சூமுலகம்

இன்றிருத்தல்…
இன்றிருந்தேன்…

கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் அழைத்திருந்தார். ”என்ன செய்றீங்க? வெளியே ஒண்ணும் சுத்தலியே? வீட்டிலேயே இருங்க. அங்க இங்க லாந்திட்டிருக்கவேண்டாம்” என்றார்.

அவருடைய உற்சாகமான குரலை கேட்பது எப்போதுமே நிறைவளிப்பது. அத்துடன் அவர் அப்படி அழைத்து சொன்னது கேட்டு வயக்கரைவீட்டு பாகுலேயன் பிள்ளையே “வீட்டிலே இருடா நாயின்றே மோனே” என்று சொல்வதுபோல, ஒரு நிறைவு ஏற்பட்டது. நமக்கு அது சிலசமயம் தேவைப்படுகிறது. குறிப்பாக கொரோனாவாவது ஊரடங்காவது, மயிரேபோச்சு, கிளம்பிவிடலாம் என்னும் முனையை வந்தடைந்த சமயத்தில்.

சென்ற ஏப்ரல் 23 அன்று நாகர்கோயில் வந்தபின் இதுவரை பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருக்கிறேன். மாடியிலேயே நடைபயணம். கடைக்குப் போவதெல்லாம் அஜிதன்தான். இப்படியே போனால் மக்கள் சிறைசெல்வதை அஞ்சாமலாகிவிடுவார்கள், வேறுவகை தண்டனைகளை அரசு கற்பனை செய்ய வேண்டியிருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

வீடடங்கு என்றாலும் ஒவ்வொரு நாளும் தொடங்குவதறியாமல் முடிந்துவிடுகிறது. தினமும் 4 பேருடன் தலா 40 நிமிடங்கள் ஸூம் செயலி வழியாக உரையாடுகிறேன். அதுவே மூன்றுமணிநேரம் ஆகிவிடும். ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட நேரத்திற்கு அட்டவணை போட்டு நானே அழைக்கிறேன். நாளின் ஒழுங்கை அந்த அட்டவணையே இப்போது தீர்மானித்துவிடுகிறது.

சென்ற மேமாதம் 16 முதல் தொடங்கிய உரையாடல் இது. இதுவரை 96 பேருடன் உரையாடிவிட்டேன். இன்று சதமடிப்பேன் என நினைக்கிறேன். இம்மாத இறுதிவரை நாள்கொடுத்திருக்கிறேன். அதற்குமேல் வேண்டாம் என நினைக்கிறேன். அப்போது ஊரடங்கும் இருக்காது, பயணங்களும் இருக்கலாம்.

இந்த அட்டவணையின் சிக்கல் என்னவென்றால் இதை நான் மாற்றிமாற்றி அமைக்க முடியாது. ஒருவரின் பொழுதை மாற்றவேண்டுமென்றால் இன்னொருவரின் பொழுதை மாற்றவேண்டும். எனக்கு பொதுவாக இப்படிப்பட்ட அட்டவணையிடுதலே பெரிய தலைவலி. ஆகவே நான் அளிக்கும் பொழுது வசதிப்படாது என்றவர்களிடம் பிறிதொரு காலகட்டத்தில் பேசலாம் என்றுதான் பதில் சொல்லவேண்டியிருந்தது.

நூறில் நான்குபேர் நோய் முதலிய காரணங்களால் பேசமுடியாமலானார்கள். அவர்களின் பொழுதை பெற வேறுசிலர் தயாராக இருந்தமையால் பொழுது வீணாகவில்லை.

நான் கருதியதுபோல இந்த உரையாடல் போகப்போக ஒரேபோல ஆகி சலிப்பூட்டவில்லை. குறைந்தபட்சம் எனக்கு மிக உதவியானதாகவே உள்ளது. பேசியவர்களில் ஓரிருவர் தவிர அனைவருமே இளைஞர்கள். அவர்களின் உலகங்களும் வேறு. ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை நிலப்பரப்புகளும் வேறுபட்டவை.

வழக்கமான நேர்ச்சந்திப்புகளை விட இந்த காணொளிச் சந்திப்பில் பங்கேற்பாளர்களின் விகிதாச்சாரம் வேறுபட்டிருந்தது. வழக்கமாக பேசிக்கொள்பவர்களுக்கு இடமில்லை என்பதனால் விஷ்ணுபுரம் நண்பர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை. ஓரிருவர் தவிர பிறர் புதிய வாசகர்கள், சிலர் ஓரிருமுறை நிகழ்ச்சிகளில் சந்தித்தவர்கள்.

வழக்கமாகப் புதுவாசகர் சந்திப்பில் இருபதுபேருக்கு மூவர் என்ற கணக்கில்தான் பெண்கள் இருப்பார்கள். இப்போது காணொளிச் சந்திப்புகளில் நேர்ப்பாதிபேர் பெண்கள். நம் சூழலில் சந்திப்புகளுக்குச் செல்ல பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் மற்றும் தயக்கங்களை இது காட்டுகிறது.

நேர்ச்சந்திப்புகள் மற்றும் விழாக்களில் ஓரிருவரே இஸ்லாமியர் பங்கெடுப்பது வழக்கம். இணையச்சந்திப்பில் மூவரில் ஒருவர் இஸ்லாமியர். ஒரு இஸ்லாமிய வாசகரிடம் அதைக் கேட்டேன். ‘அழைத்தவர்களின் பெயர்களை நீங்கள் வெளியிடுவீர்கள் என்றால்  உங்களை அழைத்திருக்க மாட்டேன்’ என்றார்.

ஏனென்றால் என்னுடன் தொடர்பு கொண்டால் நட்பு, சுற்றத்தில் பலவகையான கெடுபிடிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். வசைகளும் வரும். ”அவர்கள் எவருக்கும் உங்கள் எழுத்துபற்றி ஏதும் தெரியாது. ஆனால் பொதுவெளியில் சிலர் உருவாக்கும் காழ்ப்புகளை கற்றுவைத்திருக்கிறார்கள். உங்கள் புத்தகங்களை முழுக்க இணையத்தில்தான் வாசிக்கிறேன், கையில் வெளிப்படையாக வைத்து வாசிக்க முடியாது” என்றார்.

இந்த உரையாடல்களில் ஒரு முறைமை இருக்கிறது. காணொளியில் சந்திப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நேரில் சந்தித்தால், அல்லது ஒரு காணொளியில் பலருடன் சேர்ந்து வந்திருந்தால் வாய் திறக்கவே வாய்ப்பில்லாத உள்முகமனநிலை கொண்டவர்கள். ஆகவே பேசுவதற்கு மூச்சுத்திணறுகிறார்கள். அதோடு சிலர் என்னை ஒரு கடுமையான மனிதராகவும் சிலர் எண்ணியிருக்கிறார்கள். ஆகவே அறிமுகம் கொஞ்சம் திணறல், கொஞ்சம் சங்கடமான சிரிப்பு. இயல்புநிலையை அடைய பத்துநிமிடமாகும்.

அதன்பின் கேள்விகள், உரையாடல். பலர் கேள்விகளைக் குறித்துவைத்திருந்தனர். சிலர் அக்கேள்விகளை அப்படியே மறந்துவிட்டுத் தத்தளித்தனர். இருபது நிமிட உரையாடலுக்குப் பின்னரே பேச்சு தீவிரமடைந்து முழுமையாக ஒன்றிக் கேட்கவும் பேசவும் செய்தனர்.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தன. பெரும்பாலும் இக்காலகட்டத்திற்குரிய பொதுப்பிரச்சினைகள்தான். ஆனால் பேச்சின் இறுதியில், சற்று தயங்கியபின் தனிப்பட்ட பிரச்சினைகளை சொன்னவர்களும் பலர் இருந்தனர். என் எண்ணங்களை அவர்களிடம் சொன்னேன்.

வெவ்வேறு வாழ்க்கைச் சிக்கல்களைப் பிரச்சினைகளை அணுக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு இது. தனிப்பட்ட முறையில் பேசுகையில் மட்டுமே உருவாக்கும் தொடர்புறுத்தல். இத்தனை பேசியும் எழுதியும்கூட இந்த தனியுரையாடல்களில், முன்பு நான் அறிந்திராத கேள்விகளையும் வாழ்க்கைச் சிக்கல்களையும் சந்தித்தபோது புதியதாக பலவற்றை யோசித்து முன்வைத்தேன்.

இதை இனி எவ்வகையிலேனும் தொடரவேண்டுமென எண்ணுகிறேன்.

முந்தைய கட்டுரைஅனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி
அடுத்த கட்டுரைதொழில்நுட்பம்