வண்ணக்கடலின் அருமுத்து கர்ணன்: இரம்யா

:

கர்ணன் என்றோ எப்போதோ என் மனதுக்கு அணுக்கமாகிப்போனவன். அவனை நினைக்கும்போதே என் உளம் பொங்கும். கண்கள் கசிந்து நீர் சுரந்துவிடும். பதின்ம வயதுகளிலெல்லாம் அப்படியான தனியனான, நிர்கதியானவனை, அன்புக்காக ஏங்கும் ஒருவனை காதலித்து அவனுக்கு அன்னையாகி விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதனால் தான் “தனியனான ஆண்களைப் பெண்கள் விரும்புகிறார்கள்” என்று நீங்கள் அம்பை-பீஷ்மர் காதல் தருணத்தின் போது சொன்னதை வியந்தேன்.

இத்துனை ஆழமாக பெண் மனதை அறிந்து வைத்திருக்கிறீர்களே என்று எப்போதும் வியப்பேன். புராண காலத்தினின்று மிக ஆழமாக மக்களின் மனதில் வேரூன்றி தொன்மமாக மாறிய பாத்திரம் கர்ணன். “ஆமா இவரு பெரிய கர்ணப்பரம்பரை!” என்பதெல்லாம் மிகச் சாதாரணமாக நாம் பயன்படுத்தக்கூடியவை. அப்படி நம்முள் ஒருவனாக மாறிவிட்ட கர்ணனின் பிறப்பை உங்கள் வரிகளில், உங்கள் வடிவமைப்பில் வெண்முரசில் காண ஆவலாயிருந்தேன்.

மழைப்பாடலில் அவன் குந்தியின் கருவாக உருவகியிருந்தபோதே ஆவலாகிவிட்டேன். குழந்தையைக் காக்க அந்த ராஜ நாகம் நாவலில் வந்தபோது மகிழ்ந்தேன். குந்தி அவனைப் பெற்றே ஆக வேண்டும் என்ற முடிவினை எடுத்த போது மேலும் மகிழ்ந்தேன். அவன் பிறக்கும் வரை அந்த ராஜ நாகம் போல் உடனிருந்து, அவன் பாதுகாப்பாக மண்ணில் காலூன்றிவிட்டான் என்று தெரிந்த போது நிம்மதிப் பெருமூச்சோடு கிளம்பினேன்.

யமுனை ஆற்றில் மிதந்து சென்றுராதையின் கையில் தவழ்ந்து அவனுக்கு முலையூட்டும் போது பரிதவித்தேன். அரசனாக வேண்டியவன் அவமானங்கள் படுவானே என்று ராதையின் மேல் கோபம் வந்தது. ஆனால் அவளின் முலை கனிந்து பாலூட்டும்போது அந்த எண்ணம் கரைந்துவிட்டது. ”என்றாவது ஒரு நாள் தன்னைவிட்டு கர்ணன் சென்றுவிடுவான்” என்ற எண்ணத்திலேயே பதட்டமாக உழலும் தாயாக ராதை இருக்கிறாள்.

எத்தனை நேரமானலும் இரவில் விழித்திருந்து உணவு கொடுப்பவளாக இருக்கிறாள். அவல் பொய்க் கோபத்துடன் கூடிய அந்த அன்பு எனக்குப் பிடித்திருந்தது. முதலில் வெறுத்த அவளுக்காக கர்ணன் தன் உண்மையான தாயை அறியும் கணம் அந்த வேதனையை எங்ஙனம் தாங்கிக் கொள்வாள் என்ற வருத்தம் பின்னர் தொற்றிக் கொண்டது.

வெள்ளந்தியாக இருக்கும் அதிரதன் ஒரு சாதரண தந்தையாக மகனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் கற்பிக்கிறான். ஒரு சிறந்த சூதனாக, குதிரைச் சாரதியாக வருவதற்கு தன்னிடம் இருக்கும் அத்தனை அறிவையும் புகட்டுகிறான். அனைத்து தந்தையரும் அப்படியிருப்பதில்லை. ஆனால் அதிரன் அப்படி கர்ணனுக்கு அமைந்திருப்பதில் மகிழ்ச்சி எனக்கு.

அங்க நாட்டில் தன் புரவித்திறனுக்குக் கிடைத்த மோதிரத்தை வேளாண் பெண் ஒருத்தியின் மகனான அஸ்வனுக்கு அளிக்கும் காட்சி மூலம் அவனின் கொடைத்தன்மையைக் காணித்திருந்தீர்கள். ’நீ கொடுக்காமல் வந்தால் தான் ஆச்சரியம்’ என்று அவன் அன்னை சொல்லும்போது ஒரு பெருமிதம் வந்து நெஞ்சை நிறைத்தது.

ஹிரண்ய வேளையில் தான் எதைத் தொட்டாலும் பொன்னாகும் என்று சூரியதேவன் கூறி ஒரு கருங்கல்லை நோக்க அது பொன்னாகிறது. அதை கர்ணனிடம் கொடுக்க அதை அவன் கங்கையில் ஒரு படகில் வைத்து “கங்கையே, வாழ்நாளெல்லாம் பிறர் பசியைப்பற்றி மட்டுமே எண்ணுபவன் ஒருவன் இன்றுகாலை உன்னில் நீராடுவானென்றால் அவன் கையில் இதைக்கொண்டுசென்று கொடு. இதை அளித்த கர்ணன் அந்த மாமனிதனின் பாதங்களில் மும்முறை பணிந்தெழுந்து இதை அவனுக்குக் காணிக்கையாக்கினான் என்று சொல். ஆணை! ஆணை! ஆணை!” என்று சொல்கிறான்.

“பெருஞ்செல்வத்தைக் கொண்டு நிறைவடையும் வழி இது ஒன்றே.” என்று அவன் கூறும் போது முழுமையாக அவனின் கொடைத்திறம் விளங்குகிறது.
முதன் முதலில் கிருபரை சந்தித்தபோது அவர் அவனை சோதிப்பதற்காக பறவையைக் குறிவைத்து அம்பெய்யச் சொல்கிறார். ஆனால் பறவையை அடிக்காமல் ஒரு அம்பை அடித்து ’அம்பும் பறவையே’ என்று கூறி, ”இது கருக்கல்கரையும் வேளை. முதலில் விண்ணிலெழும் பறவைகள் குஞ்சுக்கு இரைதேடச் சென்றுகொண்டிருக்கும் அன்னையராகவே இருக்கும்…” என்று தன் கருணையை வெளிப்படுத்துகிறான்.

துரோணர் ஒரு நாரையைக் குறி வைத்து அடிப்பதற்கான பயிற்சித் தேர்வை அஸ்வத்தாமன், அர்ஜுனன், கர்ணன் ஆகிய மூவருக்கும் கொடுக்கிறார். அதில் வெற்றி பெற்ற கர்ணன் அதன் பின் அந்தப் பறவையை ஒரு பாறைமேல் வைத்து கைகளைக்கூப்பி “இந்த உடலுக்குரிய ஆன்மாவே, என் செயலைப் பொறுத்தருள்க. இக்கொலையினால் நான் அடையும் பாவத்தை அறத்துக்காக நான் இயற்றும் நற்செயல்களால் மும்மடங்கு ஈடுகட்டுகிறேன். என் அம்புகளுக்குக் கூர்மையும் என் விழிகளுக்கு ஒளியும் என் நெஞ்சுக்கு உறுதியுமாக உன் அருள் என்னைச் சூழ்வதாக. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்கிறான். சிறு உயிரையும் மதிக்கும் கருணையுடையோனாய் மனதில் நிற்கிறான்.

துன்பங்களை, வலிகளைக் கடக்காமல் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வு அமையப் பெறுவதில்லை. சூதகுலத்தில் பிறந்து, தான் கொண்ட லட்சியத்தை அடைய எத்தனிக்கும்போது அவமானப்படுத்தப்படும் கர்ணன் இந்த நவீன காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் பிம்பமாகிறான். எங்கோ ஒரு புராண காலத்தில் நிகழ்ந்த பாத்திரம் தான் கர்ணன் என்று நினைக்க மனம் ஒப்பவில்லை ஜெ.

“தந்தையைப்போல இருக்க விழைகிறேன் அன்னையே. என்னால் இயலவில்லை. என்னை அவர்கள் அடேய் என அழைக்கும்போது என் அகம் நாகம்போல சீறி எழுகிறது. என்னைநோக்கி ஒருவன் கையை ஓங்கினால் அக்கணமே என் கைகளும் எழுந்துவிடுகின்றன. தந்தையும் பிறரும் அவர்களை நோக்கி கையோங்கப்படுகையில் அவர்களை அறியாமலேயே கைகளை மார்போடு கட்டி குனிந்து நிற்கிறார்கள். என் நெஞ்சு விரிந்தெழுகிறது.” என்று அவன் சொல்லும் வரிகளை நான் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு மேலெழ நினைக்கும் எளியவர்களின் சொல்லாக அன்றி வேறென்னவாக எடுத்துக் கொள்வது?

இங்கிருந்து அவன் விழைவே அவனை இட்டுச் சொல்லும் பாதை தோறும் அவனுக்கு நிமிர்வை அளிக்கும் ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தேன். சிறந்த கல்வியை அளிக்க முடியாத அன்னை தந்தையரைப் பெற்றாலும் கங்கை ஆற்றில் இருக்கும் ஒரு மரத்தை குருவாகக் கொண்டு வில் வித்தையைக் கற்கும் அவனின் முயற்சி பிடித்திருந்தது. முதன் முறையாக தன் உடல்வாகு மற்றும் வீரத்தின் நிமித்தம் சூரிய விழாவில் புரவிகளை ஓட்ட வாய்ப்பு கிடைத்தபோது அதை செவ்வனே செய்து புரவித்திறனுக்காக ஸ்தானிகரின் கையிலிருந்து மோதிரத்தை பரிசாகப் பெறுகிறான்.

அதன் பின் அங்கநாட்டு மன்னன் வேட்டைக்குச் செல்லும் போது அவனின் திறனின் நிமித்தம் சரதியாய் அவனுக்கு அமையப் பெறுகிறான். மன்னன் உயிர் ஆபத்தில் பரிதவிக்கும் போது வில் ஏந்தி அவனைக் காக்கிறான். ஒரு சூதனால் மன்னன் காப்பற்றப்பட்டான் என்று தெரிந்தால் அது அவமானமாகும் என்று கூறி வீரர்கள் அவனைக் கொல்ல எத்தனித்த போது அவர்களுடன் போரிட்டு வெல்கிறான். உயிரையே காப்பாற்றினாலும் ஒரு சூதன் என்று கூறி தன்னையே கொல்ல விழைந்தது அவனுக்கு மேலும் வருத்தத்தையே அளித்திருக்கும். இந்த நிகழ்விற்குப் பின்னர் இனி அங்க நாட்டில் இருக்க முடியாதென்று அஸ்தினாபுரிக்கு அவனை அதிரதன் அழைத்துச் செல்கிறான்.

தான் அடைய வேண்டிய இடத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஊழின் பெருவல்லமையை வெறுமே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ”ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான் முந்துறும்” என்று சொல்லிக் கொண்டேன்.
கர்ணனுடைய வருகைக்குப் முன்னரே நீங்கள் பாண்டவர்களையும், கெளரவர்களையும் காணித்து விட்டிருந்தீர்கள். அவர்கள் கல்வி கற்க வளர்ந்துவிட்ட பருவமாய், தங்களுக்கான ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களாகக் காணித்திருக்கிறீர்கள். எனக்கு யாவரையும் ஒவ்வொரு வகையில் பிடித்திருந்தது. ஆனால் அவர்களில் முக்கியமானவர்களான பீமனையும் அர்ஜுனனையும் நான் வெறுத்த இடமொன்று உண்டு. அதே சமயம் எந்தவித உணர்வுகளுமின்றி வெறுமே நான் நாவலில் பார்த்துக் கொண்டிருந்த துரியனை உச்சமாக விரும்பும் இடமும் உண்டு.

எந்நேரமும் சமையற்கூடத்தில் தன் நேரத்தைக் கழித்து அங்கிருந்து வாழ்விற்கான தத்துவத்தைக் கண்டடையும் வாயுவின் மைந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்த தருணங்களெல்லாம் முற்றிலும் விலகும் இரண்டு இடங்கள் இந்த நாவலில் அமையப் பெறுகிறது. இரண்டுமே கர்ணனை அவன் அவமானம் செய்யும் இடத்தில் தான்.
இதற்கு முன்னரும் அங்க நாட்டில் கர்ணன் அவமானப்பட்டு துடித்திருக்கிறான் தான். ஆனால் பீமன் அவனுக்கு அளித்த அவமானம் என்பது ஆறாமல் நிலைத்திருக்கக் கூடியது.

நகுலன் மற்றும் சகாதேவனுடனான கர்ணனின் உறவை அந்த முதல் அவமானத்திற்கு முன்னர் விவரித்திருப்பீர்கள். அது இதமானது. உதடுகளின் விளிம்பில் புன்னகையோடே தான் வாசித்திருந்தேன். தன்னை “மூத்தவரே” என்று விளிக்கும் அவர்களுக்கு வாளை எதிர் கொள்வதற்கான பயிற்சியை அளித்துக் கொண்டிருக்கும் போது பீமன் அந்த வார்த்தையைச் சொல்லி அழைப்பதே கர்ணனுக்கு மன வருத்தத்தை அளித்திருக்கும். தன்னை விட வயதில் குறைவான் ஒருவன் “டேய் சூதா… நிறுத்து…” என்று கூவி “நீசா, ஷத்ரியர்களுக்கு எதிராக வாளேந்த எப்படித் துணிந்தாய்?” எனும் போது கர்ணன் அதிர்ந்திருப்பான்.

“சீ, இழிபிறவியே…. சென்று சம்மட்டியை எடுத்துக்கொள்… போடா” என்று சொல்லி அவனை ஓங்கியறைந்து முகத்தின்மேல் காறித்துப்பும் வண்ணக்கடலின் பீமனை முற்றிலும் வெறுத்தது அந்த கணத்தில்தான். “கர்ணா, நீ எதிர்க்காதே… என் ஆணை” என்று கிருபர் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக பீமனை எதிர்க்காத கர்ணனை ஆற்றுப்படுத்த தவித்திருந்தேன் அந்த இடத்தில். கிருபரின் சொல்லையும் கேட்காது “இது மன்னரின் ஆணை” என்று கிருபர் சொன்ன போது அவரையும் போருக்கு அழைக்கும் அந்த ஆணவத்தினால் பீமனை வெறுத்தேன்.

பார்த்தன் கர்ணனை போருக்கு அறைகூவ இருவரும் தீவிரமாக போரிட்டுக் கொண்டிருக்கும் தருவாயில் இரண்டாவது முறையாக பீமன் அவனை அவமானப்படுத்துகிறான். ”இழிமகனே… சூதா!… மூடா!… உன்னிடம் நெறிநூலை விவாதிக்கவேண்டுமா நான்? போ, சென்று குதிரைநெறி கற்றுக்கொள்… போடா!.. மண்ணைக் காக்கமுடிந்தால் அவன் ஷத்ரியனே ஆனால் முதல் விதி அவன் குலமுடையவனாக இருக்கவேண்டும். குலமிலிக்கு எவ்வுரிமையும் இல்லை. சொல் உன் குலமென்ன?”… கீழ்மகனே, உன் தந்தையின் பெயரைச்சொல்லி வில்லை எடு…” என்று கர்ணனின் மனம் நோகுமாறு அவனை நோக்கி நாவினால் சுடுகிறான். நிராதரவாய் யாருமற்றவனாய் நின்றிருந்த கர்ணனின் நிமித்தன் பீமன் என்னுள் கசந்தேறினான்.

இதே கணத்தை அனுபவித்திருந்த துரோணரும் ஏதும் செய்ய இயலாதவராய் “இனியும் ஏன் இங்கே நிற்கிறாய்? மூடா, போ! சென்று சிதையேறு! இந்த இழிபிறவியை எரித்தழித்து விண்ணடை… இதற்குமேல் என்ன வேண்டுமென இங்கே நிற்கிறாய்? இதைவிட வேறென்ன கிடைக்குமென எண்ணினாய்?”; “நீ உன்னை ஆக்கிய தெய்வங்களாலேயே இழிவுசெய்யப்பட்டவன். உன்னை இழிவுசெய்து அவர்கள் தங்களை இழிமகன்களாக்கிக் கொண்டார்கள். சென்று நெருப்பில்குளி… போ!” என்று வெடித்தெழுந்து சொன்னபோது அவர் அதிர்ந்திருக்கக் கூடும். அவரின் உளக்கிடக்கை புரிந்திருந்தாலும் கர்ணனுக்கான உச்ச துக்கத்தை அவ்வார்த்தைகள் அளித்திருக்கக் கூடும்.

மூன்றாவது முறையாக படைக்களப்பயிற்சியின் போது அர்ஜுனனுக்கு எதிராக அறைக்கூவிய கர்ணனை மக்கள் திரளின் முன்னர் அவமானப்படுத்துகிறான் பீமன். ஒரு வீரனிடமிருந்து குதிரைச்சவுக்கை பிடுங்கி கர்ணனின் முகத்தில் அவன் உடல் அதிர வீசுகிறான். “சூதன்மகனே, போ! உன் இடம் குதிரைக்கொட்டில். உன் படைக்கலம் சவுக்கு. சென்று உன் பணியைச்செய்”; “உன் மேல் குதிரை மலம் நாறுகிறது அற்பா. உன் அம்புகளும் குதிரைமலம் பட்டவை… சென்று நீராடி வா… இப்பிறவி முழுக்க மும்முறை நீராடு. அடுத்த பிறவியில் வில்லுடன் வா… போ!” என்ற சொற்களினால் புண்பட்டவனைக் காணவியலாத துரோணர் கைகளை நீட்டி “சீ, நீசா! நாணமில்லையா உனக்கு? குலமும் கல்வியும் இல்லாத வீண்மகனாகிய நீ எந்தத் துணிவில் களம்புகுந்தாய்?” என்ற சொல்லில் பல நூறு முறை இறந்திருப்பான் கர்ணன்.

அர்ஜீனன் கர்ணனை வெறுக்க முழுமுதற்காரணம் குருவின் மீதான பற்று தான். குருவின் மீதுள்ள பற்றினால் துரோணரின் மகனான அஸ்வத்தாமனனின் அருகமைவையே தாழ முடியாதவனான அர்ஜீனன் கர்ணனின் மீது வெறுப்பு கொண்டமைவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கர்ணனை குலம் சார்ந்து அவமதித்து சொன்ன வார்த்தைக்காக, அவனின் திறனை மதிக்காத பெருந்தன்மையின்மைக்காக வண்ணக்கடலின் அர்ஜீனனை வெறுக்கிறேன். “இவ்விழிமகன் உங்கள் மாணவனாக அமைய நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்ற சொல்லில் அவன் சற்றே என் மனதிலிருந்து இறங்கி விட்டான்.போருக்கு அழைக்கும் போதும் கூட இதே போன்ற அவமானமான வார்த்தைகளில் தான் கர்ணனை அவன் கல்க்கமுறச் செய்கிறான்.

இந்த வெண்முரசின் கதைமாந்தர்களில் அஸ்தினாபுரியின் அரசில் உடற்குறை கொண்டவர்களை, நோய் கொண்டவர்களையும் காணித்திருக்கிறீர்கள். ஆனால் அவர்களின் துன்பம் கர்ணனை விட மிகப் பெரியதாய் எனக்குத் தோன்றவில்லை. அதற்கான காரணத்தை நான் சிந்தித்திருந்தபோது இந்த வரிகளைச் சொன்னீர்கள். “பெருந்துயர்கள் மூன்று. நோய், இழப்பு, அவமதிப்பு. அவற்றில் முதலிரண்டும் காலத்தால் ஆற்றப்படுபவை. காலமே காற்றாகி வந்து வீசி எழுப்பிக்கொண்டிருக்கும் கனல் போன்ற பெருந்துயர் அவமதிப்பே” என்ற வரிகளில் ”அவமானம்” என்ற ஒற்றைப் பெருந்துயர் தரும் வலி இவை யாவற்றையும் விட வலிமிக்கது என்பதை உணர்ந்தேன். ஒரு வகையில் இதை நானும் உணர்வேன்.

“அத்தகைய பெருந்துயர் கொண்ட ஒருவன் ஒருமுறை இவ்வழிச்சென்றான். உயிருடன் தோல் உரித்து வீசப்பட்ட சாரைப்பாம்பு போல அவன் விரைந்தான். பின்புமண்ணில் விழுந்து புழுவெனச் சுருண்டுகொண்டான்.அவனை வழியில்கண்டு வினவிய எங்கள் குலத்தவரிடம் அவன் பெயர் கர்ணன் என்றான்” என்ற வரிகளைப் படிக்கும் போது கலங்கிவிட்டேன். எங்காவது இந்த நாவலுக்குள் சென்று அவனைத் தழுவி ஆறுதல் கூற வேண்டும் என்பது போன்றதான வலியைக் கடத்தியிருந்தீர்கள். ”மாற்றிலாத பெருந்துயர் மனிதனை புழுவாக்குகிறது. தன்னைத்தான் தழுவிச் சுருளச்செய்கிறது.

நெளிதலும் குழைதலும் துடித்தலுமே இருத்தலென்றாக்குகிறது. பல்லாயிரம்பேர் நடுவேதனிமை கொள்கிறான். அவன் குரல் அவிகிறது. ஒளிந்துகொள்ளவும் ஒடுங்கிக்கொள்ளவும் புதைந்து மறைய விழைகிறான்” என்ற வரிகளில் அப்படி பரிதவித்திருந்த கர்ணனின் உளக்கிடக்கை மேலும் வலியைக் கூட்டியது.
“வலியை உயிர்கள் விழைகின்றன. மானுடமே வலியை விரும்புகிறது. ஏனென்றால் வலி அகத்தையும் புறத்தையும் குவியச்செய்கிறது. சிதறிப்பரந்துசெல்லும் அனைத்தையும் தன்னை மையம் கொள்ளச்செய்கிறது.

வலிகொண்டவன் பொருளின்மையை உணரமுடியாது. வெட்டவெளியில் திகைக்கமுடியாது. வெறுமையில் விழமுடியாது.” என்று நீங்கள் சொல்லும்போதும் என்னால் ஆற்றுப்படுத்த முடியவில்லை. இந்த இள வயதில் இத்துனை கொடுமையான வலியை ஏன் அனுபவிக்க வேண்டும் என்று தான் தெய்வங்களை நோக்கி கேட்கத் தோன்றியது. “வதைகளைப்போல ஈர்ப்பு மிக்க வேறேதுமில்லை. துன்பத்தை சுவைக்கும் ஏதோ ஒரு புலன் உயிர்களின் அகத்தில் குடியிருக்கிறது. நக்கிநக்கி புண்ணை விரிவாக்கிக்கொள்கிறது விலங்கு. அனலை நாடியே சென்று விழுகின்றன பூச்சிகள்.” அத்தகைய பூச்சியாய் அமைந்த கர்ணனுக்கு என்ன ஆறுதல் கூவியலும் என்னால் என்று எண்ணி ஏங்கினேன்.

”ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய நரகத்தைப் படைத்தே மண்ணுக்கனுப்புகின்றன தெய்வங்கள். அந்நரகத்தில் இருந்து மானுடன் எதனாலும் தப்ப முடியாது” என்று நீங்கள் ஆற்றுப்படுத்தினாலும் கர்ணனின் வெற்றித்தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அத்தகைய தருணம் துரியோதனனால் நிகழ்ந்தது கண்டு மகிழ்ந்தேன்.

துரியோதனின் பிறப்பின் போது எத்தனையோ தீ நிமித்தங்களைப் பற்றி சொல்லியிருப்பீர்கள். கலி தெய்வத்தின் வடிவமாய், நாக அரசனாய் அவனைச் சித்தரித்தபோதும் நான் சற்றே நின்று பார்த்துக் கொண்டுமட்டுமிருந்தேன். திருதிராஷ்டிரன் “தன் மகனை யாருக்காகவும் கைவிடுவதில்லை” என்று அழுதரற்றியபோது அந்த தீய நிமித்தங்களினால் துரியனின் மேல் நான் கட்டிவைத்திருந்த பிம்பத்தைக் கரைத்தேன். பிறப்பினால் கண்ணொளியை இழந்தவனையும், எல்லோரையும் போல சாதரண கர்ப்பத்தில் பிறக்காதவனாகியவனையும், அதன் நிமித்தம் அவர்கள் படும் துன்பத்தையும் நினைத்து அவர்களுக்காக வருந்தவும் செய்தேன். பீமன் கர்ணனை அவமானப்படுத்தி, அடித்து காறி உமிழும்போது எங்கோ தூரத்திலிருந்து அதை கண்ணுற்றவன் துரியன்.

இரண்டாவது முறையாக தன் கண் முன் அத்தகைய அவமானப்படுத்தல் நிகழும் போது பொறுக்காது அவனுக்காக நிற்கிறான். “பிதாமகரே, குருநாதரே, இவன் மாவீரன். சிம்மம் தன் வல்லமையாலேயே காட்டரசனாகிறது. இவன் நுழையமுடியாத எந்த சமர்களமும் இப்புவியில் இருக்க இயலாது” என்று கூறி அங்க நாட்டை அவனுக்கு அளிக்கிறான். தானமாகப் பெற முடியாது என்று துரோணர் சொன்னபோது துரியோதனன் துணிந்து ”மாமன்னன் ஹஸ்தியின் குலம் இவன் முன் பணிகிறது. இனி என்றென்றும் நாங்கள் இவனிடம் தோற்றவர்களாகவே அறியப்படுவோம்” என்று மொழிந்த வரிகள் கர்ணன் தன் நெஞ்சில் பதித்துக் கொள்ளப்படுபவை. ”நாளை நான் விண்ணகம் செல்வேன் என்றால் அது இச்செயலுக்காகவே” என்று தீர்க்கமாக முடிவெடுக்கும் துரியண் அங்கு முழுமியிருக்கும் மற்றெவரையும் விடuௌயர்ந்து நிற்கிறான்.

“விண்ணவர் அறிக! மூதாதையர் அறிக! இந்தக் கணம் முதல் நீ என் நண்பன். என் உடைமைகளும் உயிரும் மானமும் உனக்கும் உரியவை! என் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் உனக்கில்லாத வெற்றியும் செல்வமும் புகழும் எனக்கில்லை“ என்ற போது என் கண்கள் குளமாயின.

“இதோ கைலாய முடிமேல் கதிரவன் எழுந்தான்! அரியணை அமர்ந்தான் கர்ணன்! கருணைகொண்டவனின் கருவூலத்தை நிறைக்கும் தெய்வங்களே இங்கு வருக! எளியவரின் கண்ணீரை அறிந்தவன் மேல் வெண்குடைவிரிக்கும் அறங்களே இங்கு வருக! கொடுப்பதை மட்டுமே அறிந்தவன் தான் பெற்றுக்கொண்ட ஒரே தருணத்துக்கு நீங்களே சான்றாகுக!” எனும்போது அங்கு அமர்ந்திருந்த மக்கள் திரளினூடே நானும் இருந்து கண்களில் நீர் மல்க கர்ணனை வாழ்த்தியிருந்தே. இந்த வரிகளுக்குப் பின்னர் என்னால் தாளவியலாது நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தேன். இத்துனை உணர்வுப் பூர்வமான ஒரு புனைவை கொடுத்ததற்காய் நன்றி.

என்னைப்போலவே தருமனும் கைகளைக் கூப்பி அழுது கொண்டிருந்ததை அறிந்து மகிழ்ந்தேன். முடிசூட்டுவிழாவிற்குப் பின்னர் அங்கு வந்த அதிரதனை அணைத்து தரை படிய அவன் காலில் விழுந்து வணங்கியது மேலும் நெகிழ்ச்சியைக் கூட்டியது. துரோணர் மகிழ்ந்திருக்கக் கூடும். பீஷ்மர் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று உடனே நினைத்தேன். திருதிராஷ்டிரனுக்கு சஞ்சையன் என்ன விவரித்துக் கொண்டிருப்பான் என நானும் தர்மனைப் போல கேட்க ஆவல் பட்டேன். சான்றோர்கள் முன் கர்ணன் பெருமிதமடைந்தது கண்டு நிம்மதிப் பெருமூச்செறிந்தேன்.

“நாகப்பழம்போல மின்னும் கன்னங்கரிய தோலும், இந்திரநீலம் சுடரும் விழிகளும் சினத்திலும் கருணை மாறா புன்னகையும் கொண்ட கர்ணன் மானுடன்தானா என்று வியக்கச்செய்யும் பேரழகு கொண்டிருந்தான். அழகன் அழகன் அழகன் என அகம் அரற்றிக்கொண்டே இருந்தது.” என்று தருமனின் கண்கள் வழி அவனை தரிசித்து, முதல் முறையாக ஒரு ஷத்ரியனாய் கவச குண்டலங்களோடு காட்சி தரும் கர்ணனை வணங்குகிறேன்.

உணர்வுப்பெருக்கெல்லாம் நீங்கிய ஒரு தருணத்தில் ராஜ நாகத்தைப் பற்றிய நினைவு வந்தது. கர்ணன் பிறக்கும் முன் அவனைக் காவல் காத்தது, அவமானத்தால் உந்தப்பட்டு நான்கு நாட்கள் தனித்திருந்து ஒரு கரும் இரவில் வீட்டிற்கு வந்தபோது அவனுக்குப் பின்னால் ராதை கண்ட அதே ராஜ நாகம் யாவும் நினைவுக்கு வந்தது. பீமன் இத்தகைய குரூரமாய் மாறிப்போனது நாக விஷம் ஏறிய உணவை அருந்தி நாகர்களின் உலகத்திற்கு சென்று வந்த பின்னர் தான். துரியோதனின் பிறப்பே நாக அரசனுடையது தான் எனினும் அவனுக்கும் அத்தகையதான் தன்னுணர்வுத் தருணம் காட்டில் நிகழ்ந்திருந்தது. யாதுமறியாது பிறந்த குழந்தைகளின் நெஞ்சில் விஷம் விதைக்கப்பட்டதோ என்று நினைத்தேன்.

இச்சையென்னும் தந்திரத்தால் ஆடும் நாகங்களின் ஆட்டம் ஒருக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். இந்த ஆடலில் நன்மை தீமை என்ன? என்று வியந்தேன். அதை வகுத்து ஒரு தரப்பைச் சொல்ல வருபவனை அதனால் தான் அடுத்த நாவலான நீலத்தில் வைத்திருக்கிறீர்கள் என்றும் உணர்ந்து இங்கிருந்து நகர்ந்தேன். எனினும் வண்ணக்கடலில் ஒரு அருமுத்தாக என்றும் என் நெஞ்சில் கர்ணனை பதித்திருப்பேன்.

இந்த அற்புதமான அனுபவத்திற்காய் நன்றி ஜெ.
அன்புடன்
இரம்யா.

முந்தைய கட்டுரை’மரபணு’
அடுத்த கட்டுரைபாலையாகும் கடல்- கடிதம்