சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன்
மாபெரும் தாய் –கடிதங்கள்
அன்பின் ஜெ.,
எழுத்தாளர் அகரமுதல்வனின் ’மாபெரும் தாய்’ என்கிற சிறுகதை வாசித்தேன். வழக்கமாய் அகரமுதல்வனின் கதைகளை – ”மகுடி வாசிக்கும் சொற்சித்திரங்கள்” என்று நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு.
சமகாலத்தில் மொழியை மிக லாவகமாக கையாளும் எழுத்தாளர்களுள் அகரமுதல்வன் முதன்மையானவர். சில மாதங்களுக்கு முன் நவீன எழுத்தாளர்கள் ஏன் பக்தி இலக்கியம் வாசிக்க வேண்டும் என்றொரு விவாதம் வந்தது. அகரமுதல்வனின் பக்தி இலக்கிய பரிச்சயமே அவருடைய மொழியின் மீதான இந்தப் பிரக்ஞைக்கு காரணமென்பது என் கணிப்பு.
’கூறியது கூறல்’ என்பது எழுதுபவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தான். அகரமுதல்வனின் அநேக கதைகளில் வரக்கூடிய இரவும், ஆச்சியும், சிறுவனும் ஒன்றே ஆனால் ஒவ்வொரு கதைகளிலும் அவர்களை வெவ்வேறாக நம் முன் அறிமுகப்படுத்துகிறார். முந்தைய கதைகளில் ஆச்சியைக் குறித்து அவர் சொன்ன எதுவும் அடுத்தடுத்த
கதைகளில் ’ரிப்பீட்’ ஆவதில்லை. அதற்கான அவரது மெனக்கெடல்கள் கவனத்திற்குரியது.
போருக்கு பின்னான ஈழ இலக்கியத்தில் இப்படியான தொன்மம் சார்ந்த கதைகளைத் தன்னுடைய நுட்பமான மொழியில் எழுதுவதன் மூலம் அகரமுதல்வனின் படைப்புலகம் தனித்து மிளிர்கிறது.
தான் கண்ட, கேள்வியுற்ற, வாசித்தவற்றை எழுத்தாளன் தன்னுடைய கதைகளில் பயன்படுத்தும்போது அதீத சிரத்தையுடன் எழுத வேண்டியிருக்கிறது. சற்று பிசகினாலும் ஏமாற்று வேலையாக ஆகிவிடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால் இந்தக் கதையில் அந்தத் தவறு நிகழவில்லை. மிக கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார். வாசகனின் உழைப்பைக் கோரக் கூடிய கதை இது.
இந்தக் கதை பல்வேறு அடுக்கு நிலைகளைக் கொண்டது. ஈழம் குறித்தும் போர் குறித்தும் அறிமுகம் உள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும், இதை ஒரு தொன்மக் கதையாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு ஒரு வகையாகவும் இவை எவையும் இல்லாமல் ’சும்மா’ வாசிப்பவருக்கு குறைந்தபட்ச ‘மொழியின்பமும்’ உத்திரவாதம்.
இக்கதையை கவனப்படுத்தியமைக்கு நன்றி ஜெ.
வாழ்த்துகள் அகரமுதல்வன்.
நன்றி
பிகு
அன்புள்ள ஜெ
அகரமுதல்வனின் மாபெரும் தாய் ஒரு அழகான கதை. சமீபகாலமாக இந்த யதார்த்தவாதக் கதைகள் சலிப்பைத் தருகின்றன. ஏனென்றால் யதார்த்தவாதம்தான் சினிமாவிலும் டிவியிலும் குவிந்திருக்கிறது. அதற்கு அப்பால் செல்ல புனைவுகளால் முடியவில்லை. எந்த யதார்த்தவாதக் கதை படித்தாலும் இதை எங்கோ டிவியிலும் சினிமாவிலும் பார்த்தோமா என்ற சந்தேகம் வருகிறது. மாபெரும்தாய் ஒரு நவீன தொன்மம். ஒரு யாழ்ப்பாணக்கிராமத்தில் பழைய மனிதர் ஒருவரிடமிருந்து ஒரு கதையைக் கேட்டதுபோல் இருந்தது அந்தக்கதை.
நமக்கு இந்த மாயத்தாய் என்பது ஒரு முக்கியமான பிம்பம். ஆப்ரிக்காவுக்கும் அது அப்படித்தான். ஆனால் ஐரோப்பாவுக்கு அதுவே சூனியக்காரக்கிழவியாக ஆகிவிடுகிறது. நமக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயுள்ள முக்கியமான முரண்பாடே இதுதான்
ஜே.எஸ்