கேரளமும் பக்தி இயக்கமும்

இனிய ஜெயம்,

சங்கம் மருவிய காலத்தில் குல, குடி, தலைமை அரசுகள் வளர்ந்து, சேர சோழ பாண்டிய முடியரசுகள் துவங்கி விடுவதை காண்கிறோம். கொற்றவை நாவலில் மதுரையில் இருந்து சென்ற கண்ணகி, சேர எல்லையில் சென்று அமைகையில், ப்ரக்ஞா தாரா தேவி வடிவுடன் இணைந்து பௌத்த மார்க்கத்துடன் அடையாளம் காணப்பெறும் சித்திரம் வருகிறது.

இங்கொரு இருபுரிச் சாலை பிரிவதை காண முடிகிறது. ஆறு ஏழாம் நூற்றாண்டு துவங்கி தமிழ் நிலத்தில் நிகழ்ந்த பக்தி காலகட்ட எழுச்சி. பல்லவர் காலம் துவங்கி சோழர் காலம் வரை, கோவில் பண்பாடு மற்றும் நில உடமை விழுமியங்களை உள்ளடக்கி, ஆழ்வார்கள், அவர்கள் மங்களாசாசனம் செய்வித்த கோயில்கள், பாசுரங்கள், அவை தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம், சைவ சந்தான மற்றும் சமய குறவர்கள், சைவ ஆதீனங்களின் பணிகள், பெரிய புராணம், ராமவதாரம், பின்வாங்கிய பௌத்த சமண சாக்த நெறிகள் என தமிழ் நிலம் கண்ட பெரும் பண்பாட்டு அசைவு ஒரு சாலை.

மற்றொரு சாலை சேர நிலம். கண்ணகி சேர நிலம் சென்று அமைந்த பிறகு, பௌத்த சமண தேய்வுக்குப் பிறகு சாக்தத்தின் பண்பாட்டு அசைவு என்னவாக இருந்தது என்பதை, நீங்கள் மொழியாக்கம் செய்து தமிழினி வெளியீடாக வந்த cv சந்திரன் எழுதிய கொடுங்கோளூர் கண்ணகி எனும் ஆய்வு நூல் பேசுகிறது.  அதன் பிறகான சூழல் பின்புலம் சார்ந்து ஒரு வினா.

தமிழ் நிலத்தில் பக்தி மார்க்க இயக்கமும் , அரசுகள் துவங்கி தமிழ் நிலம் முழுதையும் ஆண்ட பேரரசுகள் வரையிலான உருவாக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆனால் சேர நிலத்தில்  சங்கம் மருவிய காலம் முதல் அந்த நிலம் நான்காக பிரிந்து, தனி தனி அரசுகள் என, பல்வேறு மன்னர்களால் ஆளப்படுவதை பார்க்கிறோம். கிட்டத்தட்ட ஒருங்கிணைந்த கேரளம் என்பது மிக பிந்தி மார்த்தாண்டவர்மா வந்து தான் உருவாக்குகிறார். தமிழ் நிலத்தில் பக்தி இயக்கம் செழிக்க  கண்ட  சாதக அம்சம் எதுவும் கேரளத்தில் இருப்பதாக தெரியவில்லை.

இத்தகு சூழல் பின்புலத்தில் கேரள நிலத்தில் பக்தி மார்க்கம் அதன் பணி முறைமை என்னவாக இருந்தது.கேரள பக்தி இயக்கத்தின் சமய சந்தான ஞானிகள் எவரெவர், பக்தி மரபு வழியே தமிழ் நிலத்தில் பின்வாங்கிய சாக்தம், கேரளத்தில் பாதிப்பு இன்றி நிலை பெற்றது எப்படி?

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

உங்கள் கேள்வியால் தூண்டப்பட்டு நீண்ட நாளுக்கு பின் டாக்டர் கே.எம்.ஜார்ஜ் தொகுத்த ‘சாகித்ய சரித்திரம் பிரஸ்தானங்களிலூடே” என்ற அரிய மலையாள நூலை என் நூலகத்திலிருந்து எடுத்தேன். 1986ல் வாங்கியது. மிகமிக விரும்பி வாசித்த நூல். அதற்காக நன்றி [காலிக்கோ அட்டைபோட்ட இதைப்போன்ற நூல்களை வாசிப்பது ஒரு வகை கிளர்ச்சியை அளிக்கிறது. நம் ஓர் அறிஞராக ஆகிவிட்டதுபோல.]

சு.ரா எழுதிய வரி. “பனித்துளியிலும் பனை தெரியும் என்பார்கள். தெரியும். ரொம்பச் சின்னப் பனையாகத் தெரியும்” கேரளத்தில் பக்தி இயக்கம் உண்டு, ரொம்பச் சின்ன பக்தி இயக்கம். ஏனென்றால் இங்கே பேரரசுகள் இல்லை, பெரும்பாலும் கப்பம் கட்டும் சிற்றரசுகளே இருந்தன.

முதலில் நாம் தெளிவடைய வேண்டியது மலையாளம் என்ற மொழியை நாம் பதினேழாம் நூற்றாண்டு முதல்தான் தனிமொழியாகக் கணக்குவைக்கவேண்டும் என்பது. அதற்கு முன் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை மலையாண்மைக் காலகட்டம். பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு கேரளநிலம் முழுக்க தமிழ்நிலமே. பதிமூன்று முதல் பின்னால் சென்று பத்தாம் நூற்றாண்டு வரை சோழர் ஆட்சிக்காலம். அதற்கு முன்பு சேரர் ஆட்சிக்காலம்.

கேரளம் தன்னுரிமையுடன் தனிநாடாக திகழ்ந்த காலகட்டம் மிகக்குறைவு. சங்க காலத்தில் சேரன் செங்குட்டுவன் முதலான அரசர்களின் ஒரு காலகட்டத்தைச் சொல்லலாம். அதிலும் பெரும்பாலும் சேரர்கள் தோற்கடிக்கப்பட்ட வரலாறே உள்ளது. அதன்பின் பாண்டியர், சோழர், நாயக்கர்களுக்கு கப்பம் கட்டும் அரசுகளே இங்கிருந்தன. சொல்லப்போனால் சேரன் செங்குட்டுவனுக்குப் பின் தன்னுரிமையுடன் ஆட்சி செய்த மன்னர் 1729ல் ஆட்சிக்கு வந்த மார்த்தாண்ட வர்மா மகாராஜாதான். அதுவும் மிகக்குறுகிய காலம். 1790லேயே பிரிட்டிஷாருக்கு கப்பம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் கேரளத்தில் ஆழவேரூன்றி இருந்தன. கேரளம் முழுக்க சமண, பௌத்த அடையாளங்கள் கிடைத்தபடியே உள்ளன. பல இடங்களில் பௌத்த ஆலயங்கள் சாஸ்தா ஆலயங்களாகவும் சமண ஆலயங்கள் பகவதி ஆலயங்களாகவும் உருமாறியிருக்கின்றன. கேரளம் இளங்கோவடிகளின் நிலம்.

கூடவே பத்தினி வழிபாடு பெரும்செல்வாக்குடன் இருந்துள்ளது. அது பௌத்தமதத்தின் ஒரு கிளையாக இருந்தது. ஆனால் சாக்தமதத்திலும் பழங்குடி வழிபாடுகளிலும் அது வேர்கொண்டிருந்தது. பின்னர் பத்தினி வழிபாடே சாக்தமத்தால் உள்ளிழுக்கப்பட்டது. கண்ணகி தெய்வம் பகவதியாக, துர்க்கையாக உருமாறினாள். கேரளத்தின் மைய வழிபாட்டுத்தெய்வம் இன்றும் பகவதிதான்.

அதன்பின் ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் ஆரம்பித்தது. சோழர்கால முடிவு வரை, அதாவது 13 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் பக்தி இயக்கத்தின் நீட்சி கேரளநிலத்தில் நிலவியது. ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவாரத்தில் பாடல்பெற்ற தலமாக கொடுங்கல்லூர் அருகே உள்ள திருவஞ்சைக்களம் என்னும் வஞ்சி உள்ளது.

சோழர்கள் தங்கள் சிற்றரசர்கள் வழியாக கேரளத்தை ஆட்சி செய்த பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில்தான் கேரளத்தில் இன்றுள்ள முக்கியமான சைவ, வைணவ ஆலயங்கள் உருவாயின. 108 வைணவத் திருத்தலங்களில் 11 தலங்கள் கேரளத்தில் இருக்கின்றன. நம்மாழ்வார் பாடல்பெற்ற தலம் திருவட்டாறு. அவருடைய அன்னை பிறந்த ஊர் திருவெண்பரிசாரம். இவை அன்றைய கேரளமாகிய குமரிமாவட்டத்தில் உள்ளன.

திருநாவாய, திருக்காக்கரை, திருமூழிக்களம்,திருவித்துவக்கோடு, திருவல்லா, திருக்கடித்தானம், திருச்சிற்றாறு, திருப்புலியூர், ஆறன்முளை, திருவண்வண்டூர், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருவெண்பரிசாரம் ஆகிய கேரளத்து ஆலயங்கள் ஆழ்வார்களால் பாடப்பட்டவை.

பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கேரளத்தின் இலக்கிய மொழியாக தமிழே இருந்துள்ளது. இக்காலகட்டத்தின் இலக்கிய வகைமை பாட்டு இயக்கம் அல்லது சிறுகாவிய இயக்கம் [பாட்டு பிரஸ்தானம் அல்லது லகுகாவிய பிரஸ்தானம்,  ] இவ்வியக்கத்தின் மொழி அப்படியே தமிழ்தான்.

பாட்டு எனப்படுவது கேரளத்தின் நாட்டார் வாய்மொழி பாடல்களுக்கு நெருக்கமான ஓர் இலக்கிய வகை. இசையுடன் பாடப்படும் அகவல் போன்ற வடிவம் கொண்டது. இதிலிருந்தே பிற்கால மலையாண்மையையும் மலையாளமும் உருவாயின. அதிலிருந்து அன்று கேரளத்தில் தீவிரமாக படிக்கப்பட்ட கம்பராமாயணத்தின் செல்வாக்குள்ளது பாடலியக்கம்.

பாட்டியக்கத்தின் முதன்மை நூல் ராமசரிதம். இதை எழுதியவர் சீராமகவி. திருவிதாங்கூரில் பிறந்தவர். கம்பன் வாழ்ந்த 1120-1200  காலத்தை அடுத்து 1195 -1208 காலத்தில் சீராமகவி வாழ்ந்திருக்கலாம் என்று உள்ளூர் பரமேஸ்வர அய்யர் கருதுகிறார். இக்காலகட்டத்தில் கம்பன் திருவிதாங்கூருக்கு வந்து பத்மநாபபுரத்தில் தங்கியதாகவும், அங்கே அவர் வழிபட்ட சரஸ்வதிதேவி கோயில் இருப்பதாகவும் தொன்மம். கம்பரின் நேரடி மாணவராகவே சீராமகவியை சிலர் சொல்கிறார்கள்.

கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தின் சற்றே மழுங்கிய வடிவம்போலிருக்கிறது ராமகதை. நிரணம் சகோதரர்கள் என்னும் பாட்டுகவிஞர்களும் ஏறத்தாழ இதே காலத்தவர்கள்,[மாதவப்பணிக்கர், சங்கரப்பணிக்கர், ராமப்பணிக்கர்] ராமப்பணிக்கர் எழுதிய கண்ணச்ச ராமாயணமும் ஒரு சிறுகாவியம், கம்பராமாயணம் போட்ட புழுக்கை போலிருக்கும்.

கானனங்களில் அரன் களிறுமாய் கரிணியாய்

கார் நெடுங்கண் அம்ம தம்மில் விளையாடி நடந்நான்

ஆனனம் வடிவுள்ள ஆன வடிவாய் அவதரித்த

ஆதியே! நல்ல வினாயகன் எனும் நிர்மலனே

என்பது இவ்வியக்கத்தின் மொழிநடை.

இவையெல்லாமே பக்தி இயக்கத்தின் விளைவுகளே. மலையாள இலக்கியத்தின் தொடக்கமாக கிடைக்கும் இந்நூல்களனைத்துமே பக்தி இயக்கத்தின் கொடைகள்தான்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் கேரள இலக்கியம் இரண்டு வழிகளாகப் பிரிந்தது. ஒன்று சம்ஸ்கிருதம் நோக்கிச் சென்று மணிப்பிரவாளமாக மாறியது. இன்னொன்று நாட்டர் மரபை நோக்கிச் சென்று மக்கள் வாய்மொழியில் புழங்கியது.

சம்பு என்னும் கவிதைவடிவம் சம்ஸ்கிருத கலவை மொழியில் முக்கியமானதாக இருந்தது. வெண்மணி நம்பூதிரிகள் அக்காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்கள். இவர்கள் எல்லாம் பெண்களின் இடுப்புக்குமேல் கழுத்துக்கு கீழ் புனைவிலக்கிய மையத்தை நிறுத்திக்கொண்டவர்கள்.

கேரளத்தில் மணிப்பிரவாள மொழி வேரூன்றிய அதேகாலகட்டத்தில்தான் தமிழிலும் மணிப்பிரவாளம் புகழ்பெற்றிருந்தது. வைணவ உரைகளின் மணிப்பிரவாளமும் அக்கால கேரள மணிப்பிரவாளமும் சமானமானவை. ஆனால் கேரள மணிப்பிரவாளத்தில் பக்தி இல்லை. அது பெரும்பாலும் காமம் சார்ந்த பாடல்களால் ஆனது. தமிழில் பின்னர் உருவான சிற்றிலக்கிய வகைமைகளால் ஆனது. அதில் சந்தேசம் [தூது] என்னும் கவிதைவடிவம் மிகப்புகழ்பெற்றது.

ஆனால் மறுபக்கம் நாட்டார் மரபிலிருந்து பக்தி இயக்கம் எழுந்தது. மக்கள் மொழிக்கு அணுக்கமான, மலையாண்மையில் எழுதப்பட்ட பக்தி- புராண கதைகள் உருவாயின. இதை ‘காதா பிரஸ்தானம்’ [கதை இயக்கம்] என்று சொல்கிறார்கள். இதன் முதன்மை முகம் செறுசேரி நம்பூதிரி. அவருடைய கிருஷ்ணகாதா முக்கியமான நூல்

மாண்பெழுந்நோர் சில மான்பேடகளெல்லாம்

சாம்பி மயங்கின கண்மிழியும்

ஒட்டொட்டு சிம்மிக்கொண்டு இஷ்டத்திலம்போட்டு

வட்டத்தில் மேவிதே பெட்டெந்நு அப்போள்

மந்தமாயொரு கந்தரம் தன்னெயும்

என்பது அதன் மொழி நடை.

அதன்பின்னர்தான் மலையாளமொழியின் தந்தை என அழைக்கப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் பிறவி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம். அதுவே மலையாளம் எனும் மொழி வடிவம் கொண்டகாலம். அவர் எழுதியது மக்களிடம் புகழ்பெற்றிருந்த கிளிப்பாட்டு என்னும் வடிவில். அதிலும் சம்ஸ்கிருதக் கலவை உண்டு, ஏனென்றால் மலையாளத்தில் இருந்து சம்ஸ்கிருதத்தை முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் அது மக்கள்மொழியில் அமைந்திருந்தது. ஆகவே பெரும்புகழ்பெற்று இன்றும் கேரளமெங்கும் ஒவ்வொருநாளும் இல்லங்களில் பாடப்படுகிறது.

கிளிப்பாட்டுக்கள் இக்காலகட்டத்தில் தமிழில் புகழ்பெற்றிருந்தன. பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் கிள்ளைவிடுதூது ஏறத்தாழ துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் காலகட்டத்திலேயே எழுதப்பட்டது. அவற்றின் செல்வாக்கும் அவரிடமிருக்கலாம்.

ராமானுஜன் எழுத்தச்சன் முழுக்கமுழுக்க பக்தி இயக்கத்தின் சிருஷ்டிதான். மலையாள மொழியே பக்தி இயக்கத்தின் கொடை என்று சொல்லலாம். ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் அவர் கிளிப்பாட்டில் எழுதினார். அதன்பின் ஏராளமான பக்திநூல்கள் கேரளத்தில் உருவாயின.

பிற்பாடு கேரளத்தில் உருவான பக்தி சார்ந்த கவிதைகள் பெரும்பாலும் கதகளி, ஓட்டன் துள்ளல் ஆகிய நிகழ்த்துகலைகளுடன் தொடர்பு கொண்டிருந்தன. கதகளிக்கான ‘ஆட்டக்கதைகள்’ இசைநாடகம் போன்ற அமைப்பு கொண்டவை. அவற்றில் உண்ணாயி வாரியார், இரயிம்மன் தம்பி போன்ற பெருங்கவிஞர்கள் உண்டு. துள்ளல்பாட்டு வகையில் குஞ்சன் நம்பியார் ஒரு முதன்மைக் கவிஞர். இவர்களையும் பக்தி இயக்கத்தின் சிருஷ்டிகள் எனலாம்

கேரள பக்தி இயக்கத்தில் எழுத்தச்சனின் நூல்களுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது பூந்தானம் நம்பூதிரி இயற்றிய ஞானப்பானை என்னும் பாடல்.

ஆனால் கேரள பக்தி இயக்கத்தை கூர்ந்து நோக்கினால் தமிழ் பக்தி இயக்கத்தில் நாலாயிரத் திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகத்தின் செல்வாக்கு குறைவு என்றே தோன்றுகிறது. கம்பராமாயணம், புராணங்கள், கிளிப்பாட்டு முதலிய பாடல்வகைகளின் செல்வாக்கே மிகுதி. கேரள பக்தி இயக்கத்தில் பொதுவாகவே பக்திப்பரவசம் குறைவு. எழுத்தச்சனும் பூந்தானமும் மட்டுமே தூயபக்தர்கள். மற்றவர்களுக்கு பக்தி என்பது புராணம் என்னும் பாயசத்தில் கலந்துள்ள வெல்லம் போலத்தான்.

ஜெ

மலையாள இலக்கியம்

எளிமையின் குரல்

நிகரற்ற மலர்த்தோட்டம்

கிள்ளை

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

முந்தைய கட்டுரைஇருவர்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் -முன்னோட்டம்