பாலையாகும் கடல்- கடிதம்

பாலையாகும் கடல்- கடலூர் சீனு

அன்புள்ள ஜெ,

கடலூர் சீனு சொல்கிற புலால் அடிமைத்தனத்தை நான் என் அலுவலகத்திலேயே பார்த்திருக்கிறேன். ஊழியர்களிடையே பேச்சு என்பது பாதிநேரம் சாப்பாட்டைப் பற்றியும் மீதிநேரம் சினிமாவைப் பற்றியும்தான் இருக்கும். போனவாரம் சாப்பிட்ட ‘பக்கெட் பிரியாணி’ பற்றியோ அடுத்தவாரம் சாப்பிடப்போகும் ‘தலப்பாகட்டி’ பற்றியோ. ‘மெக்டி’ யா ‘கேஎ∴ப்சி’ யா எந்த சிக்கன் சிறந்தது? இந்தவாரம் அதிக தள்ளுபடியில் சிக்கன் பர்கர் தரப்போவது யார்? யார் யாரிடமிருந்தெல்லாம் இன்னும் ‘ட்ரீட்’ பாக்கி இருக்கிறது? பிரிவில் யாராவது புதிதாகச் சேர்ந்தால் அந்த ஊழியர் ‘ட்ரீட்’ தரவேண்டும். வெளியே போவதாக இருந்தாலும் அதே சட்டம். இதுதவிர மாதாந்திர, பிறந்தநாள், திருமணநாள் ‘ட்ரீட்’ கள் தனி. ‘ட்ரீட்’என்றால் புலால் உணவு மட்டுமே.என்னைப் போன்ற சைவப்பிராணிகளுக்கு அங்கு இடமில்லை என்றாலும் எப்போதும் இந்தப்பேச்சே காதில் விழுந்துகொண்டிருப்பது எரிச்சலையே உண்டுபண்ணும். ‘கவுச்சி இல்லாம சாப்படவே பிடிக்காது’ என்று மகனையோ, கணவனையோபற்றி பெருமையடித்துக் கொள்ளும் பெண்களைத்தானே அதிகம் பார்க்கிறோம். இந்த வெறி ஓரளவு தணிவது புரட்டாசி மாசத்திலும், சபரிமலை சீசனிலும்தான்.

சீனு சொன்ன ‘சீஸ்பைரசி’ படம் பார்த்தேன். சூழலியல் கொள்ளை நடத்தும் மீன்பிடி மாஃபியாவின் திருவிளையாடல்களை அம்பலப்படுத்துகிறார் இயக்குனர் அலி, அவரால் முடிந்த சிறிய அளவில். தன் கண்ணைக் குத்திக்கொண்டு குருதிகொப்பளிப்பதைப் பார்த்து ஆனந்தமடையும் மனிதனைப் பார்த்த அனுபவம்தான் எனக்கு. குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் பயன்படும் ‘ட்ராலர்'(Trawler) வலைகள் கடல்தளத்தையே நாசம் செய்யக்கூடியவை. பவளப்பாறைகள் எல்லாம் சுரண்டி எறியப்பட்டு ஒரு நாட்டின் நிலப்பரப்பளவேயான கடலடி மொட்டை நிலங்கள் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. மேலும் ‘பைகேட்ச்’ என்பது குறிப்பிட்ட (டுனா போல) மீன்களைப் பிடிக்கும் போது மாட்டும் வேறுவகை மீன்கள். அவைகளைக் கொன்று கடலுக்குள்ளேயே வீசியெறிகிறார்கள். அவர்கள் கொடுக்கிற புள்ளிவிவரங்கள் மலைப்பூட்டுகின்றன, எல்லாமே லட்சக்கணக்கில்.

இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பினால் மிகவும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் ‘∴பைட்டோபிளான்க்ட்டன்’ (Phytoplankton) என்னும் கடல்வாழ் நுண்ணுயிரி இல்லையேல் ஒட்டுமொத்த மனிதகுலமும் பெரும் கேள்விக்குறிதான். நமக்குக் கிடைக்கும் பிராணவாயுவின் பெரும்பகுதி ‘∴பைட்டோபிளான்க்ட்டன்’ என்னும் இந்தக் கடல்வாழ் நுண்ணுயிரிலிருந்தே கிடைக்கிறது, அதாவது அமேசான் காடுகளிலிருந்து கிடைப்பதைப்போல பலமடங்கு. மழைமேகங்களை உற்பத்திசெய்வதில் பெரும்பங்கு வகிப்பவை இந்த நுண்ணுயிரியே. நிலத்தில் இருக்கும் தாவரங்களைப்போலவே ஒளிச்சேர்க்கை செய்வதால் இவைகளுக்கு சூரிய ஒளி அவசியம். அதனாலேயே கடல் மட்டத்திலிருந்து இருநூறு மீட்டர் ஆழத்திற்குள் வாழக்கூடியவை. கடல்வாழ் உயிரினங்களின் கழிவுகளை மறுசுழற்சி செய்து பிற கடல்வாழ் தாவரங்களுக்கு உணவாக்குவதும், கடலுக்குள்ளே நிலவும் உணவுச் சங்கிலி உடையாமல் காப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவைகளை அழிப்பது தற்கொலை தவிர வேறில்லை.

நிலமோ, விண்வெளியோ, கடலோ மனிதன் குப்பைபோடாத இடம்தான் ஏது? காலாவதியான ராக்கெட்டுகள் வெறுமனே பூமியைச் சுற்றிக்கொண்டிருப்பதைப் போல அங்கங்கே இவர்கள் கழித்துக்கட்டிய வலைகளும் நெகிழிக் கழிவுகளும் பெரும்திட்டுக்களாக கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன. அதுபோக இந்த மீன்பிடி மாஃபியா கும்பலில் வேலைசெய்யும் பெரும்பாலானவர்கள் கொத்தடிமைகள். படகில் ஏறிவிட்டால் அவர்கள் கரையைக் காண்பதுவரை நிச்சயமில்லை. அவர்கள் கொல்கிற மீன்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நடுக்கடலில் நடக்கும் மனிதக்கொலைகள் யாரும் அறியாதவை.

ஜப்பான், சோமாலியா, ஹாங்காங், டென்மார்க் என்று அந்தந்த நாடுகளின் சூழியல் சுரண்டல்களைக் காணும்போது ‘உங்களையலாம் ஏண்டா இன்னும் சுனாமி தூக்கல?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஏதாவது நடந்து கடல் தன்னைக் காத்துக்கொண்டால்தான் உண்டு போல. அவர்கள் சொல்லும் புள்ளிவிவரங்கள் ஒருவேளை பாதி உண்மையாக இருந்தாலும் பதறவைக்கக் கூடியவை. விளம்பரங்களில் காரட் நிறத்தில் காணப்படும் ‘சால்மன்’ மீனின் துண்டுகளுக்கு அந்த நிறத்தைக் கொடுப்பது அந்த மீன் பண்ணையில் அவர்கள் மீனுக்கு உணவாக அளிக்கும் செயற்கை நிறமூட்டிகளே. ‘சுகாதாரமான கடல் உணவு’ என்ற வில்லையை வாங்குவதற்கும், மீன்பிடித்தடை உள்ள இடங்களில் மீன்பிடிக்கையில்,  காவல்துறையை வேறுதிசையைப் பார்க்கவைக்கவும் பெரும்பணம் கையூட்டாக அளிக்கப்படுகிறது. யார் கண்டார்கள்? நாளை இந்த நாசகாரக் கும்பல் விஞ்ஞானிகளையே விலைக்கு வாங்கி ‘ஃபைட்டோபிளான்க்ட்டன்கள்’ ளும், பவளப்பாறைகளும்தான் சூழியல் அழிவுக்கே காரணம், எனவே அவற்றை ஒழிப்பதற்கு ஆழ்கடல் மீன்பிடிப்புதான் ஒரேவழி என்று சொல்லச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் ‘நாற்பது வயதிற்குமேல் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது’ என்று கூறியிருந்தார். அட, அது கூட வேண்டாம், எல்லோரும் வாரத்திற்கு ஒருநாளைக்கு மேல் மீன் சாப்பிடுவதைத் தவிர்த்தாலே ‘மூலவளம் குன்றா சார்பு நிலை மீன் பிடி’ யை நோக்கிவைக்கும் உறுதியான முன்னெடுப்பாக இருக்கும். மனதுவைத்தால் முடியாதா என்ன?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன் 

முந்தைய கட்டுரைவண்ணக்கடலின் அருமுத்து கர்ணன்: இரம்யா
அடுத்த கட்டுரைவிருது – கடிதங்கள்