வணக்கம் சார்.
ராதை தனி நடிப்பில் சுபஸ்ரீ பிரமாதப் படுத்தி விட்டார். ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய உணர்வுடன் வெளிப்பட்டன. வாக்கிய முடிவுகளில் கேவலும் ஏக்கமும் விம்மலும் வெளிப்பட்ட விதம் அபாரம்.
4 கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பைமிக மெல்லிய குரல் மாறுபாட்டில் மிக அனாயாசமாக உணர்வு மாறாமல் வெளிப்படுத்தி விட்டார்.
அபாரம். எங்கள் வாழ்த்துக்களைத் தெரியப் படுத்தி விடுங்கள்.
அன்புடன்
சித்ரா பாலசுப்ரமணியம்
***
அன்புள்ள ஜெ
நீலம் நாவலை வாசிக்கும்போது அதை எவராவது சொல்லிக் கேட்டால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன். ஆனால் நானே சொன்னால் அந்தச் சொற்களெல்லாம் அன்னியமாக ஒலிக்கும். ஏனென்றால் அந்தச் சொற்களுக்கும் எனக்கும் நடைமுறைவாழ்க்கையில் சம்பந்தமே இல்லை. வாயில் அவற்றைச் சொல்லவே முடிவதில்லை.
ஆகவே சுபஸ்ரீ அவற்றை அழகான உச்சரிப்பில் உணர்வுக்கொந்தளிப்புடன் சொன்ன தனிநடிப்பு எனக்கு பெரும் பரவசத்தை அளித்தது. நீலம் ஒரு மொழிச்சாதனை. ஒரு மலர் பூப்பதுபோல. வெண்முரசு என்ற மரத்தின் பூ அது. அந்த அழகு முழுக்க அந்த நடிப்பிலே தெரிந்தது.
எஸ்.மீனாட்சி கார்த்தியேகன்
அன்புள்ள ஜெ
ஒளி அழகான ஓர் அனுபவம். தீவிரமான ஒரு வெளிப்பாடாக இருந்தது அது. நான் அப்படி அதை எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் என்றால் என்ன என்று புரிந்துகொள்வதற்கு நாம் இன்றிருக்கும் இந்தச் சூழலை விட உகந்தது வேறு உண்டா என்ன?
சுதந்திரத்தை இழப்பதென்றால் என்ன என்பதை நடைமுறையில் நாம் இப்போது புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த சிறைப்படுதல் அரசியலில் ஆன்மிகத்தில் எல்லாம் நிகழ்வதுதான். அதிலிருந்து விடுதலைதான் இன்றைய தேவை. ஒளி ஒரு எச்சரிக்கை.
என்.ஸ்ரீதர்
அன்புள்ள ஜெ
ஒளி நாடகத்தில் அனைவருமே நன்றாக நடித்தார்கள். இயல்பான உணர்ச்சிகள். புழங்குவதுபோன்ற நடிப்பு. இந்த மீடியாவுக்காக கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசவேண்டியிருந்தாலும் அதை மிக கட்டுப்பாட்டுடன் நடத்தினார்கள். ஒரு ஞானதரிசனம் எப்படி கசப்புடன் ஏளனத்துடன் எதிர்கொள்ளப்படுகிறது, அது சொல்பவனின் ரத்தத்தால் மதிப்பு பெறுகிறது என்பதை கண்முன் கண்டபோது சிலிர்த்தது
ஆர். விஜயகுமார்