இந்து என உணர்தல் – மறுப்பு

இந்து என உணர்தல்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நீங்கள் எழுதிய இந்து என உணர்தல் கட்டுரை மற்றும் அதற்கு வந்த கடிதங்களைப் படித்தேன்.இணையவெளியில் இருப்பதால் இக்கட்டுரையைக் குறித்து பிறர் எழுதியதையும் தேடிப் படித்தேன்.இது குறித்து கிருஷ்ணனுடனும் விவாதித்தேன்.அவற்றினைக் குறித்து உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எண்ணினேன்.ஆனால் ஏற்கனவே மனு விவகாரத்தில் என் கருத்துக்காக உங்களைத் திட்டியவர்கள் இக்கடிதத்திற்காகவும் உங்களைத் திட்டக்கூடும் என்று தயங்கினேன்.ஆனாலும் இங்கு சில அடிப்படை விஷயங்களை பேச வேண்டிய தேவை இருப்பதை நான் உணர்ந்தேன்.ஆகவே வேறுவழியின்றியே இக்கடிதம்.

நீங்கள் எழுதும் புனைவு மற்றும் அபுனைவில் புனைவின் அடிப்படைகளையே புரிந்துகொள்ளாமல் அணுகி, தவறான கருத்துக்களை உருவாக்கி, அதை விவாதமாக்கும் நபர்களைப் பொதுவெளியில் தொடர்ந்து பார்க்கிறேன்.அதைப் புனைவை அணுகக்கூடிய அடிப்படைகளை அறியாமல் செய்யும் பிழை என எண்ணியிருந்தேன்.ஆனால் அவர்களே இக்கட்டுரையைப் போன்ற அபுனைவு எழுத்துக்களைக்கூட புரிந்து கொள்ள முடியாத சூழல் எவ்வாறு நிலவுகிறது என்பதை எண்ணியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் கிருஷ்ணனுடன் நான் சென்றபோது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலுக்கு விளக்கம் சொல்ல கிருஷ்ணன் கேட்ட பதில் கேள்வி பொதுவெளியில் அனைவரும் அறிந்ததாக அறிவியக்கத்திலிருப்பவர்கள் எண்ணும் சில அடிப்படைக் கருத்துருக்களைக்கூட அறியாமல் இங்கு சிலர் இருக்க முடியும் என்பதை உணர்த்தியது.அதே பிரச்சினை தான் இங்கும் நிகழ்கிறது .கொடூரம் என்னவென்றால் இங்கு இணையத்தில் பலர் அத்தகையவரே. அத்தகையவரின் குரலுக்கே இங்கு வீச்சும் அதிகம். ஒரு படுகேவலமான சிந்தனையை அது முன்வைக்கும் ஓசையழகை மட்டும் கவனித்து, அதன் பின்னால் வரக்கூடிய அழிவை அறியாமல், அதை உயர் அறிவெனக் கொண்டாடும் அறிவின்மையைப் பொதுச்சூழலாகக் கொண்ட தமிழகத்தின் பொதுமக்களுக்கு அவர்களே அறிவாளிகள்.அத்தகைய அறிவாளிகளுக்கான பதிலாகவே இக்கடிதம்.

இந்து என உணர்தலைப் பொறுத்தவரை அது நீங்கள் எழுதிய அபுனைவுக் கட்டுரை என்பதால் அதைப் புரிந்து கொள்ள எந்தக் கற்பனையும்‌ நுண்ணிய அம்சங்களைக் கவனிக்கும் திறனும் தேவையில்லை.ஆனால் அபுனைவு எழுத்தினைப் புரிந்து கொள்ளத் தேவையான அடிப்படைக் கருத்துநிலை நமக்கு தேவை. அதாவது எழுதப்படும் ஆசிரியன் எந்நோக்கில் அதை விரிக்கிறானோ அந்த நோக்குக்குரிய தரத்தில் புரிந்து கொள்ளக்கூடிய திறன் வேண்டும்.

எழுதப்படும் அபுனைவு எழுத்தினை எவ்வாறு எத்தரத்தில் புரிந்து கொள்வது என்பதற்கான கருத்துருவை புரிதலுக்காக நான்காக பொதுவாக வைக்கலாம்..

1.எழுத்தில் சொல்லப்படும் நிகழ்வுகளாக.

2.நிகழ்வுகளின் முரணியக்கத்தால் உருவாகும் சிந்தனையாக

  1. சிந்தனைகளின் முரணியக்கத்தால் உருவான தத்துவமாக

4.தத்துவத்தால் முடிந்தவரை சொல்ல முயலப்பட்டு எப்போதும் பெரும்பாலான நபர்களிடம் தோல்வி அடையும் அறிதலாக.

இந்நான்கும் நான்கு தரம் என்று வைத்துக்கொள்வோம்.உயர் தரத்துக்கான வரிசை என்பது மேலே சொல்லப்பட்டதன் தலைகீழ் வரிசையாகவே எப்போதும் அமையும்.

இந்நான்கு தரத்தில் ஒவ்வொன்றிலும் எதிராளி சொல்ல வருவதை நன்நோக்கில் புரிந்து கொண்டு எதிராளியினை விடச் சிறந்ததாகத் தன் தரப்பின் கருத்தினைச் சொல்லிப் பதிலளிக்க முயற்சிப்பவர்கள் முதல் தரமென்றால் திரித்தும் தானறிந்த சில உண்மையினை மறைத்தும் பழித்தும் பேசுபவர்கள் தரவரிசையில் கீழாகச் செல்வார்கள்.இதைப் பேச இது சமயமல்ல.எனவே இந்நான்கினை மட்டும் இங்கு காண்போம்.

1.நிகழ்வுகள்

எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்டவற்றை சமகால அல்லது கடந்தகால நிகழ்வுகளோடு இணைத்துப் புரிந்து கொள்ள முயற்சிப்பது முதல்வகையாக இருந்தாலும் தரத்தினைப் பொருத்தவரை நான்காம் தரமே.இத்தரத்தில்தான் இங்கு பெரும்பாலான எதிர்வினை வந்தது. இது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இதற்கு எதிரான வேறொரு நிகழ்வு கண்டிப்பாக இருக்கும். சிலவேளைகளில் மாற்றுக் கோணம் இருக்கும்.அவற்றை அறியாமல் முடிவெடுப்பது அறிதலின் பாதையில் அடியெடுத்து வைக்கும் செயலையே மறுப்பதாகும் .

எடுத்துக்காட்டுக்கு இந்து மதம் சாதிகளின் தொகுதி என்பதை இங்கு தத்துவக் கருத்தாக உருவாக்கி விட்டனர் என்பதால் அதையே எடுத்துக்கொள்வோம்.இது எவ்வாறு இங்கு உருவாகியது என்பதைக் கவனிக்கும் போது இங்கு தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்தன. சமூக அடுக்கில் கீழ் நிலையில் இருப்போரின் உழைப்பினால் உருவாகும் செல்வத்தினை மேலே இருப்போர் சுரண்டுவது பல்வேறு நிகழ்வுகள் மூலம் தெரிய வந்தது.இதற்கான காரணமாக இங்கு இருந்தது வர்ணமும் சாதியும். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் நவீன உலகின் விழுமியத்தின்படி இத்தகைய நிலை மோசமானது. எனவே அதை மாற்றும் சூழல் நடைபெற வேண்டும் எனில் வர்ணத்தையும் சாதியையும் அழிக்கப்படக்கூடிய நிகழ்வுகள் இங்கு நடைபெற வேண்டும்.

இந்நிலையில் இத்தரத்தில் நின்றே உங்கள் கட்டுரையினை மறுப்பவர் இம்மோசமான நிலைக்கு காரணமானதை அழிக்காமல் இம்மதத்தினை காக்க வேண்டிய தேவை என்ன எனக் கேட்கின்றனர்.அவர்களுக்குப் பதில் கூற முயற்சிக்கலாம்.இத்தரத்தில் நீங்கள் சொல்லியதை புரிந்து கொள்ள இயலாமல் அல்லது அரசியல் நோக்கில் திரித்தும் இழிவுபடுத்துவதும் நடைபெறுகிறது.அவர்கள் மூடர்கள்.அவர்களுக்குச் சொல்ல என்னிடம் எப்பதில்களும் இல்லை.

இந்து மதம் வர்ணத்தினையும் சாதியையும் உருவாக்கி பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மிகப்பெரும் மக்கள்திரளை துயருக்கு உள்ளாக்கியது என்பது மறுக்க முடியாத தரவுகளோடு கூடிய உண்மை. அப்படி துயருக்கு உள்ளாக்கியதை ஏன் இங்கு முன்னர் பின்பற்றினர்.அதுவும் மோசமான சொல்லாக கருதக்கூடிய சூத்திரன் போன்றதை பெருமைமிகு அடையாளம் போல சற்சூத்திரன் எனக் கல்வெட்டுகளில் பொறிக்குமளவு இருந்த நபர்கள் அனைவரும் முட்டாள்களா அல்லது நாம் இன்று காண முடியாத வேறு ஏதோ காரணி அன்று இருந்திருக்கலாமோ என்று யோசித்தாலே எதிர்தரவுகள் கிடைத்து விடும்.அதைவிடப் பார்வைக் கோணத்தினை மாற்றினால் கூட இதற்கான பதில் கிடைத்து விடும்.

நான்கு வர்ணத்திற்கும் தனித்தனி வேலைகளை ஒதுக்கி எளியவர்களை ஒடுக்கியதாகச் சொல்லும் இதே வர்ணாசிரம அமைப்புதான் சூத்திரனை ஆயுதம் எடுக்காமல் இருக்க வைத்துள்ளது.சிறுசிறு அரசாங்கங்களாக அமைந்த பழங்காலத்தில் ஷத்திரியனைத் தவிர மற்றவர்கள் போரிட வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், ஆயிரக்கணக்கில் போர்களங்கள் நிகழ்ந்தாலும் எதிரி நாட்டினர் உள்ளே புகுந்து கொள்ளையிடும் நிலை வரும்வரை இறப்பது முழுவதும் ஷத்ரியனே.பெரும்பாலும் போரில் தோற்ற ஷத்ரிய குழுக்கள் சூத்திரர் ஆவதும்,தங்கள் பலத்தினை திரட்டும் சூத்திர குழுக்கள் தங்கள் பகுதியின் வைசிய குழுக்கள் மற்றும் பிராமண குழுக்களின் உதவியோடு புதிய அரசுகளை அமைத்ததை, இப்போது கிடைக்கும் வரலாறு கொண்டே அறியமுடியும்.தன்னுடைய சமூகத்தினைப் பற்றி அம்பேத்காரும் அப்படித்தான் கூறியிருக்கிறார்.

தன் குழுவின் வலிமையினை வைத்து அரசாண்டபோது அடுத்தவன் உழைப்பினை எடுத்துக் கொண்டவனுக்கு தன்வலிமை குன்றி அடுத்தவன் ஆளும் போது என் உழைப்பினைச் சுரண்டுகிறான் என்று சொல்வதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?.மீண்டும் தன் சமூகத்தின் வலிமை அதிகப்படுத்தி அதிகாரத்தினைப் பெற முயல்வது நியாயம்.அதை யாரும் மறுக்க முடியாது.ஆண்ட காலத்தில் நால்வர்ணத்தின் நலனைப் பெற்றுவிட்டு சூழல் மாறி கடைநிலையில் இருக்கும்போது என்னை அம்முறையே கொடுமைப்படுத்தியது என்பது என்னைப் பொறுத்தவரை அறிவு நேர்மையல்ல.இதைப் படிக்கும் போது சிலருக்கு நான் கொடூரமான பிற்போக்கு சிந்தனையைக் கொண்டவன் என்று தோன்றும்.ஆனால் சுயமாகச் சிந்திக்கும் அனைவருக்கும் நான் சொல்ல வருவது புரியும்.

அப்படியெல்லாம் இந்தியாவில் சாதியும் வர்ணமும் மேல்கீழாக எல்லாம் மாறவில்லை இரண்டாயிரம் ஆண்டுகளாய் எங்களை ஆண்ட சாதிகளும் பிராமணரும் அடிமைப்படுத்தியது மட்டுமே உண்மை என்று எவராவது சொல்வார்கள் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளாய் இவர்களை காப்பாற்றும் பொருட்டு அரசு என்ற அமைப்பினை உருவாக்கி இவர்களில் ஒருவர்கூட தங்கள் உயிரை நாட்டுக்காக இழக்க தயாரில்லாமல் இருக்கும் சூழலில் மாற்று நாட்டினரிடம் இருந்து இவர்களையும் அரசையும் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைச் சிந்திய ஷத்ரிய குழுக்களுக்கும்,அவ்வாறு உயிரைக் கொடுப்பதற்கான கருத்துருவை சமூகத்தில் ஏற்படுத்தி அக்குழுக்களை வழிநடத்திய பிராமணக் குழுக்களுக்கும் அரசு எனும் அமைப்பின் பலனை எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறதுதானே. இங்கு விலையின்றி எதுவும் கிடைப்பதில்லை எனும்போது தொடர்ந்த நீதிமுறையற்ற கொந்தளிப்பான போர் மூண்ட எண்ணிறந்த வீரர்கள் இறந்த போர்காலமாகிய கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக‌ சண்டையே போடாமல் வாழ்ந்ததற்காக கொடுத்த விலை என்பது இதற்கான மாற்றுக் கோணம்.

கடந்த காலத்தில் எவ்வாறு நிகழ்ந்திருந்தாலும் ஒருமனிதன் இன்னொருவனைச் சமமாக நடத்தியதும் நடத்துவதும் கடந்த கால மற்றும் நிகழ்காலக் குற்றம் என்று ஏற்பதாயின் தனக்கு பிறர் செய்த சமமின்மையைத்தான் தான் ஒருபோதும் பிறருக்கு செய்யாமல் காப்பது நலம் .

இங்கு பலம் பொருந்தியவன் கீழிறங்குவதும் பலமற்றவன் பலம் அடைவதும் நிகழ்ந்து கொண்டே இருப்பதை அறிந்தவன் அவ்வாறு செய்யாவிடில் அதே சமமின்மையை காலமாற்றம் பிறர் மூலம் தனக்கு செய்வதை காலத்தால் உணர்வான்.ஆனால் அப்போதும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.இந்தச் சக்கரம் முடிவின்றிச் சூழன்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

2.சிந்தனையாக 

இரண்டாம் தரமான பல்வேறு நிகழ்வுகளின் வழியாக உருவாகும் சிந்தனையைப் பொறுத்தவரை சாதியும் வர்ணமும் இங்கு சிலருக்கு நன்மையும் பலருக்கு தீயவைகளையும் செய்திருக்கின்றன என்பதைப் போன்ற தோற்றம் வருவதற்கான பல்வேறு நிகழ்வுகள் உள்ளன.அவைகள் மட்டுமன்றி பிறப்பு முதல் இறப்புவரையிலான சடங்குகள் உணவு வாழ்விடம் எனப்பலவகையிலும் இந்து மதத்தின் சாதியும் வர்ணமும் வேறுபாடுகளைச் செயல்படுத்துகின்றன.எனவே புறச் செயல்பாடுகளான நிகழ்வுகளோடு கருத்துச் செயல்பாடான சடங்குகள் கற்க வேண்டிய நூல் வரை வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் இச்சிந்தனை ஒழிக்கப்பட வேண்டியது என்ற சிந்தனைக்கு வருகிறார்கள்.

இத்தரத்தில் வரமுயன்று தோற்ற கடிதத்திற்குத்தான் நீங்கள் பதிலளித்தீர்கள்.சிந்தனைகளைப் பொறுத்தவரை வேவ்வேறு வகையான சடங்குகள் முதல் பல்வேறு வகையான பிரிவினைகள் ஏன் இங்கு சாதியின் பொருட்டு உருவாகி நிலைநிறுத்தப்பட்டன என்று நோக்கும்போது குறைந்த பட்ச அறிதலுடையவன் இவைகள் ஒட்டுமொத்தச் சமூகமாக பல்வேறு குழுக்கள் ஒன்றிணையும்போது அக்குழுக்கள் அதுவரை கொண்டிருந்த சடங்குகள் மற்றும் மற்றவரிடமிருந்து வேறுபடும் காரணிகளை தக்கவைத்துக் கொள்ள அக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என எடுத்துக் கொள்வான்.என்னுடைய சடங்குகள் மற்றும் வழிபாடு மட்டுமே உயர்வானவை உன்னுடையவை தாழ்ந்தவை எனவே அவற்றினை ஒழித்து என்னுடையதைப் பின்பற்று என்று ஒருங்கிணைக்கப்பட்ட அனைவருக்கமான பொதுவானவையாக தன் சடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாற்றிய ஆபிரகாமிய மதங்களைப் போல இங்கும் ஏன் இல்லை என்பதே இவர்களின் குரல். நாம் நவீன அறிவியக்கம் இன்று அனைத்துக் குரல்களுக்குமான பல்குரல் தன்மையினைக் கொடுத்ததே நம்காலத்தின் சிறப்பென ஏன் சொல்கிறோம் என்பதையே அறியாத மூடத்தனம். தன் நம்பிக்கையினை செயல்பாடுகளை காத்துக் கொண்டு பல்வேறுதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் எது இணையும் புள்ளியோ அதில் இணைந்து முன்செல்ல அன்று முயன்றிருக்கின்றனர் என்பதே இதற்கான பதில்.

3.தத்துவத்தளம்

மூன்றாம் தரமான தத்துவத்தரத்திற்கு வருவதற்கு புறச்செயல்பாடுகளான நிகழ்வுகள் அவற்றின் முரணியக்கத்தினை வைத்து உருவான சிந்தனைகளின் முரணியக்கமாக இந்து மதத்தின் தர்மசாஸ்திரங்கள் வர்ணத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து வைப்பதற்கான கருத்தியல் கட்டமைப்பினை உருவாக்கி விட்டது .எனவே ஒழிக்கப்பட வேண்டியது.

இத்தரத்திற்கான பதிலைக் கூறவேண்டுமெனில் இது நீண்ட கடிதமாகிவிடும்.ஆகவே அதை பின்னர் எழுதுகிறேன்.

4.அறிதலின் தளம்

முதல்தரமான அறிதறிலின் தளத்தினைப் பொறுத்தவரை அனைவரையும் ஒன்றெனக்கருதாத தத்துவத்தினை விட மேம்பட்ட புதிய அறிதலை முன்வைக்க வேண்டும்.இத்தரத்தில் பேசுவதாகவே பலரும் சொல்லிக் கொள்வர்.ஆனால் இத்தரத்தினை அடைந்ததற்கான‌ எந்த அடையாளத்தையும் உங்களை எதிர்ப்பவர்கள் எழுதி நான் படித்ததில்லை.ஆகவே இதைப் பற்றியும் இங்கு எழுதப்போவதில்லை.

இந்தக் கட்டுரைக்கு வந்த கடிதங்களில் முதலிரு தரங்களில் மட்டுமே எதிர்வினைகள் வந்தன.நான்காம் தரத்தினை விடுத்து மீதமுள்ளவைகளில் பொருட்படுத்தத்தக்க கடிதமாக நீங்கள் பதில் சொன்ன கடிதம் மேலைநாட்டுச் சிந்தனைகளின் எதிர்சிந்தனை வடிவம்.எந்த எதிர்சிந்தனையும் அதன்நேர்ச் சிந்தனையில்லாமல் நிலைத்து நிற்கமுடியாது.அது மட்டுமல்லாமல் அவை எந்த இடங்களில் மட்டும் பயன்படக்கூடியவை என்பதற்கான தெளிவும் அங்கு உண்டு.அதை இங்கு எடுத்து பொதுச்சிந்தனையைப் போலப் பரப்பி தங்களை அறிஞர்கள் எனக் காட்டிக் கொள்கின்றனர்.

அத்துடன் சமூகத்தில் அறிஞர்கள் எனத்தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் ஆரம்பித்து வைத்து இன்று அறிவியக்கத்தையே அழித்துக் கொண்டிருக்கும் மோசமான பழக்கம் எதிராளியின் தரப்பின் பாதுகாப்பற்ற பகுதியையே குறிவைத்துத் தாக்கி வெற்றி பெற்று விடலாம் என எண்ணுதல்.மேல்பார்வைக்கு இத்தகைய தாக்குதலைத் தொடுத்தால் உடனடியாக வென்றது போலத்தான் தோன்றும்.எப்போதும் எந்தத் தரப்பின் பாதுகாப்பற்ற பகுதியாக இருந்தாலும் அதைக் கவனித்துப் புரிந்து கொள்ள நாம் உயர்வான எண்ணத்துடன் அணுகாமல் கீழ்மையுடன் மட்டுமே அணுகவேண்டிய தேவை ஏற்படும்.

அவ்வாறு தொடர்ந்து நிகழ்ந்தால் அக்கீழ்மை உயர்வானவற்றைப் பார்க்கும் பார்வையோ எது எதிர்த்தரப்பின் உச்சமோ அதை மீறி முன் செல்ல நம்தரப்புக்கு இருக்கும் வாய்ப்பினையோ அழித்து விடும்.ஆகவே குறைந்தபட்சம் எதிர்தரப்பாக இருந்தாலும் அவர்கள் சொல்ல வருவதன் உயர்ந்த அம்சத்தினை எதிர்ப்பதே மேம்படுவதற்கான வழி.அதை இங்கு பின்பற்ற பெரும்பாலும் யாரும் தயாரில்லை.கான முயல் எய்த அம்பை விட யானை பிழைத்த வேலை ஏந்தலே எப்போதும் உயர்வானது.அவ்வாறு யாராவது இக்கட்டுரையை எதிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அப்படியானால் இந்து என உணர்தல் எனும் இக்கட்டுரைக்கான எதிர்தரப்பின்‌ பதில் என்னவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை சொல்லுவது என் கடமையாகிறது.மனதளவில் நான் எதிர்க்கும் வெறுக்கும் தரப்பின் குரலாக இருப்பதற்கு நான் வழக்கறிஞராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.ஆகவே அக்கட்டாயத்தினை ஏற்று எந்தத் தரத்தில் அக்கட்டுரைக்கான மறுப்பு இருக்க வேண்டும் என்று மாற்றுத்தரப்பினை முன் வைக்கிறேன்.

இந்து மதத்தினைப் பற்றி இதற்கு முன் பிறர் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது சடங்குகளைப் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் இந்தியாவில் உருவான ஆன்மீகச் சிந்தனைகளைப்பற்றியும் இந்தியாவில் உருவான தத்துவங்கள் எந்த வகையில் உங்களுக்குத் தேவையானதாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அவற்றையே இங்கு எவரும் எதிர்த்து எதையும் கூறமுடியாதபோது இப்போது நீங்கள் இந்தக் கட்டுரையில் சொல்லும் அறிதலின் படிநிலையை புரிந்து கொள்வது மிகச்சிரமமே.

அந்தக் கட்டுரையில் நீங்கள் வைக்கக்கூடிய காரணங்களில் உச்சம் ஆழ்படிமம்.ஏன் உங்களுக்கு அது முக்கியமானதாக இருக்கிறது.படிமங்கள் என்பவை தான் அறிந்ததை அல்லது தான் உணர்ந்ததை முழுமையாக மற்றவர்க்கு உணர்த்த முடியாத மானிட வெளிப்பாடுகளின் போதாமையினால் இயற்கையின் நிகழ்வுகளின் துணை கொண்டு உவமைகளாக வெளிப்படுத்தியவை.அவை தங்கள் பணியைச் செவ்வனே செய்ததால் படிமங்களாகத் தங்களை நிறுவியவை.எனவே அப்படிமங்கள் அவ்வகை அறிதலின் சாத்தியத்தினை அடைந்த அது சொல்லப்பட்ட காலத்திலிருந்து காலம்தோறும் பல்வேறு சாத்தியங்களின் துணை கொண்டு விரிந்து சென்று ஆழ்படிமங்களாக மாறுகின்றன. ஆகவே அவை நீண்ட நெடிய விரிவுகளைக் கொண்டவை.ஒரு படைப்பாளியாக அறிதலைத்தேடும் ஞானதாகியான யாரையும் இந்த நீண்ட விரிவு கொண்டவைகள் ஈர்க்கவே செய்யும்.ஆகவே அவை உங்களைக் கவறுதல் இயல்பானதே.

அதேசமயம் படிமங்களை அறிதலின் வழிமுறையாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற விவாதத்தில் கிருஷ்ணன் அதற்கான சாத்தியம் உண்டு என்பதைச் சொன்னார்.உள்காட்சி மூலம் அதற்கான வாய்ப்புள்ளது என்றும் தான் முன்னர் எண்ணியதற்கு மாறான நிலை தற்போது தனக்கு ஏற்ப்பட்டதாகக் கூறினார்.அந்தக் கருத்துடன் எனக்கு எப்போதும் உடன்பாடே.ஆனால் கடமையின் காரணமாக அதற்கு எதிரான கருத்தினைக் கூறவேண்டியது கட்டாயமாகிறது.எனவே என் கருத்தினை நான் மேலே சொன்னவாறே நான்கு தரத்திலும் ஆழ்படிமங்களை மறுப்பது எப்படி என்று கூறுகிறேன்.அதற்காக நான் ஆழ்படிமங்களுக்கு எதிராக நவீனப்படிமத்தினை முன் வைக்கிறேன்.

1.நிகழ்வுகளின் அடிப்படையிலான மறுப்பு.

படிமங்கள் என்பவை என்று அந்தப் படிமங்கள் ஆரம்பமாகிறதோ அக்காலத்தின் அறிவுக்கு உட்பட்டவையே.ஆகவே அறிவு வளரும் தோறும் முன்னர் இருந்த நிலையில் இருந்தவை தவறெனக் காலத்தால் உணரப்படும்.அவ்வாறு இருக்கும் நிலையில் முன்னர் இருந்த படிமங்கள் காலத்தால் வரும் அந்த வளர்ச்சியை அடைய முடியாததால் ஏற்றுக் கொள்ளப்படமுடியாதவைகளாக மாறுகின்றன.

எடுத்துக்காட்டாகக் கூறவேண்டும் என்றால் நெருப்பினை நெய்யுற்றி வளர்க்க முயன்றாலும் வளராத நெருப்பினைப் பற்றிய படிமத்தினை எடுத்துக்கொள்வோம்.இப்படிமம் கூறப்பட்ட காலத்தில் நெருப்பினை வளர்ப்பதற்குரிய அதிகப்படியான எரிதல் திறன் கொண்டது எண்ணெய்கள் தான்.ஆகவே அவைகளை வைத்து இப்படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.மனித உணர்ச்சிகள் பற்ற வேண்டிய நேரத்தில் பற்றாமல் இருக்கும் நிலை எனும் இயற்கையின் பெருவிந்தைக்கான மிகச் சிறந்த படிமம் அது என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

ஆனால் காலப்போக்கில் நாம் இன்று நெருப்பினைப் பற்ற வைப்பது மட்டுமல்லாமல் எவ்வளவு துல்லியமாக நம்முடைய தேவை இருக்கிறதோ அத்தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கான நெருப்பினை உருவாக்கும் திறன் பெற்று இருக்கிறோம்.ஆகவே இன்று நெருப்பினை உணர்வுகளோடு சம்பந்தப்படுத்தும் இப்படிமம் தவறானதாகவே தோன்றும்.இதற்குப் பதிலாக நவீனப் படிமமான நெருப்பு தொட்டால் பற்றியெழும் எரிவாயு என்பதைக் கொள்ளலாம்.

ஆகவே குறிப்பிட்ட காலத்தில் சொல்லப்பட்ட படிமங்கள் அக்காலத்தில் சரியானதெனக் கருதப்பட்டாலும் காலமாற்றத்தால் வரும் மாற்றங்களால் தவறான புரிதலைக் கொண்டதாகக்கூட மாறக்கூடும் .எனவே படிமங்களை ஆழ்படிமங்களாக கருதுவதே அடிப்படையில் தவறானவை.

2.சிந்தனை அடிப்படையிலான மறுப்பு.

சிந்தனை ரீதியாக ஆழ்படிமங்களுக்கு எதிரானது என்ன எண்ணி அதைப்பற்றி கிருஷ்ணனிடம் விவாதித்தபின் நான் உணர்ந்தது உறைபடிமம்.இந்தச் சொல் அதற்குச் சரியான கலைச்சொல் அல்ல.வேறு ஏதேனும் கலைச் சொல் அதற்கு இருக்கக் கூடும்.எனக்கு அது தெரியவில்லை.எனவே இச்சொல்லை நானே உருவாக்கி இருக்கிறேன்.

என் பார்வையின் படி மரபு பயன்படுத்தும் பழைய படிமங்களை ஆழ்படிமம் உறைபடிமம் என இரண்டாகப் பிரிக்கலாம் என எண்ணுகிறேன்.உறைபடிமம் என நான் கூறுவது காலத்தினால் சொல்லப்படும் சூழலினால் திட்டவட்டமான பொருளைக் கொடுப்பதற்கான படிமங்களாகவே பயன்படுத்தப்பட்டவை.இவைகளுக்கான விளக்கத்தினை விரித்துச் சொல்லவோ மாற்றவோ கூடாதென்பவை. ஆழ்படிமங்களுக்கு முற்றிலும் எதிரானவை.மாற்றமின்றியே தன்னுடைய படிமங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தனக்குப் பின்வரும் நபர்களுக்குக் கட்டளை இடுபவை.பழைய படிமத்திற்கான புதிய விளக்கத்தினை திரிபுவாதம் என ஒதுக்கித் தள்ளக்கூடியவை.

சில நேரங்களில் ஆழ்படிமங்கள் அரசியலின் பொருட்டோ மொழியின் பொருட்டோ பண்பாட்டின் பொருட்டோ ஆழ்படிமத்தின் காலத்தினை அது கடந்து வந்த விரிவினை இன்னும் அடையப்போகும் விரிவு அத்தனையும் மறுத்து,எது தற்காலத் தேவையோ அதன் பொருட்டு அப்படிமத்தின் தேவையான பகுதிகள் மட்டும் சுட்டிக் காட்டப்பட்டு அவை புனிதமாக்கப்பட்டு உறை படிமமாக மாற்றப்படுக்கூடும்.

எடுத்துக்காட்டாக இந்திய தத்துவ மரபின் அனைத்து தரப்புகளுக்கும் ஏற்ப்புடைய படிமமான தாமரையினை எடுத்துக் கொள்ளலாம். தவிர்க்கவே இயலாத படிமம் அது.அப்படிமத்தினை இன்னும் உறைபடிமாக மாற்றும் கொடூரத்தினை இன்னும் நல்வேளையாக பாஜக செய்யவில்லை.ஒருவேளை செய்தால் நிகழப்போவதை எண்ணிப் பாருங்கள்.

ஆழ்படிமாக நீங்கள் தாமரையினைக் கூறும் போது அது வேதத்தில் எங்கு சொல்லப்பட்டது எனத்தொடங்கி அது பின்னர் எவ்வாறு தங்களுக்குரியதாக ஒவ்வொரு தத்துவ மரபும் அதற்குரிய விளக்கத்தினை கொடுத்தன என்பதையும் அறிந்து அவர்கள் கூறியதற்கு மேல் நீங்கள் கூறவிரும்புவதைக் கூறுகிறீர்கள்.இதனால் அப்படிமம் வளர்கின்றது என்பது உண்மை.ஆனால் அரசியலுக்காக அதை உறைபடிமாக மாற்றிவிட்டால் இத்தகைய விரிவுகளுக்கு அங்கு இடமே இல்லை.ஆழ்படிமங்களை உறைபடிமமாக மாற்ற பெரிய முயற்சி தேவை என்பதும் இல்லை.

வரலாற்றினைக் கவனித்துப் பார்த்தால் ஆழ்படிமங்கள் புனிதப்படுத்தப்படுவதன் மூலமாக உறை படிமங்களாக மாற்றப்படுவதையும் உறை படிமங்கள் படைப்பாளிகள் படைப்பாற்றலால் ஆழ்படிமங்களாக மாற்றப்படுவதையும் அறிய முடியும்.அதனால் எது உண்மையான ஆழ்படிமம் எது உண்மையான உறைபடிமம் என்பதினை கண்டறிவதே இவ்விவகாரத்தில் முதன்மைச் சிக்கலாக இருக்கிறது.

தான் அறிந்ததை திட்டவட்டமாகச் சொல்லி அது மாற்ற இயலாதது என உறைபடிமமாகப் பயன்படுத்தியவனின் படிமத்தினை அவனுக்குப் பின்வந்த படைப்பாளி யாரேனும் ஆழ்படிமமாக மாற்றி இருக்கலாம்.அவ்வாறாயின் அது அப்படைப்பாளியின் ஆழ்படிமமே தவிர உறைபடிமத்தின் ஆழ்படிமம் அல்ல என்பது இதன் முதன்மைச் சிக்கல்.இதற்கும் இந்து என உணர்தலுக்கும் இங்கு தொடர்பில்லை என்பதால் இதை அப்படியே விட்டுவிடலாம்.ஆனால் இச்சிக்கல் இருப்பதை மறுக்க இயலாது.

இங்கு ஆழ்படிமத்தினை உறைபடிமமாக மாற்ற இயலா வண்ணம் மட்டுமல்ல உறைபடிமத்தினை ஆழ்படிமமாக மாற்ற இயலாவண்ணம் செய்வதற்குரிய வழிமுறைகள் உருவாக்கப்படவேணடும்.

ஆழ்படிமங்களை உறைபடிமமாக மாற்றுவதன் மூலம் உயர்வானவையும் நீண்ட அறிவியக்கப் பின்ணனி கொண்ட படிமம் மோசமானதாக மாற்றப்படுவது கொடுமை என்றால் உறைபடிமமாக இருப்பது ஆழ்படிமமாக மாற்றப்படுவது அதைவிடக் கொடுமை.இக்கொடுமைகளைக் களைதலுக்கான காரணிகள் இங்கு பேசப்படவேண்டும்.

படிமங்கள் மானுட அறிதலின் மிக முக்கியமான அம்சங்கள்.அவைகளை அறிந்ததாக எண்ணி நாம் நம் சிந்தனையை முன்வைத்துச் செல்லும்போது ஆழ்படிமங்கள் காலம் தாண்டியும் விரிவைக் கொடுப்பதாக பல்குரல் தன்மையை ஆமோதிப்பதாக மானுட அறிதலை ஒரடி முன்வைத்து செல்ல உதவுவதாக இருக்கும்போது சரியான விளைவினைக் கொடுக்கக்கூடும் ஆனால் அவைகள் உறைபடிமமாக மாற்றப்பட்டால் மோசமான விளைவினைக் கொடுக்கக்கூடும்.இங்கு படிமங்களாகச் சொல்லபபட்டவை அனைத்தும் ஆழ்படிமங்களே என்றே எண்ணிக் கொண்டிருக்கிறோம்.இத்தகையது ஒன்று உள்ளது என்பதைப் பற்றி நாம் கவனிக்கவில்லை.

எனவே ஆழ்படிமங்களைப் பொறுத்தவரை அவை படைப்பாளிக்கும் அறிதலின் பொருட்டு இருப்பவனுக்கும் பயன்படக்கூடும்.ஆனால் அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?. ஆயிரத்தில் ஒன்று இருக்கக்கூடும்.அவர்களுக்காக இந்த ஆழ்படிமங்களை அனுமதிப்பதாயின் இங்கு அவை உறைபடிமமாக மாற்றப்படும் போது அல்லது சாதாரண மக்களின் அறிவின்மையால் உறைபடிமமாக தவறாகப் புரிந்து கொள்ளப்படும் போது வரும் அழிவுகளுக்கு யார் பொறுப்பாவது?.கூடவே உறைபடிமமாக இருந்து காலத்தால் தள்ள வேண்டியதை ஆழ்படிமமாக எண்ணி பின்சென்று அவை பயன்படாததை அறிந்து திரும்ப மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டுவதாயின் ஏற்பட்ட கால இழப்புக்கு என் செய்வது.எனவே இவைகளுக்கான தெளிவு இங்கு உருவாகும்வரை இத்தகைய ஆழ்படிமங்களை இந்து என உணர்தலுக்கு முன் வைப்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே குறைந்த பட்ச எதிர்வாதம்.

3.தத்துவம் சார்ந்த மறுப்பாக

படிமங்கள் ஆழ்படிமங்களாக உருவாக நீண்ட காலம் தேவைப்படுகிறதென்பதை கருத்தில் கொண்டு பாரக்கும்போது காலத்தால் அந்தப் படிமத்தின் தேவை தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் மட்டுமே அவ்வாறு ஆகமுடியும். அவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் படிமம் அதன் நீண்ட கால பயன்பட்டினால்தான் மதிப்பிடப்படுகிறதே தவிர அது ஆரம்பகாலத்தில் இருந்து மானிடர்களுக்கு உணர்த்தியதையும் அதில் நடந்த மாற்றங்களையும் இன்றும் அதன் தேவை என்ன என்று முழுமையாக அனைவருக்கும் உணர்த்தி மானுட சிந்தனை வரலாற்றில் இது சிறந்த படிமம் என்பதைச் சொல்லி நிறுவப்படுவதில்லை.ஆகவே அப்படிமங்கள் நிகழ்கால நோக்கில் அவற்றைவிடச் சிறப்பான நவீனப் படிமங்களால் மாற்றப்படுவதற்கான சாத்தியங்கள் உடையவை.நவீனப் படிமங்கள் பழைய படிமங்களை விடச் சிறப்பானதாக அமையும் என்பதற்கு மேலே சொன்ன நெருப்பு படிமத்தின் வழியாகக் அறியலாம்.

இன்று இருக்கும் நவீன எரிபொருளான எரிவாயுவினை படிமமாக எடுத்துக் கொள்வோம். நெருப்பு தன் நுனியால் தொட்டால் பற்றிக்கொள்ளுமளவு இருக்கும் இந்தப் படிமம்தேவையான பொழுது பற்றியெழாத ஆழ்படிமத்திற்கு முற்றிலும் எதிரானது.ஆனால் இன்றிருக்கும் சூழலுக்கு மிகப் பொருத்தமானதாகவே இருக்கிறது.எண்ணியதை நிறைவேற்ற அன்று எவ்வாறு தன் அகத்தினை செயல்படுத்துவது என்று தெரியாததாக இருந்த சமூகம் இன்று தொட்டால் பற்றியெரியும் அளவுக்கான எதிர்வினைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.இவைகளுக்கு பெரிய உதாரணம் கொடுக்கத் தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.

அறிவைக் கொண்டு எரிபொருளின் தரத்தினை உயர்த்தியது போல் உணர்வுகளைத் தூண்டும் காரணிகளையும் காலப்போக்கில் கண்டறிந்திருக்கிறோம்.அந்தக் காரணிகளைக் கூர் தீட்டவும் இங்கு பயின்றிருக்கிறோம் என்றிருக்கும்போது ஆழ்படிமத்தினை விட காலத்தால் உருவான நவீனப்படிமங்களே மனிதனின் அறிதலை அடுத்தவருக்கு கடத்துவதில் முதன்மை இடத்தினைப் பெறமுடியும்.

4.அறிதலின் மறுப்பாக

ஆழ்படிமங்களை விடச் சிறந்ததாக நவீனப் படிமங்கள் சமகாலத்தில் இருக்கும் மனிதனுக்கு தான் சொல்ல வருவதைக் கடத்த முடியும் என்பதை அறிதலின் தரப்புக்கான மறுப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதற்குச் சான்றாக ஏற்கனவே தத்துவத்திற்குச் சொன்ன அதே படிமத்தினை எடுத்துக் கொள்வோம்.

அந்தப் படிமமான எரிவாயு என்பது மனிதர்களின் இன்றைய நடவடிக்கைகளுக்கு எவ்வாறு ஒன்றுகிறது என்பதைப் பார்க்கும்போது எந்த ஆழ்படிமத்தையும் விடச் சிறப்பானதாக இதுதான் சிறந்த படிமம் என்று உணரமுடியும்.

எரிவாயு சில இடங்களில் இயற்கையாகவே கிடைக்கிறது.மனித இனத்திலும் எக்கணத்திலும் தன் மூர்க்கமான நடத்தைகளைக் காட்டும் சில குழுக்கள் இருக்கின்றன.திரவ நிலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயினைப் பிரித்தெடுப்பதில் மிக எளிதான வெப்பநிலைக்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு புறச் சூழலுக்கு மாறாக அழுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே எரிவாயு திரவமாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்படுகிறது.அதைப் போலவே சமூக மற்றும் அரசின் நடவடிக்கைகள் எனும் அழுத்தத்திற்கு ஏற்பவே இங்கு பெரும்பாலான மக்கள் அடங்கியிருக்கின்றனர்.எங்காவது சிறு இடைவெளி கிடைத்தாலும் வெளிப்படத் தயாராக இருக்கின்றர்.அப்படியான வாய்ப்பு அமையும் போது பற்றிக் கொள்வது மட்டுமின்றி முற்றழிவுக்கும் தயாராக இருக்கின்றனர்.இவர்களைப் பயன்படுத்தி தனக்கு வேண்டுமான வெப்பத்தினை உருவாக்கப் பயன்படுத்தும் அறிவினை இன்றைய அரசியல்வாதிகள் அமைப்புகள் கொள்கைகள் சரியாக எந்த அளவில் இந்த எரிவாயு மாதிரி மக்களின் கோபம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்கின்றன.தனக்கு கிடைத்த மக்கள் எனும் எரிவாயுவினை நல்வழியில் பயன்படுத்தி பல அரசுகளும் அமைப்புகளும் கொள்கைகளும் செயல்படுகின்றன.முற்றழிவுக்குப் பயன்படுத்த முடியுமா என்று சில அரசுகளும் அமைப்புகளும் கொள்கைகளும் செயல்படுகின்றன.எரிவாயுவினால் நடக்கும் விபத்திற்கு எரிவாயுவினைக் குறைகூற முடியாததைப் போல பல பேரழிவுகளுக்கு மக்களைக் குறை கூறவே முடியாத சூழலே நிலவுகிறது.சரியான திட்டமிடுதலுடன் அப்பேரழிவுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் அல்லது அமைப்பு அல்லது கொள்கை பின் இருப்பது சற்று கவனித்தால் தெரிய வரும்.

இத்தனை ஒற்றுமைகளையும் வைத்துப் பார்க்கும்போது ஏற்கனவே இருக்கும் தேவையான பொழுது பற்றியெழா நெருப்பெனும் ஆழ்படிமத்தினை விட இன்றைய மனிதகுலத்தின் மனப்பான்மையினைக் அடுத்த மனிதனுக்கு சொல்லால் கூற இயலாதவற்றைக் கொடுக்கச் சிறந்தது நெருப்பு தொட்டால் பற்றியெழும் எரிவாயு எனும்‌ நவீனப் படிமமே. நான் கூறியது சிலவே.இதை இன்னும் விரித்து பெரும் அறிதலாக மாற்றிக் கொள்ள இன்றிருக்கும் எளிய மனிதனால் கூட முடியும்.ஆரம்ப கால எரிபொருளிலிருந்து அவன் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.எனவே அறிதலின் நோக்கில் குறைந்த கால அளவில் அதிகப்படியான அறிதலைக் கொடுக்கச் சாத்தியம் உள்ளது நவீனப் படிமமே.

இவைகளே மாற்றுத்தரப்பாக நான்கு தளங்களுக்குமான வாதங்கள்.இத்தகைய தரத்தில் எவராவது இந்தக் கட்டுரையை எதிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இதையெல்லாம் இங்கு இணையத்தில் எவரிமும் எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய இணைவாசிப்புக் குழுமத்தில் சுராவின் மேடைப்பேச்சின் வடிவத்தினை விவாதிக்க எடுத்தோம்.அதில் அவர் மாற்றுத்தரப்பினை நோக்கி விவாதிக்க அழைத்த அழைப்பு இன்றும் அப்படியே பொருந்துவதாக நண்பர்கள் கூறினார்கள்.அவர் கூறியவற்றையே இன்னும் கூர்மையாக நீங்கள் கூறுவதாகவும் கூறினார்கள்.அன்று அவருக்கு விவாதிக்கச் சரியான எதிர்த்தரப்பு அமையவில்லை.அன்று அவருக்கு வாய்த்தது போலவே இன்று உங்களுக்கும் எதிர்தரப்பாக வாய்த்த நபர்களும் சரியான எதிர்வினையைக் கொடுக்கத் தயார் இல்லை.அந்த வகையில் உங்கள் ஆசிரியருக்கு வாய்த்த சரியான கருத்தியல் எதிரிகள் இல்லாத கெடுவாய்ப்பே உங்களுக்கும் அமைந்திருக்கிறது.அது வாசகர்களாகிய எங்களுடைய தீயுழ்.வாழ்வின் உயர்தருணங்களைத் தொட்டுக் காட்டிச் செல்ல வேண்டிய படைப்பாளிகளை அடிப்படைகளை விளக்க வைப்பது கொடூரம்.அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இதை மாற்ற முடியாது.வாங்கி வந்தது அவ்வளவுதான் என்று வாசகர்களாகிய நாங்கள் முன்செல்ல வேண்டியதுதான்.

இப்படிக்கு,

அந்தியூர் மணி.

இந்து என உணர்தல்- கடிதம்

இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்

இந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.

யோகம்,ஞானம்

முந்தைய கட்டுரைஆனந்த சந்திரிகை,வெண்முரசு
அடுத்த கட்டுரைபறக்கும் வெயில்- சக்திவேல்