ஒளி, நீலம் – கடிதங்கள்

ஜெ,

இது வரை எழுதாத அளவிற்கு ஒரு நீண்ட கடிதம், ஒரு நாடகத்திற்கு எழுத வேண்டுமா என தோன்றினாலும், இவ்வகை உரையாடல்கள் மூலமாக தானே படைப்புகளின் பல்வேறு பரினாமங்களும், முழு சாத்தியங்களும் வெளிப்படுகின்றன…

பல வருடங்களாக அலுவலக வாழ்வின் வாழ்வின் ஒரு பகுதியாகவும்… ஒரு வருடமாக அலுவலகமாகவும் மாறியுள்ள காணொளி ஊடகம் திடிரென ஒரு மேடையாக உருமாறிய பிரமிப்பு அகலும் முன்பே நாடகம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது…

சூம் போன்ற செயலிகளில் மெய்நிகர் பின்னனி அமைப்புகள் கொண்டு வேறு இடத்தில் இருப்பதாக ஒருவர் காட்டிக்கொள்ள முடியும்… அப்படி எதுவும் இல்லாமல், நடிகர்கள் தங்கள் அறைகளையே மேடைகளாக மாற்றி, ஒளி அமைப்பு உட்பட கச்சிதமாக அமைத்திருந்ததால் இணைய சந்திப்பு என்ற பிரக்ஞையே எழவில்லை… யார் எந்த திசை நோக்கி அமர்வது… யாருக்கு close shot, யாருக்கு தொலைவாக என அனைத்து நுணுக்கங்களையுமே சரியாக அமைத்திருந்தார் இயக்குநர்.

சூம் செயலி பேசுபவரை, தானே, காட்டும் என்றாலும், ஒருவர் பேசத்தொடங்கிய பின், அவர் பேசுகிறார் என உணர்ந்து திரையை மாற்றும்… எனவே பெரும்பாலும் ஒருவரின் வசனம் முடிந்து சில நொடிகள் அவரது பாவனைகளை காட்டி, மற்றவர் பேசத்தொடங்கிய பின் அவரது முகத்தை காட்டியது. இது வழமையான தொகுப்பித்தலுக்கு மாறாக புதுமையாக இருந்தது, நாடகத்திற்கு இயல்புத்தன்மையை கூட்டியது…

நண்பர்களின் தேர்ந்த நடிப்பு, லாவகமான உடல் மொழி பேன்றவற்றை பலரும் பாராட்டி இருந்தனர். பொதுவாகவே நடிப்பில், குறிப்பாக நாடகங்களில், ஏற்படும் சிக்கல்கள் வசனங்களை மறந்து விடுதல், மற்றவர்கள் முடிக்கும் முன்பே தனது வசனங்களை தொடங்கி விடுதல் போன்றவை. சில சமயம் ஒரு வசனத்திற்கு பதில் அதற்கு அடுத்த வசனத்தை கூறிவிட்டால், நாடகத்தின் ஒரு பகுதி விட்டுப்போய்விடும். அதற்கு ஏற்றார் போல் மற்ற நடிகர்கள் தங்கள் வசனங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். முக்கியமாக இவற்றில் எதோ ஒன்று நிகழ்ந்தது என்பது அவர்களின் நடிப்பில் வெளிப்பட கூடாது. இந்த தடைகள் ஏதும் இல்லாமல் நண்பர்கள் நிபுணத்துவமான நடிப்பை வெளிக்காட்டினர்.

ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, ‘ஒளி’ கூறுவது என்ன??

இந்த நாடகம் இயல்பாகவே சில படிநிலைகளை கொண்டுள்ளது … அங்கு அடைப்பட்டபின் அவர்கள் எப்படி உணர்கிறார்கள், அந்த சூழல் அவர்களுக்குள் என்ன மாற்றங்களை உண்டாக்கியது… அவர்கள் தங்கள் தனித்தன்மையால் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்.. அங்கிருந்து வெளியேறுவதை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்… அங்கு எதற்காக அடைக்கப்பட்டார்கள்… வெளியே இருக்கும் சமுகத்தை குறித்து என்ன நினைக்கிறார்கள்.. பிரபாகர் முன்வைக்கும் ஒளி மீது அவர்களால் எவ்வளவு நம்பிக்கை வைக்க இயல்கிறது என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே நாடகம் முன்னகருகிறது. இந்த படிநிலைகளை வைத்தே ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அனுக முயன்றேன்.

ஆனந்த்.. மற்றவர்களை விட வித்தியாசமானவர்… மனிதர்களுக்கு தானே எல்லை, மலைகளுக்கு ஏது எல்லை என யோசிக்கிறார்… எல்லைகளை கடந்து வாழ்கிறார்… சிறையை விட்டு வெளியேறுவது குறித்த எந்த எதிர்பார்ப்பும் அவரிடம் இல்லை.. சிறை அவரை மாற்றியது என்பதற்கும் எந்த குறிப்பும் இல்லை. சிறையின் சுவர்களை அவர் பொருட்படுத்தவில்லையோ என்ற எண்ணம் தான் எழுகிறது. மலையேற்றம் குறித்து எழுதுவதை தொழிலென கூறும்பொழுதே சமூகத்தின் எல்லைகளை கடந்தவர் என அறியலாம்.. இந்த கட்டிட எல்லைகளா அவரை சிறைபடுத்தும்?
சுதந்திரம் குறித்து பேசும்பொழுதும் தர்க்கபூர்வமாகவே அதை அணுகிறார். அதன் சாத்தியங்களை கேள்வி கேட்கிறார். தனக்கான சுதந்திரம் என அவர் யோசிக்கவில்லை… பெருங்கனவுகள் கொண்டவனாகவும், அவநம்பிக்கையின் நாவுகள் தீண்டாதவனாகவும் இருக்கிறான்.

ரீனா.. நகைச்சுவை உணர்வு கொண்ட துடிப்பான பெண்.. கலைக்கு கட்டுப்பாடு இல்லை என நம்புகிறாள்… சிறை அவளுக்கு உண்மையான விடுதலை என்பதென்ன என காட்டுகிறது. சுதந்திரத்தை நம்புகிறாள்.. மக்களுக்கு அது புரியவில்லை என எணனுகிறாள்… மக்களிடம் அதை கொண்டு சேர்க்க என்ன செய்யமுடியும் என யோசிக்கிறாள். சிறையில் அவள் கண்டடைந்த சுதந்திரம் அவளை உயிர்ப்புடனும், நம்பிக்கையுடனும் வைத்திருக்கிறது.

முகுந்தன், இயல்பாக நாம் அனைவரும் தொடர்புருத்தும் கதாபாத்திரம். ஆசைகள் எதிர்பார்ப்புகள் அற்றுப்போய், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்ற புரிதலுக்கு வந்த மனிதன். புதிய சாத்தியங்கள் தென்படும் போதும், இதனால் என்ன பயன், ஏமாற்றம் தானே எஞ்ச போகிறது என நினைக்கிறான். கனவுகளின் இடையே நாம் தனிமையில் இருக்கிறோம் என்ற யதார்த்தத்தின் குரலாய் ஒலிக்கிறான். சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை, ஆனால் மக்கள் எப்பொழுதோ அடிமையாக தொடங்கிவிட்டார்கள் என சமாதனம் செய்துக்கொள்கிறான்.

பிரபாகர்.. ஒளி ஏந்தி வருபவன்… தனியன்… தன் தனிமையை எதுவும் மாற்றாது என அறிதிருப்பவன்… தனியன் என கூறிக்கொண்டாலும் அந்த தனிமைக்கு மற்றவர்களும் அவசியம் என அறிந்தவன்… யாருமில்லாத இடத்தில் தனித்திருப்பதற்கு என்ன பொருள்?! “Sometimes you protest just to register a public objection to policies you have no hope of changing” வெல்லவில்லை என்றாலும், அடக்குமுறைக்கு எதிராக ஒரு குரல் எழுந்தது என வரலாற்றில் பதிவதற்காகவேனும் குரல் எழுப்ப வேண்டும் என்று நம்புபவன். வெளியே உள்ள சூழலில் தன்னால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என உணர்ந்தாலும், அதில் உழலாது தனியாக இருக்க வேண்டும்… சுதந்திரத்தின் குறியீடாக தன் வாழ்க்கை இருக்க வேண்டும் என விரும்புகிறான், வாழ்கிறான். இங்கு சிறைக்கு வந்தபின்.. மற்றவர் போலவே அங்கு அடைந்திருந்தால் அவனது வாழ்க்கை அர்த்தமிழந்து போகும். அப்படி வாழ்ந்தால் சுதந்திரத்தை கைவிட்டவனாவான்.அவனது குரல் வெளியே கேட்காது எனும் பொழுது, உள்ளிருப்பவர்களிடம் பேசுகிறான்… சுதந்திரத்தின் விதைகளை எழ செய்கிறான்.

அனைத்தையும் ஏற்று வாழும் உலகில், குகையில் வாழ்வதன் மூலமாகவே எவரும் நிராகரிக்க இயலாதவனாக இருக்கிறான். இங்கு சிறையில், சுதந்திரம் பற்றிய பேச்சுகள் சலித்துப்போன சூழலில், தனது மரணத்தின் மூலம் மட்டுமே தனது தரப்பை நிராகரிக்க இயலாததாக மாற்ற முடியும் என உணர்ந்து செயல்படுகிறான். தான் இல்லாமல் போவதால் மட்டுமே அச்சூழலில் சுதந்திரத்தின் குறியீடாக தான் நிலைக்கமுடியும் என முடிவு செய்கிறான். லட்சியவாதி என்ற ஒரு வார்த்தை அவனை விவரிக்கும்.

சேகர்… இவர்கள் அனைவரிடமிருந்தும் மாறுபட்டவன். சுதந்திரத்திற்காக இல்லாமல் காழ்ப்பையும் கசப்பையும் கக்கியதால் சிறை வந்தவன். வெளியேறுவது குறித்து எந்த நம்பிக்கையும் இல்லாதவன். இன்னும் நீண்ட நாள் வாழக்கூட மாட்டேன் என எண்ணுபவன். பிரபாகரின் நம்பிக்கை வார்த்தைகளை அவநம்பிக்கையால் எதிர்கொள்பவன். பகடியால் அனைத்தையும் கடந்துசெல்ல முயல்கிறான்.
ஆனால் அவன் தான் பிரபாகரின் விதைகளுக்கு வடிவமளிக்கிறான். தனது அக நம்பிக்கையிலிருந்து பிரபாகர் முன்வைப்பவற்றை வரலாற்றில் பொருத்தி பார்கிறான்.

இவ்விரண்டையும் இணைத்து பார்க்கையில் கிடைக்கும் சித்திரம் ஆர்வமூட்டுவது. நம்பிக்கை கொண்டவனால் தான் நம்பிக்கை இழக்க முடியும். ஒரு மாபெரும் கனவை நம்பி, அதைப்பற்றி பேசி அதற்காகவே தன் வாழ்வை அர்பணித்தவன், ஒளி மிக்க எதிர்காலத்திற்காக தனது நிகழ்காலத்தை விட்டுக்கொடுத்தவன்.அவர்கள் வாக்களித்த எதிர்காலத்திலும் ஒரு தலைவனுக்கு அடிமையாக இருக்க நேரும் அபத்தம், அவனது முழு வாழ்வையும், நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. அனைத்தையும் கேள்வி கேட்கிறான். அவநம்பிக்கையாளன் ஆகிறான்.
ஆனால் அவன் முன், தன் ரத்தத்தால் பிரபாகர் அடிகோடிட்ட ஒளியை சேகர் எப்படி எதிர்கொள்வான்?

எனக்கென்னவோ, தன்னை முன் வைத்த தலைவர்களுக்கு மத்தியில், தன்னை மாய்த்து கருத்தை முன்வைக்கும் பிரபாகர் சேகரை மீண்டும் நம்பிக்கை கொண்டவனாக மாற்றுவான் என்றே நினைக்கிறேன். சேகர் மீண்டும் பேசி பேசி பிரபாகரை சரித்திரத்தில் நிறுத்தினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

இந்த ஒரு கட்டமைப்பு கிடைத்தவுடன், அந்த ஒரு நாளுக்கு முன், பின் என அந்த ஐவரும் நம்முள் வளர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க. இந்த நாடகம் என்னுள் விட்டுச்செல்லும் கேள்விகள் இரண்டு

1) பாஸிசம், தனி மனித வழிப்பாடு போன்றவற்றை கொண்டு சமகாலத்துடன் இதை இணைத்து பார்க்கிறார்கள். ஆனால், உண்மையில் இன்று அரசுக்கு எதிராக எழும் குரல்களைப்போல் தானே அந்த புரட்சியும் அன்று இருந்திருக்கும்? ஒரு மக்கள் அமைப்பு, எந்த புள்ளியில் திசை மாறுகிறது? தனிமனிதன் சார்ந்த இயக்கமாக மாறுகிறது? கனவுகள் ஏன் மறக்கப்படுகின்றன? எதை நம்பி இன்று ஒருவன் மக்கள் எழுச்சியில் பங்கேற்க முடியும்? வரலாற்றில் திரும்ப திரும்ப எழும் இந்த கேள்விகளை பின் தொடரும் நிழலின் குரல் நாவல் மேலும் விரிவாக பரிசீலிக்கிறது என எண்ணுகிறேன். (என்னால் இன்னும் அந்த நாவலுக்குள் நுழைய இயலவில்லை)

2) பிரபாகர் விட்டுச்செல்வது ஒரு விதை… ஒரு கனல். அது வளருமா? எப்படி வளரும்? என்ன ஆகும்? புரட்சி மூலம் அமைந்த அரசை எதிர்த்து இன்னொரு புரட்சி வெடிக்குமா? இந்த சுழற்சி எங்கு நிறைவடையும்? Ideal உலகம் சாத்தியம் தானா?

ஒட்டுமொத்த பார்வையில் இவற்றை முன் வைத்தாலும், இதை தாண்டியும் பல விஷயங்களை தொட்டுச்செல்கிறது இந்த நாடகம்… தனது வாசகர் தான் தேடி வந்துள்ளானோ என எண்ணும் சேகர், ஒருவன் என்னை நினைவில் வைத்திருந்தால் போதும் வரலாற்றில் வாழ்வேன் என குறிப்பிடுவது, வரலாற்றில் இவ்வளவு காலம் அழியாமல் இருப்பது மதம் மட்டுமே, அனைவரையும் ஏற்கசெய்யும் தர்கம் எதுவும் இல்லை என பல. இவை ஒவ்வொன்றைக்குறித்தும் விரிவாக பேசிக்கொண்டே செல்லலாம்.

ஒன்றுமில்லை என நாம் எண்ணும் வெள்ளை ஒளி, பட்டகத்தில் பட்டதும் பல்வேறு வண்ணங்களாக முடிவற்று விரிவது போல்… இந்த சிறு நாடகம் வாசிக்க வாசிக்க விரிவடைந்துக்கொண்டே இருக்கிறது… இதை முழுவதுமாக பேசி முடிப்பது சாத்தியமா என தெரியவில்லை.

(எனது புரிதலில் over reading / தவறான வாசிப்பு இருந்தால் அவசியம் சுட்டிக்காட்டவும்)

அன்புடன்
லாஓசி

அன்புள்ள ஜெ

ஒளி நாடகம் சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியது. நாம் சென்ற ஐம்பதாண்டுகளாக மதம், அமைப்பு, நம்பிக்கை,சடங்குகள் ஆகியவற்றை எதிர்மறையாகவே பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். அதெல்லாம் இல்லாத ‘பகுத்தறிவுள்ள’ உலகத்தைக் கனவுகாண்கிறோம்.

இந்நாடகம் மதம்தான் நீடிக்கும் அமைப்பு. நம்பிக்கையுடம் சடங்குகளும்தான் உண்மையில் ஒரு நிலையான மாற்றத்தை உருவாக்கக்கூடியவை. மற்றவை வெறும் அறிவுப்பயிற்சிகள் என்று சொல்கிறது. அந்த எதிர்க்குரல் மிக முக்கியமானது. இன்றைய சூழலில் யோசிக்கவேண்டிய ஒன்று

ஆர்.குமார்

அன்புள்ள ஜெ

நீலம் பகுதியை சுபஸ்ரீ நடித்தது மிக அழகாக இருந்தது. புகைப்படம் வந்ததுமே யதார்த்தபாணி ஓவியமான லேன்ஸ்கேப், போர்ட்ரெயிட் இல்லாமலாகியது. ஆனால் புகைப்படம் ஓர் எல்லைக்குச் சென்று அதன் உச்சம் என்ன என்று தெரிந்ததுமே போர்ட்ரெயிட், லேன்ஸ்கேப் ஓவியம் திரும்பி வந்துவிட்டது. அதேபோல நாடகமேடையில் ஸ்டைலைஸ்ட் நடிப்பு, நீண்ட வசனம் கொண்ட dramatic monologue எல்லாம் யதார்த்தபாணி ஸ்டனிஸ்லாவ்ஸ்கி [ Stanislavski] பாணி நடிப்பால் மறைந்தது. ஆனால் இன்று சினிமா என்பது யதார்த்த நடிப்பின் எல்லா சாத்தியங்களையும் பார்த்துவிட்டது. ஆகவே நாடகம் திரும்பவும் டிரமாட்டிக் மொனலாக், rhetoric காலத்துக்கு திரும்பிப்போகவேண்டியிருக்கிறது. அது பெரிய ஒரு அனுபவமாக இருக்கிறது. நீலத்தின் அழகான வசனங்களை உணர்ச்சியுடன் கேட்பது ஓர் அரிய அனுபவமாக உள்ளது

கிருஷ்ணகுமார்

முந்தைய கட்டுரைஅன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்