விருது – கடிதங்கள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள்

இலக்கிய விருதுகளை ஏற்பது

விருதுகள்,விடுபடல்கள் – கடிதம்

விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

அன்புள்ள ஜெ

சமீபத்திய கொரோனா செய்திகளையும் மீறி இலக்கிய மாமணி அரசில்அறிவிப்பையும் தாண்டி அது பற்றி உங்களுடைய கட்டுரைக்கு ஏற்படுகின்ற அதிர்வு எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

அந்தப் பட்டியலில் இடம்பெறாத அவர்களின் ஆதரவாளர்கள் என்று ஒரு கூட்டம் அந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றி குறை சொல்லும் ஒரு கூட்டம் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய கருத்தை முகநூலில் மற்றும் பல ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஆச்சரியம் என்னவென்றால் உங்களுடைய கருத்தை மறுதலித்து பேசுவதற்கு ஈடாக ஒருவரிடமும்  சரக்கு இல்லை என்பதே.

எனக்குத்தெரிந்து சமகாலத்தில் முடிந்தவரை அடுத்த எழுத்தாளர்களை படித்து எழுதுகின்ற ஒரே எழுத்தாளர் நீங்கள் தான் என்று நான் நினைக்கிறேன்.

. சில சரியான தகுதியான எழுத்தாளர்களை நீங்கள் விட்டு விட்டால் தான் என்ன? உங்கள் விமர்சனத்தைத் தாண்டி அப்படி ஓர் தகுதியுள்ள எழுத்தாளர் இருக்கக் கூடாதா என்ன? அதை வஞ்சம் , அகம்பாவம் , திமிர் என பல அடைமொழிகள் உங்கள் மீது படும்போது நீங்கள் சொன்ன அந்த பீடத்தில் அமர்ந்து இருக்கின்ற எழுத்தாளன் என்றே எனக்குத் தோன்றுகிறது.

எனினும் நீங்கள் அடுத்த கட்டுரையில் அஜிதன் சொன்னதாக அந்த அவநம்பிக்கை தொனி நானும் கவனித்தேன். இன்று இருக்கக்கூடிய சூழலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அதை நிறைவேற்றாமல் போனால் மத்திய அரசோ மாநில அரசோ பெரும் கேலிக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகின்றனர் என்பது உறுதி.

நான் அறிந்தவரையில் இந்த ஆட்சி இருக்கும் வரை இந்த விருது மற்றும் கனவு இல்லம் நீங்கள் பரிந்துரைத்த அல்லது எதிர்த்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  நீங்கள் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று

நன்றி

S நடராஜன்

கோவை

அன்புள்ள நடராஜன்,

என் கட்டுரை ஏன் விவாதமாகிறது என்றால் அது முன்வைக்கும் அந்த அளவுகோல், அதற்குப்பின்னாலுள்ள விழுமியங்கள், தொடர்ந்து பேசி நிறுவப்பட்டவை என்பதனால்தான். அவை வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் அல்ல. அவற்றுக்கிப்பின்னால் ஒரு விமர்சன இயக்கம் இருக்கிறது. குறைந்தது ஐந்தாயிரம் பக்கம் எழுதப்பட்டிருக்கிறது.

அது அழகியல் சார்ந்த ஒரு தரப்பு. அந்தத்தரப்பை பிற பார்வைக்கோணம் கொண்டவர்கள் எதிர்ப்பதும் இந்த விவாதத்தின் பகுதியே. அவற்றுக்கு ஏதேனும் மறுப்பு தெரிவிக்கவேண்டியிருந்தால் தெரிவிப்பேன். இந்த விவாதமே வெறும் சண்டை, ஏதோ நோக்கத்துடன் நடத்தப்படுவது, தேவையில்லாதது என்றெல்லாம் இலக்கியமறியா பாமரர் நினைப்பதும் எப்போதும் உள்ளதுதான். இப்போது அவர்களுக்கு அதையெல்லாம் எழுதிவைக்க ஊடகம் உள்ளது என்பதே வேறுபாடு.

இத்தகைய விவாதங்களில் எவரும் செய்யவேண்டியது ஒன்றே. தங்கள் தெரிவை, தங்கள் எழுத்தாளர் பட்டியலை முன்வைப்பது. அதை முன்வைப்பதற்குண்டான காரணங்களை கூறுவது. விவாதிப்பது. அதைத்தவிர அனைத்தையுமே செய்கிறார்கள்.

என் கட்டுரைமேல் வம்புரைக்க வருபவர்களிடம் ‘சரி, உங்கள் பட்டியல் என்ன?’ என்று கேளுங்கள் என்று நண்பர்களிடம் சொன்னேன். “எத்தனையோ எழுத்தாளர் இருக்காங்க சார்” என்பார்கள்.  “சரி ஒரு ரெண்டு பேர் பேரைச் சொல்லுங்க” என்றால் விழிப்பார்கள். யோசித்து “இப்ப — இல்லியா?”என்பார்கள். ”சரி சென்ற ஓராண்டில் நீங்கள் அந்த எழுத்தாளர் பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள்? எங்கெல்லாம் அவரையோ அவர் நூலையோ சொல்லியிருக்கிறீர்கள்?”என்றால் அவ்வளவுதான் சீறிக்கொந்தளித்துவிடுவார்கள். இதுதான் இந்தக் கூட்டத்தின் தரம்.

இத்தனை பூசலிலும் எவராவது நானும் என் பார்வையில் தரமான எழுத்தாளர்களின் ஒரு பட்டியலை வைத்திருக்கிறேன், அவர்களுக்கன்றி தரமற்ற ஒருவருக்கு விருதளிக்கப்பட்டால் கண்டிப்பேன் என்று சொல்கிறார்களா என்று பாருங்கள் என்று சொன்னேன். எத்தனை தந்திரமாக என் கட்டுரைக்குள்ளேயே தங்கள் பூசல்களை நிறுத்திக்கொள்கிறார்கள்.

கவனியுங்கள், எழுத்தாளர்கள் மேல் இந்தப் பாமரர்களுக்குத்தான் எத்தனை வசை! ஒட்டுமொத்தமாக அத்தனைபேர் மேலும் வசை. தனித்தனியாக வசை. அத்தனைபேரும் அதற்குத் திரண்டு வருகிறார்கள். தனக்கு உகந்த எழுத்தாளர்களைப் பற்றி ஏதாவது பாராட்டி எழுதியிருக்கிறார்களா?

ஆண்டுமுழுக்க எத்தனை ஆயிரம் முகநூல் குறிப்புகள். அவற்றில் இலக்கியம் பற்றி, எழுத்தாளர் பற்றி எத்தனை உள்ளன? இலக்கியம் பற்றியோ எழுத்தாளர் பற்றியோ எதைத்தேடினாலும் நீங்கள் இந்த தளத்துக்குத்தான் வரவேண்டும். ஏனென்றால் ஆண்டுமுழுக்க எழுத்துக்களை, படைப்பாளிகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறேன். என் கருத்துக்கள் அத்தகுதியிலிருந்து எழுகின்றன. 

நான் எழுதியதுதான், உண்மையிலேயே நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ளவேண்டும். தமிழில் சுதந்திரம் கிடைத்த முதல்தலைமுறைக்குப்பின் இப்படி ஒரு முயற்சி நடந்ததில்லை. ஆகவே நல்லது நடக்குமென எதிர்பார்ப்பதே முறையானது.

ஜெ

வணக்கம்.

சிறப்பான கட்டுரை. இந்த கருத்தை ஒத்த கடந்த கட்டுரையும் சிறப்பு. விமர்சனங்களை எதிர்நோக்கியே நீங்கள் சொல்லும் கருத்துக்கள் வலுவானவை.

இளம் எழுத்தாளர்கள், யுவ சாகித்திய அக்காடமி விருது வாங்கியவர்கள் , பெண் எழுத்தாளர்களை மருந்துக்கு கூட பட்டியலில் சேர்க்கவில்லை. இயன்றால் ஒரு பதில் வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம்.

ஜோசஃபைன் பாபா

அன்புள்ள ஜோசஃபைன்

இளம் எழுத்தாளர்களின் பட்டியலைச் சேர்க்கவில்லை. ஏனென்றால் அந்தக் கட்டுரையே உடனடியாக பரிசு கொடுக்க பரிசீலிக்கப்படவேண்டியவர்களின் ஒரு சிறு பட்டியல்தான். இரண்டு அளவுகோல்களுடன் அப்பட்டியல் அளிக்கப்பட்டது என்று அதில் தெளிவாகவே உள்ளது – திமுக எதிர்ப்பு இல்லாததனால் திமுகவால் பரிசீலிக்கப்படவேண்டியவர்களில்  மூத்த எழுத்தாளர்கள்.  அந்த விருது இளம் படைப்பாளிகளுக்குரியது அல்ல.

பெண் எழுத்தாளர்களைச் சேர்க்கக் கூடாது என்றில்லை. ஆனால் இலக்கியத்தில் அப்படி ‘பெண்’ என்னும் தனிப்பார்வை தேவையா என்பது என் குழப்பம். அதில் ஒரு ‘பரிவுப்பார்வை’ உள்ளது.அது எனக்குரிய அளவுகோல் அல்ல.

மூத்த பெண் எழுத்தாளர்களில் அம்பை மட்டுமே இலக்கியத்தில் செயல்படுபவர். ஆனால் ஒரு தனித்தன்மைகொண்ட முன்னோடிப் படைப்பாளி என்று சொல்லுமளவுக்கு பெரிதாக ஏதும் எழுதவில்லை. நெடுங்காலமாக ஏதும் எழுதுவதுமில்லை. மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்றைய பார்வையில் அப்படைப்புக்களில் மிகக்குறைவாகவே பொருட்படுத்தும்படி உள்ளது.  

இளம்தலைமுறையில் பெண்படைப்பாளிகள் உள்ளனர். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல இது இளம்படைப்பாளிகளுக்கான விருது அல்ல. இளம்படைப்பாளிகளையும் உள்ளடக்கி விருது அளிக்கப்படுமென்றால் என் பெருமதிப்பிற்குரிய உமா மகேஸ்வரி தொடங்கி நல்ல எழுத்தாளர்களின் ஒரு வரிசையே உள்ளது.

ஜெ

அன்புள்ள ஜெ,

தமிழக அரசின் விருதுக்கு நீங்கள் சிலரை பரிந்துரை செய்திருக்கிறீர்கள். அதற்குப் புறவயமான அளவுகோல்களை முன்வைத்திருக்கவேண்டும் அல்லவா? வெறும் சிபாரிசு என்றால் அதை ஏன் செய்யவேண்டும்?

ரவீந்திரன் ஆர்

அன்புள்ள ரவீந்திரன்,

நீங்கள் புதியவர் என நினைக்கிறேன். அதில் நான் குறிப்பிடும் பெரும்பாலானவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் அவர்களைப் பற்றி நான் மட்டுமே விமர்சனநோக்கில் விரிவாக எழுதியிருப்பேன்.

அந்தக் கட்டுரையிலேயே அளவுகோல்கள் பேசப்பட்டுள்ளன. கட்டுரையை படிக்காமல் ஸ்க்ரோல் செய்து பார்த்துவிட்டு பேசும் வம்புகளை நீங்கள் கவனிக்கிறீர்கள். நான் அக்கட்டுரையில் மூன்று வகையினரை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக விருதுக்குத் தகுதியானவர்களின் பட்டியல் அல்ல அது.

திமுக அதன் தேர்வில் திமுக சார்பை, அல்லது எதிர்ப்பின்மையை ஓர் அளவையாகக் கொள்ளும் என்பதே என் புரிதல். அதன் சரித்திரம் அப்படி. முழுக்கமுழுக்க இலக்கிய அளவுகோல்களை கொள்ளவேண்டும் என்பது ஓர் இலட்சிய எதிர்பார்ப்பு – திமுகவிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்பதே கடந்தகாலம் காட்டுவது.  அப்படிப் பார்த்தால்கூட கருத்தில்கொள்ள வேண்டியவர்களின் பட்டியலையே அளித்திருக்கிறேன். அவர்கள் திமுக எதிர்ப்பின்மையும், எழுத்தில் சற்று முதிர்வும் சாதனையும் கொண்டவர்கள்.

அடுத்தபடியாக இன்று இடர்மிக்க நிலையில் இருப்பவர்களின் பட்டியல்.அதில் சிலரைச் சொல்லியிருக்கிறேன். இன்றைய சூழலில் அவர்களுக்கு அளிக்கப்படும் எந்த நிதியும் உதவியானது. அவர்களுக்கு அகவை நிறையட்டும் என காத்திருக்கவேண்டியதில்லை. அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

மூன்று, எந்நிலையிலும் கருத்தில்கொள்ளப்படவேண்டிய முன்னோடிகளின், முன்னுதாரணமான படைப்பாளிகளின் பெயர்கள் ஓர் உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளன.

இத்தகைய கட்டுரை ஏன் முன்னரே எழுதப்படவேண்டும்? ஏனென்றால் இந்த அளவுகோல் இங்கே எப்போதுமிருக்கும். இத்தரப்பின் எதிர்வினை என்றும் வந்தபடியே இருக்கும். இத்தகைய அமைப்புக்களை உருவாக்குபவர்கள் இதை அறியவேண்டும்

நானறிந்தவரை இத்தகைய கட்டுரைகள் ஏதேனும் நல்லது செய்ய எண்ணுபவர்களுக்கு மிக உதவியானவை. அவர்களிடம் வரும் தகுதியற்ற சிபாரிசுகளை தவிர்க்க இக்கட்டுரைகளையே ஆதாரமாகச் சுட்டிக் காட்டலாம். “நாம ரொம்பப் போனா இவனுக கிழிச்சிருவாங்க சார். கெட்டபேராயிடும்” என்று சொல்லி தவிர்க்கமுடியும். வெளிப்படுத்தப்படும்போதே ஒரு கருத்து ஒருவகை பொருண்மையான சக்தியாக ஆகிறது. எப்போதுமே இவை அப்படி செயல்படுகின்றன என நான் அறிவேன்

ஜெ

பிகு

இந்த உரையாடல்  வேண்டிய அளவுக்கு நீண்டுவிட்டது. இங்கே நிறைவுறட்டும். நம்பிக்கையை மட்டும் முன்வைப்போம்.

முந்தைய கட்டுரைபாலையாகும் கடல்- கடிதம்
அடுத்த கட்டுரைஅனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி