விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

இலக்கிய விருதுகளை ஏற்பது

விருதுகள்,விடுபடல்கள் – கடிதம்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள்

அன்புள்ள ஜெ,

இலக்கியவிருதுகள் பற்றிய கட்டுரை வாசித்தேன். அது ஒரு சுருக்கமான நிலைபாடு. ஆனால் அதற்கெதிராக இங்கே சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் பதில்சொல்லியபடியே அந்நிலைபாட்டை எடுக்கவேண்டியிருக்கிறது.

2002ல் சாகிதிய அக்காதமி விருதுகள் சம்பந்தமான நீங்கள் எழுதிய குறிப்புகளிலும் இதையே சொல்லிக்கொண்டிருந்தீர்கள். திண்ணை இளையதளத்தில் வாசித்தேன் என நினைக்கிறேன். இப்போதும் அதேபோன்ற வசைகள். ஆனால் ஆட்கள் மட்டும் மாறியிருக்கிறார்கள்.

நீங்கள் சினிமாக்காரர்களிடம் குழைந்துபோவதாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் இருப்பவன் என்ற முறையில் சிரிப்புதான் வருகிறது. ஆனால் இதெல்லாம் இவர்கள் வேண்டுமென்றே சொல்வதில்லை. இப்படியெல்லாம்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று உண்மையிலேயே நம்புகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் அப்படித்தான் நடந்துகொள்வார்கள்.

சென்ற பதினைந்தாண்டுகளில்  தமிழின் நட்சத்திரங்கள் போன்ற சினிமாப்படைப்பாளிகள் உங்களைப் பற்றி பேசியதில் இருக்கும் பெருமதிப்பும் வியப்பும் இணையத்திலேயே இருக்கிறது. நீங்கள் அழைக்கும் விழாக்களுக்குச் சொந்தச்செலவில் வந்து செல்கிறார்கள். அதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள். நீங்கள்  பேசும் கூட்டங்களில் பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருக்கும் மாபெரும் சினிமா ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். ஒருவிழாவுக்கு அழைப்பதென்ன, அதற்காக அவர்களைச் சந்திப்பதே சினிமாவில் பெரும் சவால் என்பதை அறியாதவர்கள் இல்லை.

இந்தவகையாகப் பேசுபவர்கள் உண்மையில் நம்முடைய சினிமா ஆளுமைகளை அவமதிக்கிறார்கள்.  தங்களையும் கீழ்மைப்படுத்திக் கொள்கிறார்கள். அரசியலில்தான் அந்தவகையான கூழைக்கும்பிடுகளுக்கு தேவை உண்டு. தளபதி, தானைத்தலைவர், அண்ணன் என்றெல்லாம் குழையவேண்டும்.

இந்த வசைகளையெல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதம் எங்களைப்போன்றவர்களுக்கெல்லாம் ஒரு பெரிய பாடம்.

கணேஷ் ராமகிருஷ்ணன்

அன்புள்ள கணேஷ்,

இதெல்லாம் எவருக்கும் தெரியாதது அல்ல. ஆனால் அவர்களுடைய அன்றாடவாழ்க்கை அவர்களுக்கு கூழைக்கும்பிடு போடுவதே முன்னேற வழி என நம்பச்செய்திருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அரசியலில் அது ஒன்றே முன்னேறும் வழி. அலுவலகங்களிலும் இந்த மனநிலை உண்டு.

ஆனால் தொழில் வணிகம் போன்றவற்றில் தனிப்பட்ட தகுதி, அதை தெளிவாக முன்வைக்கும் தோரணைக்கு மட்டுமே மதிப்பு. தொழிலோ வணிகமோ செய்த எவருக்கும் நான் சொல்வது புரியும். அங்கே நீங்கள் எத்தனை குழைந்தாலும் திறமையோ வணிகமதிப்போ இல்லையேல் நீங்கள் கடந்துசெல்லப்படுவீர்கள். உபச்சார மரியாதை இருக்கும். சாதனைகளுக்கான மதிப்பும் இருக்கும். அவ்வளவுதான்.

இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கு. தொழிலில் திறனும் கூடவே இணைந்த சமரசமில்லாத நிமிர்வுதான் மதிப்பை அளிக்கும். மதிப்புதான் பணமாக ஆகிறது. தன் மதிப்பை இழந்து பணிபவர்களுக்கு உண்மையில் கையில் ஒன்றும் மிஞ்சாது.

இதெல்லாம் பலமுறை எழுதியதுதான்

ஜெ

வணக்கம்

தங்களின் கடிதம் உண்மைநிலையை பட்டவர்த்தனமாக கூறுகிறது.பாராட்டுகள். அதே நேரம்,தங்களை சாடி பல நூறு ஓநாய்கள் தங்களை வேட்டையாட இந்த நேரம்வியூகம் வகுத்திருப்பார்கள்.

உண்மையான படிப்பாளிகள் என்றும் உங்களுடன்.

கேசவன் ஶ்ரீனிவாசன்.

அன்புள்ள கேசவன்,

அது என்றுமுள்ளது. இங்கே ஏதாவது ஒரு தரப்பு சார்ந்து அறுதிநிலைபாடு எடுப்பதே எவருக்கும் வழக்கம்—அதுவே பாதுகாப்பென்றும் உணர்கிறார்கள். அது ஒருவகை பழங்குடி மனநிலை. சில விழுமியங்கள், அளவீடுகள் சார்ந்து நிலைபாடு எடுப்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

ஜெ

அன்புள்ள ஜெ

சமீப காலமாக இணையத்தில் ஒரு போக்கைப் பார்க்கிறேன். இலக்கிய விருதுகள் சார்ந்த எந்த விவாதத்திலும் ஒரு சிலர் வந்து ‘எல்லா விருதும் யாசகம் கேட்டு பெறுவதுதான்’ என்றும்  ‘இங்கே லாபி செய்யாதவர்கள் யார்?’ என்றும் ‘கூழைக்கும்பிடு போட்டால் மட்டுமே இங்கே விருதுகளும் அங்கீகராங்களும் கிடைக்கும்’ என்றும் எழுதுகிறார்கள். எழுதுபவர்களில் ஒரு சாரார் கவைக்குதவாத சல்லிஎழுத்தாளர்கள். எழுத்தாளர்களாக நடிப்பவர்கள்.

இன்னொரு சாரார் ‘சலித்துப்போன’ குடிமக்கள் போல ஒரு பாவலா காட்டுபவர்கள். அதாவது ‘ரொம்ப’ நேர்மையாக இருந்து அதைச் சொல்கிறார்களாம். ஆனால் கவனித்தால் தெரியும், அவர்கள் தாங்கள் செய்யும் அன்றாட அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தவே ‘யார் சார் இங்க யோக்கியம்’ என்ற மோடில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த குப்பைகள் எழுதுவதை சில எழுத்தாளர்கள் தங்கள் சமூகவலைத்தளப் பக்கங்களில் பிரசுரித்து ஊக்குவிக்கிறார்கள். இந்த சல்லிப்பயல்கள் ஒட்டுமொத்தமாகவே இலக்கியமுன்னோடிகளை, இலக்கிய ஆளுமைகளை, இலக்கியமென்ற செயல்பாட்டையே கேவலப்படுத்துகிறார்கள் என்றுகூட இந்த எழுத்தாளர்களுக்குப் புரிவதில்லை.

தமிழிலக்கிய முன்னோடிகளான க.நா.சுவோ, அசோகமித்திரனோ, பூமணியோ கூழைக்கும்பிடு போட்டு ஆளைப்பிடித்து விருது வாங்கினார்கள் என்றெல்லாம் இணையத்தில் எழுதும் இந்த அற்பப்புழுக்களைப் பார்க்கும்போது அருவருப்பால் உடல் கூசுகிறது. அவர்களை ஊக்குவிக்கும் எழுத்தாளர்களை மலத்தைப் பார்ப்பதுபோலத்தான் எண்ணத் தோன்றுகிறது.

ஜெயகாந்தன் சொன்னார், “கீழ்மையே கீழ்களின் ஆசாரம்’ என்று

எஸ்.கிருஷ்ணன்

வண்ணதாசன்

அன்புள்ள கிருஷ்ணன்,

எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறர்கள். க.நா.சுவை பரிசுக்கு ஆள்பிடிக்க அலைகிறவர் என எழுதிய பூவை எஸ் ஆறுமுகம் என்பவர் எங்கே? அன்று விருது வாங்கிய அகிலன் எங்கே? அன்று அவரை சிறுமைசெய்து கெக்கலித்தகூட்டம் எங்கே?.அவர்கள் புதுவடிவில் என்றுமிருப்பார்கள்.

மெய்யான படைப்பாளிகள் இந்த விருதுபிடிப்பு செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கூசி ஒதுங்கிவிடுவார்கள். விருதுகள் அவர்களை தேடிச்செல்கின்றன. அவர்கள் விருதுபெறுவதனால் விருதுக்கு மதிப்பு உருவாகிறது. அவ்விருதின் அளவுகோல் என ஒன்று அறியப்படுகிறது. அதன்பின் ஆள்பிடிக் கூட்டம் அடித்துப்புரண்டு அந்த விருதை தாங்கள் பெற்றுக்கொள்கிறது. அந்த இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் தானும் நிற்பதே அவர்களின் நோக்கம். அதன் பின் ‘எல்லாரும்தான் ஆள்பிடிக்கிறாங்க’ என நியாயப்படுத்த ஆரம்பிக்கிறது. பாமரக்கூட்டம் உடன் சேர்ந்து பேசுகிறது.

விருதுகளுக்கு ஆதரவுதிரட்டுவது என்று ஒன்று உண்டு. அது முற்றிலும் வேறு. நம் மொழிக்கு, நம் இலக்கியத்துக்கு பெரும்பங்களித்த ஒருவருக்கு விருது வரவேண்டுமென நாம் விரும்புகிறோம். அதன்பொருட்டு அவரை முன்னிறுத்துகிறோம். அதுவும் சில்லறைப்பயல்கள் தங்கள் தலைக்கு  தலைப்பாகைக்காக அலைவதும் ஒன்று அல்ல. 

இலக்கிய விருதுகளுக்காக ஒருவரை முன்வைப்பதன் பெயர் லாபியிங் lobbying அல்ல. அதை கேம்பெய்ன் campaign என்ற சொல்லால்தான் குறிப்பிடுவார்கள்.

முக்கியமான விருதுகள் ஆர்வலர் சிலரின் ஆதரவுதிரட்டலால்தான் அளிக்கப்படுகின்றன. ஏனென்றால் விருதுக்குழுவுக்கு சரியான முறையில் சரியான படைப்பாளிகள் சென்று சேர்ந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு சென்று சேர்ப்பதுதான் ஆதரவு திரட்டல்.

உதாரணமாக ஞானபீட விருதுக்கு தேவையானவை என்ன? எந்த ஆசிரியரை முன்வைக்கிறோமோ அவரைப்பற்றி பல பல்கலைக்கழகங்களில் கருத்தரங்குகள் நடந்திருக்கவேண்டும். ஆய்வடங்கல்கள் வெளியாகியிருக்கவேண்டும். அவரைப்பற்றிய முனைவர்ப்பட்ட ஆய்வேடுகள் வேண்டும். மாநில அரசின் விருதுகளும் மத்திய அரசின் விருதுகளும் அவருக்கு வந்திருக்கவேண்டும். பெரிய இலக்கிய அரங்குகளில் அவர்கள் ஏற்கனவே முதன்மைப் படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

அத்துடன் ஆங்கிலத்தில் அவரைப்பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கவேண்டும். பேட்டிகள் வாழ்க்கைக் குறிப்புகள் வெளியாகியிருக்கவேண்டும். முக்கியமான பிறதுறை ஆளுமைகள் [அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகக்காரர்கள்] அவரை பரிந்துரை செய்யவேண்டும்.அவ்வாறுதான் அவர் ஓர் முதன்மை இலக்கிய ஆளுமையாக முன்வைக்கப்படுகிறார். அவருக்கே விருது அமையும்.

எழுத்தாளர் பூமணி
எழுத்தாளர் பூமணி

தமிழில் அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் இருவருக்கும் ஞானபீடத்திற்கான தகுதியும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் அவர்கள் பல்கலைகழகங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களைப்பற்றி பல்கலைகள் பேசவைக்க முயன்றபோது ஒன்றும் நடக்கவில்லை. பல்கலைகளால் முன்வைக்கப்பட்டவர்களுக்கு ஞானபீடக் கமிட்டி எந்த தகுதியையும் காணவில்லை

தமிழ் இலக்கியத்தை தேசிய அளவில் முன்வைக்கும் தகுதியுடன் ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியப்புரவலர்  [Literary Connoisseur] என இன்று எவருமில்லை. க.நா.சுவும், வெங்கட் சாமிநாதனுமே ஓரளவு வரை அப்பணியை செய்தனர். நமக்கு நல்ல தரமான ஆங்கிலத்தில், இலக்கிய நுண்ணுணர்வுடன்,தமிழிலக்கிய அறிதலுடன் எழுதுபவர்கள் எவரும் இன்றில்லை. இது மிகப்பெரிய இழப்பு.

ஆகவே அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் இருவரையும் ஞானபீடத்துக்காக முன்வைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கி.ராவுக்கான முயற்சிகள் ஒரு ஆய்வடங்கல் தயாரிப்பதுடன் நின்றன. அந்த ஆய்வடங்கல் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. அசோகமித்திரனுக்கு அதுவும் நிகழவில்லை. கி.ராவுக்கு ஞானபீடம் என நான் முதல் கட்டுரையை எழுதிய அதே ஆண்டில்தான் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம் என மலையாளத்தில் எழுதினேன். சரியாக ஐந்தே ஆண்டுகளில் அவர்கள் விருதை வென்றுவிட்டார்கள்.

நான் இவ்வாறு இலக்கிய முன்னோடிகளுக்கு  ’ஆதரவு திரட்டும்’ செயல்களில் ஈடுபடத் தயங்கமாட்டேன். எல்லா விருதுகளிலும் அதைச் செய்வதுண்டு. பல விருதுகளில் அந்த விருதுப் பத்திரத்திலேயே நான் எழுதிய வரிகள்தான் அளிக்கப்பட்டிருக்கும்.

அது ஓர் இலக்கியப் பணி. சாதி, மதம், கட்சிச்சார்புக்கு அப்பால் சென்று தகுதியான படைப்பாளியை மொத்த சூழலும் சேர்ந்து முன்வைக்கும்போதுதான் கௌரவத்திற்குரிய விருதுகள் ஒரு மொழிக்கு வந்துசேர்கின்றன. இல்லையேல் லாபி செய்யும் ஆட்கள் அதை கொய்து கொண்டுசெல்வார்கள்.

இங்கே லாபியிங்கையும் கேம்பெயினையும் ஒன்றே என ஆக்குபவர்கள் அப்பாவிகள் அல்ல. அவர்கள் உள்நோக்குடன் திட்டமிட்டே அதைச் செய்கிறார்கள். பெரும்பாலும் சாதிவெறியே அதன் உள்ளடக்கம். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் இருவரையும் வீழ்த்தியது  அவர்களுக்கு எதிராக எழுந்த கீழ்த்தரமானச் சாதிவெறிதான்

உள்ளடக்க மதிப்பு இல்லாமல், வெறும் லாபியிங் வழியாக ஞானபீடத்தை பெறுவதொன்றும் எளிதல்ல. சென்ற காலகட்டங்களில் தேசிய அளவில் அப்படி வாங்கியவர்கள் ஒருசிலரே. [சந்திரசேகரக் கம்பார், ஓ.என்.வி இருவரும்  உதாரணம்] ஆனால் பெரும்பாலும் அந்த முயற்சிகள் வெல்வதில்லை. ஆனால் அந்த தன்முன்னேற்றவாதிகள் தனக்கு விருது வரும்பொருட்டு தகுதியுடையவர்கள் பெறாமல் தடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆகவே எவருக்கும் கிடைக்காது. தமிழில் நடப்பது அதுதான்.

இன்றைய சூழலில் தேசிய அளவில் கொண்டுசென்று நாம் நிறுத்தினால் மதிப்பு பெறத்தக்க படைப்பாளிகள் தேவதேவன், தேவதச்சன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், பூமணி ஆகியோர்.

ஜெ

முந்தைய கட்டுரைகள்

விருதுகள், அமைப்புகள்

கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை

ஞானபீடம்

கேள்வி பதில் – 67, 68 -விருதுகள்

கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்

விருதுகள், அடையாளங்கள்

பத்ம விருதுகள் -கடிதங்கள்

விருதுகள் மதிப்பீடுகள்

நமது கோட்டையின் கொடி

சித்திரப்பாவை

சுஜாதா விருதுகள்

கி ராவை வரையறுத்தல்

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

ஞானபீட விருதுகள்

சாகித்ய அகாடமி விருதுகள்

சாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்

சாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்

சாகித்ய அகாடமியும் நானும்

சாகித்ய அகாடமி விருது ?

கல்பூர்கி, தாத்ரி, சாகித்ய அகாடமி

சாகித்ய அகாடமி விருதுகளைத் துறப்பது பற்றி…

சாகித்ய அக்காதமி – விவாதங்கள்

சாகித்ய அகாடமி

சாகித்ய அகாடமி மீண்டும்

முந்தைய கட்டுரைஒளி, நீலம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை’மரபணு’