விருதுகள்,விடுபடல்கள் – கடிதம்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள்

அன்புள்ள ஜெ

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் என்னும் கட்டுரை கண்டேன். திமுக ஆதரவாளர்களின் காழ்ப்புக்கூச்சல்கள் சவடால்களைக் கண்டு நானும் சலிப்படைந்துதான் இருக்கிறேன். திமுக சென்ற காலங்களில் நவீன இலக்கியத்தைப் புறக்கணித்தது என்பதையும், சென்றகாலங்களில் அதன் இலக்கிய -பண்பாட்டுச் செயல்பாடுகள் தனிநபர்துதி, கட்சிக்கொண்டாட்டம் ஆகியவையாக மட்டுமே இருந்தன என்பதையும், தலைசிறந்த படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் எப்படி புறக்கணிப்பப்பட்டார்கள் என்பதையும் திட்டவட்டமாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.

அவ்வண்ணம் மீண்டும் நிகழக்கூடாது என்ற எச்சரிக்கையுடனும், நிகழாது என்ற நம்பிக்கையுடனும் நீங்கள் எழுதியிருக்கும் குறிப்பு முக்கியமானது. இதையும் வழக்கம்போல வம்புப்பேச்சாகவே இங்கே எடுத்துக்கொள்வார்கள். இங்கே வெறும் வம்பு மட்டுமாகவே இலக்கியத்தை எடுத்துக்கொள்ளும் கூட்டம்தான் எல்லா தரப்பிலும் உள்ளது. ஆனாலும் இளந்தலைமுறைக்கு இக்குறிப்புகள் உதவலாம்.

இரண்டு கேள்விகள்தான் எனக்கு உள்ளன. வண்ணநிலவனின் பெயரை நீங்கள் விட்டுவிட்டீர்கள். மனுஷ்யபுத்திரனையும் சு.வெங்கடேசனையும் குறிப்பிடவில்லை. அதற்கான காரணங்கள் என்ன?

அர்விந்த்குமார்

அபி

அன்புள்ள அர்விந்த்,

இத்தகைய கட்டுரையை எழுதும்போதே எதிர்வினைகளை எதிர்பார்த்துத்தான் எழுதுகிறேன். எல்லாவகையான எதிர்வினைகளும் வரலாம். என் பெயர் கேட்டாலே வசைபாடுபவர்களையும் நான் அறிவேன். ஆனால் விவாதம் நடக்கட்டும். எல்லாமே ஒட்டுமொத்தமாக நல்விளைவை உருவாக்குவனதான். ஆகவே கசப்புடன் அணுகுவதில்லை.

[ஆனால் என் கட்டுரையில் இருக்கும் அவநம்பிக்கை தேவையில்லாதது, அது கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றுகிறது என்று அஜிதன் சொன்னான். அவனுடையது எப்போதுமே நிதானமான, நம்பிக்கை கொண்ட அணுகுமுறை. அவனுடைய பரந்த வாசிப்பறிவு, அவ்வயதில் அரிதான நிதானம் ஆகியவை நான் என்றுமே வியப்பவை. அவன் சொல்வது உண்மை என இப்போது எனக்கும் படுகிறது.

எனது அந்த அவநம்பிக்கை சென்ற மு.க ஆட்சிகாலத்து நினைவுகள், இன்றும் அம்மனநிலைகளை வலியுறுத்தும் குரல்கள் அளிக்கும் ஒவ்வாமையில் இருந்து எழுந்தது. அன்றே அதைப்பற்றி அழுத்தமாக எழுதியவன் நான். அக்குரல்களுக்கு பதிலளிக்கும் தொனி அதில் வந்துவிட்டது. அதை தவிர்த்து நேர்நிலை நம்பிக்கையுடன் அக்கட்டுரையை எழுதியிருக்கலாம்தான். நம் சூழலில் நேர்நிலையுடன் இருப்பதைப்போல கடினமானது வேறில்லை]

தமிழவன்

நான் எழுதவந்தபோதே அற்பஎழுத்து, போலிஎழுத்து என்னும் விமர்சனங்களுடன் சிலரை விமர்சித்து ஒதுக்குபவனாகவே இருந்தேன். என் பார்வையில் வண்ணநிலவன், பிரம்மராஜன், பா.செயப்பிரகாசம் மூவரும் அவ்வகையிலானவர்கள். அவர்கள் அடுத்த தலைமுறைக்கு மோசமான முன்னுதாரணங்கள் என்பது என் கருத்து. சில்லறை விஷயங்களை பூடகமாகச் சொல்வது வண்ணநிலவனின் எழுத்து. செயற்கைச் சிடுக்கு பிரம்மராஜன். போலிப்புரட்சி செயப்பிரகாசம்.

அது வெறும் அபிப்பிராயம் அல்ல, விவாதித்து முன்வைக்கப்பட்ட விமர்சனக்கருத்து. அப்படிப்பட்ட கருத்துக்கள் வழியாகவே விமர்சகன் செயல்படுகிறான். அதை இன்னொரு விமர்சகன் மறுப்பான் என்றால் அது அவன் கருத்து, விவாதச்சூழலில் அதை அவன் முன்வைக்கலாம். அதில் ஒன்று நிலைபெறலாம். அதுவே இலக்கியம் இயங்கும் முறை.

முப்பதாண்டுகளாக நான் அதைச் சொல்வதனால் அவர்கள் என்மேல் வெளிப்படுத்தும் காழ்ப்பையும் நான் அறிவேன். அதுவும் இயல்பானதே. அவர்களை ஓர் இலக்கிய வரலாற்றுப் பட்டியலில் சேர்ப்பேன். அவர்களுக்கு ஒரு விருது அளிக்கப்பட்டால் ஒரு சம்பிரதாயமான வாழ்த்து சொல்லவும் செய்வேன்.ஆனால் முன்னோடிகளாக முன்வைக்க மாட்டேன்.

கோணங்கி

இந்த பட்டியல் விருதுக்குரியவர்களை முழுமையாகச் சிபாரிசுசெய்யும் பட்டியலொன்றும் அல்ல. இலக்கியப் பங்களிப்பின் பட்டியலும் அல்ல. இது இன்றைய சூழலில் திமுக அரசு அதன் எல்லைகளுக்குள் நின்று குறைந்தபட்சம் விருதுக்கு பரிசீலிக்கவேண்டியவர்களின் ஒரு வரிசையே உள்ளது. ஒரு பொதுப் பரிந்துரை, அவ்வளவுதான்.

இன்னும் சொல்லப்போனால் திமுக எதிர்ப்பு இல்லாதவர்களின் பெயர்களையே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் அதையேனும் கருத்தில்கொள்வார்கள் என்று. ஆனால் திமுக எதிர்ப்பா ஆதரவா என்பது ஓர் அளவுகோல் ஆகக்கூடாதென்பதையே கட்டுரையின் சாரமாக கூறியிருக்கிறேன்.

அதில் எந்த விருதுகளுக்கும் எந்நிலையிலும் தவிர்க்கவே முடியாத இலக்கிய முன்னோடிகள், அதேசமயம் கௌரவிக்கவும் படாதவர்கள் என்ற கோணத்தில்தான் தேவதேவன், தேவதச்சன் என சிலர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். மூத்த படைப்பாளிகள் அனைவரையும் அதில் குறிப்பிடவில்லை.

எஸ்.வி.ராஜதுரை

என் பெருமதிப்பிற்குரிய வண்ணதாசன், பூமணி பெயர்கள்கூட அதில் இல்லை. ஏனென்றால் அவர்கள் வேண்டிய அளவுக்கு கௌரவிக்கப்பட்டுவிட்டர்கள். தமிழகத்தின் உயர்விருதுகள் அளிக்கப்பட்டுவிட்டன. அவர்களுக்கு இனிமேல் ஞானபீடம் அளிக்கப்படுமென்றால் வரவேற்பேன்.

கோணங்கி, அபி இருவர் பெயரையும் சொல்லவில்லை. அவர்கள் மேல் பெருமதிப்பை முன்வைப்பவன். ஆனால் அவர்களின் அழகியலை ஒரு பொது வாசகச்சமூகத்தின் முன் எவ்வகையிலும் நிறுவ முடியாது. தொடக்க காலகட்டத்தில் விருதுகள் பொதுச்சூழலிலேயே சற்றேனும் விளக்கும்படி அமையவேண்டும். மௌனி, நகுலன் இன்றிருந்தால் அவர்களுக்கும் இதே அளவுகோல்தான்.

எழுத்தாளர் பூமணி
எழுத்தாளர் பூமணி

பெருமாள் முருகன் அவருடைய தகுதிக்கு மீறி, பலவகை குழுச்செயல்பாடுகள் வழியாக, சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டவர்.அதோடு வெட்கமே இல்லாமல் இவ்விருதுக்கு முண்டியடித்து அபத்தமான கவிதைகளெல்லாம் எழுதுகிறார். அவருடைய ஆக்கங்களை முழுக்க நிராகரிக்க மாட்டேன். அவற்றுக்கு ஓர் இலக்கியத்தகுதி உண்டு. ஆனால் அவருடைய செயல்பாடுகள் உருவாக்கும் ஒவ்வாமையை மறைக்க விரும்பவில்லை

அவர் இத்தனைநாள் முழுக்கமுழுக்க பிராமண ‘லாபி’யால் முன்வைக்கப்பட்டவர். திமுக வென்றதும் ஒரே இரவில் பிராமண எதிர்ப்பாளராகி ஒடுக்கப்பட்டவராக வேடமிட்டு வந்து நிற்கிறார். எங்கு இலைபோட்டாலும் அங்கு சென்றுவிடும் இவ்வியல்புதான் கசப்பை உருவாக்குகிறது. அது நவீன எழுத்தாளன் செய்யக்கூடிய செயல் அல்ல.

நான் சுட்டிக்காட்டுவது இவ்வண்ணம் சுட்டிக்காட்டினால் மட்டுமே ஆட்சியாளர்கள் கவனிக்கக்கூடிய படைப்பாளிகளை மட்டும்தான். இவ்வண்ணம் சுட்டிக்காட்டுவது விமர்சகனின் பணி என்பதனால் மட்டும்தான். இதெல்லாம் வெறும் தனிநபர் அபிப்பிராயங்கள் அல்ல, நூற்றுக்கணக்கான பக்கங்கள் இலக்கியவிமர்சனங்கள் எழுதிய ஒருவனின் தரப்பு. இதேயளவு ஆழத்துடனும் விரிவுடனும் எழுதிய இன்னொருவரிடம் விவாதிக்கவும் செய்வேன்.

அ.மார்க்ஸ்

அறிஞர்களின் பட்டியலிலும் என் மதிப்புக்குரிய தமிழவன், க.பூரணசந்திரன், எஸ்.வி.ராஜதுரை, பேரா தர்மராஜ், அ.மார்க்ஸ், ஜமாலன் ஆகியோர் விடுபட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சிந்தனைகளை அறிமுகம் செய்தவர்கள் மட்டுமே. நான் குறிப்பிடுபவர்கள் நேரடியான புறவயமான ஆய்வுகளைச் செய்தவர்கள், ஆய்வுநூல்களை உருவாக்கியவர்கள். அரசியல்மையச் செயல்பாடுள்ளவர்களையும் தவிர்த்திருக்கிறேன். இது இலக்கியப் பட்டியல்

இந்தச் சிபாரிசுகளின் மதிப்பென்ன என்பதை இப்பட்டியலை வாசிப்பவர் எவரும் உணரமுடியும். முப்பதாண்டுகளாக இத்தனைபேரையும் ஏறத்தாழ முழுமையாகவே படித்து, இவர்கள்மேல் விரிவான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டவர்கள் மிக அரிதாகவே நம் சூழலில் உள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரின் சாதனைகள் எல்லைகள் இரண்டையும் கூற, இவர்களின் பங்களிப்பை சுருக்கமாக எடுத்துக்கூற தமிழில் பிறகுரல்கள் எழுவதில்லை என்பதை கவனிக்கலாம். அவ்வாறு நான் எழுதும் ஒவ்வொரு குறிப்புக்கு முன்னரும் இணையத்தில் தேடிப்பார்ப்பேன். வேறெவரும் எழுதிய எதுவுமே சிக்குவதில்லை. வெறும் வம்புகள் மட்டுமே கண்ணுக்குப் படும்.

வண்ணதாசன்

என் தலைமுறை படைப்பாளிகளில் மனுஷ்யபுத்திரன், சு.வெங்கடேசன் பெயர்களைச் சொல்லவில்லை. அவர்கள் முக்கியமான படைப்பாளிகள் என்று நினைக்கிறேன். ஆனால் சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர். மனுஷ்யபுத்திரன் திமுகவின் முகமாக அறியப்படுபவர். அவர்களுக்கு விருதளிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

திமுக என்பதற்காக ஒருவருக்கு விருது அளிக்கப்படாமல் இருக்கக்கூடாது.ஆனால் அதன் முகங்களென அறியப்படுபவர்களுக்கு விருதுகள் அளிக்கப்படலாகாது. அது கட்சிக்குள்ளேயே அத்தனை கட்சிப்படைப்பாளிகளும் துண்டை விரிக்கவே வழிவகுக்கும்.

க.பூரணசந்திரன்

மனுஷ்யபுத்திரன் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்பதே என் கருத்து. அவருடைய நீண்ட இலக்கிய அனுபவம் பயன்படும் வகையில் பொறுப்புகள் அளிக்கப்பட்டால் நன்று. அவர் மத்திய மாநிலங்களவைக்கு அனுப்பப்படுவாரென்றால் அவர் சிறப்புற ஆற்றத்தக்க பணிகள் அங்குண்டு.

அவர் இந்த அரசின் முகம், இந்த ஆட்சியில் அவர் அளிக்கும் பங்களிப்பால்தான் அவர் நினைவுகூரப்படவேண்டும்–வேழவேந்தன் போல. இவ்வரசு அளிக்கும் கௌரவத்தால் அல்ல, அவ்வண்ணம் விருது பெறுவது மதிப்புக்குரியதல்ல என பிற்காலத்தில் அவரே உணர்வார். அது அவர் இதுகாறும் பேசியதன் நோக்கத்தையே சிதைத்துவிடும்.

அதேசமயம் மையஅரசின் சாகித்ய அக்காதமி விருது அவருக்கு அளிக்கப்படுமென்றால் அது சிறப்பானது. ஆனால் அவருக்கு இவ்வரசின் விருது உட்பட எந்த விருது அளிக்கப்பட்டாலும், அது தனிப்பட்ட முறையில், இலக்கிய விமர்சகன் என்ற முறையில் என் வரவேற்புக்குரியதே.

[சென்ற பல ஆண்டுகளாகவே சாகித்ய அக்காதமி விருதுகளில் கவிதைகள்  கருத்தில்கொள்ளப்படுவதில்லை. மிகப்பிழையான அணுகுமுறை அது. அதையும் இங்கே சொல்லியாகவேண்டும்]

பேரா தர்மராஜ்

இதைச் சொல்வதற்கான என் தகுதி குறித்து ஒரு நண்பர் ஆவேசமாகக் கேட்டிருந்தார். இலக்கியவாசிப்பில் அடிப்படை அறிந்த ஒருவர் என் தகுதி குறித்து கேட்க மாட்டார்- அறிந்தவர் இன்று அதற்கான முதன்மைத் தகுதி எனக்குண்டு என்பதில் ஐயமும் கொண்டிருக்க மாட்டார்.

இது ஒரு பீடமா என்றால், ஆம். இதை அடைய முதலில் மறுக்கமுடியாத படைப்புச்சாதனையும் முழுமையான வாசிப்புப் பின்புலமும் தேவை. கருத்துக்களை உருவாக்குபவர்களுக்கே அக்கருத்துக்களை நெறிப்படுத்தும் தகுதி வருகிறது. இன்று அத்தகுதி கொண்ட இன்னொருவர் பெயர் எது?

அனைத்துக்கும் மேலாக இந்த இடம் என்பது பலவகை இழப்புகள் மற்றும் துறப்புகள் வழியாக,  தனித்து நிற்கும் துணிவு வழியாக, பலநூறு எதிர்ப்பு மற்றும் கசப்புகள் வழியாக ஈட்டப்படும் ஒன்று. அதற்குச் சித்தமானவர்கள் இப்பீடத்தை அடையலாம்.

*

நான் சொல்லியிருப்பது ஒரு சிறந்த நடைமுறைக்கான எதிர்பார்ப்பையும் அதற்கான வழிமுறைகளையும். அது நிகழ்ந்தால் நல்லது. இதைச் சொல்வது இப்படியொரு நல்நோக்கம் இவ்வரசுக்கு இருப்பதாக அது வெளிப்படுத்திக் கொள்வதனால். தமிழகத்தில் இது அரிதான ஒரு தொடக்கம், அது வழக்கம்போல கடத்தப்பட்டுவிடலாகாது என்பதனால்.

அடிப்படையில் இந்த வகையான பட்டியல்கள், இதையொட்டிய விவாதங்கள் போன்றவற்றால் ஒரே பயன்தான். இது ஒரு வரிசையை உருவாக்குகிறது. அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களின் பெயர்களை கொண்டுபோய் சேர்க்கிறது. இடம்வலம் தெரியாமல் அரசியல்கூச்சலிடும் கும்பல்கூட எப்படியோ இதில் ஒரு பங்களிப்பை ஆற்றுகிறது, அது நல்லதுதான்.

இப்படிப்பட்ட ஒரு விவாதம் வழியாக இவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். சற்று முன்பின்னாக இவ்வரிசை ஏற்கப்படுகிறது. அதுவே ஓர் இலக்கியமரபை கட்டமைத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கிறது. நோக்கம் இதுவே.

-ஜெ

முந்தைய கட்டுரைமதார் கடிதம்-4
அடுத்த கட்டுரைகொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை