மனைவி!

“உனக்கு உன் வேலைதான் முக்கியம்னு தெரியும். ஹாபியா என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ல?

உலகம் முழுக்க எழுதப்படும் நகைச்சுவைகளில் பெரும்பாலானவை கணவன் மனைவி நகைச்சுவைகள் என்றுதான் நினைக்கிறேன். கணவன் சோம்பேறி, மணவாழ்க்கையில் மாட்டிக்கொண்டவன், கஞ்சன். மனைவி கணவனை திட்டிக்கொண்டே இருப்பவள், செலவாளி. இதுதான் சர்வதேச அளவில் கணவன் மனைவி நகைச்சுவையின் வடிவம்.

ஆனால் எங்களூரில் குடும்ப வாழ்க்கை என்று எடுத்தாலே உடனே வரும் பழமொழியான “சட்டியும் கலமும் தட்டியும் முட்டியும்தான் இருக்கும்” என்பதுதான் எனக்குச் சிறந்த நகைச்சுவை என்று படுகிறது. இரண்டும் இருப்பது ஒரே அடுக்களையில். இரண்டு முட்டிக்கொள்ளாமல் அங்கே புழங்க முடியாது. ஆனால் உடைந்துவிடும்படி முட்டிக்கொண்டால் இரண்டுமே உடையவேண்டியிருக்கும்.

“இவளைக் கல்யாணம் பண்ணிக்க போற நீ ஆரோக்கியத்திலேயும் நோயிலேயும் செல்வத்திலேயும் வறுமையிலேயும் கடைசியிலே இவ உன் தலையை கடிச்சு திங்கிற வரைக்கும் வைச்சு காப்பாத்துவேன்னு உறுதி சொல்கிறாயா?

“எருமை ஈன்று அழியுமாம், கிடா புணர்ச்சிக்கு நிக்குமாம்” என்ற பழமொழி நாஞ்சில்நாடனுக்கு பிடித்தமானது. “முக்குறத திட்டவா நக்குறத திட்டவா?”என்பதும் எருமை சம்பந்தமான நகைச்சுவைதான். தொழுவம் சார்ந்து ஒரு ஐம்பது நகைச்சுவைகளை எடுக்கலாம். எல்லாமே குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும்.

பொதுவாக அக்கால நாயர்களைப் பற்றி சொல்லும்போது அவர்களை பாம்புடன் ஒப்புமைப்படுத்துவதுண்டு. அதாவது “உள்ளே வாலும் வெளியே பத்தி”யும் காட்டி அமர்ந்திருக்கும் அந்த கெத்துக்காக. நாயரை அவருடைய அச்சி பொருட்படுத்துவதில்லை. கடைவாய் மறைய மீசை வைத்த இடியன் சங்குப்பிள்ளையைக்கூட. அதைப்பற்றி பேடும்போது தங்கையா நாடார் சொன்னார். ”கோயில்பூனைக்கு சாமிபயம் இல்லை”

”டிரெஸ்போட்டுக்கிட்டு வாரேன்னு சொல்லிட்டு போய் மூடிக்கிட்டா… இவ்ளவு நேரமாச்சு”

பெண்களைப் பற்றிய பழமொழிகளை வயசாளிகளிடம் அடிக்கடி கேட்கலாம். ”அன்னநடைக்காரிய கெட்டுதத விட தன்னநடைக்காரிய கெட்டுலே” என்று அச்சு ஆசான் சொன்னது ஒரு நல்ல பெண்ணிய வரையறை என இப்போது தோன்றுகிறது. ஆனால் அதற்கு ஜெபராஜ் வாத்தியார் “அம்பு விட்டாச்சு, பண்ணிக்கு வேணும்னா வந்து பட்டுக்கட்டும்” என்று சொன்ன பதிலுக்கு என்ன பொருள் என்று இன்றும் புரியவில்லை.

ஆனால் சண்டைகளின்போது கையில் கிடைத்த கல், தேங்காய், தடி, அரிவாள்மணை என எதை ஏண்டுமென்றாலும் எடுத்து வீசுவதுபோல பழமொழிகளால் மாறி மாறி அடிப்பார்கள். பழமொழிகளே பழமொழிகளுக்கு பதில்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒருத்தி சொன்ன பழமொழிக்கு உரிய பதில் பழமொழி கிடைக்காமல் அங்குமிங்கும் தட்டழிந்து வேட்டியை தூக்கி காட்டி வசைபாடுவதையும் கண்டிருக்கிறேன்

“என் மனைவி நான் உரிச்சுப்போட்ட சட்டைகிட்டே ரொம்பநேரமா பேசிட்டிருக்கா”

“ஏட்டி உனக்க கெட்டினவன்லா அடி முடிஞ்சபிறவு கம்பெடுக்கப் போறவன்” என்று நாணம்மை சொல்ல “ஆமாடீ அடியெல்லாம் செண்டைக்கு, பணம் எல்லாம் பாணனுக்கு” என்று  உடனே தங்கம்மை சொன்ன பதில் எழுகிறது.

அவை இரண்டும் எங்கே சந்திக்கின்றன என்று நாம் யோசிப்பதற்குள் ”வளைஞ்ச தெங்குக்கு நேரான நிழல் வருமா? வந்து வாய்ச்சிருக்கே எனக்க அண்ணனுக்கு” என்னும் பழமொழியும் அதற்குப் பதிலாக ”ஆமாடி,விளுந்த மரத்தில் கேறுதது எளுப்பம்லா?” என்ற பழமொழியும் எழுந்துவிடுகின்றன

உடனே  “கர்த்தாவுக்க நியாயம் அதுல்லா, வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமை” என்று கடைசி விசும்பலும் வந்துவிடுகிறது. பழமொழிச்சண்டை என்பது முழுக்கமுழுக்க மறைபிரதிகளால் நிகழும் ஓர் இலக்கியப் படைப்பு போல.

“என்ன இன்னும் கொஞ்சம் கூட்டுப்புழுவாவே இருக்கா?”

கணவன் மனைவி உறவுபோல எளிமையான உறவு வேறு இல்லை. அதைப்போல சிக்கலாக ஆக்கிக்கொள்ளப்படுவதும் இல்லை. அசோகமித்திரனின் கதை ஒன்றில் காதலர்கள் இருவர் சண்டை பிடித்துக்கொள்வார்கள். காதலன் சொல்வான் “சண்டைபோடாதே, நம்மை கணவன் மனைவி என்று நினைத்துக்கொள்ளப் போகிறார்க்ள்” .சண்டை நடந்தது கல்யாண விஷயமாகத்தான்.

மிகச்சிறந்த திருமண உறவுகள் அந்த உறவுக்குள் இருந்தே உருவாகும் விதிகளால் அமைகின்றன. தர்மபுரியில் நான் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும்போது ஒரு நிகழ்வு. எதிரே சாலையோரம் புளியமரத்தடியில் தார்ப்பாய் இழுத்துக் கட்டிய டீக்கடை. அதை நடத்துபவர் ஒரு அக்கா. அவள் கணவன் ஒரு சாதிக்கட்சியாளர். அக்கட்சி அதிதீவிர தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அவர் ஒரு நல்ல கனிந்த குடிகாரர்.

“இதோபார், இப்டியே உன் கடந்தகால மனைவியை பத்தி பேசிட்டே இருந்தே நான் என் வருங்கால புருசனைப்பத்திப் பேச ஆரம்பிச்சிருவேன்”

குடிமகர் முழுப்போதையில் தொலைபேசி நிலையம் முன்னால் சென்று நின்று “டேய் மத்திய அரசு, டேய் மத்தியா, டேய், தில்லு இருந்தா வெளியே வாடா. உன்னை இன்னைக்கு ஒரு வளி செய்யாம போக மாட்டேண்டா” என்று வேட்டி அவிழ சவால் விட்டுச் சலம்பிக்கொண்டிருந்தார்.

டீ குடிக்கச் சென்ற நான் அக்காவிடம் ‘இந்தாக்கா, உன் புருசனை கூட்டிட்டு வச்சுக்கோ. மத்திய அரசுக்காக்கும் சவால் விடுறான். மத்திய அரசுகிட்டே என்ன இருக்கு தெரியும்ல? பட்டாளமாக்கும். இலங்கையிலே குண்டு போடுறாங்க, பாத்தேல்ல?”என்றேன்

அக்கா திரும்பிப்பார்த்தாள். “அங்கயா நிக்குதான்? இருங்க” என்று முந்தானையை தூக்கிச் செருகிக்கொண்டு நடந்து சென்றாள். படார் என ஒரே அடி. ஓசை இங்கே கேட்டது. ஆசாமி குவியலாக விழுந்தான். சத்தமே இல்லை. பழைய சாக்கைப்போல தூக்கிக் கொண்டுவந்து கடைக்குள் போட்டுவிட்டு என்னிடம் இயல்பாக “சாருக்கு சக்கரை கூட்டியா?”என்றாள்

“ஆக்ஸிடெண்டா பிரதர்?”

“ஆமா, ஃபேஸ்புக் பாஸ்வேட் மனைவிக்கு தெரிஞ்சுட்டுது”

எனக்கு அப்போது திருமணமாகவில்லை. கைகால்கள் நடுங்கிவிட்டன. எச்சிலை விழுங்கிக்கொண்டு “என்னக்கா இது?”என்றேன்.

“அவன் குடிக்குறது இங்க கடையிலே எடுத்த பணத்தாலேதானே? சொல்லுங்க தம்பி, சக்கரை கூடுதலா?”

அது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அது அப்போது சரியாக இருப்பதாகவும் பட்டது.

ஆனால் திரும்பி தொலைபேசி நிலையம் செல்லும்போது என்னுடன் வந்த முருகன் என்ற நண்பர் “அந்தாள் வாழுறான் தோழர், ஒரு வேலைக்கு போறதில்லை. நம்மளை மாதிரி டூட்டி, ஆஃபுன்னு ஒண்ணும் கெடையாது. சாப்பிடவேண்டியது, குடிக்கவேண்டியது, புள்ளைகளை உண்டாக்கவேண்டியது. அது லைஃபு, என்னங்கறீங்க?”என்றார். அவரைத்தான் நான் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

”ஏங்க, அந்த ஹேர்டிரையரை கொஞ்சம் எடுத்துக் குடுங்க”

உண்மையில் பிரச்சினைகள் நிகழ்வது கணவனும் மனைவியும் உலகைப் புரிந்துகொள்வதிலுள்ள வேறுபாடுகளினால். நேற்று பேசும்போது கேரள திரை ஒளிப்பதிவாளர் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். மாத்ருபூமி நாளிதழின் உள்ளே ஒரு விளம்பரம். “நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவரா? குடிஅடிமையா? நாங்கள் உதவிசெய்கிறோம். அழையுங்கள்…..”. நண்பர் அதை எடுத்துப் பார்த்து ஒருகணம் தயங்கி அப்படியே தூக்கி போட்டார்.

அவர் மனைவி பிடித்துக்கொண்டார். “அது என்ன? எதை தூக்கி போட்டீங்க?” எடுத்துப் படித்துப் பார்த்து “பாத்தீங்களா? திருந்தவே மாட்டீங்களா?” உடனே அந்த எண்ணுக்கு ஃபோன் செய்துவிட்டார். விலாசமெல்லாம் சொல்லிவிட்டு “இப்டி ஒரு காண்டாக்டுக்காகத்தான் நானும் காத்திருந்தேன்” என கறுவினார்.

அரைமணிநேரத்தில் வந்துவிட்டார்கள். எல்லா பிராண்ட் மதுவகைகளும் அடங்கிய பெரிய பெட்டியுடன். “சாருக்கு என்ன ஐட்டம் வேணும்சார்? எல்லாமே இருக்கு. டோர் டெலிவரிக்கு பத்து பர்செண்டு விலைகூடுதல்… ஸ்காட்ச் எடுக்கட்டுமா சார்?”

“ஏண்டி, உன் ஃபேஸ்புக் பாஸ்வேட் என்ன?”

“நம்ம கல்யாணத்தேதிதான்”

“இத வேணும்னே பண்றா”

மது விஷயத்தில் பெண்களின் புனிதமான அறியாமையை சென்றகாலங்களில் பேணிவந்தனர். அதை பெண்களையும் பாருக்கு அழைத்துச்சென்று கெடுத்துவிட்டனர் என ஸகரியா ஒருமுறை புலம்பினார். அவருடைய நண்பர் குடிப்பழக்கம் உடையவர். அதாவது 24 மணிநேரமும் வாய்மணக்கும்.

திருமணத்தின்போதும் குடித்திருந்தார், தைரியத்திற்காக. முதலிரவில் குடித்திருந்தார், மேலும் தைரியத்திற்காக. பாத்ரூமில் ஃபுல் பாட்டில் வைத்திருப்பார், அங்கேயே குடித்துவிடுவார். மனைவிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை ’கணவன்மணம்’ என கற்பனாவாத எண்ணமும் கொண்டிருந்தார்.

அப்போது இந்திராகாந்தி சுடப்பட்டார். டெல்லியில் கலவரம். எல்லா மதுக்கடைகளும் மூடப்பட்டன. ஒரு சொட்டுகூட கிடைக்கவில்லை. சோகத்துடன் கணவர் வீடுவந்தார். கதவைத்திறந்த மனைவி அவருடைய வாயின் இயல்பான நாற்றத்தை முகம்சுளித்து மோப்பம்பிடித்து நெஞ்சிலறைந்து அழுதார். “வாய் நாறுது… குடிச்சுச்சு வந்திருக்கீங்க… அய்யய்யோ நான் என்ன செய்வேன். இப்படி குடிகாரப்பயலுக்கு என்னை கட்டிவச்சிட்டாங்களே!”

“45 சதவீதம் கூடுதல் பாதுகாப்பளிக்கும் சீட் பெல்ட்!”

மலையாளிகளைப் பற்றி ஒரு துபாய் ஜோக் சொல்வார்கள். நாயர் தன்னை பற்றி சொல்லும்போது “ஸீ, நான் ஒரு சிங்கம்!” என்று அடிக்கடிச் சொல்வார். அவருடைய தோற்றப்பொலிவால் அதை அரேபியர் நம்பவும் செய்தார்கள்.

அதன்பிறகு அரேபியர் கேரளத்துக்கு வந்தனர். பகவதிகோயிலுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெரிய சிலைகளைப் பார்த்தனர். கேரளத்தில் சிங்கம் உண்மையில் எப்படி எங்கே படுத்திருக்கிறது என்று புரிந்துகொண்டனர். நாயர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என உணர்ந்து அவர் மேல் அன்பும் பரிவும் காட்டலாயினர்.

என்னது? எதுக்காக விவாகரத்து கேக்கிறேன்னா? என்னோட ஃபேஸ்புக் பதிவுகளை நீ பாக்கிறதே இல்லியா?”

ஆங்கில கணவன் மனைவி நகைச்சுவைகள் எல்லாமே பதினெட்டாம் நூற்றாண்டு ’பார்ட்டிஜோக்’ வகையிலிருந்து உருவானவை. ஸ்டீபன் லீக்காக் பாணி. “அவன் முதல்பார்வையிலேயே காதல்கொண்டான், சரியாக பார்த்திருக்கவில்லை” வகையான pun. அதிலிருந்துதான் உலகமெங்கும் இந்தவகையாக நகைச்சுவைகள் பரவிப்பெருகியிருக்கின்றன.  “திருமணத்திற்குப் பின் இருவரும் ஒருவராகிறார்கள், அந்த ஒருவர் எவரென தீர்மானிப்பதே பிரச்சினை”

மனைவி ஜோக்குகள் மட்டுமல்ல கணவன் ஜோக்குகளும் ஆண்களால் உருவாக்கப்படுபவை. பெண்கள் உருவாக்கிய ஜோக்குகள் உண்டா? இருக்கலாம். ஆனால் கற்பரசிகளான பெண்டிர் அதை ஆண்களுக்குச் சொல்வதில்லை. சொன்னாலும் அதிலென்ன நகைச்சுவை, யதார்த்தம்தானே என்றுதான் ஆண்களுக்குத் தோன்றுகிறது.

”ஏதாவது வேலை குடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதனாலே அப்பப்ப டிவி ரிமோட்டை எடுத்து ஒளிச்சு வைச்சிடுவேன்”

ஆனால் திருவனந்தபுரம் சாலை பஜாரில் ஒரு கூடைக்கார அம்மச்சி நெஞ்சுபொறாமல் சொன்ன ஒரு வரி நினைவில் நிற்கிறது. அதுதான் சரியான பெண்பார்வை நகைச்சுவை என இன்று நினைக்கிறேன்.

“கொட்டையையும் கோலையும் மட்டும் பகவான் தனியா படைச்சிருந்தா இவனுகளை இப்டி தாங்கிக் கொண்டாடவேண்டிய விதி நமக்கெல்லாம் இருந்திருக்காதே”

பிள்ளையைப்பெற்று நிம்மதியாக இருந்திருப்பார்கள். நல்லவேளை.

ஊழ்

“சயன்ஸ்!”

கல்வி

பழம் கிழம்

“ஓவியமாத்தான் இருக்கு!”

கடவேல்

மோனா

ஞானமே இது பொய்யடா!

ஆப்’
பகடை பன்னிரண்டு
சிரிக்கும் ஏசு
டேனியல் லாபெல்
ஊதிப்பெருக்கவைத்தல்
ஸாரி டாக்டர்!
ஆடல்
கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
மனம்
குருவும் குறும்பும்
இடுக்கண் வருங்கால்…
ஆன்மிகமும் சிரிப்பும்

முந்தைய கட்டுரைமதார்- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைபிறிதொன்று கூறல்