தத்துவவாதிகளின் கால்பந்தாட்டம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு ,

தங்களின் சமீபத்தைய உயர்தத்துவ, ஆன்மிக கேலிச்சித்திரப் பதிவுகள் மற்றும் நடைமுறை வாழ்கையை ஒட்டிய மனதை இலகுவாக்கும் காட்சித் துளிகளைக் காணும்போது எனக்கு Monty Python குழுவினரின் ‘தத்துவவாதிகளின் கால்பந்தாட்டம்’ சார்ந்த காணொளித் துணுக்கு நினைவுக்கு வந்தது.

இவை சிலபோது அறிவார்ந்த எள்ளலாகவும் சிலபோது அதைக் கலைத்துப் போடும் அசட்டு விளையாட்டாகவும் தோன்றுகின்றன. இவர்களின் படைப்புகள்  இழையோடும் வரலாறு மற்றும் தத்துவம் சார்ந்த உள்ளடக்கத்துக்காகவும், அன்றைய உலகளாவிய பின் நவீனத்துவ அலையின் கூறுகளை இனம் காண இடம் அளிப்பதாலும்  இங்கே பகிர விரும்புகிறேன்.

Surreal/Absurdist humour வகைமையிலான இவர்களின் நகைச்சுவைத் துணுக்குகள் பிரிட்டிஷ் வரலாறு, மேலைச்சமூக விழுமியங்கள், அன்றாட  அரசியல், அறவியல் மீதான பகடிகளோடு இடையீடாக கட்டற்ற கனவு போன்ற அனிமேஷன் காட்சிகளில் தீவிர வன்முறை மற்றும் மனப்பிறழ்வுகள் போன்ற அம்சங்களையும் கலந்து உருக்கொண்டவை. இந்த வடிவமீறலினாலேயே இவர்களை இவ்வகைமையின் முன்னோடிகளாகக் கருதமுடிகிறது. இவர்களின் திரைக்களங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன (கிறிஸ்துவின் அண்டையில் அதே தினத்தில் பிறந்த ப்ரையனின் அடையாளக் குழப்பங்கள்-Life of Brian & பிரிட்டிஷ் அரசரான ஆர்தரின் சாகசக் கதையாடலின் பகடி- Monty Python and the holy grail ). அன்றைய பீட்டீல்ஸ் தலைமுறையின் மனநிலையால் இது சாத்தியப்பட்டிருக்கலாம்.

தாங்கள் ஏற்கனவே இவற்றைக் கண்டு, கடந்தும் போயிருக்கலாம். ஆயினும் சில துணுக்குகள் நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

தத்துவவாதிகளின் கால்பந்தாட்டம் ( The Philosophers’ Football Match )

https://youtu.be/i21OJ8SkBMQ

வாத சிகிச்சையகம் (Argument Clinic)

https://youtu.be/xpAvcGcEc0k

அபத்த நடை அமைச்சகம் (Ministry of Silly Walks)

https://youtu.be/F3UGk9QhoIw

கிளிமஞ்சாரோ மலையேற்றம் (Kilimanjaro Expedition)

https://youtu.be/WzOLaRvPAkQ

ஓர் உற்சாக சிலுவை கீதம் (நமக்கும் சேர்த்தே) – (Always Look On The Bright Side of Life-Monty Python’s Life Of Brian  )

https://youtu.be/3DXyRsOQ9Is

(பி.கு இவர்களைக் கொண்டே இன்று பரவலாக அறியப்படும் python நிரலாக்க மொழி வழங்கப்படுகிறது.இவர்களின் காட்சித் துணுக்கு ஒன்றின் வழியாகவே நம் மின்னஞ்சலை வரம்பின்றி நிறைக்கும் spam கலைச் சொல் உருவாகியது.)

வணக்கங்களுடன்

சே.தோ.ரெங்க பாஷ்யம்

முந்தைய கட்டுரைஉரையாடலும் வாசிப்பும் -கடிதம்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் – விருதளிப்பு நிகழ்வு