ஒரு முகம், ஒரு குரல்.

வெண்முரசு ஆவணப்படத்தின் டிரெயிலர் வந்திருந்தது. பார்த்தீர்களா என்று நண்பர்கள் கேட்டனர். பார்த்தேன், கேட்கவில்லை. கிட்டத்தட்ட ஒலியை அணைத்துவிட்டு அருண்மொழியை பார்த்துக்கொண்டிருந்தேன். அழகாக இருக்கிறாள், மிக அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. முப்பதாண்டுகளுக்கு முந்தைய எண்ணம் அப்படியே நீடிக்கிறது. எப்போதுமுள்ள உயிர்த்துடிப்பு. சிறுமியுடையதுபோன்ற துள்ளல்.

அவள் தன் வலைத்தளத்தில் எழுதுவதை வாசிக்கிறேன். அதை ஓர் எழுத்தாளர் எழுதுவதாக நினைக்கவே முடிவதில்லை. அவளிடம் எப்போதுமே மாறாத ஒரு குளிர்த்தன்மை உண்டு. அந்த மொழியிலேயே அவற்றை வாசிக்க முடிகிறது. அவளுடைய இளமைக்கனவுகள், அதை ஒரு வட்டத்திற்குப்பின் அவள் வந்து தொட்ட விதம் எல்லாமே அணுக்கமான வேறொரு மொழியில் எனக்குக் கேட்கின்றன.

அதைவிட நான் எப்போதுமே விரும்புவது அவளுடைய நகைச்சுவை உணர்ச்சி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நான் அவளுடன் பேசுவதை அரிய அனுபவமாகவே உணர்கிறேன். அவள் பேசி முடித்து சென்றபின் சட்டென்று நினைத்துச் சிரித்துவிடும் ஒரு வரியாவது எஞ்சாமலிருந்ததே இல்லை.

அவளுடைய pun என்பது எதிர்விமர்சனமோ கேலியோ இல்லாதது. முழுக்கவே எவரையும் புண்படுத்தாதது. [சுரா வீட்டுக்கு போய்விட்டு வந்தாள். நான் கேட்டேன். “தங்கு எப்டி இருக்கா?”. அவள் சொன்னாள் “தங்குதடையில்லாம பேசுறா”]. ஆண்களிடம் அந்த மென்மையான நகைச்சுவை அனேகமாக இல்லை என்பது என் எண்ணம். ஒரு சின்ன முள் உள்ளே இருக்கும்.

இக்கட்டுரைகள் முழுக்க அந்த மென்மையான நகைச்சுவை ஓடுகிறது. இதெல்லாம் இப்படித்தானே என்ற எண்ணத்துடன் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் மனநிலையின் வெளிப்பாடு அது. அவளுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், அ.முத்துலிங்கம். அவர்களின் மென்மையான நகைச்சுவையை பேச்சில் இயல்பாக அடைவாள். எழுத்தில் முயல்கிறாள்.

[”அம்மா எப்டி இருக்காங்க?” என்றேன். “எந்திரிச்சு உக்காந்து இந்த இவ இருக்காளே…ன்னு நீட்டி பேசி சித்தியை வையுறாங்க. அப்டியானா நார்மலா இருக்காங்கன்னுதானே அர்த்தம்?” ]

சாயங்காலம் வீட்டுக்குவந்து தஸ்தயேவ்ஸ்கி படிப்பவள், ஆனால் அலுவலகத்திலும் அண்டையிலும் அத்தனை பெண்களிடமும் அவர்களில் ஒருத்தியாக அரட்டை அடிக்க முடியும். அவளுடைய இலக்கிய ஆர்வமெல்லாம் அவர்களுக்கு இன்றுவரை தெரியாது. அவர்களுடன் புழங்குவதற்கென்று டிவி சீரியலில் கதை மட்டும் இணையத்தில் தோராயமாக தெரிந்து வைத்திருப்பாள்.புடவை நகை வம்பு என்று இயல்பாகப்புழங்குவாள். நான் ஆச்சரியத்துடன் மட்டுமே பார்க்கும் விஷயம் இது. ஆண்களுக்கு இது அனேகமாகச் சாத்தியமே இல்லை என நினைக்கிறேன்.

இக்கட்டுரைகளில் என் சாயல் இல்லை என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது இயல்பு. இந்த முப்பதாண்டுகளில் நான் கண்டது அது. எதனாலும் அடித்துச் செல்லப்படாத, எவராலும் எதன்பொருட்டும் ஆணையிடப்படுவதை ஏற்காத ஓர் உறுதி அவளிடமுண்டு. இயல்பான பணிவின் உள்ளே அது எப்போதுமிருக்கும். எவராயினும் அவளிடம் உரையாடவே முடியும். தந்தையோ கணவனோ என்ன, மத்திய அரசுக்குக்கூட அவள் பணிய வாய்ப்பில்லை.

அப்படி இருக்க ஒருவர் எதிர்மனநிலை கொண்டிருக்கவேண்டியதில்லை. கசப்பும் கோபமும் கொண்டிருக்கவேண்டியதில்லை. தன்னுடைய அகத்தை நிலையாக, ஆழமாக வைத்துக்கொண்டிருந்தால் போதும். எப்போதுமே இனியவளாக, எச்சூழலிலும் உறுத்தாதவளாக, ஆனால் தன்னிலையை சற்றும் விடாதவளாக இருக்க முடியும்.அருண்மொழியின் நேர்நிலைத்தன்மையும் நம்பிக்கையும் நான் எனக்காக நம்பியிருக்கும் பிடிமானங்கள்.

அருண்மொழி அவளுடைய பெரிய குடும்பத்தின், என் நட்புச்சூழலின் எத்தனையோ பேருக்கு தாங்குகோல். இனி ஒரு தலைமுறைக்குப்பின் அவள் படிக்கவைத்த, அவள் வாழ்க்கை அமைத்துக்கொடுத்த குழந்தைகளால்தான் அவள் முதன்மையாக நினைக்கப்படுவாள்.

‘எடைமிக்கவை எவையென்றால் ஆழ்ந்த வேருள்ளவையே’ என்று ஒரு மலையாள கவிச்சொல். [வைலோப்பிள்ளி]. நம் அன்னையர் இப்படி இருந்தார்கள்.

இந்த எழுத்துக்களின் முதல்வாசகனாக இவை எனக்கு அளிக்கும் பரவசம் பிறிதொருவர் அறியமுடியாதது.

விட்டு வந்த இடம்அருண்மொழிநங்கை.

முந்தைய கட்டுரைகொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை
அடுத்த கட்டுரைவெண்முரசு, உரையாடல்