கதாநாயகி வாசித்து முடித்ததுமே எழுத எண்ணினேன். பத்து நாட்களாக வேறொரு மனநிலை. இன்றொரு முறை முழுவதுமாக மீள்வாசிப்பு செய்தேன்.
கதையின் முதல் வரியிலேயே சொல்லி விடுவது போல இது வளர்ந்து கொண்டே இருக்கும் கதை.
இதில் வரும் ஃப்ரான்ஸெஸ் பர்னி எழுதிய நாவல் “Evelina or the History of a Young Lady’s Entrance into the World”, “The Wanderer: Or, Female Difficulties” இணையத்தில் கிடைப்பதால் அதையும் வாசித்துக் கொண்டிருந்தேன். கதாநாயகிக்காக அன்றி இந்த 18ஆம் நூற்றாண்டு நாவலுக்குள், இந்த மொழிக்குள் உள்ளே நுழைந்திருக்க மாட்டேன். ஒரு புத்தகம் யாரால் வாசிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அந்த எழுத்து உயிர் கொள்வதும் அது புத்தகமாகவே நீட்டிப்பதும் நிகழ்கிறது. “அகலிகையை எளுப்பிட்டீங்க” என்று இன்ஜினீயர் ராஜப்பன் சொல்வது போல, தங்கள் கண்பட்டதும் இதில் இருந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக உறைந்திருந்த பெண்கள் உயிர் பெற்று வருகிறார்கள், இவ்வளவு நீண்ட கதை எழுந்து வருகிறது.
இக்கதை என்னவாக எனக்குள் இருக்கிறது என உணர்ந்து கொள்ளத்தான் இன்று எழுதுகிறேன். முதலாவதாக பல பட்டைகள் கொண்ட வைரம் போல எனத் தோன்றுகிறது. அன்றன்று வாசித்த போது அவ்வெழுத்து வந்து சூழ்ந்து கொண்டே இருந்தது, மனதில் என்ன சென்று படிகிறது என உணரவே இயலவில்லை. ஒரு இசையைக் கேட்கும் போது நாமறியாத வெளிகளில் அலையச் செய்யும் கலைஞன் போல கதை எங்கெங்கோ அழைத்துச் சென்றது. முழுவதுமாக பதினைந்து நாட்கள் அந்தக் காடு வந்து சூழ்ந்து கொண்டது, அப்பெண்கள் வந்து பின்னால் நின்றார்கள், ஆவன்னா வால் சுருட்டிய குரங்காக இருந்தது, ஒரு கலைடாஸ்கோப் பார்ப்பது போல இருந்தது. அந்த அறையில் அமர்ந்துதான் இக்கதையை வாசித்துக் கொண்டிருந்தேன்.
வாசித்து முடித்த பிறகு கதை உள்ளே வளர ஆரம்பித்தது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொன்று மேலெழுந்து வருகிறது, பல பரிமாணங்கள். 1980களில் ஒரு அரசாங்க வேலை கிடைக்கும் ஒரு வேளாண் குடும்பத்து இளைஞனின் வாழ்வின் சித்தரிப்பு, அதன் வழியாக விரியும் ஒரு காலகட்டத்தின் சித்திரம், பற்பசையைக் காட்டிலும் பற்பொடி விலை மலிவு என வீடுகளில் கணக்கிட்ட காலமும், இன்லாண்ட் லெட்டரின் அணைத்து இண்டு இடுக்குகளிலும் சுற்றத்தார் க்ஷேமலாபங்கள் எல்லாம் எழுதி, முக்கியமான தகவலை கடிதத்தைக் கிழிக்கும் மடிப்பில் நுணுக்கி எழுதும் என் பெரியம்மாவும் மனதில் வந்து போனது. முப்பது நாற்பது வருடங்களுக்குள் தொன்மமாகிவிட்ட ஒரு காலத்தின் சித்திரம். பதினெட்டாம் நூற்றாண்டு வரை போவதற்கு முன்னால் இந்த 80-களின் வாழ்வே ஒரு பீரியட் திரைப்படம் பார்ப்பது போல இருந்தது. தாங்கள் எழுதித் தீராத காடு, காணிக்காரர்களின் வாழ்வு, அவர்கள் எழுத்தை ஒவ்வொன்றாகப் புதிதாகத் தொட்டுத் திறக்கும் கணங்கள், கல்வி என்னும் தீப்பொறி பற்றியேறும் வேகமும், அது தரும் வெளிச்சமும், இது போல அதீத சூழல்களுக்கு சென்று எழுத்தறிவிக்கச் சென்ற முகமறியாத ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, 18ஆம் நூற்றாண்டின் பெண்களின் நிலை, அவர்களது எழுத்தும், பாவனைகளும், வாழ்வும், மனப்பிறழ்வின் படிநிலைகள் என ஒவ்வொன்றும் உள்ளே சென்று நிறைந்திருக்கிறது.
முதலில் இந்நாவல் ஒரு காடுதான் எனத் தோன்றியது. முதலில் திகைக்க வைப்பது நாவலின் கட்டுமானம், திக்குத் தெரியாத காடு. திசை போதம் அழிந்து மேலும் மேலுமென பசுமைக்குள் நுழைந்து இறுதியாக முதலில் துவங்கிய இடத்துக்கே வந்து சேர்வது போல ஃபேன்னி என்ற பெயரில் எழுதும் ஃப்ரான்ஸெஸ், அவள் புனைவும் உண்மையுமாக உருவாக்கும் ஈவ்லினா, அவர்கள் ஒருவரை ஒருவர் கதைக்குள்ளேயே சந்திக்கும் பொழுதுகள், அங்கு வரும் ஹெலனா அவர்கள் உரையாடல்களின் வாயிலாக திறக்கும் மற்றொரு கதவுக்குப் பின்னிருக்கும் விர்ஜினியா என ஒரு காட்டில் தொலைந்து போன உணர்வு. அப்பெண்களின் உணர்வுகள், வெளிப்பாடுகள், ஆணும் பெண்ணும், பெண்ணும் பெண்ணும் நிகழ்த்திக் கொள்ளும் நடிப்புகள், வாழ்வைத் தாங்கள் அறிந்த விதத்தில் மேம்படுத்திக் கொள்ள அவர்கள் கொடுக்கும் விலைகள், மீறல்கள்.
தான் படித்த ஆங்கில நாவல் வாயிலாக இவர்கள் அனைவரையும் சந்திக்கும் மெய்யன் பிள்ளை. மெய்யன் – பெயர் சொல்வது போல அவன்தான் கதாநாயகியின் நிதர்சனம் (ரியாலிட்டி) அல்லது மெய்மை. எழுத்துகளுக்குள் உறையும் கடந்த காலத்தை தொட்டெடுக்கும் நுண்மையுள்ள அதே நேரம், சூழ்ந்திருக்கும் காட்டை, காணிக்காரர்கள் வாழ்வை, தனது வாழ்வை உணர்ந்த நிதர்சனமானவன். ஒவ்வொரு காலடியாக உடைவு நோக்கி நகரும் போதும் அனைத்தையும் உற்று நோக்கிக் கொண்டே இருக்குமளவு கால்களை மண்ணில் ஊன்றியிருப்பவன். பசுங்காட்டில் மண்ணில் ஆழ வேர் ஊன்றி, விண்ணில் தனது கிளைகளைப் பரப்பும் பெருமரங்கள் போல தன்னைத் தொலைத்துவிடாதிருக்க செய்யும் அத்தனைப் பிரயத்தனங்களுக்கு இடையே இருநூறு ஆண்டு காலமாக யாருமின்றி மொழியறியா மண்ணில் அலையும் அப்பெண்களுக்காக மனம் இளகுபவன். அவன் ஒரு மாறுதலின் காலகட்டத்தில் நிற்பவன். கல் பெண்ணென மலர்வதற்காக காத்திருந்தது போல, புத்தகம் தனக்குரிய வாசகனுக்காக, காணிக்காரர்கள் வாழ்வு அவன் வருகைக்காக காத்திருக்கிறது. மரங்களின் மேல் மாடம் அமைத்த காணிக்காரர்கள் காடுகளுக்குள் நீளும் அரசாங்கத்தின் சிறுவிரல் தொடுகையென ஒரு கருப்பலகையும் சோறுமாகச் சென்று கல்வி வாயிலாக அவர்களுக்கு எழுத்தறிவித்தவன், பட்டினி இன்றி வாழச் செய்தவன். அவர்களுக்காக எழுதப்படாத நமது கல்வித் திட்டத்தில் இருந்து விலகி, அக்குழந்தைகளுக்குத் தேவையான கதைகளைச் சொல்லும் ஆசிரியன். காட்டு தெய்வங்களுக்கிடையே சரஸ்வதியைக் குடியேற்றுகிறான், முதலில் அவர்கள் மாடத்தில் தானும் ஏறி அமர்ந்து, பின்னர் அவர்களை வெளியுலகுக்கு கைபிடித்து அழைத்துச்செல்கிறாள் கல்வியின் தெய்வம்.
இரண்டாவதாக காடு நாவலுக்குப் பிறகு, இக்கதை முழுவதுமாக காட்டுக்குள் வாழ வைத்தது. மாரிக்காலம் முழுமைக்குமாகப் பெய்யும் ஒரே நீண்ட மழை, ஒன்றை ஒன்று முட்டி மேலேறி வரும் மேகம் எனக் கண்முன் நிற்கிறது நான் கண்டறியாத அக்காடு. “மழை எதையோ சத்தியம் செய்வது போல மண்ணை ஓங்கி அறைந்தது”, “நீரில் நீர்விழுந்து தெறிப்பது நீராலான சிறிய நாற்றுக்கள் போல தோன்றியது”, இத்தனை எழுதிய பின்னும் மழையைச் சொல்ல வார்த்தைகள் எவ்வளவு எஞ்சியிருக்கின்றன.
மூன்றாவதாக, கதை முழுவதும் வரும் காணிக்காரர்கள் மொழியைக் கையாளும் விதம் குறித்த சித்தரிப்புகள். “கதவு சிரிக்குந்ந வெளிச்சம்” போன்ற மின்னல்கள்; “புலியை காட்டிலும் பெரிய கரண்டு என மின்சாரத்தை சொல்லுவதும், யானைப்பலகை எனக் கருப்பலகைக்கு பெயரிடுவதும், பனங்கொட்டை என யானைக்குட்டியை சொல்வதும், “ஆ” என்ற ஓரெழுத்துஒருமொழியால் உணர்த்திடும் பல உணர்வுகளும், அவர்கள் கல்வி கற்றுக் கொள்ளும் விதமும் என ஒரு குழந்தை முதன் முதலாய் மொழியை வைத்து விளையாடுவதைப் பார்க்கும் அனுபவம். அறிதலின் மகிழ்ச்சியைச் சொல்ல துப்பன் முற்றம் முழுக்க “அ” எழுதிய காட்சி இனி எப்போதும் நினைவில் எழும்.
நான்காவதாக கதை வாசித்த ஒவ்வொருவரையும் தாங்கள் மனப்பிறழ்வின் கோட்டுக்கு எவ்வளவு அருகில் நின்றிருக்கிறோம் என உணர்த்திய விதம். இன்றைய காலகட்டத்தில் எந்த நோய் குறித்து இணையத்தில் கூகுளில் தேடினாலும் மரணம் வரை அனைத்து சாத்தியங்களையும் சொல்லி உண்மையில் நாம் மரணத்தை நெருங்கி விட்டதாய் உணரச் செய்யும், அது போல இக்கதையில் மெய்யனுக்கு நேரும் ஸ்கிஸோஃப்ரினியாவின் பல அறிகுறிகள், கோட்டுக்கு எந்தப் பக்கம் இருக்கிறேன் எனும் கேள்வியை எழுப்பியது. இக்கதையில் வருவது போல “அச்சமூட்டக்கூடிய எந்த அனுபவத்திலும் அதை எப்படி விளக்கி நாம் ஏற்கனவே கொண்டிருக்கக்கூடிய உலக உருவகத்துடன் பொருத்திக்கொள்வது என்பதில்தான் நம்முடைய அகத்தின் பதற்றம் இருக்கிறது. ” அவனுக்கு நேர்ந்தது மொத்தமும் ஸ்கிஸோஃப்ரினியா என்று விளக்கிக் கொள்வது மண்ணில் கால் ஊன்றிக் கொள்ள வசதியாக இருக்கிறது. ஆனால் காடுகளுக்குள் அவன் மீண்டும் காணும் கர்னல் சாப்மானும் காப்டன் மெக்கின்ஸியும் இன்னொரு நிகர் உண்மையாக உடன் இருக்கிறார்கள். அந்த நிகர் உண்மையே மனதுக்கு வேண்டியிருக்கிறது. விளக்கிக் கொள்ள முடியாதவற்றின் வசீகரம் இக்கதையை பசுமை நுரைத்த காடு போல ஆக்குகிறது.
இறுதியாக ஃபேன்னி பர்னி, ஈவ்லினா, ஹெலெனா , விர்ஜீனியா வாயிலாக விரியும் பெண்கள் குறித்த பெண்களின் கருத்துக்கள், பெண்களை முன்னிட்ட ஆண்களின் சொற்கள், பெண்களின் சொற்களாக மெய்யன் காணும் வரிகள் என நிறைந்திருக்கிறது இக்கதை. இந்தப் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் அடக்கப்படுகிறார்கள், வெளியேறத் துடிக்கிறார்கள். நாடகங்கள் நிறைந்த பெண்களின் உலகை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். ஆண்களால் சுரண்டப்படுகிறார்கள், தான் ஒரு கள்ளமற்றவள் என்ற பாவனை வழியாகவே ஆண்களைப் பயன்படுத்துகிறார்கள், எங்கோ ஓரிடத்தில் வெல்கிறார்கள். வேட்டையாடப்பட்டு பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் தலைகள் போல ஐரோப்பிய பெண்கள் ஒரு பதாகையாகவே பார்க்கப்படுகிறார்கள். கள்ளமின்மையின் அழிவை தங்கள் அடையாளமாக, அதிகாரமாக சூடிக் கொள்ளும் ஆண்களின் பதாகை. பச்சைவயல்கள் அழிவதும், காடுகளில் குரங்குகள் தேவையின்றி சுடப்படுவதும், இப்பெண்கள் சுரண்டப்படுவதும் அனைத்தும் ஒரு ஆணவ நிறைவுக்காக. ஒரு கணமும் தாழக் கூடாத கொடியாகக் காணப்படும் விர்ஜீனியாவின் கௌரவம் போலத்தான், காப்டன் மக்கின்ஸியின் பதவி உயர்வுக்காக கர்னலிடம் பழக நேரும் ஹெலெனா. அப்பெண்கள் தங்களை விடுவித்துக் கொள்ள, ஒரு பிரேஸ்லெட்டை உதற வாழ்நாள் முழுவதும் தேவைப்படுகிறது, சில சமயம் காடுறையும் புலி உதவுகிறது. ஹெலெனா கர்னலை உதைத்த உதை ஃப்ரான்ஸெஸ் பர்னி வெட்டி எறிந்த முலை.
இறுதியாக கள்ளமின்மையின் அழிவு என்பது சூறையாடப்படும் சித்திரமாக மேற்கில் இருப்பதை மெய்யன் உணர்வதற்காகவே இவை அனைத்தும் நிகழ்வதாகத் தோன்றியது. காணிக்காரர்களின் இயல்பான அறிவுத்திறனையும் கற்பனைத்திறனையும் கல்வி என்ற பெயரால் அழித்து விடுவேனோ என்ற மெய்யான கவலையோடும் அக்கறையோடும் அவர்களோடு அவர்கள் சூழலிலேயே வாழ்ந்து, அவர்களது வாழ்வின் தரத்தை மேம்படுத்தவென்றே தன்னை அர்ப்பணிக்கும் தெளிவும் அதிலிருந்தே மெய்யனுக்கு கிடைத்திருக்கும் எனத் தோன்றியது. “என்றே குரு, ஏசுகிறிஸ்து மீனவனை வலையை வீசிட்டு வான்னு கூப்பிட்ட மாதிரி என்னை விளிச்சு எளுப்பினவர்” என்று துப்பன் சொல்வது காடு மெய்யனுக்குத் தந்த வாழ்த்து.
மிக்க அன்புடன்,
சுபா
***
அன்புள்ள ஜெ,
கதாநாயகி நாவலை நான் மீண்டும் மீண்டும் படிக்கிறேன். மீளவிடாத ஏதோ ஒன்று அதில் இருக்கிறது. ஒரு நாவல் நிறைய இடைவெளிகளை விட்டுவிட்டதென்றால் அவற்றை நிரப்பமுயன்று நாம் அதை பெரிதாக்கிக் கொள்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக அவை மிகப்பெரிதாக ஆகிவிடுகின்றன.ஏராளமான புதிய கற்பனைகள் எழுகின்றன.
உதாரணமாக துப்பன் எழுத்துக்களில் இருந்து விலங்குகளை எழுப்புகிறான். அவற்றை எழுதிய ஆதிமுன்னோடி அவற்றில் மறையவைத்த விலங்குகள் அவை. அப்படித்தான் மெய்யனும் அந்நாவலில் இருந்து மனிதர்களை எழுப்புகிறான்
அருண்குமார்
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 15
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 14
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 13
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 12
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 11
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 10
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 9
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 8
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 7
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 6
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 5
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 4
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 3