இருவர்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

இரட்டையர் கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவைகள், அந்த இரட்டையரில் உள்ள எதிர் எதிர் குணாம்சங்கள் கொள்ளும் முரணில் வேர்கொள்கிறது. ஒருவன் புத்திசாலி. மற்றவன் முட்டாள். ஒருவன் பலசாலி. மற்றவன் சோப்ளாங்கி. எதிர்பார்த்த வகையிலோ எதிர்பாரா வகையிலோ சோப்ளாங்கி, முட்டாள் வெல்லும் தருணம் என்பது அதில் கிளறும் நகைச்சுவை என்பது உலகெங்கும் விரும்பப்படும் ஒரு வகைமாதிரி.

அன்றைய லாரல் ஹார்டி இணையர் முதல் இன்றைய டாம் அன் ஜெரி வரை இந்த நகைச்சுவை பாணி வெற்றிகரமான ஒன்று. ஜாகிச்சான் கூட ரஷ் ஹவர், முதல் ஸ்கிப் ட்ரேஸ் வரை பல படங்களில் இந்த இரட்டையர் குணாம்ச முரண் நகைச்சுவையை பயன்படுத்தி இருக்கிறார். அத்தனையும் வெற்றி. தமிழிலும் கூத்தில் வரும் உளுவ தலையன் மற்றும் குள்ளன் எனும் இருவர் துவங்கி கவுண்ட மணி செந்தில் வரை இத்தகு தொடர் உண்டு.

குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்திரவாதம் கொண்ட இந்த இரட்டையர் நகைச்சுவையில் மற்றொரு வகைமாதிரி கண்டேன்.  கி மு 25000 கு முன்பான காலம். அந்த குடிகளில் இருவரில் ஒருவர் (சிகப்பு பாவாடை) காட்டுவாசி. மற்ற பச்சை பாவாடை இந்த காட்டுவாசிக்கு நாகரீகம் கற்றுக் கொடுக்க முயலும் ‘பண்பட்ட  காட்டுவாசி’. இந்த இருமை வழியே உருவான வெறும் மூன்று நிமிடத்தில் உயர் படைப்புத்திறம் கொண்ட  நகைச்சுவை துணுக்கு.

இந்த துணுக்கில் சிகப்பு ஆசாமி வரைவது லக்சாஸ் குகை மாடு. அன்னார் காட்டுவாசி இல்லையா. பச்சை ஆசாமி வரைவது மோனாலிஸா மருமலர்ச்சி கால ஆசாமி. நாகரீகத்தை நோக்கி கற்காலம் ஓடி வர, நாகரீகம் செய்யும் எதிர் வினை அதன் விளைவுகள் ரகளை.

காதல் விளையாட்டில் கற்கால ஆசாமியை நாகரீக ஆசாமி வெல்லும் போட்டியில் இறுதியில் கற்கால ஆசாமி வெல்லும் முறை, காதல் பரிசினை காதலி பயன்படுத்தும் முறை, வெடித்து சிரித்து விட்டேன்.

கற்கால ஆசாமிக்கு வெஸ்டர்ன் டாய்லெட் என்றால் என்ன அதில் கக்கா போவது எப்படி என்று பச்சை செயல் முறை விளக்கம் கொடுக்கும் இந்த துணுக்கில் உச்சம், கற்கால ஆசாமி இறுதியில் நொட்டாங்கை விறல் கொண்டு முடிக்கும் குகை ஓவியம்.

இந்த தேர்தல் அதிகார விளையாட்டு கற்காலம் முதல் இன்று வரை அவ்வாறே தொடரும் நகைச்சுவை. இப்படி முதல் மருத்துவம், முதல் விமானம், முதல் சக்கரம் என பல்வேறு நாகரீக முன்னேனேற்றங்களை கற்று தர முயன்று தோற்கும் வகைமையில் வெறும் மூன்று நிமிடத்தில் பிரச்சனையில் துவங்கி, முரண்களை வளர்த்து பன்ச் என ஒரு முடிவு கொண்ட திரைக்கதை கொண்ட இந்த துணுக்கு ஒவ்வொன்றிலும் முதல் முப்பது வினாடி ஒரு தனித்த நகைச்சுவை.  புன்னகைக்கு உத்திரவாதம் சொல்லும், க்ரியேட்டிவிடி கூடிய துணுக்குகள் கொண்ட இந்த சானல் உங்கள் பார்வைக்கு :).

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைமதார்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேரளமும் பக்தி இயக்கமும்