பிறிதொன்று கூறல்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

சிலநாட்களுக்கு முன் சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகளைப் பகிர்ந்திருந்தேன். என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். “ஏன் அந்த எறும்புகள் வழியாக கவிதை சொல்லப்படவேண்டும்? அது அத்தனை ஆழமான விஷயமா என்ன? என்றுமுள்ள தாபம்தானே?”

உண்மைதான். அது என்றுமுள்ள ஒன்று, எவரும் அறிந்தது. ஆனால் அதற்கு ஒரு தன்மை உள்ளது, அதை நேருக்குநேர் பார்த்தால் அப்படியே கூசிவிடுகிறது. அதன் மாயம் என்பது தன்னை மறைத்துக் கொள்வதில் இல்லை, தன்னை இன்னொன்றாக ஆக்கிக் கொள்வதில் உள்ளது. தன்னை சர்வசாதாரணமான ஒன்றாக, வெறும் அன்றாடமாக, ஒரு பயன்பாட்டுப்பொருளாக, ஒற்றை அர்த்தம் மட்டுமே கொண்ட மூடிப்போன சொல்லாக ஆக்கிக் கொள்கிறது. மலர் தன்னை கல்லெனக் காட்டுவதுபோல.

அதற்கே அந்த விலக்கிக் காட்டுதல். ஒன்றை உணர்த்த பிறிதொன்றைச் சொல்லுதல். அது தொடங்கி எத்தனை நூற்றாண்டுகளாகின்றது.மனிதன் என்றேனும் அதை நேரடியாகச் சொல்லியிருப்பானா என்றே ஐயுறுகிறேன். கற்கால மனிதன் ஒன்றென ஆகும் முகில்களையோ, முடிவிலாது காத்திருக்கும் மலைகளையோ சுட்டித்தான் அதைச் சொல்லியிருப்பான்.

கவிதை என்பதே அதுதான், பிறிதொன்றைச் சொல்லுதல். விலகிச்செல்லுந்தோறும் அருகே வரும் ஓர் ஆடலை நிகழ்த்துதல். கவிதையில் புதிய ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கில்லை. கவிதையில் ஒரு கருத்தை, ஒரு சிந்தனையை சொல்லி ஏற்கவைக்கமுடியும் என்று நான் நம்பவில்லை. கவிதை ஒன்றை நேரடியாகச் சொல்லிவிட்டால் அக்கணமே அது உயிரிழந்துவிடுகிறது.

ஏனென்றால் கவிதையை நோக்கி நான் திருப்பி வைப்பது என் அகத்தின் மிகமென்மையான ஒரு பகுதியை. மிக அந்தரங்கமான ஒரு தருணத்தை. அங்கே ஒருவன் வந்திருந்து “ஆகவே தோழர் இந்த சமூகம்…” என ஆரம்பித்தால் அவன் என் நுண்ணுணர்வை கருங்கல்லால் உரசுகிறான். ஒருவன் தேம்பி அழுதால் நான் எரிச்சலுறுகிறேன். அவனுடையது உயிர்தெறிக்கும் வலியாக இருந்தாலும் கூட.

என்னுடைய தனிமையில் கவிதையை வாசிக்கிறேன். அங்கே குண்டூசி விழும் ஒலியே இடியோசை. ஆகவே கவிஞனுடைய வலியே கூட திசைவெளியின் வட்டவிளிம்பில் எதிரொலித்து அங்கிருந்து வானத்தின் மெல்லிய முணுமுணுப்பாகவே எனக்கு கேட்கவேண்டும். அது மண்ணின் ஆழத்தில் வேர்கள் முனகும் ஒலியாகவே எழவேண்டும்.

கவிதை நேரடியானதாக ஆகுதோறும் சாமானிய வாசகர்கள் அதை விரும்புகிறார்கள். அது புகழ்பெறுகிறது. ஆனால் நல்ல கவிதை வாசகன் கவிதையின் குரல் தன்னுள் இருந்து எழுவதுபோல ஒலிக்கவேண்டுமென விரும்புகிறான். நேரடியாகப் பேசப்படும்போது கூச்சமடைகிறான்.

ஆகவேதான் கவிதை பிறிதொன்று பேசுகிறது. இன்றைய சினிமாவில் ஒளிப்பதிவுக்கருவி நூறுமடங்கு நுண்மையானது. ஆகவே முகத்தின் மேல் நேரடியாக விழும் வெளிச்சம் அதில் வெளிறி மேடுபள்ளங்களாக தெரியும். ஆகவே ஒளியை சுவர்களின்மேல் வீசுகிறார்கள். சிலசமயம் ஒரு சுவரில் ஒளிவீசி அச்சுவரின் எதிரொளிப்பை இன்னொரு சுவரில் விழவைத்து அந்த வெளிச்சமே நடிகர் முகங்களில் படவைக்கிறார்கள். அதுதான் மென்மையானது, உயிரழகைக் காட்டுவது. தேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் ஓர் அண்மைக்காட்சிக்காக நான்குமணிநேரம் ஒளியமைப்பதை கண்டிருக்கிறேன்.கவிதை அத்தகையதே.

ஒரு காட்சியிலிருந்து விரியும் சொற்கள்

மழை ஓய்ந்த வானம்

நீலம் மலர்ந்து கிடந்தது

உலர்ந்த காகிதமென

நிலத்தில் மட்டுமே எஞ்சியிருந்தன

பெய்ததின் அறிகுறிகள்

புறத்தின் வெட்டவெளியில்

பெய்ததற்கான

ஒரு அறிகுறியும் இல்லை

இந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?

இல்லாமல் ஆக்க முடியாத

மனங்களின் சுவடுகள்போல

இருந்தது

இருந்ததற்கான ஒரு அடையாளமும் இன்றி

நாம் இழந்துவிட்ட உடல்களைப்போல இருந்தது

என்று சொல்லப்படும்போது கவிதை பேசுகிறது. இரண்டாம்பகுதியில் அது நேரடியாகவே பேசுகிறது. ஆனால் அங்கே தொடர்புறுத்தல் நிகழவில்லை. அது வெறும் பேச்சாகவே நின்றுள்ளது. தொடர்புறுத்தல் நிகழ்வது நீலம் மலர்ந்த வானம் மறந்துவிட்ட மழையின் பெருக்கில்தான். எளிய நேரடியான கவிதையே ஆனாலும் அது உணர்த்தவிரும்புவதற்குச் செல்ல படிமங்களையே நாடவேண்டியிருக்கிறது. பிரிவின், எஞ்சாமையின், கடத்தலின் துயரை ஒர் ஒளிகொள்ளலாக, துல்லியமாதலாக, எல்லையற்ற விரிதலாக ஆக்க அப்போதுதான் முடிகிறது.

Egle Lipeikaite

காலம் தவறி மலர்களை பறிக்கப்போகிறவன்

மழைக்கு முந்திய

பெரும்காற்று வரும்வரை

அந்தக் கொடியில் மலர்ந்திருந்த பூக்களை

நானறியவில்லை

குப்பையும் கூளமுமான காற்றில்

அவசர அவசர பறித்துக்கொண்டிருந்தேன்

பறிக்க பறிக்க நழுவி கீழே விழுந்து நாசமாகின்றன பூக்கள்

பறித்தும் பிரயோஜனமற்ற மலர்கள் .

பிறகு சோர்ந்த மனதுடன்

பறிப்பதை பாதியிலேயை நிறுத்திவிட்டு

நனைந்தும் நனையாமலும் அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்டேன்

இது எப்போதும் இப்படித்தான்

ஒரு விபரீதம் நிகழாதவரை

எதையும் முன்கூட்டியே

பாதுகாக்க முடிந்ததில்லை என்னால்

அந்த விபரீதங்கள்

ஒரு மரணத்துடன் நிகழ்ந்தன

மீண்டும் காணவே முடியாத

ஒரு பிரிவாக நிகழ்ந்தன.

அடையத் துடித்த

எவ்வளவோ கனவுகளை

அழித்தபடி நிகழ்ந்தன

நானெப்போதும்

விபரீதங்களின் கண்ணீருடன்

பறிப்பதற்கு உகந்த காலங்கள்

தீர்ந்துபோன பின்பே

பிரயோஜனமற்ற மலர்களை பறிக்கப்போய்

பாதியிலேயே திரும்பி வந்துகொண்டிருக்கிறேன்

இதுவும் நேரடியான கவிதையே. கடைசிவரியில் கவிதை சொல்லிவிடும் ஒன்றை அதற்கு முந்தைய வரிகள் நுட்பமாக்கிக்கொண்டே செல்கின்றன. மழைப்புயல் எழும்வரை பறிக்கத் தோன்றாத மலர்கள். மலர்கொய்ய வருபவனை முந்திக்கொண்டு வந்து மலர்களைச் சூறையாடும் ஒரு பிரம்மாண்டம் இக்கவிதையில் அந்த தொடக்கவரிகளில் திகழ்வதனாலேயே இது கவிதையாகிறது

நேரடித்தன்மையை ஏதோ ஒன்றால் மறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மிக அந்தரங்கமான ஒன்றை சொல்லவரும்போது அசட்டுத்தனமாக புன்னகைக்கிறோம். கண்களை வேறெதையோ நோக்கி திருப்பிக் கொள்கிறோம். வேறெதிலோ இருந்து பேச்சை ஆரம்பிக்கிறோம்.

பழைய கவிதையில் யாப்பும் இசையொழுங்கும் அந்த மென்திரையாக இருந்தன. இன்றைய கவிதையில் அதன் ஆங்கிலச்சாயல் கொண்ட மொழிநடை அப்படி ஒரு திரையை அமைக்கிறது. நேரடியாக பேச்சுமொழியில் சொன்னால் நாடகத்தனமாக, பொய்யாக தோன்றிவிடக்கூடிய ஒன்று அந்த அன்னியத்தன்மை கொண்ட சொற்றொடர் அமைப்பால் அணுக்கமாகிறது. விலக்கமே கவிதையின் கலை.

”பிரிவே நீ கவிதையைப்போல எங்களை கண்களைக் கட்டி நெருங்கச் செய்தாய்’ என்று வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் கவிதை வரி ஒன்று உண்டு. விலக்கத்தின் அழகலேயே உணர்வுகள் கவிதைக்காக நுண்மை கொள்கின்றன.

Gladys Folkers

உன்னொரு சொல்

உன்னொரு சொல் ஒரு நறுமணம் போல் மணத்துக்கிடக்கிறது

இதயத்தின் ஆழங்களில் .

பூர்வ படிமமென

அச்சொல் உறைந்துகிடக்கிறது

என் நினைவின் மலைகளுக்குள்.

மற்றெல்லா சொற்களும்

தன் அர்த்தங்களை இழந்துகொண்டிருக்கின்றன

ஒரு இலையுதிர்கால மரம்போல .

ஒரு இலையுதிர்கால

மரத்தின் கடைசி இலை

காற்றில் நீந்திக்கொண்டிருப்பதுபோல

அல்லது

இந்த வீணான வாழ்வின் பிடிவாதமான கடைசி நம்பிக்கையைப் போல

இருக்கிறது அந்த சொல் .

காதலே

ஒரு போதும் உதிராத

அந்த சொல்லை

மறுமுறை சொல்

நான்‌ துளிர்க்க வேண்டும்

கனவுகளின் எல்வையற்ற கடல்களில்

நான் மீனாகி நீந்த வேண்டும்

நீ இல்லாவிடினும்

அந்த சொல்லோடு நீந்திக் கடப்பேன்

இந்தக் கடலை

தனிமையின் அலைகள் அலறும் கடலை.

இந்த பிறிதுகூறலுக்கு எத்தனை நீண்ட வரலாறு. சங்க இலக்கியமே இந்ந்நுண்மையில்தான் தன் அழகியலைக் கொண்டுள்ளது. கபிலனுக்கும் இன்றைய கவிஞனுக்கும் நடுவே அசைந்தால் முழங்கை பட்டுவிடும் தொலைவுதான்.

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
    
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
    
விடரகத்து இயம்பும் நாட! எம்
    
தொடர்பும் தேயுமோ நின் வயினானே?

[காமத்தை மறைக்கலாம். இரவில் மலையில் பெருமழை விழுந்ததை அருவி ஊருக்குள் வந்து பாறையிலிருந்து விழுந்து ஓசையுட்டு உரைக்கும் நாட்டைச் சேர்ந்தவனே என்மேல் நீ கொண்ட தொடர்பு மறையுமோ?]

மலையில் மழைபெய்வதை மறைக்கமுடியாது. அருவி என அது ஊருக்குல் பொழிகிறது. ஆனால் அது இனிய ஒளிக்கொப்பளிப்பு. குளிர்ச்சாரல். மலையின் வெண்சிரிப்பு.

அச்சிரிப்பைச் சொல்லவே அதை கவிதையாக ஆக்கவேண்டியிருக்கிறது.

முந்தைய கட்டுரைமனைவி!
அடுத்த கட்டுரைஅஞ்சலி: குமரிமைந்தன்