கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை

கொற்றவை, கரு.ஆறுமுகத் தமிழன் – கடிதம்

அன்புள்ள ஜெ.,

கரு.ஆறுமுகத் தமிழன் அவர்களின் கட்டுரைகளை இணையத்தில் தொடர்ந்து  வாசித்திருக்கிறோம். புத்தக கண்காட்சி இலக்கிய விழாக்கள் போன்ற சந்தர்பங்களில் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதுண்டு.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  ஆழிசூழ்உலகு குறித்த வாசகசாலையின்  அமர்வு ஒன்றில்  கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் பங்கேற்றிருந்தார். அப்போது தனிப்பட்ட உரையாடலில் காடு நாவல் குறித்தும் ஒப்பிட்டுக் கூறியது  நல்ல திறப்பாக அமைந்தது.

இவ்வாண்டு ‘நற்றுணை கலந்துரையாடல்’ உருவான போது காடு அல்லது கொற்றவை நாவல் குறித்து உரையாட அவரை அழைக்க வேண்டும் என்கிற ஆவல்  எழுந்தது. இவ்விரண்டில் கொற்றவை குறித்து அவர் உரையாட கேட்க வேண்டும் என்று கடலூர் சீனு உறுதியாக இருந்தார்.

‘இன்றைய காந்திகள்’ எழுதிய பாலா அவர்கள் வழியாக தொடர்புகொண்டு கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களை சந்திக்க நேரம் வாங்கினோம்.

சிறிது நேரமே ஆனாலும்  அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடியது உவகையான ஒன்று. தனித்தமிழ் இயக்கம், அதில் அரசியலை இணைத்து புரிந்து குழப்பிக் கொள்வதில் உருவாகும் சிக்கல்கள், வடமொழி பெயர்களை எழுதும் பொழுது எழுந்த  சில நகைச்சுவையான உதாரணங்கள்  ஆகியவற்றைக் குறித்துக் கூறினார்.  அவரது திருமந்திரம் புத்தகங்கள் குறித்தும் உரையாடினோம். கொற்றவை நாவலை பதிப்பகம் சார்பாக வாசித்து அதில் திருத்தராக பங்கு வகித்ததையும் குறிப்பிட்டார். அப்பொழுதே இந்த உரை குறித்த எதிர்பார்ப்பு எழுந்து வந்தது..

கலந்துரையாடல் அமர்வில், நாவலுக்கான உரை முடிந்த பின்னரும் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு  தமிழ் இலக்கியம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவருக்கு எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்

அன்புடன்,

விஷ்ணுபுரம் சென்னை நண்பர்கள்

முந்தைய கட்டுரைவிருதுகள்,விடுபடல்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைஒரு முகம், ஒரு குரல்.