நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா

இன்று, 29-12-2007ல் நாஞ்சில் நாடன் அறுபது நிறைவு, நூல் வெளியீட்டுவிழா. நாகர்கோயில் ஏபிஎன் பிளாசா அரங்கில் ஆறுமணிக்குத் தொடங்கியது. தலைமை வகித்த எம்.எஸ்., “கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக எனக்கு இலக்கிய உலகோடு பரிச்சயம் உண்டு. ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ஒரு பெரிய கௌரவம். அதிலும் நான் என் தம்பியைப்போல எண்ணிவரும் நாஞ்சில் நாடனுக்கு அறுபதாண்டு நிறைவு விழாவில் இந்த வாய்ப்பைப் பெறுவது நெகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார். “ஏறத்தாழ முப்பதாண்டுகளாக எனக்கும் நாஞ்சில் நாடனுக்கும் நெருக்கமான உறவு உண்டு. நிறைய பேசியிருக்கிறோம். அவரது நாவல்களை நான் கைப்பிரதியைப் படித்து ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன். இந்தத் தருணத்தில் நிறைய நினைவுகள் வருகின்றன. அவரை மனமார வாழ்த்துகிறேன்.” என்றார்.

அறிமுக உரை நிகழ்த்திய நெய்தல் கிருஷ்ணன், “எனக்கும் நாஞ்சில் நாடனுக்கும் முக்கியமான பொது அம்சம் உண்டு. நாங்கள் ஆற அமர ருசித்துச் சாப்பிடுபவர்கள். என் ஆகிருதியே அதற்குச் சான்று” என்றார். நாஞ்சில் நாடனின் எழுத்துகளையும் அவரது இலக்கியப் பங்களிப்¨ப்பம் விரிவாக எடுத்துரைத்தார்.

அதன்பின் தேவதேவன் வெளியிட நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதியை நாவலாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நாஞ்சில் நாடனுக்கு எம்.எஸ் மலர்மாலை அணிவித்து வாழ்த்தினார். திருமதி சந்தியா நாஞ்சில் நாடனுக்கு வேதசகாயகுமாரின் மனைவி வான்மதி கௌசல்யா மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “நாஞ்சில் நாடனின் முக்கியமான சிறப்பு, அவர் ஒரு குறிப்பிட்ட காலத்துடன் நின்றுவிட்டவரல்ல என்பது. அவர் அவருக்கு அடுத்த தலைமுறையினருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். இளம் எழுத்தாளனாக நான் இருந்தபோது என் முதல் சிறுகதைத் தொகுதியான ‘பிறிதொரு நதிக்கரை’யை அவர்தான் வெளியிட ஏற்பாடுசெய்தார். இந்த அம்சத்தை அவரது படைப்புலகிலும் காணலாம். அவரது சமகால படைப்பாளிகள் தங்கள் காலத்துடன் நின்றுவிட்டபோது நாஞ்சில் நாடன் இளம்படைப்பாளிகளுக்கு நிகராக அவர்களின் உலகுக்கு வந்து தன்னை முழுமையாகப் புதுப்பித்துக் கொண்டார். இன்றைய நாஞ்சிநாடன் படைப்புகளில் அவரது நடை மேலும் செறிவானதாக மாறியுள்ளது,” என்றார்.

தொடர்ந்துபேசிய விமரிசகரும் கவிஞருமான க.மோகனரங்கன், “நான் இலக்கிய உலகுக்கு வந்த காலத்தில் தமிழில் பின்நவீனத்துவம், பின்அமைப்பியல் மாய யதார்த்தம் போன்றவை பேசப்பட்டன. வடிவச் சோதனை செய்யாத படைப்புகளை பிற்பட்டவையாக அலட்சியம் செய்யும் மனநிலை இருந்தது. நானும் அவ்வகைப்பட்ட எழுத்துகளை கூர்ந்து படித்தபடி நாஞ்சில் நாடனை ‘வெறும்’ யதார்த்தவாதி என புறக்கணித்தபடி இருந்தேன். ஆனால் வாழ்க்கை முதிர அனுபவங்கள் உருவாகி வந்தபோது இலக்கியம் என்பது ஆத்மார்த்தமாக வாழ்க்கையைச் சொல்லும்போதுமட்டுமே உருவாக முடியும் என உணர்ந்துகொண்டேன். அப்போது எனக்கு நாஞ்சில் நாடன் முக்கியமானவராக ஆனார்,” என்றார்.

அதன்பின்னர் அ.கா.பெருமாள் பேசினார். நாட்டாரியலாளர்களுக்குரிய நகைச்சுவையுடன் குமரித்தமிழில் நாஞ்சில் நாடனுடனான தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். குமரி மாவட்டத்தின் தனித்தன்மையான ருசிகளையும் மொழி நுட்பங்களையும் நாஞ்சில் நாடன் எப்படி தன் ஆக்கங்களில் கொண்டுவந்திருக்கிறார் என்றார்.

நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி முதல்வரும் சுந்தர ராமசாமியின் காகங்கள் குழுவின் தீவிர உறுப்பினராக இருந்தவருமான ஜேம்ஸ் ஆர்.டேனியல், ஜெயமோகன் எழுதிய ‘கமண்டலநதி–நாஞ்சில் நாடனின் புனைவுலகம்’ என்ற நூலை வெளியிட வேத சகாய குமார் பெற்றுக் கொண்டார். ஜேம்ஸ் ஆர்.டேனியல், “நாஞ்சில் நாடனைப் பற்றி என் கல்லூரியில் இதுவரை பதினொரு மாணவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அக்கட்டுரைகளை சமீபத்தில் எடுத்து படித்தேன். அக்கதைகள் வெளிவந்த காலத்தில் ஆர்வமும் ஆவேசமுமாக அவற்றை வாசித்ததை நினைவுகூர்ந்தேன். நாஞ்சில் நாடன் போன்ற படைப்பாளிகள் நம் மண்ணின் கலாசாரத் தூதுவர்கள். இலக்கியத்தில் குமரிமாவட்டத்துக்கு அழியாத இடத்தை உருவாக்கியளித்தவர்கள். அது குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். பலவருடங்களாக நான் நாஞ்சில் நாடனை அறிவேன். அவரது தன்னியல்பான எளிமை என்றுமே என்னை வியப்பும் நெகிழ்ச்சியும் கொள்ளச் செய்கிறது. அது மேதைகளுக்குரிய குணம். அவரது படைப்பூக்கம் மேலும் தீவிரமாக வெளிப்படட்டுமென அவரை வாழ்த்துகிறேன்,” என்றார்.

எம்.வேதசகாயகுமார் நீண்ட உரையில் நாஞ்சில் நாடனுடன் அவருக்கிருந்த நெடுங்கால உறவை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். “நாஞ்சில் நாடனின் ஆரம்பகால நாவல்கள் என்னைக் கவர்ந்தன. ஆனால் எங்கள் குருவாக அன்று விளங்கிய சுந்தர ராமசாமி அவை வடிவத்திலும் மொழியிலும் கச்சிதமான வெளிப்பட்டமைதியைக் கொண்டிருக்கவில்லை என்று எண்ணினார். இறுதிவரை அவருக்கு நாஞ்சில் நாடன் பற்றி அவ்வெண்ணமே இருந்தது. அன்று எனக்கும் அந்நாவல்கள் குறித்து அதே கருத்தே இருந்தது. அதை முன்வைத்து நான் நாஞ்சில் நாடனுடன் விரிவாக கடுமையாக விவாதிப்பேன். ஆனால் எங்கள் நட்பு அதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. நாஞ்சில் நாடன் நாகர்கோயிலில் இருந்தால் அவர் போகும்வரை நான் அவருடன் மட்டுமே இருப்பேன். பேருந்தில் ஏற்றிவிட்டபிறகே வீடு திரும்புவேன். இந்த, கால்நூற்றாண்டுகால நட்பில் ஒருமுறைகூட ஒரு சிறு பிசிறுகூட உருவானதில்லை. எத்தனையோ உவகைகளை ஆவேசத்துடன் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்… எத்தனையோ அந்தரங்கமான துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு கண்ணீர் சிந்தியிருக்கிறோம்.

…. இன்று என் பார்வைகள் மாறிவிட்டன. மொழியிலும் வடிவிலும் கச்சிதத்தை தொடுவதல்ல கலைஞனின் இலக்கு என நான் இன்று நம்புகிறேன். நல்ல இலக்கியவாதிக்கு இலக்கியம் முக்கியமே அல்ல. வாழ்க்கைதான் முக்கியம். வாழ்க்கையை அந்தரங்க சுத்தியுடன் தீவிரமாக அவன் எதிர்கொண்டாலே போதுமானது. அப்போது நடை சற்று பிசகலாம். வடிவம் கைவிட்டுப் போகலாம். சத்தியம் கைகூடினாலே போதுமானது. வாழ்க்கையின் சாரமாக நாம் உணரும் அந்த சத்தியமே இலக்கியத்தின் சாரம். எந்த தத்துவமும் அல்ல. இன்று நாஞ்சில் நாடனின் எழுத்தை நான் மேலும் நெருங்கியிருக்கிறேன். அதற்காக என் குருவிடமிருந்து வெகுவாக விலகி வந்திருக்கிறேன்…

…யோசிக்கும்போது இலக்கியம்கூட எனக்குப் பெரிதாகப்படவில்லை. எங்கள் இருவருக்குமே குழந்தைகள் பற்றி பெரிய பிரியம் உண்டு. நாளெல்லாம் எங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக் கோண்டிருப்போம். இதோ எங்கள் குழந்தைகள் அருமையானவர்களாக வளர்ந்து வந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் குழந்தைகளை எண்ணும்போது எனக்கு ஏற்படும் பரவசமும் என் குழந்தைகளுக்கு அவரை நினைக்கும்போது வரும் நெகிழ்ச்சியுமே முக்கியமானவை. எங்கள் குழந்தைகள் பிற்காலத்தில் எங்களைப்பற்றி எண்ணும்போது எங்கள் நட்பைப்பபற்றி நினைவுகூர்ந்தால் அதுவே போதுமானது…”

இறுதியாக தேவதேவன் பேசினார். “நெடுங்காலமாக இலக்கியவாதிகளுக்கு இருந்த புறக்கணிப்பு இப்போது விலகி வருகின்றது. அவனை பாராட்டவும் மதிக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகிவருகிறது. இது அவனை அவனது குடும்பத்தினர் கண்களில், குழந்தைகள் கண்களில் முக்கியமானவனாக ஆக்குகின்றது. இன்று நடக்கும் முக்கியமான மாற்றம் இது…” என்றார் தேவதேவன்

“நாஞ்சில் நாடன் மிகமிகப் பிரியமானவர். என் பெண் கோவையில் பொறியியல் படித்தபோது அவர்தான் உள்ளூர் காப்பாளராக இருந்தார். அவ்வகையில் அவர் அவளுக்கு தந்தையைப் போன்றவர். நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை மிகவும் யதார்த்தமானது. யதார்த்தவாதத்தில்தான் அன்பு சிறப்பாக வெளிப்படும். ஏனெனில் அன்பு கற்பனை சார்ந்த ஒன்று அல்ல, அது மிகவும் யதார்த்தமானது…”

ஏற்புரையில் நாஞ்சில் நாடன் உணர்ச்சிகரமாகப் பேசினார். ‘இந்த அவையில் என் வழிகாட்டிகள் நண்பர்கள் உறவினர்கள் இளவல்கள் அமர்ந்திருக்கிறார்கள். படைப்பில் ஒரு சிறு தகவல்கூட தவறாக அமையலாகாது என்னும் எண்ணம் கொண்டவன் நான். என் ஐயங்களை எப்போதும் அ.கா.பெருமாளிடம்தான் கேட்பேன். என் ஆன்மீக வழிகாட்டியான சௌந்தர் அண்ணா இங்கிருக்கிறார். இத்தனைபேர் என்பொருட்டு இங்கே கூடி எனக்கு வாழ்த்துரைப்பது ஒரு பெரும் ஊக்கசக்தியாக உள்ளது. நெடுந்தூரம் ஓடிக்களைத்தவனுக்கு அளிக்கப்பட்ட குளிர்மோர் போல…

…..எழுத்தாளன் தன் காலகட்டத்தின் நஞ்சை, தான் உண்பவன்; தன் தொண்டையில் அதைத் தேக்கிவைப்பவன்; தன் படைப்புக்குள் அந்த நஞ்சை வெளிப்படுத்துபவன்; ஆகவே அவனுக்கு படைப்புச்செயல் துன்பமானதாக இருக்கிறது. அவன் பொருட்டு அவன் குடும்பத்தினர் தியாகங்கள் செய்ய நேர்கிறது. ஆனாலும் அது அவன் பணி. அதற்காகவே அவன் பிறந்திருக்கிறான்.

இந்த விழா இன்னும் பதினைந்து வருடமாவது இதே வேகத்துடன் என்னால் செயல்படமுடியும் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி”

நாஞ்சில் நாடனின் ஏற்புரையுடன் கூட்டம் முடிவடைந்தது. கூட்டம் முற்றாக பேச்சில் ஈடுபட்டு அசைவற்றிருக்கும் அபூர்வமான தருணங்களில் ஒன்றாக இருந்தது இந்நிகழ்ச்சி.

கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு புத்தகத்திலிருந்து…

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 

==================================
கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : யுனைடட் ரைட்டர்ஸ்.
விலை: 50.00 ரூபாய்
==================================

முந்தைய கட்டுரைஓர் இலக்கிய நிகழ்ச்சியின் கதை
அடுத்த கட்டுரை‘இயல்’ விருதின் மரணம்