தமிழக அரசின் இலக்கிய விருதுகள்

புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும்.

இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள்.

தேவதேவன்

திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்கள். எந்த அரசும் அவர்களுக்கு உகந்தவர்களைக் கொண்டாடத்தான் செய்யும். அவர்கள் இருவகை. அந்த அரசை அமைத்துள்ள கட்சிகளின் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கியவர்கள், அந்த அரசுடன் ஒத்துப்போகிறவர்கள்.

திமுக அரசு மு.கருணாநிதி அவர்கள் பதவியேற்ற நாள்முதல் அவ்விரு சாராரையும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது. பாரதிதாசன் பெயரில் பல்கலைக் கழகம் உள்ளது.தேவநேயப் பாவாணர் பெயரில்தான் மாவட்ட மைய நூலகம் உள்ளது. மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் பெயரில்தான் பெண்களுக்கான நலத்திட்டம் உள்ளது. அரசுடன் ஒத்துப்போனமையால்தான் சுரதாவுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்படி விருதுகளும் பரிசுகளும் பெற்ற பலர் உண்டு.

தேவிபாரதி

குற்றச்சாட்டுகளாகக் கூறப்படுபவை இரண்டு. ஒன்று, திராவிட இயக்க முன்னோடிகள் எனும்போதே அவர்களில் எவர் உகந்தோர் எவர் அல்லர் என்ற தெரிவு திமுக அரசிடம் இருந்தது. அந்த தெரிவு மு.கருணாநிதியின் தனிப்பட்ட கசப்புகள் விருப்புகள் சார்ந்ததாகவே இருந்தது. ஆகவே கா.அப்பாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு போன்ற பலர் புறக்கணிக்கப்பட்டார்கள். அவ்வாறு ஒரு புறந்தள்ளப்பட்டோர் பட்டியல் திராவிட இயக்க எழுத்தாளர்களுக்குள்ளேயே உண்டு.

நாம் பேசிக்கொண்டிருப்பது நவீன இலக்கியம் பற்றி மட்டுமே. அரசியலெழுத்து பற்றி அல்ல. அவற்றின் இடம் தெரியுமென்றலும் இலக்கியமுன்னோடிகள் நவீன இலக்கியத்தை மட்டுமே முன்வைத்தனர். நவீன இலக்கியத்திற்கு இங்கே ஆதரவும் புரலவலரும் வாசகரும் இல்லை என்பதனால். என் தலைமுறையில் ஓரளவு வாசகர்கள் வந்துவிட்டனர். ஆகவே இன்னும் கொஞ்சம் விரிவாக அரசியலெழுத்தையும் உள்ளே கொண்டுவந்து இலக்கியத்தின் இலக்கணங்களை அமைத்துக்கொண்டேன். எஸ்.எஸ்.தென்னரசு அல்லது விந்தன் பற்றிப் பேசிய இலக்கியவிமர்சகன் நான்தான்.

விக்ரமாதித்தன்

இரண்டாவது குற்றச்சாட்டே முக்கியமானது. அரசு என்பது அரசை அமைக்கும் கட்சிக்கு மட்டும் உரியது அல்ல. தான் ஆட்சி செய்யும் நிலத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டிற்கும் பொறுப்பேற்பதுதான் அரசின் கடமை. அப்பண்பாட்டைப் பேணவும் வளர்க்கவும் முயலவேண்டியது அதன் பணி. அரசின் நடவடிக்கைகள் அந்நோக்கிலேயே அமையவேண்டும். ஏனேன்றால் அக்கட்சிக்கு வாக்களித்தவர்களின் வரிப்பணத்தை மட்டும் அது செலவுசெய்யவில்லை. அது ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தால் இயங்குகிறது.

ஜனநாயகத்தின் அடிப்படை ஒன்று உண்டு. ஆட்சியைப் பிடிப்பது வரைத்தான் கட்சி அரசியலின் பார்வை இருக்கவேண்டும். அதற்குப் பிறகு இருக்கவேண்டியது அனைவருக்குமான ஆட்சியாளரின் பார்வை. கட்சிச்சார்புப் பார்வை இருந்தால் அது பண்பாட்டுக்குச் செயல்பாடுகளுக்குப் பேரழிவாக முடியும். அந்த ஒட்டுமொத்தப் பண்பாட்டையே கட்சிக்கருத்தியலாகச் சுருக்கிவிடுவதில் முடியும். திமுக ஆட்சியில் நடந்தது அதுவே.

எஸ்.ராமகிருஷ்ணன்

ஆகவேதான் புதுமைப்பித்தனுக்குக் கூட சென்னையில் ஒரு பண்பாட்டு நினைவகம் இல்லை. நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டது. இங்குள்ள நவீன இலக்கியம் தமிழ்மொழி அடைந்த வெற்றிகளில் ஒன்று. தமிழ்ப்பண்பாடு என்றும் பெருமை கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் ஐம்பதாண்டுகளாக அது அரசாலும், அரசின் கல்விநிறுவனங்களாலும், முற்றாகவே கைவிடப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக திராவிட இயக்க எழுத்தை நவீன இலக்கியம் ஏற்றுக்கொண்டதா என்ன என்று கேட்கிறார்கள். அபத்தமான கேள்வி அது. இது கொடுக்கல்- வாங்கல் அல்ல. நவீன இலக்கியத்திற்கு அதற்கான அழகியல் கொள்கைகள், அதற்கான வாழ்க்கைப்பார்வைகள் உண்டு. அவற்றையே அது முன்வைக்கும். அதனடிப்படையிலேயே அது தன்னை வரையறை செய்துகொள்ளும். அதனடிப்படையிலேயே அது பிற இலக்கியங்களை மதிப்பிடும். அந்த அளவுகோல்களை இழந்தால் அதன்பின் அது நவீன இலக்கியமே அல்ல. அப்படி அது தன்னை அழித்துக்கொண்டு அடைவதற்கொன்றும் இல்லை.

கலாப்ரியா

திராவிட இயக்க இலக்கியப் போக்கு நவீன இலக்கியத்தை ஏற்காமல் போகலாம், அது இயல்பானதே. மு.கருணாநிதிக்கு அவை ஒவ்வாமையை அளிக்கலாம். திராவிட இயக்க அமைப்புகள் அளிக்கும் விருதுகள் நவீன எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவேண்டுமென எவரும் எதிர்பார்ப்பதில்லை. இங்கே பேசப்படுவது அரசைப் பற்றி, கல்வித்துறை பற்றி. அனைவரின் வரிப்பணத்தால் அனைவருக்குமாக அமைந்துள்ள அரசு செய்யவேண்டிய பண்பாட்டுப் பணிகள் பற்றி.

ஓர் உதாரணம் சொல்கிறேன். கேரளத்தில் நேர்ப் பாதி ஆட்சிக்காலம் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியே ஆட்சியில் இருந்துள்ளது. மிகத்தெளிவான அரசியல்கொள்கையும், திட்டவட்டமான இலக்கியக்கொள்கையும் கொண்ட கட்சி அது. அதில் சமரசமே இருப்பதில்லை. ஆனால் அது அரசில் இருந்த காலகட்டத்தில் மார்க்ஸிய எழுத்தாளர்களை மட்டும் முன்னிறுத்தவில்லை. அதற்காக அரசுநிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளவுமில்லை.

சுரெஷ்குமர இந்திரஜித்

மாறாக கேரள இலக்கியச் சூழலில் உள்ள மிகச்சிறந்த ஆளுமைகளை நடுவர்களாக, ஆலோசகர்களாகக் கொண்ட குழுக்களே பண்பாட்டுச் செயல்பாடுகளை நடத்தின. கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பழுத்த காங்கிரஸ்காரர்கள், தீவிர கம்யூனிஸ்டு எதிரிகள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நினைவகங்கள் அமைந்துள்ளன. அரசுமரியாதைகள் அமைந்துள்ளன. முதல்வரே நேரில் சென்று அவர்களை பாராட்டிய, நோய்நலம் உசாவிய தருணங்கள் உண்டு.

ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சியின் அமைப்புகள் அளிக்கும் விருதுகள் அவர்களுக்குரிய எழுத்தாளர்களுக்கே அளிப்பட்டன.பொதுவெளியில் அவர்களை மட்டுமே மிகத்தீவிரமாக முன்வைத்தனர் கம்யூனிஸ்டுகள். அவர்களுக்காக மாநாடுகளையே நடத்தினார்கள். கம்யூனிசத்தை ஏற்காத எழுத்தாளர்களை கட்சியின் விமர்சகர்கள் கடுமையாக மறுத்து  கட்சி இதழ்களில் எழுதினர். இதுதான் வேறுபாடு.

இமையம்

டெல்லியில் ஆண்ட சென்ற காங்கிரஸ் அரசுகளையே உதாரணமாகக் கொள்ளலாம். காங்கிரஸ் அரசு இருந்த காலகட்டத்தில் தேசிய அளவிலேயே சாகித்ய அக்காதமி விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள். காங்கிரஸ் அதில் தலையிடவில்லை.

இன்றும் சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் வரையிலான பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்கள் சாகித்ய அக்காதமி விருது பெறுகிறார்கள். அரசு அதில் தலையிடுவதில்லை. திராவிட இயக்க எழுத்தாளரான இமையம் பெற்ற ஒரே விருது பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு அளித்தது.  இன்றைய ஆட்சியாளர்களுக்கு உகந்தவர்களுக்கோ ஆளும் கட்சியின் கொள்கையைச் சார்ந்தவர்களுக்கோ அவ்விருதுகள் வழங்கப்படுவதில்லை — இப்போதைய சூழலைப் பார்த்தால் எவ்வளவுநாள் அது நீடிக்குமென தெரியவில்லை என்பது வேறுவிஷயம். ஏனென்றால் சுதந்திரமாகச் செயல்பட்ட பல பண்பாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே சீரழிக்கப்பட்டுவிட்டன.

சாரு

இதுவே முறைமை. இந்த வகையான ஒரு நடுநிலைமை, அரசையும் கட்சியையும் ஆட்சியாளர்களையும் பிரித்துப்பார்க்கும் பார்வை, கலாச்சாரச் செயல்பாடுகளையும் அரசியல்செயல்பாடுகளையும் வேறுவேறாகப் பார்க்கும் நிதானம் இதுவரை திமுகவில் இருந்ததில்லை. திரும்பத் திரும்பச் சுட்டப்படுவது அதைத்தான். திமுக எழுத்தாளர்களை ஏற்றதில்லை என்று சொன்னதுமே திமுக கொண்டாடிய கட்சிசார் எழுத்தாளர்கள், குற்றேவல் எழுத்தாளர்களின் பெயர்பட்டியலுடன் வருபவர்களிடம் இதைச் சொல்லி புரியவைக்க முடியாது

இங்கே தமிழ் என்றென்றும் பெருமைகொள்ளவேண்டிய மாபெரும் படைப்பாளிகள் எந்த ஏற்புமின்றி, எந்த வசதியுமின்றி ஏங்கி மறைந்தனர். அவர்களை கௌரவிக்க, அவர்களை விருதளிப்பவர்களுக்குச் சுட்டிக்காட்ட என்னைப் போன்ற எழுத்தாளர்களே இறங்கி நண்பர்களிடம் பணம் திரட்டியும், கைப்பணம் போட்டும் விருதுகளை அமைக்கவேண்டியிருந்தது. பலநூறுகோடி ரூபாயில் அரசின் ‘இலக்கிய மாநாடு’கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில ஆயிரம் ரூபாய் செலவில் வெளியிடப்பட்ட சிற்றிதழ்களை நம்பி நவீன இலக்கியம் வாழ்ந்தது.

யுவன்

இரா முருகன்

பா.ராகவன்

அரசுக்கும் அரசமைப்புகளுக்கும் அணுக்கமாக ஆகும் கலையறிந்தோர் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் முன்னிறுத்தப்பட்டனர். வெற்று மேடைப்பேச்சாளர்கள் மேடைமேடையாக மு.கருணாநிதியை வெட்கமின்றி புகழ்ந்து வெகுமதிகளை பெற்றுக்கொண்டனர். மெய்யான அறிஞர்கள் மூர்க்கமாக புறந்தள்ளப்பட்டனர். அவர்களில் திராவிட இயக்கச் சார்புள்ள பேரறிஞர்களும் உண்டு.

கோவையில் திமுக நடத்திய சென்ற உலகத்தமிழ் மாநாட்டை எண்ணிப்பாருங்கள். அ.கா.பெருமாளுக்கு அங்கே இடமில்லை என்றால் தமிழகத்தில் வேறெந்த ஆய்வாளர் மேடையேறத் தகுதி கொண்டவர்? கோவையிலேயே  இருந்த நாஞ்சில்நாடனுக்கு கோவையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பில்லை என்றால் அது என்ன இலக்கியமாநாடு?

சுவே
சு.வேணுகோபால்

சென்ற திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலர் நினைவில் இருக்காது. எழுத்தாளர்களுக்கு அரசுக் குடியிருப்புகளில் வீடு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைத்து அங்கே அனைவருக்கும் நிரந்தரமான கடைகள், சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு, திரைத்துறையின் ஊழியர்களுக்கு வீடு… எவையும் நிறைவேறவில்லை. சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு அளிப்பதற்கான ‘கூப்பன்’களை அளிக்க ஒரு திமுக செயல்பாட்டாளர் பணம் வசூல் செய்து எடுத்துக்கொண்டார் என்று பேசப்பட்டது.

இவையெல்லாமே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மேடையில் அறிவித்தவை. ஆனால் அரசாணைகளாக ஆகவில்லை. அரசாணைக்காக எதிர்பார்த்து, பின்னர் நேரில் சென்று கேட்ட பதிப்பாளர்களிடம்  ”அவர்தான் சொல்கிறார் என்றால் உங்களுக்கு தெரியவேண்டாமா? அரசிடம் வீடுகட்ட ஏது நிலம்? பெருநகர்நிலமும் வனநிலமும் தவிர சென்னையில் நிலம் எங்கே இருக்கிறது? அரசூழியர் குடியிருப்புக்கே நிலம்தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று ஸ்டாலின் நிலைமையை விளக்கியதாகச் சொல்வார்கள்.

தேவதச்சன்

இப்போது திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்முறை எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. அறிவிப்புக்கு அப்பால் சென்று நடைமுறையாகும் என்றாலும்கூட சென்றகால மனநிலைகளே நீடிக்குமென்று நம்பவே சூழல் உள்ளது. ஏனென்றால் கட்சியோ அமைப்போ பெரிதாக மாறவில்லை. ஊடகங்களில் கூச்சலிடும் உடன்பிறப்புகளும் திடீர் உடன்பிறப்புகளும் தரத்தில் பழையவர்களைவிட இன்னும் பின்னால் சென்றுவிட்டிருக்கிறார்கள் – சென்ற கால உடன்பிறப்புகளுக்கு திராவிட இயக்க எழுத்தாவது கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான்கு முன்னோடிகளைச் சொல் என்றால் சொல்வார்கள். இவர்கள் தற்குறிகள்.

ஆகவே விருதுகள் இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி. பென் டு பப்ளிஷ் போன்ற விருதுகளையே அமைப்பாகத் திரண்டு வென்ற அரைவேக்காடுகள் இவற்றை விட்டுவைக்கப் போவதில்லை. அவர்களில் பலர் கவின்கலை விருதுகளுக்காக கோழிமுட்டைகள், தென்னைமரங்கள் என படங்கள் வரைய ஆரம்பித்திருப்பதாகவும் செய்தி.

புலவர் செ இராசு

ஒரு ஜனநாயகத்தில் நாம் எதிர்பார்க்கவேண்டிய செயல்பாடு என்பது கேரளத்தில் நிகழ்வதுபோல தகுதியானவர்களைக் கொண்டு அமைக்கப்படும் சுதந்திரமான அமைப்பு. அதன் வெளிப்படையான செயல்பாடு. அந்த தகுதி கட்சிச்சார்பு அல்ல, அறிவியக்கத் தகுதி. திட்டவட்டமான வெளிப்படையான சாதனை.எந்த அரசு வந்தாலும் தமிழகத்தில் ஒரு சிறு ‘அறிஞர்’குழு உள்ளே சென்று அமர்ந்துவிடும். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பொருட்படுத்தத் தக்க ஒரு புத்தகம்கூட இருக்காது. சரியான குழுவே சரியான ஆளுமைகளை தெரிவுசெய்யமுடியும். கௌரவிக்கப் படுபவர்களும் நிறுவப்பட்ட இலக்கியத் தகுதி கொண்டிருத்தல் அவசியம்.

ஆனால் இன்று தமிழகத்தில் அதற்கான வாய்ப்புண்டு என நான் நினைக்கவில்லை. இந்த இலக்கியப்பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பதே இந்த அரசு பதவிக்கு வந்ததில் அதை ஆவேசமாக ஆதரித்த சில எழுத்தாளர்களுக்கு ஒரு பங்குண்டு என்பதனாலும், அவர்களுக்கு பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதனாலும்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர்கள் கணக்குபேச ஆரம்பித்துவிட்டனர்.  கட்சியும் ஆட்சியும் வேறுவேறு என்றெல்லாம் இங்கே இவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

பாவண்ணன்

ஆகவே இங்கே அதிகபட்சம் நான் எதிர்பார்ப்பது, திமுக மீது சாய்வு கொண்டவர்களிலேயே கொஞ்சம் இலக்கிய முக்கியத்துவம் உடையவர்கள் கௌரவிக்கப்படுவதுதான். உதாரணமாக எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன், இமையம், கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், தேவிபாரதி,சுப்ரபாரதி மணியன், சு.வேணுகோபால், எஸ்.செந்தில்குமார், தமிழ்மகன், அ.வெண்ணிலா போன்றவர்கள். கட்சிச் சார்பு இல்லையென்றாலும் இவ்வரசு மேல் நல்லெண்ணம் கொண்ட சாரு நிவேதிதா போன்றவர்களையும் பரிசீலிக்கலாம்.

இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி போன்று ஏற்கனவே உரிய அங்கீகாரம் பெற்ற முன்னோடிகளை விட்டுவிடலாம். அரசின் நிதியுதவி உடனடியாகத் தேவையாகும் இடத்தில் இருக்கும் ரமேஷ் பிரேதன், யூமா வாசுகி, கீரனூர் ஜாகீர்ராஜா, கண்மணி குணசேகரன், ஃப்ரான்ஸிஸ் கிருபா போன்றவர்களுக்கு அது கிடைக்குமென்றால் அதன்பொருட்டு இந்த அரசை மனமுவந்து பாராட்டுவேன். தொடர்புகள் ஏதும் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களும் திமுக- இடதுசாரி ஆதரவு மனநிலை கொண்டவர்களே.

ராஜ் கௌதமன்

மெய்யாகவே பண்பாட்டியக்கம் மேல் ஆர்வம் கொண்ட ஒரு நவீன அரசு உவந்து கௌரவிக்கவேண்டும் என்றால் அதன் முதல் தெரிவு தேவதேவன் ஆகவே இருக்கும். அவரோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மனிதமுகங்களை நினைவுக்கூர்வதுமில்லை. ஆகவே தொடர்புகளும் இல்லை. ஒரு பொதுச்சூழலில் கருத்துக்களை முன்வைப்பவராகவும் அவர் இல்லை. ஆனால் அவரைத் தேடிச்செல்லும்போதே எந்த விருதும் பெருமை கொள்கிறது. தேவதச்சன் ஒரு முன்னோடியின் இடம் கொண்டவர்.

திமுக எப்படியும் பிராமணர்களை பொருட்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே காழ்ப்புக் கூச்சல்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆகவே யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்,இரா.முருகன், பா.ராகவன் ஆகியோரை முன்வைத்துப் பயனில்லை. இருந்தாலும் இப்படி ஒரு பட்டியலில் அவர்களைச் சொல்லி வைக்கவேண்டும்—வாசகர்களுக்காக.

அ.கா பெருமாள்

இந்த அரசு பண்பாட்டுச் செயல்பாடுகளுக்காக, அறிவுச் செயல்பாடுகளுக்காக ஏதாவது மெய்யாகவே செய்யவேண்டும் என்றால் செய்யவேண்டிய சில உள்ளன. நோபல்பரிசு பெற்ற தமிழகத்து அறிவியலாளர்களுக்கான நினைவகங்களை இங்கே உருவாக்கவேண்டும். சர்.சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர். கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு நினைவகம் உருவாகவேண்டும். அவை அவர்களின் துறை சார்ந்தவையாக இருக்கவேண்டும். அவர்களின் சாதி காரணமாக அவர்கள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டனர். அந்த கீழ்மையிலிருந்து திமுக வெளிவரவேண்டும்.

கட்சிச் சார்புக்கு அப்பாற்பட்ட நோக்குடன்  கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன், பேரகராதி உருவாக்கிய எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோர் இனிமேலேனும் நினைவகங்கள் வழியாக அங்கீகரிக்கப்படவேண்டும். தமிழிசை இயக்கத்தின் முன்னோடியாகிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இங்கே இன்னும்கூட அங்கீகரிக்கப்படவில்லை. அவருடைய நினைவு நிலைநிறுத்தப்படவேண்டும்.

குடவாயில் பாலசுப்ரமணியம்

எப்போதுமே நம் ஆசைகள் இவை. இவற்றை நமக்குநாமே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். புதுமைப்பித்தனுக்கு சென்னையில் ஒரு சிலையை நானே நிதி திரட்டி வைக்கவேண்டும் என்னும் கனவு எனக்கு பத்தாண்டுகளாக உள்ளது. சொந்தமாக அமையும் சிறு இடத்தில். கோவையில் வைக்கலாமென்று சொல்லும் பல நண்பர்கள், புரவலர் இன்று உள்ளனர். அது ஒரு படைப்பூக்கமற்ற நிர்வாகச் செயல்பாடு என்பதனால்தான் தொடங்குவதற்குத் தயங்குகிறேன். அவ்வாறு அமையும் என்றால் அதுவே புதுமைப்பித்தனுக்குக் கௌரவம்.

எந்த அரசு இருந்தாலும் அவ்வரசு நோக்கி இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இந்த தளத்தில் ஒவ்வொரு விருதின்போதும் இதையெல்லாம் எழுதுகிறேன். ஒவ்வொரு விவாதத்திலும் குறிப்பிடுகிறேன். நம்பிக்கைதான், எதிர்பார்ப்புதான். ஒரு புதிய அரசு அமையும்போது அதைக் கோரலாம். சென்ற ஐந்தாண்டுகளில்தான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்த பின்னர்தான், ஒரு முதல்வர் ஓர் இலக்கியமுன்னோடி மறைவுக்கு நான்குவரி அஞ்சலியை முன்வைக்கும் வழக்கமே ஆரம்பித்தது. அது இந்த ஆட்சியில் இன்னும் விரிவாக, இன்னும் பயனுள்ளதாகவேண்டும். இவ்வறிவிப்புகளை அவ்வண்ணம் நம்ப விரும்புகிறேன்.

சோ.தர்மன்

ஆனால் அந்நம்பிக்கைகள் நிறைவேறும் இன்றில்லை என்றே தோன்றுகிறது. இணையவெளியில் திமுகச் சில்லறைகள் இங்குள்ள எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மேல் பெய்துகொண்டிருக்கும் காழ்ப்புக் கூச்சல்கள் செவிகூச செய்கின்றன. இது தாங்கள் வேட்டையாடிப்பெற்ற இரை, தாங்களே பிய்த்துக்கிழித்து தின்போம் என்ற வெறியை மட்டுமே அதில் காணமுடிகிறது. அவர்கள் வெறும் தொண்டர்கள், அவர்களின் மனநிலை எப்போதும் அதுதான்.

ஆனால் அவர்களின் வெறிக்கூச்சலை சாதாரணமாகக் காணமுடியாது. அதற்கு மிகப்பெரிய செல்வாக்குண்டு. மெல்லமெல்ல அவர்களில் சிலரையே அறிஞர் என்றும் படைப்பாளர் என்றும் அரசு அங்கீகரிக்கவே இந்த பரிசுகள் வழிவகுக்கும். அந்த இரையை அடையும்பொருட்டு பிற அனைவரையுமே அவர்கள் கூட்டாக இழிவுசெய்வார்கள். அனைவரையும் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவார்கள். விளைவாக தமிழுக்குப் பெரும்பங்களிப்பாற்றியவர்கள் அவமதிக்கப்பட்டு இச்சில்லறைகள் அரங்கிலேறும் சூழல் அமைந்தால் அதைவிட கீழ்மை வேறில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இங்கேதான்.

ஸ்டாலின் ராஜாங்கம்

இது முன்பும் நிகழ்ந்ததுதான். அவ்வாறு அரசால் வெற்றுக்கூச்சலிடும் கட்சிக்காரர்கள் இலக்கியவாதிகளாக, சிந்தனையாளர்களாக, ஆய்வாளர்களாக முன்னிலைப் படுத்தப் படும்போது அவர்கள் இலக்கியவாதிகளோ, சிந்தனையாளர்களோ ஆய்வாளர்களோ அல்ல என்று சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அது விருதை எதிர்ப்பது அல்ல. அவ்விருதின் வழியாக நிறுவப்படும் ஒரு மதிப்பீட்டை எதிர்ப்பது. அடுத்த தலைமுறையினரிடம் எது இலக்கியம், எது சிந்தனை, எது ஆய்வு என்று சுட்டிக்காட்டுவது. அதைச் செய்யாவிட்டால் தவறான முன்னுதாரணங்கள் உருவாகி நிலைபெறு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்சென்று அதைச் செய்வது விமர்சகர்களின், இலக்கியச் செயல்பாட்டாளர்களின் கடமை.

ப.சரவணன்

இந்த அளவுகோல்கள் மிகக்கறாரானவை அல்ல. எவரைவிட எவர் மேல் என்றெல்லாம் துல்லியமாக எவரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இப்படிச் சொல்லலாம், பொதுவாக தீவிர வாசிப்புச் சூழலிலும் ஆய்வுச்சூழலிலும் ஏற்கப்பட்ட இலக்கியப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களுமே முக்கியமானவர்கள். அங்கே வெற்றுக்கூச்சலிடும் அரசியலாளர்கள் இடம்பெறலாகாது. அவர்களே ஓசை கிளப்புபவர்கள், எங்கும் முண்டியடிப்பவர்கள், கும்பலாகச் செயல்படுபவர்கள். அவர்கள் அங்கே சென்று அமரவே வாய்ப்பு மிகுதி. ஆட்சியாளர்களின் விவேகமே அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும்.

கொரோனா ஒழிப்பு உட்பட பலதளங்களில் இந்த அரசின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. இதை நேரடியான அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இத்தனை திறன்மிக்க நிர்வாகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிதானமும் அன்பும் கொண்ட முதல்வர் என ஸ்டாலின் இன்று தென்படுகிறார். நம்பிக்கையூட்டும் விஷயம் இது. இது நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்தபட்ச நல்லதேனும் நிகழும் என எண்ணுகிறேன்.அவ்வாறெனில் பாராட்டுவதும் அல்லவென்றால் விமர்சிப்பதுமே என் பணி.

கரு ஆறுமுகத்தமிழன்

பண்பாட்டு ஆய்வாளனாக, இலக்கிய விமர்சகனாக என்னை எப்போதுமே அந்நிலையில்தான் நிறுத்திக்கொள்வேன். க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் தன்னை நிறுத்திக்கொண்ட இடம் அது. எந்த புதிய அரசையும் நம்பிக்கையை அளித்தே எதிர்கொள்ளவேண்டும். இன்று அதையே செய்கிறேன்.

மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்களின் பட்டியல் என்பது நான் எப்போதும் முன்வைப்பது. இவர்களைப்பற்றி எப்போதும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். விமர்சனம் மட்டுமல்ல, பரிந்துரையும் இலக்கியச் செயல்பாட்டின் பகுதியே. ஆகவே இதை முன்வைக்கிறேன். இதையே மலையாளத்திலும் செய்வதுண்டு.

எஸ்.செந்தில்குமார்

இவற்றைப் பேசும்போது இப்படி பரிந்துரை செய்வதிலுள்ள சிக்கல்களையும் சொல்லியாகவேண்டும்– ஒரே கட்டுரையில் எல்லாம் இருந்தால் நல்லது என்பதனால். ஆய்வுகள் போன்றவற்றுக்கு புறவயமான அளவீடுகள் உண்டு. அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம். புலவர் செ.இராசு பேராசிரியர் பா.ஜம்புலிங்கம், ஆ.சிவசுப்ரமணியம், ஆ.இரா.வேங்கடாசலபதி, ப.சரவணன். கரு.ஆறுமுகத்தமிழன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் பணி தெளிவானது, மறுக்கமுடியாதது. அவர்களின் நூல்களே சான்று.

ஆனால் இலக்கியத்தின் தரமதிப்பீடுகள் அகவயமானவை. அவை புறவயமாக நிறுவப்படுவது தொடர்ச்சியான விமர்சனச் செயல்பாடுகள் வழியாகத்தான். இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை அறிந்தவர் பல மடங்கு. இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை மேலான எழுத்தாளர் என நினைப்பவர்களும் பற்பல மடங்கு இருப்பார்கள். ஆகவே ஜனநாயக அடிப்படையில், மக்களின் ஏற்பின் அடிப்படையில் விருது அளித்தால் இந்திரா சௌந்தரராஜனே இலக்கிய விருதுகளை எல்லாம் பெறவேண்டும்.

அ.இரா.வேங்கடாசலபதி

ஆனால் இலக்கிய அழகியலை முன்வைக்கும் விமர்சனம் இந்திரா பார்த்தசாரதியை முன்வைத்து அவரே சிறந்தவர் என கூறுகிறது. அந்த இலக்கியவிமர்சனக் கருத்தும் ஒரு சிறுவட்டத்திலேயே திகழும்.  அதன் செல்வாக்கு இலக்கியவாசகர் நடுவே மட்டும்தான். ஆனால் மெல்லமெல்ல அந்தத் தரப்பு நிலைகொள்கிறது. அப்படித்தான் இலக்கியவாதிகள் நிலைபெறுகிறார்களே ஒழிய ‘மக்கள் ஏற்பினால்’ அல்ல.

கி.ராஜநாராயணன் நூறாண்டு வாழ்ந்தார். அவரை அறிந்தோர் ரமணிசந்திரன் வாசகர் எண்ணிக்கையில் நூறிலொருவரே இருப்பார்கள். ரமணிச்சந்திரன் இலக்கியவாதி அல்ல, கி.ராஜநாராயணன் இலக்கியவாதி. இந்த வேறுபாடு என்றுமுள்ள ஓர் உண்மை. அதை ஜனநாயகப் பண்புகளால் நிறுவவில்லை, அழ்கையலால்தான் நிறுவியிருக்கிறோம்.

இச்சூழலில் ஓர் அரசு எவருக்கு விருதளிக்கவேண்டும், கௌரவிக்க வேண்டும்? மக்கள் கருத்தையா அது பொருட்படுத்தவேண்டும்? இல்லை, அங்கே அரசு மக்களுக்கு தந்தை எனும் இடத்தில் உள்ளது. எது மக்களுக்கு பிடிக்கிறதோ அதையல்ல, எது மக்களுக்குத் தேவையோ அதை அளிக்கவேண்டும்.

ரமேஷ் பிரேதன்
கீரனூர் ஜாகீர்ராஜா
யூமா வாசுகி
கண்மணி

ஆகவேதான் உலகமெங்கும் அரசுகள் மக்கள் அறியாத கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விருதளித்து அவர்களை முன்னிறுத்துகின்றன. சத்யஜித் ரே விருது பெறுகிறார், ரமேஷ் சிப்பி விருது பெறுவதில்லை. அடூர் விருது பெறுகிறார், ஐ.வி.சசி விருது பெறுவதில்லை.

அவ்வகையான அங்கீகாரம் நிகழ்வதற்கு இரண்டு அடிப்படைகள் தேவையாக உள்ளன. ஒன்று, மதிப்பீடுகளை முன்வைத்து அதை நிறுவும் விமர்சன இயக்கம். இரண்டு, அவ்விமர்சன இயக்கத்திற்கு அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த அங்கீகாரம். விமர்சன இயக்கம் தர்க்கங்களை உண்டுபண்ணுகிறது. அதற்கு தீவிர வாசகர்களின் ஏற்பு உருவாகிறது. கல்வித்துறை தொடர்ந்து வரவேண்டும். [அது நிகழாததனாலேயே இங்கே கி.ரா போன்ற இலக்கியமுன்னோடிகளுக்கு ஞானபீடம் போன்ற விருதுகள் வந்தமையவில்லை.]

ஆ.சிவசுப்ரமணியம்

தமிழில் விமர்சன இயக்கம் சென்ற தலைமுறை வரை வலுவாக இருந்தது. இன்றும் வாசகர்களிடம் அந்த விமர்சன இயக்கத்தின் செல்வாக்கு உள்ளது, ஆனால் அதற்கு அரசு அல்லது கல்வித்துறை அங்கீகாரம் இல்லை. அரசு தன் கட்சிச்சார்பாலும் கல்வித்துறை அதன் சாதியரசியல்- ஆள்பிடிப்பு அரசியலாலும் இலக்கியத்தை அணுகுகிறது.

ஆகவே இன்று நவீன இலக்கியச் சூழலில் உள்ள மதிப்பீடுகளுக்கு எந்த புறவய மதிப்பும் இல்லை. தேவதேவனோ தேவதச்சனோ மாபெரும் கவிஞர்கள் என்பதில் இலக்கியவாசகனுக்கு ஐயமே இல்லை. ஆனால் அதை இந்தச் சின்ன வட்டத்திற்கு வெளியே கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகவே அரசு அல்லது கல்வித்துறையின் ஏற்பு அவர்களுக்கு அமைவதே இல்லை.

சுப்ரபாரதிமணியன்

சூழல் இப்படி இருக்கையில் நாம் நம் கலைஞர்கள்  சமூக ஏற்பின்றி சிறுமை கொள்வதைப்பற்றி குறைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. சமூக ஏற்போ, கல்வித்துறை ஏற்போ இல்லாமல் அரசின் ஏற்பு இயலவேண்டுமென எதிர்பார்ப்பதிலும் பயனில்லை. அதை மாற்றுவது இந்த அறிவுச்சூழலில் இருந்து எவரேனும் அரசில் பங்குபெற்றால்தான் இயலும்.

கேரளத்தில் கலைப்பண்பாட்டு துறை என்ற ஒரு துறையும் அதற்கு அமைச்சரும் உள்ளனர். அதில் இலக்கியவாதிகள் அமைச்சராவதில்லை. இலக்கிய ஆர்வம் கொண்ட, இலக்கியஅறிவு கொண்ட அரசியல்வாதி ஒருவர் அமைச்சராகிறார்

[இலக்கியவாதி அதற்கு முற்றிலும் தகுதியற்றவன். அவன் அந்த இடத்தை ஓர் இலக்கிய அதிகாரமாக ஆக்கிக்கொள்வான். அவ்வண்ணம் ஓர் இடம் ஓர் இலக்கியவாதிக்கு அளிக்கப்படும் என்றால் அவன் தன்னை இலக்கியவிமர்சகனாக, வெளிப்படையான அளவுகோல்களுடன் தன் தெரிவை முன்வைத்து நிறுவியவனாக, இருக்கவேண்டும். கேரளத்தில் அவ்வாறு அமைச்சரான இலக்கிய விமர்சகர் ஜோசப் முண்டச்சேரி. அகில இந்திய அளவில் டாக்டர் ஸ்ரீகாந்த் வர்மா, டாக்டர் கரன்சிங் மற்றும் கே.நட்வர்சிங்]

ஜம்புலிங்கம்

கேரள கலாச்சார அமைச்சர்களில் எம்.ஏ.பேபி [கம்யூனிஸ்ட்]  ஜி.கார்த்திகேயன் [காங்கிரஸ்]  போன்றவர்கள் கட்சி எல்லை கடந்து நீடித்த பங்களிப்புக்காக இன்றும் நினைக்கப்படும் ஆளுமைகள். அப்படி எவரும் திராவிட ஆட்சி உருவானபின் இருந்ததில்லை.

அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் கலைக்களஞ்சியம் [பெ.தூரன்] தமிழ்ப்பேரகராதி [எஸ்.வையாபுரிப்பிள்ளை] போன்ற பெரும்பணிகள் நிகழ்ந்தன. [ஆனால் தமிழ்வழிக் கல்வி என்னும் தளத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், அரங்கநாயகம் மூவருமே பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்]

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

உண்மையான பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசியலுக்கு அப்பால் நின்றிருக்கும் அளவுகோல்களால் மதிப்பிடப்பட்டு, கௌரவிக்கப்படும் ஒரு சூழல் தமிழில் மெல்லமெல்ல உருவாகலாம். அவ்வண்ணம் உருவானால் இலக்கிய விழுமியங்கள் விருதுகளுக்கான அளவுகோல்களாக ஆகலாம். அதற்குரிய காலம் இன்னும் கனியவேண்டும்.

சரி, என்னை எங்கே வைத்துக்கொள்வேன்? ஏற்கனவே சொன்னதுதான். எந்த அரசுக்கும் என் பணிவை, முழுதேற்பை அளிக்க முடியாது. குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. எந்த மேடையிலும் எவர் முன்பும் கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவனாக நிற்க முடியாது. கொஞ்சம் மோசமான ஆணவம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை.

ஜெ

நமக்குரிய சிலைகள்

முந்தைய கட்டுரைமெய்ஞானம் டாட் காம்
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம், 5 அமெரிக்க நகரங்களில்…