மதார் கடிதம்-4

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

அன்பு ஜெ,

மதாருக்கு விருது என்று அறிந்த அன்றிலிருந்தே ஒரு பூனை குட்டி போட்டது போல மனதுக்குள் மகிழ்ச்சி அலையடித்துக் கொண்டே இருந்தது. உங்களுடனான முதல் சந்திப்பின் போது எனக்குக் கிடைத்த நண்பர் மதார் அவர்கள். கனம் நிறைந்த கவிதை காலகட்டத்திலிருந்து இலகுவான இன்றைய நவீன காலகட்டத்தைப் பற்றி அறிமுகம் செய்து மதாரை ஒரு இடத்தில் நிறுத்தி எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். அதற்கு முன்பு வரை மிக ஆழமாக உணர்வுகளைத் தொடும், தேடலைத் தரும் பிரமிள் அவர்களின் மீமெய்யியல் பாதங்களில் தான் அமர்ந்திருந்தேன்.

மதாரின் கவிதைகள், கைகளைப் பிடித்து இழுத்துச் சென்று ”இங்க பாத்தியா” என்று பரவசமூட்டும், பாடங்களைக் கற்பிக்கும் குழந்தையைப் போன்றவை. ”தன் குழந்தைகளுடனான நேரடியான உரையாடலை, விளையாட்டை ஏதோ காரணம் கருதித் துறப்பவன் இழப்பது, அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்வின் பெரும்பகுதியை என்பதே உண்மை” என்று ஜெ.சைதன்ய சிந்தனை மரபு என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பீர்கள். ஒரு குருவாகிய குழந்தையின் தேடலை கவிதையாக்கும் தன்மை மதாருக்கு வாய்க்கப்பட்டிருக்கிறது. அது நம்மை பரவசமூட்டுகிறது. திடுக்கிடச் செய்கிறது. பாடம் கற்பிக்கிறது. வேறொரு உலகைக் காணிக்கிறது.

“பறந்தலையும் தன்மை” என்று நீங்கள் சொல்வது போல அவரின் உளக்கிடக்கை அமைந்தொழுகுவதை அவரின் கவிதைகளில் காணலாம்.

”…முகம் கழுவ இவ்வளவு நேரமா

என்ற வெளிக் குரல்

அது அறியாது

நான் வெயில் கழுவி

முகம் தேடும் திகிலை”

வெயிலைக் கழுவுவதா? அப்படி முற்படுவது ஒரு சிறுவனாக அன்றி யாராக இருக்க முடியும். பெரியவர்கள் வெறும் கழுவுதல் மட்டுமே செய்யக் கூடியவர்கள். ”நிறத்தை நுகர்வதற்கு எங்கே செல்ல வேண்டும்?” என்று கேட்டு நம்மை திக்குமுக்காட வைக்கிறான் அந்தச் சிறுவன்.

வாசல் தெளிக்கும் அந்த நொடியில்

வாசல் தெளிப்பவள்

மழையாக்குகிறாள்

நீரை

வாளி வகுப்பறைக்குள்

இறுக்கமாக அமர்ந்திருந்தவை

இப்போது தனித்தனியாக

விளையாடச் செல்கின்றன

எனும்போது படிமமாக ஒரு காட்சிப்படுத்தல் நிகழ்ந்தேறி குழந்தைகள் துள்ளிக் குதித்து மகிழ்வாய் விளையாடச் செல்வதைக் காண முடிகிறது. இனி எங்கு வாசல் தெளிப்பதைக் காண நேர்ந்தாலும் இந்த சித்திரத்தை தானே நினைத்துக் கொள்வேன்.

இது தவிரவும் என்னைக் கவர்ந்த இன்னொரு கவிதை உண்டு. ”WIND” –ப் பற்றி சொல்லும் போது அதை “movement of air“ என்கிறார்கள். இந்த movement பொதுவாக ”அதிக அழுத்தத்திலிருந்து குறைவான அழுத்தம் நோக்கி நகர்கிறது”. இதை சிறுவயதில் படிக்கும் போது எந்த சலனமும் இருந்ததில்லை. ஆனால் முதிர்ச்சியடைந்தபின் வாசித்தபோது இந்த சமமின்மை இல்லை எனில் இயக்கமே நடைபெறாது என்று அறிந்தபோது மனம் அதனின்று பல தத்துவார்த்தங்களை உதிர்த்துக் கொண்டது. அதைக் கொண்டு தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம் என பெருக்கிக் கொண்டேன். ஆனால் மதாரின் கவிதையில் இந்த ஒன்றை வேறொன்றாகக் கண்டேன்.

“…ஒரு உயரத்திலிருந்து

இன்னொரு உயரத்திற்கு

காற்று தாழ்வாக ஏறியது

ஒரு உயரத்திலிருந்து

இன்னொரு உயரத்திற்கு

மகிழ்ச்சி சென்று வந்து கொண்டிருந்தது

 

ஒரு உயரம் இன்னொரு உயரத்தை

காதலோடு பார்த்தது

ஒரு உயரம் வானமாகவும்

இன்னொரு உயரம் பூமியாகவும் இருந்தது

மழையும், பறவைகளும், ஒளியும்

அதனை நிரப்பிக் கொண்டிருந்தன.”

ஆகா! என்று தான் முதலில் தோன்றியது. ’இந்த இரு சமமின்மைக்கு நடுவில் எதை இட்டு நிரப்பி வைத்திருக்கிறார் பாரேன்!’ என்று வியந்தது என் மனது. ஆமாம் தானே! அதை இட்டு நிரப்பினால் தானே இந்த ஒரு பரிமாற்றம் நடைபெறும். அந்த பரிமாற்றத்தை அவர் மகிழ்ச்சி, காதல் என்கிறார். அந்த சிந்தை இல்லாத ஒரு முனையால் பரிமாற்றம் நிகழ்த்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

வட்டம் என்பதன் மேல் எப்போதும் எனக்கு ஆச்சரியம் இருந்ததுண்டு. ஒற்றை செல் –லிருந்து மிகப்பெரிய கோள்கள் வரை யாவும் வட்டமாகவே இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். வட்டமான கடுகுக்குள் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்ட முடியும் என்று ஒரு சிறு உருளையின் ஆற்றலை உணர்ந்த ஒளைவையை நினைத்து பெருமிதங்கொண்டிருக்கிறேன். ஆனால் மதார் இங்கு பூனையின் கண்களை கிரகத்திற்கு ஒப்பிட்டு,

“அப்படி எனில்

செண்டி மீட்டர் அளவுகோல் போதும்

பூமிக்கும் நிலவுக்கும்

இடைப்பட்ட தொலைவை அளக்க”

என்கிறார். என் எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்து அலைந்து அளக்கமுடியாத தொலைவுகளே இல்லை என்று அமைந்து கொண்டது. இன்னும் சொல்லிக் கொண்டே செல்வேன் நான். ஆனால் அவர் அழைத்துச் செல்லும் உலகிற்குள் ஒவ்வொருவரும் தாமாகச் சென்று கண்டடையும் பரவசம் அளப்பறியது.

மாதரின் உலகத்திலுள்ள கொஞ்சிப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், கிறுக்குப் பறவை ராட்டினங்கள், கிரகம் போன்ற கண் கொண்ட பூனை, ஆகசத்தையே ஒளித்து வைத்திருக்கும் அவரின் ஜன்னல் என தரிசிப்பதற்கு அதிகம் உள்ளது. அவை வெயிலை மட்டுமல்ல நம்மையும் பறக்கச் செய்து இலகுவக்குபவை.

மதாருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

-இரம்யா

மதார் கடிதங்கள்-3

மதார்- கடிதங்கள்-2

மதார்- கடிதங்கள்-1

வெயில் பறந்தது தபாலில் பெற :

அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :
7019426274
கிண்டிலில் படிக்க :
முந்தைய கட்டுரை‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைவிருதுகள்,விடுபடல்கள் – கடிதம்