்ல”

“அப்டியா? பைபிளிலே இருக்கா?”

“நேரடியா இல்ல. ஆனால் அப்டித்தான் சொல்லுது” என்றார் வேதசகாயகுமார். “ஆதாமும் ஏவாளும் வேட்டியும் சட்டையுமா இட்டிருந்தாங்க?”

“இல்ல”

“எல தானே?”

“ஆமா” என்றார் கிறிஸ்தவர், சிந்தனையுடன்

”இவளிலே வேற என்னத்தையோ கலந்துட்டாங்க”

”அவங்களுக்கு ஆப்பிளைக் குடுத்து மனசைக்கெடுத்தது ஆரு?”

“மத்தவன், சாத்தான்”

“அப்பம் பிதாவாகப்பட்டவர் அவங்க ரெண்டுபேரையும் பிடிச்சு வெளிய தள்ளினாரு, இல்லியா?”

“ஆமா”

“ஏதேன் தோட்டம் கடவுள் படைச்சது. அங்க ஆதாமும் ஏவாளும் இருந்தாக. அவங்க ரெண்டுபேரையும் பிடிச்சு வெளியே தள்ளினாருன்னா வெளியே உள்ள எடம் ஆரு படைச்சது?”

அமைதி. வேதசகாய குமார் வெற்றியுடன் அனைவரையும் பார்த்தார்

“சாத்தான் படைச்சது, இல்லியா?”

“ஆமா”என்னும் முனகல்

”மனசை வெளியே கொண்டுவர்ர மரபணு டெக்னாலஜி வந்திட்டுது”

“அங்க வந்த பிறவுல்லா ஆதாமும் ஏவாளும் துணிகளை உடுத்தாக?” என வேதசகாய குமார் ஆழமான புன்னகையுடன் கேட்டார்.

“ஆமா”

“அப்ப பருத்தி சாத்தான் படைச்சதாக்குமே? மனுசன் துணி உடுக்கப்பிடாதுன்னு நினைச்ச பிதா சும்மா சோலி மெனக்கெட்டு பருத்திய படைச்சிருப்பாரா?”

விவசாயி குழம்பி தன் ஆடையை பார்த்தார். அதை உருவி வீசி எறியவேண்டுமா என்ன?

“அதனாலே பருத்தி சாத்தானாக்கும். அதை நாம மாத்தினா சாத்தான் எல்லாத்தையும் மாத்திருவான்” என இறையறிவியல் என்னும் புதிய அறிவுத்துறையை வேதசகாயகுமார் உருவாக்கினார்.

”விஞ்ஞானிகளை திடுக்கிடச்செய்த மரபணுச்சங்கிலி’

மரபணு மாற்றக் குழந்தைகள் வர ஆரம்பித்தால் என்ன ஆகும்? இந்தியாவில் கறுப்புக்குழந்தைகளே இல்லாமலாகும். எல்லா குழந்தைகளும் குண்டாக சிவப்பாக சூட்டிகையாக இருக்கும். படிப்பில் எல்லா குழந்தைகளுமே முதலிடம் வாங்கும். டான்ஸ், மியூசிக், கராத்தே, ஓரிகாமி உட்பட எல்லா கலைகளிலும் குழந்தைகள் சிறந்து விளங்கும். அப்பா அம்மா சொன்னபேச்சை முழுமையாக கேட்கும். அவர்கள் விரும்பும்போது மட்டும் வந்து விருந்தினர்களுக்கு பாபா பிளாக்‌ஷீப் பாடிக்காட்டும். மற்றநேரம் ஓரமாக சாதுவாக அமர்ந்திருக்கும். யார் கண்டது, குழந்தைகளுக்கு அவற்றை தேவையானபோது ஆஃப் பண்ணி வைக்கும் சுவிட்சை தொப்புள் மாதிரி பொருத்தும் தொழில்நுட்பம்கூட வந்துவிடலாம்

ஆனால் அதை எந்த மரபணுக்கலவையால் தயாரிப்பார்கள்? நான் நினைக்கிறேன் தென்னமேரிக்க ஸ்லோத் நம்மூர் தேவாங்கு இரண்டையும் கலந்து எடுத்த ஜீனை மனிதக்குழந்தைகளுடன் குழைத்து ஆம்லேட் போல ஆக்கி எடுத்தால் இலட்சியக் குழந்தைக்கான மரபணு தயாராகிவிடும். விசுவாசத்துக்கு கொஞ்சம் நாய் சேர்த்துக்கொள்ளலாம். லாப்ரடார் உசிதம், கைமறதியாக ராட்வீலர் கலந்துவிட்டால் கடி உறுதி.

“அதுவா? அவனோட ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் கொக்கோகோலா ஸ்பான்ஸர் பண்ணினாங்க. அவங்க விளம்பரத்தை தோலிலே மச்சமா வரவைச்சிருக்காங்க’

ஜிஎம் அரசியல்வாதிகள்! “சிங்கத்த்தின் மரபணுகொண்ட எங்கள் தானைத்தலைவருக்கு அளியுங்கள் வாக்கு!”.  புலிகள், சிறுத்தைகள் எல்லாமே நேரடி அர்த்தத்தில். “தலைவர் தன் மரபணுவை இப்போது உறுமிக்காட்டி நிரூபிப்பார்”. பழைய குலக்குறி அரசியல் வருகிறது. “பன்றிக்கட்சி! சாளுக்கிய மரபணு கொண்டது. தலைவர் வராகமூர்த்திக்கு வாக்களியுங்கள்”. தமிழில் பன்றிச்செல்வர். எத்தனை வாய்ப்புகள். எதிர்காலத்தில் என்னென்ன வரும்!

தீனியிலேயே பல சாத்தியக்கூறுகள் வரலாம். சிக்கனையும் மீனையும் கலந்து சிக்ஃபிஷ். ஆட்டையும் மீனையும்கூட கலக்கலாம். மட்டன்பிஷ். அவற்றின் உடலில் வேண்டிய உப்பு, காரம், மசாலா எல்லாம் இயல்பாகவே இருப்பதுபோல உருவாக்கலாம். ஏன் அட்வான்ஸ்ட் டெக்னாலஜியில் சிக்கன்ஃப்ரை வடிவிலேயே ஆடுகள் குட்டிபோட ஏற்பாடு செய்யலாம். கோழிகளை இப்போது கிட்டத்த இறகு,சிறகு இல்லாமல் நேரடியாக எண்ணைச்சட்டிக்கு போகும் வடிவிலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை விரிவுபடுத்தலாம். தலை,கால்,குடல் தேவையில்லை.சாப்பிடும் பகுதி மட்டுமே போதும். ஃபைவ்ஸ்டார் சாக்லேட் போல அவற்றில் வெட்டுகள் இருந்தால் துண்டுபோடுவதும் எளிது!

”உங்க பிரச்சினை ஜீன்ல இருக்குன்னு டயக்னைஸ் பண்ணியிருக்கோம்”

நடுவே ஒரு ஜோக் .தமிழ் உதவி இயக்குநர் ஒருவர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னார். “சார், ஓப்பனிங் சீனிலே ஈரோயினி ஒரு ரயில்வே டிராக்காண்ட மட்டன் மேய்ச்சிட்டிருக்கா. அப்ப…”

தயாரிப்பாளர் கேட்டாராம். “சிக்கன் வைச்சுக்குவோமே தம்பி, நம்முளுது லோ பட்ஜெட் படம் பாத்துக்கிடுங்க”

பொதுவாகவே இன்றைய தலைமுறையினர் டெக்னாலஜிக்குச் சாதகமான எண்ணம்தான் கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக தீனியில். 2.0 படத்தில் பறவையாக வரும் வில்லனைப் பார்த்துவிட்டு தன் மகன் “மாமாமூஞ்சி சிக்கன் வாங்கித்தா.. மாமாமூஞ்சி சிக்கன்தான் சாப்பிடுவேன்..” என அடம்பிடித்து தரையில் விழுந்து அழுதுபுரண்டதாக ஒரு நண்பர் சொன்னார்.

”மார்க்கெட்டிலே கோழிச்சிறகு விலை ஏறினா அதுக்கேத்த டெக்னாலஜி”

நூறாண்டுகளில் மரபணுக்கள் சந்தைக்கு வரும் என ஒரு நண்பர் சொன்னார். நடிகர்கள், பாடகர்கள், விஞ்ஞானிகள், கோடீஸ்வரர்களின் மரபணுக்களை கலந்து தங்கள் குழந்தைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கான விளம்பரங்கள் இணையத்தில் வெளிவரும். மரபணுக்கள் நடுவே போட்டி உருவாகும். மரபணுக்கள் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியாகும், இந்தியாவுக்கு இறக்குமதியாகும். எங்குபார்த்தாலும் நட்சத்திரங்கள், சூப்பர்மேன்கள். பொற்காலம்.

ஆனால் மரபணு வாபஸ் என்ற திட்டம் தேவை. ஒரு மரபணுவை நம்பி உருவாக்கி அந்த பிள்ளை உருப்படவில்லை என்றால் அதிலிருந்து அந்த மரபணுவை பிடித்து இன்னொன்றாக ஆக்க ஒரு தொழில்நுட்பம் வராமலா போய்விடும். “டாக்டர் என்ன செலவானாலும் பரவாயில்லை, இவனை ஒரு லாப்ரடார் நாயா மாத்தி குடுத்திருங்க. சொன்ன பேச்சே கேக்கிறதில்லை!”

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்
முந்தைய கட்டுரைவிருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்
அடுத்த கட்டுரைவண்ணக்கடலின் அருமுத்து கர்ணன்: இரம்யா